Chapter 24
“வசீகரா.. என் நெஞ்சினிக்க..
உன் பொன் மடியில்..
தூங்கினால் போதும்..”
திருமண மண்டபத்திலிருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. வசீகரமாய்ச் சிரித்துக் கொண்டே அருகில் நின்று கொண்டிருந்தவனைக் கடைக் கண்ணால் பார்த்தாள்.. அவளது பார்வையை உணர்ந்தவனின்.. புருவங்கள் மேலே ஏறின..
“என்ன..?”
“ஒன்றுமில்லை..”
“இல்லையே.. நிறைய இருப்பதுபோல் தோன்று கிறதே..”
“தோன்றும்.. தோன்றும்.. உங்களுக்கா தோன்றாது..? இதுவும் தோன்றும்.. இதற்கு மேலேயும் தோன்றும்..”
“எங்கே போகிறாய்..?”
“இது என்ன கேள்வி.. நான் பெண்ணழைக்கப் போக வேண்டாமா..?”
வாசவி.. மண்டபத்திற்குள் விரைந்து விட்டாள்.. அவள் மேலிருந்த நறுமணம்.. இன்னும் காற்றில் கலந்திருப்பது போல உணர்ந்தான் சந்தோஷ்..
“என்ன மாதிரியான பெண் இவள்.. இவளருகில் இருந்தால்.. நேரம் போவதே தெரிய மாட்டேன் என்கிறதே.”
சந்தோஷ்.. தன் காருக்கு அருகில் போனான்.. சற்று நேரத்தில் பெண்ணழைக்கப் பிரச்சனாவின் கார் கிளம்பியது.. பிரசன்னாவின் பெரியப்பா மகன் காரோட்டினான்..
பெண்ணழைத்துக் கொண்டு அவர்கள் வந்து இறங்கியதும் வீடியோ காமெரா ஒளி வெள்ளம் பாய்ச்ச ஆரம்பித்தது..
மணப்பெண் அலங்காரத்திலிருந்த சுகந்தியைப் பிரசன்னா ரசித்துக் கொண்டிருக்க.. சந்தோஷ்.. மணப் பெண்ணைவிட அழகாக இருந்த வாசவியை ரசித்துப் கொண்டிருந்தான்..
கூட்டத்திலிருந்த சம வயது உறவுப் பெண்ணொருத் தியிடம் எதையோ குறும்பாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த வாசவி.. தற்செயலாய்த் திரும்பி.. சந்தோஷைப் பார்த்தாள்..
இமைப் பொழுதில்.. கண் சிமிட்டிய சந்தோஷ் நான்கு விரல்களை உயர்த்திக் காட்டினான்.. எண்ணிக்கை நான்காம்.. கணக்குச் சொல்கிறானாம்..
வாசவி சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டு.. உறவினர்களுடன் திருமண மண்டபத்திற்குள் சென்று விட்டாள்..
சந்தோஷ் பெண் வீட்டாரின் அருகே போய் அமர்ந்து கொண்டான்.. மயில் வாகனம்.. ராமகிருஷ்ணனின் காதோரம் குனிந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்.. பரிமளத்திற்கு ஜானகி தீவிரமாய் யோசனை சொல்லிக் கொண்டிருந்தாள்.. சுமதி.. தன் கணவனை விழியால் தேடிக் கொண்டிருக்க.. அவன் கல்யாண மண்டபத்தில் இருந்த பெண்களை.. (மனைவியைத் தவிர..) பார்வை யிட்டுக் கொண்டிருந்தான்..
“சந்தோஷ்..”
“என்னப்பா..”
“மாப்பிள்ளைக்குப் போட மயில் வாகனம் வாங்கி வைத்திருக்கும் வைர மோதிரத்தை நீ பார்த்து விட்டாயா..?”
“பார்த்தேன்ப்பா.. நன்றாக இருக்கிறது..”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பிரசன்னா அவர்களுக்கு அருகில் வர.. ராமகிருஷ்ணன் மரியாதை யுடன் அவனை நோக்கினார்..
“வாங்க மாப்பிள்ளை..”
“உங்களுக்கு ஹோட்டலில் ஆறு ரூம்களை அரேஞ்ஜ் பண்ணியிருக்கிறேன்.. போதுமில்லையா..?”
“அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்ள மாட்டோமா..? நீங்கள் ஏன் சிரமப்படுகிறீங்க..?”
“இதில் என்ன சிரமம்..? மண்டபத்தில் பெண்ணுக்கு ஸ்பெசல் ரூம் இருக்கு.. அது போக.. இன்னும் இரண்டு ரூம்களை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.. இந்தாங்க. ரூம்களின் சாவிகளை வாங்கிக்கங்க..”
ராமகிருஷ்ணன் சாவிகளை வாங்கிக் கொள்ள.. பிரசன்னா அவரருகில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து சென்றான்..
“மாப்பிள்ளை நல்ல குணசாலியாக இருக்கிறாரு மயிலு.. நம் சுகந்தி கொடுத்து வைத்தவள்..”
“ஆமாம் அண்ணா.. மாப்பிள்ளையைப் பெற்றவங் களும் தங்கமான குணமடையவங்கதான்..”
“அந்தப் பெண்தான் துறுதுறுன்னு இருக்கிறாள்..”
“ஆமாம்.. ரொம்ப சுறுசுறுப்பு..”
அவர்கள் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக் கிறார்கள் என்பதை அறிய ஜானகி ஆவல் கொண்டாள்..
“யார் துறுதுறுப்பாய் இருக்கிறது..?”
“நம்ம சுகந்தியைக் கட்டிக் கொள்ளப் போகிற மாப்பிள்ளையின் தங்கைதான்..”
“யார் அது..? நான் இன்னும் பார்க்கவில்லையே..”
சந்தோஷ் அன்னையின் பக்கம் திரும்பி அமர்ந்து.. திருமண மேடையில்.. ஒரு சிறுமியைத் துரத்திப் பிடித்துக் கொண்டிருந்த வாசவியைக் காட்டினான்..
“அதோ.. அந்தப் பெண்தான் வாசவிம்மா..”
“வாசவியா..?”
“அதுதான் அவளுடைய பெயர்..”
சந்தோஷ் வாசவியிடமிருந்து பார்வையை விலக்காமல் ரசித்துக் கூற.. ராமகிருஷ்ணனும்.. ஜானகியும்.. ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்துக கொண்டனர்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.