Chapter 11
“ஏன்ப்பா.. நமக்கெல்லாம் அறந்தாங்கியில் ஜவுளி எடுத்து விட்டு.. அண்ணிக்கு மட்டும் பொள்ளாச்சியில் ஜவுளி எடுக்க வேண்டுமா..? இது என்ன நியாயம்..?”
“ஏம்மா.. அறந்தாங்கியை விடப் பொள்ளாச்சியில் ஜவுளி சூப்பராக இருக்கும்ன்னு நினைத்தா இங்கு வந்திருக்கிறோம்..?”
“அப்படி இல்லையா..?”
“இல்லை..”
“வேறு எதுக்கு இங்கு வந்திருக்கிறோம்..?”
“முகூர்த்தப் பட்டு எடுக்கும்போது இரு வீட்டாரும் இருக்கனும்.. பெண் வீட்டாரை அறந்தாங்கிக்கு வான்னு சொல்வது எனக்குச் சரியாகப் படவில்லை.. அதனால்.. நாமே பொள்ளாச்சிக்குப் போய் விடலாம்ன்னு நினைத்து வந்திருக்கிறோம்..”
“ஓ.. அப்படியா..”
“அப்படித்தான்..”
பொள்ளாச்சியில் கார் நுழைந்தது.. அந்தப் பெரிய ஜவுளிக் கடையின் முன்னால் நின்றது.. மயில்வாகனமும்.. பரிமளாவும்.. சுகந்தியோடு நின்றிருக்க..
“அப்பாடா..!” என்றாள் வாசவி..
“என்னடி..?” என்று விசாரித்தாள் திலகம்..
“அந்தப் பீப்பாய் வரவில்லை..”
“எந்தப் பீப்பாய்..?”
“அதுதான்.. அண்ணியுடைய அக்கா..”
“அடிப்பாவி… உன் அண்ணனின் கல்யாணம் ஒழுங்காய் நடக்கனும்ன்னு கொஞ்சமாவது உனக்கு நினைவிருந்தால் வாயை மூடிக் கொண்டிரு.. பிரசன்னா..! உள்ளிருந்து உன்னைக் கொல்லும் வியாதியைத்தான் உன் பாசமலர் தங்கைன்னு நினைத்து.. நீ கொஞ்சிக் கொண்டிருக்கிற.. இப்போதாவது இவள் புத்தியைப்
புரிந்து கொள்..”
திலகம் சடைத்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள்.. “வாங்க அண்ணி..!” என்று பரிமளம் அருகே வந்து வரவேற்றாள்..
“அண்ணி..!” என்று வாசவி சுகந்தியிடம் போய் ஒட்டிக் கொள்ள.. பிரசன்னா தங்கையின் அருகே சென்று நின்று கொள்வதைப் போல்.. சுகந்தியின் அருகே சென்று நின்று கொண்டான்..
சுகந்தியின் விழிகள் பிரசன்னாவை ஆவலுடன் மொய்த்தன.. அவளது பார்வையில் தெரிந்த பிரியத்தின் வீரியம் பிரசன்னாவைத் தாக்கியது..
நேசிப்பதைவிட.. நேசிக்கப்படுவது சுகமானது.. பிரசன்னா அந்த சுகத்தை ஆழ்ந்து அனுபவித்தான்..
“நம்ம கடை இருக்க.. இன்னொரு கடையில் நாங்க ஜவுளி எடுப்பது இதுதான் முதல் முறை..” மனத் தாங்கலுடன் கூறினார் மயில்வாகனம்..
“தப்பா எடுத்துக்காதீங்க சம்பந்தி.. எதிலயும் முறைன்னு ஒன்று இருக்கு.. அதனால்தான்.. நான் வேறு கடையில் எடுக்கணும்னு பிரியப்பட்டேன்..” காளிதாஸ் புன்னகையுடன் கூற.. அவர்கள் ஜவுளிக் கடையின் படிகளில் ஏறினார்கள்..
“சுமதியையும் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கலாமே..” வாசவி முறைப்பதைக் கண்டு கொள்ளாமல் திலகம் வினவினாள்..
“சுமதி வந்திருக்கிறாளே.. அவள் வராமல் நாங்க எப்படி முகூர்த்தப் பட்டு எடுப்போம்..? அதோ.. அங்கே கடைக்குள் உட்கார்ந்து கூல்டிரிங்க் சாப்பிட்டுக் கொண்டு டிருக்கிறாள், பாருங்க..” என்று பரிமளம் காட்டிய திசையில் மற்றவர்கள் பார்த்தனர்..
அங்கே.. ஒரு சேரில்.. தோரணையுடன்.. மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சுமதி.. குளிர்பான பாட்டிலைக் கையில் வைத்துக் குடித்துக் கொண்டிருந்தாள்..
“அதுதானே பார்த்தேன்.. இந்த ஒட்டுப் புல் ஒட்டிக் கொண்டு வராமல்.. எப்படி வீட்டில் இருக்கும்..? பீப்பாய் எவ்வளவு கெத்தாக கூல்டிரிங்கைக் காலி பண்ணுதுன்னு பார்த்தீங்களா..?” வாசவி திலகத்தின் காதோரம் கிசுகிசுத்தாள்..
“பொண்ணு என்ன சொல்லுது..?” என்று பரிமளம் விசாரிக்க.. அதற்கும்..
“புடலங்காய்க்கு.. உப்பில்லைன்னு சொல்லுதுன்னு சொல்லுங்கம்மா..!” என்று எடுத்துக் கொடுத்தாள் வாசவி..
“டேய் பிரசன்னா.. வாசவி என்னவோ புதிதாய் வந்திருக்கிற சேலை டிசைனைப் பற்றிச் சொல்கிறாள்.. என்னன்னு கேளு..” என்று மகளை.. மகன் வசம் மாட்டி விட்டுவிட்டு.. திலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்..
ஜவுளிக்கடையின் முதலாளியே வந்து அவர்களை வரவேற்று அழைத்துப் போனார்..
“எங்க கடையில்.. மயில் வாகனத்தின் மகளுக்குக் கல்யாணஜவுளி எடுப்பது.. எங்களைக் கௌரவப்படுத்தும்.. விசயம்..!” என்று சொல்லி அவர்களை மரியாதையுடன் அமர வைத்தார்..
எல்லோருக்கும் குளிர்பானம் வந்தது.. சுமதி இரண்டாவது முறையாய்க் குளிர் பான பாட்டிலைக் கையில் எடுக்க..
“நீங்க அப்போதே கடைக்குள் வந்து உட்கார்ந்து விட்டிங்க போல..” என்று ஜாடையாய் வினவினாள் வாசவி.
“பின்னே.. உன்னை எதிர்கொண்டழைக்க வாசலில் வந்து காத்திருப்பேன்னு நினைத்தாயா…?” என்று இகழ்ச்சியான குரலில் கேட்டாள் சுமதி..
“அடடே..! உங்களைப் போய் நான் அப்படி நினைப் பேனா.. நீங்கள் யார்..? உங்கள் லெவல் என்ன..? நீங்கள் பேசாமல் கடைக்குள் கால் மேல்.. கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து.. வரிசை கட்டிக் கொண்டு வரும் கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களைக் காலி பண்ணுவீங்கன்னு தான் நான் நினைத்தேன்.. அது சரியாகப் போய் விட்டது.. இது எத்தனையாவது பாட்டில்..?” என்று கேலியாக விசாரித்தாள் வாசவி..
சுமதியின் முகம் கூம்பி விட்டது.. இவள் என்ன.. எப்படிப் பேசினாலும்.. பதிலுக்குப் பதில்.. அதுவும் திருப்பித் தாக்க முடியாமல் கொடுக்கிறாளே.. என்று மனதிற்குள் புகைந்து போனாள் அவள்..
வாசவி.. அதற்கு மேலும் சுமதியின் அருகே நிற்காமல் சுகந்தியிடம் சென்று சேலைகளைப் பார்த்துக் கொண்டே.. எதையோ முணுமுணுத்தாள்.. பிரசன்னா.. சுகந்தியின் அருகே வர.. அவனைப் பார்த்து.. வில்லங்கமாய் ஒரு சிரிப்புச் சிரித்து வைத்துவிட்டு.. பெரியவர்களின் அருகில் போய் விட்டாள்..
‘இது என்ன மாதிரியான சிரிப்பு..?’ என்று தங்கையின் சிரிப்பை வகைப்படுத்த முடியாமல் மண்டை மூளை குழம்பிப் போனான் பிரசன்னா..
சுகந்தியுடன் தனியாகப் பேசட்டும் என்று விலகிப் போகும் தங்கையை நினைத்துப் பெருமைப்படுவதா..? இல்லை.. அவளுடைய வில்லங்கமான சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று நினைத்துப் பயப்படுவதா என்று ஒன்றுமே புரியாமல் விழித்துக் கொண்டு சுகந்தியைப் பார்த்தான் அவன்..
“யார் அவள்..?” சுகந்தி.. பற்களுக்கு இடையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்..
‘ஆஹா.. என் கூடப் பிறந்த குட்டிப் பிசாசு.. எதையோ போட்டுக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறது போல..’
பிரசன்னா வாசவி போன திசையைப் பார்த்து ஆற்றாமையுடன் ஒரு பெருமூச்சை விட்டு விட்டு..
“எவள்..?” என்று கேட்டான்..
“அதுதான்.. உங்களின் பக்கத்து சீட் பைங்கிளி..”
“என் பக்கத்து சீட்டில் பைங்கிளியெல்லாம் இல்லை..”
“வேறு யார் இருக்கிறாங்க..?”
“ஒரு ஆண் சிங்கம்தான் இருக்கிறது..”
“யாரிடம் காது குத்துகிறீர்கள்..?”
“நான் பேங்க் மேனேஜர்ம்மா.. இந்தக் காது குத்தும் வேலையெல்லாம் எனக்குத் தெரியாது..”
“ஓஹோ.. ஆண் சிங்கத்தைத்தான்.. வார்த்தைக்கு வார்த்தை.. என் மீனாட்சி.. என் மீனாட்சின்னு கொஞ்சு கிறீங்களா..?”
‘ஓஹோ.. இதுதான் விசயமா..?’ வாசவியை நினைத்துப் பிரசன்னாவிற்குச் சிரிப்பு வந்து விட்டது..
“ஏன் சிரிக்கிறீங்க..?”
“சிரிப்பது கூட ஒரு குத்தமா..?”
“ஆமாம்.. எனக்குப் பதிலைச் சொல்லிவிட்டுச் சிரிங்க..”
“ஏய்ய்.. அவள்தான் சிறு பெண்.. விளையாட்டுத் தனமாய் ஏதோ சொல்லி விட்டாள்ன்னா.. உனக்கெங்கே போச்சு புத்தி..”
“ஏனாம்.. என் புத்திக்கென்ன குறையாம்..?”
“ஆமாம்.. அது என்ன நிறைவாகவா இருக்கு..? முட்டாளே.. என் பக்கத்து சீட்டில் இருப்பவன்.. என் உயிர் நண்பன்.. மீனாட்சி சுந்தரம்ன்னு பெயர்.. அவனை என் மீனாட்சின்னு சொன்னால்.. அதில் என்ன தப்பை நீ கண்டு விட்டாய்.. சொல்லு…”
“நிஜமாகவா..?”
“பின்னே பொய்யா..? வாசவி உன்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறாள்..”
சுகந்திக்கு ஒரே வெட்கமாகப் போய் விட்டது.. அவள் தலை குனிந்து கொண்டாள்..
“ஐ ஆம் ஸாரி..”
“விடு.. உனக்கு வாசவி என்னிடம் உரிமை பாராட்டிப் பேசினாலே தாங்காது.. என் மீனாட்சி.. என் மீனாட்சின்னு நான் சொல்வதாகக் கேள்விப்பட்டால்.. தாங்கிக் கொள்ளத் தான் முடியாது..”
சுகந்தி.. பிரசன்னாவின் விழிகளைப் பார்த்தபடி புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவனது விழியசையில் புடவையைத் தேர்ந்தெடுத்து.. திலகத்திடம் காட்டினாள்..
“இது அழகாக இருக்கே.. எங்க பிரசன்னாவிற்கு இந்த மெஜந்தா கலர்தான் ரொம்பப் பிடிக்கும்..!” என்று திலகம் கூற..
“இப்போதும் அண்ணனுக்குத்தான் இந்தச் சேலை பிடித்திருக்கிறது..” என்று விசமமாக.. வாசவி கூறினாள்..
“என்னடி சொல்கிற..?”
“ஒன்றும் சொல்லவில்லையே..”
“இல்லை.. எதுவோ சொன்னாயே..”
“நான் எதையும் சொல்லவில்லைம்மா..”
“என்னவோ போ.. வர வர நீ பேசுவது எதுவுமே எனக்குப் புரியவில்லை..”
திலகம் அலுத்துக் கொண்டதைக் கேட்ட வாசவி.. சுகந்தியின் பக்கம் திரும்பிக் கண்சிமிட்டினாள்.. அடுத்த கணம் திகைத்துப் போனாள்..
வாசவி கண் சிமிட்டியதைச் சுகந்தி பார்க்கவே யில்லை.. மாறாக அவளுக்கு அருகே வந்து நின்று கொண்டிருந்த அந்த உயரமான ஆடவன்தான் கவனித்தான்..
சுகந்தி கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்த அந்த உயரமானவனின் முகத்தில் வியப்பு தோன்றியது..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.