Chapter 08
பிரசன்னாவிற்கு ஒன்று மிகத் தெளிவாகப் புரிந்தது.. சுகந்திக்கு அவனைப் பிடித்திருக்கிறது.. மிகவும் அதிகமாகப் பிடித்திருக்கிறது.. அதனால்.. அவன் தனக்கு மட்டும் சொந்தமானவன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவள் விழைகிறாள்..
காதல் என்பதில் முதலில் வருவது பொறாமை. சுகந்திக்குப் பிரசன்னாவின் மேல் காதல் வந்திருக்கிறது.. அதனால் வாசவியின் மேல் பொறாமை வந்திருக்கிறது..
அந்தக் கணம்.. சுகந்தியின் கரம் தொட்டு இழுத்து மார்போடு அணைத்து.. அவள் உச்சியில் இதழ் பதித்து.. அவளது காதோரம் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அவளுக்கு அமைதியளிக்கத் துடித்தான் பிரசன்னா..
ஆனால் எதிரே அமர்ந்திருப்பவள்.. இன்னும் அவனுக்கென்று முடிவு செய்யப்படாமலிருக்கும்.. நிலையி லிருப்பவள்.. முடிவை எடுக்கத் தடுமாறிக் கொண்டிருப் பவள்.. எனவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.. சுகந்தியின் முகத்தையே ஆழமாகப் பார்த்தான்.. இம்முறை அவள் விழிகளைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.. மாறாக.. அவன் முகத்தையே படபடக்கும் இதயத்தோடு.. அலை பாயும் மனத்தோடு பார்த்தாள்..
“சுகந்தி..”
“ம்ம்ம்…”
“இப்போது அம்மா எங்கேயிருக்கிறாங்க..?”
“கீழே.. ஹாலில்..”
“வாசவி..?”
“மாடி ஹாலில்..”
“என்னோடு தனிமையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது யார்..?”
“நான்தான்..”
“என்னோடு பேச நீ வந்ததும்.. அம்மாவும்.. வாசவியும்.. ஒதுங்கி நின்று விட்டார்களே.. இதிலிருந்தே உன் உரிமையின் அளவுகோல் உனக்குத் தெரிய வில்லையா..?”
“…..”
“எனக்கென்று என் வீட்டில் தனி பெட்ரூம் உண்டு.. ஏதேனும் பேச வேண்டுமானால் இவர்கள் என்னை வெளியே கூப்பிடுவார்கள்.. இல்லைன்னா.. ஐந்து
நிமிடம் என் ரூமிற்குள் வந்து உட்கார்ந்து பேசிவிட்டுப் போய் விடுவார்கள்.. ஆனால் நீ.. என்னிடம் தாலி வாங்கிக் கொண்டு உரிமையுள்ள என் மனைவியாகி விட்டால்.. என்னுடன் இணை பிரியாமல்.. அந்த அறைக்குள்தான் இருப்பாய்.. நீ என்னுடன் தனித்திருக்கும் போது.. இவர்கள் என்னிடம் பேச வெளியே அழைக்கக் கூட மாட்டார்கள்.. புரிகிறதா..?”
“ம்ம்ம்..”
“தாய்க்குப் பின் தாரம் சுகந்தி.. அம்மாவிற்குப் பின்னால் நீ என்று இதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளாதே.. தாரம் என்று ஒருத்தி வந்து விட்டால்.. தாய் தன் உரிமையை விட்டுக் கொடுத்து விலகிக் கொள்வாள்.. என் அம்மாவும்.. வாசவியும் அந்த ரகம்..”
“ம்ம்ம்..”
“இப்போது மாடிக்கு நாம் தனியே பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தது யார்..? என் அப்பாவும் அம்மாவும்தானே..? இங்கே மாடி ஹாலில் துணைக்கு வந்து நம் வாய் பார்த்துக் கொண்டிருந்த உன் அக்காவைக் கழட்டி விட்டு.. தானும் கழன்று விலகி நின்று.. நமக்குத் தனிமையை ஏற்படுத்தித் தந்தது யார்..? வாசவிதானே.. இவர்களா.. உன்னுடன் போட்டிக்கு வரப் போகிறார்கள்..?”
சுகந்திக்கு கண்களில் நீர் மல்கிவிட்டது.. அதைக் கவனித்த பிரசன்னா சன்னமான குரலில் அதட்டினான்..
“ச்சு.. இப்போது எதற்குக் கண் கலங்குகிறாய்..?”
“தெரியாமல் பேசிவிட்டேன்..”
“இதுதான் தப்பு.. உன் மனதில் எது இருந்தாலும் தாராளமாய் நீ என்னிடம் கேட்கலாம்.. உனக்கு என் மேலிருக்கும் உரிமைக்கு வானம்தான் எல்லை.. அந்த உரிமையில் போட்டி போட யாரும் வரமாட்டார்கள்..”
“எனக்கு ஒன்றும் உங்கள் அம்மாவின் மேலும்.. வாசவியின் மேலும் பொறாமை இல்லை..”
“பயம் இருக்கிறது..”
“ம்ம்ம்..”
“பயம் வேண்டாம்.. நான் உன்னுடையவன்..”
சுகந்தி அவன் முகத்தை நிமிர்ந்து காதலுடன் பார்க்க.. பிரசன்னா திரும்பி மாடி ஹாலைப் பார்த்தான்.. வாசவி சுமதியை இந்தப் பக்கம் திரும்ப விடாமல் மறைத்து உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள்..
பிரசன்னா சுகந்தியின் வலக்கரத்தைப் பற்றினான்.. சுகந்தியின் உடல் சிலிர்த்துக் கை நடுங்க ஆரம்பித்ததை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. பற்றியிருந்த
கரத்தில் மென்மையாக முத்தமிட்டான்.. அதைத் தாள முடியாதவளாய்ச் சுகந்தி விழி மூடிக் கொண்டாள்..
“இது ஒருவழிப் பாதை சுகந்தி.. இனி நீ திரும்ப முடியாது..”
பிரசன்னாவின் வார்த்தைகள் சுகந்திக்குப் புரிந்தன.. அவள் ‘ஆமாம்’ என்ற பாவனையில் தலையை அசைத்தாள்.. சற்று முன்வரை ஒருவரையொருவர் அறியாதவர்கள் இப்போது ஒருவரில்லாமல் மற்றொருவர் வாழ முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப் பட்டவர்களாய்.. மௌனித்தனர்..
மௌனம் என்பது வாய்ப் பேச்சுக்களற்ற.. இதயம் மட்டுமே பேசிக் கொள்ளும் மொழி.. அது சுகமானது.. சுமை தாங்கும் மனத்திற்குத் துணை நிற்பது.. காதல் கொண்ட தருணத்தில் மடி தாங்குவது..
அந்த அழகான மௌனம் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது..
வாசவி சுமதியுடன் தீவிரப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது.. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத வளாய்ச் சுமதி எழுந்து கொண்டாள்..
“என்னங்க.. அதுக்குள்ள எழுந்து விட்டிங்க.. இன்னும் நாம் பேச வேண்டிய பேச்சை.. பேசவே இல்லையே..”
“அம்மாடி.. இதற்கு மேல் உனக்குப் பதில் சொல்ல என்னால் முடியாது… விட்டால்.. நீ இன்றைக்குப் பொழுதிற்கும் பேசிக் கொண்டே இருப்பாய்.. கீழே
ஆளைக் காணோமின்னு தேடுவாங்க.. நான் சுகந்தியைக் கூப்பிட்டுக்கிட்டு கீழே போக வேண்டும்.. ஆளை விடு…”
“அவங்க பேசி முடித்திருந்தால் இந்நேரம் எழுந்து வந்திருப்பாங்களே..”
“அதற்காக.. அவங்க பேசி முடிக்கும் வரை நான் காத்திருக்க முடியுமா..?”
“உங்களுக்காக அவர்கள் பேச்சு வார்த்தையைப் பாதியில் நிறுத்த முடியுமா..?”
“அப்படி என்னதான் பேச்சு வார்த்தை நடந்து கிறாங்க..?”
“ஏன்.. உங்கள் ஹஸ்பெண்ட் பெண் பார்க்க வரும் போது உங்களிடம் பேச நினைக்கவில்லையா..?”
“அந்தக் கொடுமையை ஏன்ம்மா கேட்கிற..?”
“த்சொ.. த்சொ.. சொன்னால்தான் உங்களுக்கும் மனசு ஆறும்..”
“அவர் கல்யாணத்திற்குப் பின்னால்கூட என்னிடம் பேச நினைக்க மாட்டார்..”
“அடக் கடவுளே..”
“நீயெல்லாம் எனக்காகக் கடவுளைக் கூப்பிடுவது போல் என் நிலைமை ஆகிவிட்டதா..?”
“அதனால் ஒன்றும் குற்றமில்லை.. கடவுளை யார் வேண்டுமானாலும்.. யாருக்காவும் கூப்பிடலாம்.. அவர் கோபித்துக் கொள்ள மாட்டார்..”
“ஆனால்.. நான் கோபித்துக் கொள்வேனே..”
“அது யோசிக்க வேண்டிய விஷயம்தான்..”
“நீ யோசித்துக் கொண்டே.. இங்கே உட்கார்ந்திரு.. நான் போய்ச் சுகந்தியைக் கூப்பிட்டுக்கிட்டு கீழே போகிறேன்..”
“நீங்க என்னங்க.. உங்க தங்கையைக் கடத்திக் கொண்டு போவதிலேயே குறியாய் இருக்கீங்க..”
“ஏன்னா.. அவள் என் தங்கை..”
“எனக்கு அண்ணியாக வரப் போகிறாங்களே..”
“அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம்..”
“அப்படி வந்து விடக்கூடாதுன்னு நீங்க ஒரே குறியாய் இருக்கீங்க போல இருக்கே..”
“அடேங்கப்பா.. நீ பெரிய வாயாடியாய் இருப்பாய் போல இருக்கே..”
“நீங்க சரியான டியூப் லைட்டுங்க.. இதைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரமா..?”
“உன்னைப் போன்ற வாயாடி நாத்தனாரைச் சமாளிக்க எங்கள் சுகந்திக்குத் திறமை போதாது..”
“இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்னவோ..?”
“எங்கள் சுகந்தி ஒன்றும் உனக்கு அண்ணியாக வரமாட்டாள்..”
“அதை நீங்கள் சொல்லக் கூடாது.. உங்கள் தங்கை.. இல்லையில்லை.. என் அண்ணி சொல்லட்டும்..”
“ஏன் சொல்ல மாட்டாள்..? இதோ-நானே அவளைக் கூப்பிட்டு என் முன்னாலேயே உன்னிடம் சொல்ல வைக்கிறேன்.. சுகந்தி.. சுகந்தி..”
சுமதி சத்தமாய் அழைக்கவும்.. மௌனத்திரை கலைய, அவசரமாய்ப் பிரசன்னாவும்.. சுகந்தியும் எழுந்து கொண்டார்கள்..
“என்ன சுமதி..?”
“இங்கே வா..”
கட்டாயம் போகத்தான் வேண்டுமோ.. என்ற ஏக்கத்துடன் சுகந்தி பிரசன்னாவைப் பார்க்க.. அவன் லேசாகச் சிரித்தான்..
“போய்த்தான் ஆக வேண்டும்.. வா.. போகலாம்..”
பிரசன்னா முன்னால் செல்ல.. சுகந்தி பின் தொடர்ந்தாள்..
“சுகந்தி.. இந்தப் பெண் என்ன இப்படி வாயடிக்குது..”
சுகந்தி பதறிப் போய்ப் பிரசன்னாவைப் பார்த்து விட்டு, சுமதியைக் கடிந்து கொண்டாள்..
“சுமதி.. என்ன பேச்சு இது.. வாசவி சிறு பெண்.. அவளைப் போய் இப்படிச் சொல்லலாமா..?”
“என்னடி.. அந்தப் பெண்ணுக்கு சப்போர்ட் பண்றே..?”
“நியாயத்தைச் சொன்னேன்..”
“என்னைவிட.. யாரோ ஒரு பெண் உனக்கு உயர்த் தியாகப் போய் விட்டாளா..?”
“அவள் யாரோ ஒருத்தியில்லை.. என் நாத்தனார்..”
சுகந்தி தன்னையுமறியாமல் சொல்லிவிட.. வாசவியின் இதழ்களில் வெற்றிப் புன்முறுவல் உதித்தது.. அவள் கட்டை விரலை உயர்த்திச் சுமதியிடம்.. வெற்றிக் குறியீடாகக் காண்பித்தாள்.. சுமதியின் முகம் கறுத்து விட்டது..
சுகந்தியின் முகத்திலிருந்த பிரகாசமும்.. பரவசமும்.. அவள் விழிகளில் தெரிந்த வெட்கப் பூச்சும்.. சுமதியின் மனதிற்குள் பொறாமைத் தீயை மூட்டிவிட்டது..
தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்வு அமைய வில்லை என்று அவள் மனதிற்குள் புகைந்து போனாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.