Chapter 06
வாசவிக்கு அந்தச் சூழலே வேடிக்கையாக இருந்தது.. என்னவோ.. மகாராஜா பரம்பரைகளில் வந்தவர்கள் போல்.. காளிதாஸும்.. திலகமும்.. முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு.. தோரணையாய் அமர்ந்திருக்க.. அவர்களிடம் கப்பம் கட்டுபவர்கள் போல்.. மயில்வாகனமும் பரிமளாவும்.. பவ்யமாய் நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..
இரு வீட்டாருக்கும் பொதுவாய்ச் செயல்பட்ட மாணிக்கவாசகம்.. காளிதாஸிடம்.. மயில் வாகனத்திடமும்.. மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்..
பிரசன்னாவிடம்.. என்றைக்கும் இல்லாத கம்பீரம் அன்றைக்குத் தென்பட்டது.. அண்ணனின் அழகை ரசித்துக் கொண்டே வாசவி.. அவனருகே சாய்ந்து கிசு கிசுத்தாள்..
“ஏன் அண்ணா.. இவங்க பேச்சு வார்த்தை எப்போது தான் முடியும்..?”
“ஏன் கேட்கிறாய்..?”
“நாம் பெண் பார்க்க வந்தோமா..? இல்லை.. இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்க்க வந்தோமா..?”
“ஸ்ஸ்.. வாசவி.. இங்கே வந்து இப்படியெல்லாம் பேசக் கூடாது..”
“ஏன்.. உனக்குப் பெண் தர மாட்டேன்னு இவங்க சொல்லி விடுவாங்களா..?”
பிரசன்னா தங்கையை ரகசியமாய் முறைத்தான்.. அவளோ புருவத்தை உயர்த்திச் சிரித்தாள்..
“அந்தக் கவலையே உனக்கு வேண்டாம்.. என்றைக்கு மில்லாமல் இன்றைக்கு நீ சூப்பரா இருக்கிற.. இப்படி ‘ஜம்’மென்று இருக்கும் மாப்பிள்ளையைக் கோட்டை விட இவர்கள் என்ன முட்டாள்களா..? உன் மாமனாரையும் மாமியாரையும் பார்த்தால்.. ‘செம விவரம்..’ன்னு தெரிகின்றது.. உன்னை இவர்கள் விட மாட்டார்கள்..”
பிரசன்னாவிற்குத் தங்கையின் புகழ்ச்சி மிகவும் பிடித்துப் போய்விட.. ரசித்துச் சிரித்தான்..
“இப்படியே நான் பொய்.. பொய்யாகச் சொல்லிக் கொண்டிருந்தால்.. நீ இப்படிப் புன்னகை மன்னனாகவே இருப்பாயில்லையா..?” வாசவி.. அதற்கும் அவனை வாரினாள்..
“எதற்கும்.. நீ இப்படியே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிரு வாசவி.. உனக்குப் புண்ணியமாகப் போகும்..!” ஏறக்குறைய தங்கையிடம் ரகசியக் குரலில் கெஞ்சினான் பிரசன்னா..
“ஆக.. உன் கல்யாணம் நடப்பது என் கையில்தான் இருக்கிறது என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா..?”
“ஒப்புக் கொள்கிறேன்.. ஒப்புக் கொள்கிறேன்.. போதுமா..?”
“போதும்.. கவலைப்படாதே.. உன் கல்யாணத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு நானாச்சு..”
“அதை அப்பாவும்.. அம்மாவும் நடத்துவார்கள்.. நீ கொஞ்சம் வாயைத் திறக்காமல் அடக்கி வாசித்தாலே போதும்..”
அண்ணனும்.. தங்கையும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருப்பதை.. டிபன் கொடுக்க வந்த சுமதி கவனித்தாள்.. உள்ளே போய்ச் சுகந்தியின் காதைக் கடித்தாள்..
“சுகந்தி.. உன் வருங்காலக் கணவர் தங்கை உட்கார் என்றால் உட்காருகிறார்.. நில் என்றால் நிற்கிறார்.. பெண் பார்க்க வந்திருப்பவர்.. தங்கையிடம் கூடிக் கூடி ரகசியம் பேசுகிறார்..”
“அப்படியா..?”
சுகந்தி.. கவலைக்குள்ளானாள்.. சுமதியின் நாத்தனார் சுமதியின் கணவரிடம் சுமதியைப் பற்றிப் போட்டுக் கொடுத்துக் கணவன்… மனைவிக்குள் சண்டையை மூட்டி விடுவாள்.. அதுபோல்.. சுகந்திக்கும் ஆகி விடுமோ..
“பார்த்துடி.. ஆரம்பத்திலேயே.. உன்னவரை உன் கன்ட்ரோலில் வைத்துக் கொள்.. என்னைப் போல் விட்டு விடாதே.. இவர்களையெல்லாம் விட்டால்.. திரும்பவும் பிடிக்கவே முடியாது..”
“என்ன சுமதி பயமுறுத்துகிற..”
“நடப்பைத்தான் சொன்னேன்.. அப்பறம் உன் இஷ்டம்..”
சுமதி பயமுறுத்தியதன் விளைவாக.. சுகந்தியை ஹாலுக்கு அழைத்துப் போனபோது.. அவள் மெல்ல விழியுயர்த்தி.. மாப்பிள்ளையைப் பார்ப்பதற்குப் பதில்.. மாப்பிள்ளையின் தங்கையைப் பார்த்தாள்..
அடக்க.. ஒடுக்கமாய்.. வந்து நின்ற சுகந்தியைத் தான் அப்போது வாசவியும் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“வாவ்.. உன் பெண்டாட்டி செம கியூட் அண்ணா..” அவள் பிரசன்னாவின் காதோரம் முணுமுணுக்க.. அவனும் தலையை ஆட்டினான்..
அதைப் பார்த்த சுகந்திக்கு உடம்பெல்லாம் எரிந்தது..
‘சுமதி சொன்னது சரிதான் போல.. எப்படி பூம்பூம் மாடு போல.. தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்..’
இந்த மனக் குழப்த்தில்.. அவள் பிரசன்னாவைப் பார்க்கவே மறந்து போனாள்..
“நாம் பேசி முடிவுக்கு வருவதற்கு முன்னால்.. கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்ணும்.. மாப்பிள்ளையும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டுமே..” என்றார் காளிதாஸ்..
“இது என்னங்க.. வழக்கமில்லாத வழக்கமா இருக்கு.. எங்க குடும்பத்தில் இது போல நடந்தது இல்லையே.. எங்க மூத்த பெண் சுமதியைப் பெண் பார்க்க வந்த போதும் மாப்பிள்ளை பெண்ணிடம் தனியாகப் பேசணும்னு கேட்டார்.. நாங்க சம்மதிக்கவில்லை..” மயில்வாகனம்.. காளிதாஸிடம் மறுத்துப் பேசினார்..
“தனியாகப் பேசினால்தானே நீங்க அனுமதிக்க மாட்டிங்க.. என் பெண் வாசவியும்.. அவங்க கூடப் போகட்டும்.. அப்ப உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே.. இதை ஏன் நான் சொல்லுகிறேன்னா.. கல்யாணம் என்பது.. காலம்.. காலத்திற்கும் நிலைத்திருக்க வேண்டியது.. என் மகன் நாங்கள் கீறிய கோட்டைத் தாண்ட மாட்டான்.. நாங்கள் அப்படித்தான் எங்கள் மகனை வளர்த்திருக்கிறோம்.. இன்றைக்கு எங்களுக்குப் பிடித்திருக்கிறது.. என்பதற்காக அவன் சம்மதம் சொல்லி விட்டான் என்ற நினைப்பு.. எங்களுக்குப் பின்னால் வந்து விடக் கூடாது.. அவன் கல்யாணத்திற்கு.. அவனுடைய மனப்பூர்வமான சம்மதம் எங்களுக்கு வேண்டும்..” காளிதாஸ் மறைமுகமாகத் தங்களது சம்மதத்தை உணர்த்தினார்..
உடனே மயில் வாகனத்தின் முகம் மலர்ந்து விட்டது.. பரிமளத்தின் முகத்தை அவர் பார்க்கவும்.. அவளும் கண்ணசைவில் தன் சம்மதத்தை வெளிப்படுத்தினாள்..
“ம்ம்.. உங்கள் பெண்ணும்கூட இருப்பதானால்.. அவர்கள் தனியாகப் பேசிக் கொள்ளட்டும்..”
மயில்வாகனம் பச்சைக் கொடி காட்டி விடவும்.. சுகந்தி தன் மனதிற்குள் படபடப்பாக உணர்ந்தாள்.. சுமதி அவள் காதினில் முணுமுணுத்தாள்..
“பாருடி.. உன் வருங்கால மாமனாரும்.. மாமியாரும் பண்ணும் வேலையை.. அவங்க மகன்.. உன்னுடன் பேசும்போது ஒட்டுப் புல் போல் அவருடைய தங்கை தான் ஒட்டிக் கொள்வாளாம்.. ஒரு பேச்சுக்குப் பெண்ணோட அக்காவும் கூட இருக்கட்டும்ன்னு சொன்னாங்களா.. பார்த்தாயா..”
“இப்போது மட்டும் என்ன வந்தது..? அந்தக் குறை உனக்கு எதற்கு..? நீயும் கூடவா..”
“அதுதான் சரி.. அவங்க மகள்.. மாப்பிள்ளை கூட வந்தால்.. உன் கூட நானும் வருவேன்..”
“அம்மா.. அப்பாவை மட்டும் ஏன் விட்டு வைத்து விட்டாய் சுமதி.. அவங்களையும் கூப்பிட்டுக் கொள்ளலாமே..”
“என்னடி.. காமெடி பண்ணுகிறாயா..?”
“நீதான் என்னிடம் காமெடி பண்ணுகிற.. நானே அவர் முகத்தைக்கூட இன்னும் சரியாகப் பார்க்கவில்லை.. அவர் வீட்டில் சம்மதம் என்பது போல் பேசுகிறார்கள்.. அவரைச் சரியாகப் பார்க்கக் கூட இல்லாமல் எப்படிச் சம்மதம் சொல்வதுங்கிற.. குழப்பத்தில் இருக்கிறேன்.. நீயானால்.. விளையாட்டுத்தனம் பண்ணிக்கிட்டு இருக்கிற..”
“இப்போது என்னங்கிற.. நான் உன்கூட வரவா.. வேண்டாமா..?”
“வா..”
சுகந்தி.. எரிச்சலுடன் மாடிப்படியேறினாள்.. சற்று முன் வரை அவள் மனதில் இருந்த.. குதூகலம் கலந்த எதிர்பார்ப்பு மறைந்து போய் விட்டிருந்தது.. மனதில் சஞ்சலமும்.. குழப்பமும் தலை தூக்கியிருந்தது..
மாடி ஹாலில் இருந்த சோபாக்களில் ஒன்றில் சுகந்தியும்.. சுமதியும் அமர.. பிரசன்னா.. வாசவி பின் தொடர வந்து அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்..
லேசாக நிமிர்ந்து அவன் சுகந்தியைப் பார்க்க முயலும் போது.. சுமதி அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது கண்ணில் பட… சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்..
சுகந்திக்கும் அதே நிலைமைதான்.. பிரசன்னாவாவது விழி உயர்த்திப் பார்க்க முயன்றான்.. அவள் விழிகளை உயர்த்தவே இல்லை.. நிலத்தில் பார்வையைப் பதித்த வளாய் அசையாமல் அமர்ந்திருந்தாள்..
வாசவிக்கு.. அவர்களின் நிலையைப் பார்த்துச் சிரிப்புத்தான் வந்தது..
“ஏன் அண்ணா.. எதற்காக.. உன்னை இங்கே அனுப்பி வைத்தாங்க..?” என்று அவள் பிரசன்னாவிடம் சந்தேகம் கேட்டாள்..
பிரசன்னா தர்ம சங்கடத்துடன், தங்கையைப் பார்த்தான்..
“ஊஹூம்.. நீ இதற்குப் பதில் சொல்ல மாட்ட.. நானே சொல்லி விடுகிறேன்… உன்னையும்.. அண்ணியையும் தனிமையில் கலந்து பேசி.. கல்யாணம் செய்து கொள்வது பற்றி ஒரு முடிவுக்கு வரச் சொன்னார்கள் இல்லையா..”
“ஆமாம்..”
பிரசன்னா தங்கையை நன்றிப் பெருக்குடன் பார்த்த படி பதில் கூறினான்.. அவனது சங்கடம் சற்றே விலகியது..
“இப்படி.. உன் பக்கத்தில் நானும்.. அவங்க பக்கத்தில்.. அவங்க அக்காவும் உட்கார்ந்திருக்க பேசுவது தான்.. தனிமையில் பேசுவதா..? அதற்குக் கீழேயே.. பெரிசுகள் முன்னாடியே பேசியிருக்கலாமே..”
‘அட.. என் தங்கத் தங்கையே..’ என்று கட்டிக் கொள்ள வேண்டும் போல பிரசன்னாவிற்கு இருந்தது..
சுகந்தி ஆச்சரியப்பட்டுப் போனாள்.. வாசவியின் இந்தத் தன்மை அவளை வெகுவாக வசீகரித்தது.. வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்தில் வரும்.. இனிமையான தருணம்.. இந்தச் சந்திப்பு.. பின்வரும் நாள்களில்.. நினைவுப் பெட்டகத்தில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம்..
அப்படியொரு சந்திப்பில்.. இடையூறு இல்லாத தனிமை கிடைக்காத தவிப்பில் அவள் அமர்ந்திருந்த பொழுதில்.. அந்த உணர்வைத் தன் பாணியில் நகைச் சுவையாய் வெளிக் கொண்டு வந்த வாசவியின் மேல் அவளுக்குள்.. அந்த வினாடியில் மட்டற்ற அன்பு உருவாகியது..
சுகந்தி.. தன் அழகிய கரு விழிகளை உயர்த்தி.. தன் வருங்காலக் கணவனைப் பார்க்காமல்.. அவனருகில் அமர்ந்திருந்த அவனது தங்கையைப் பார்த்தாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.