Chapter 28
சில நேரங்களில் நம்மையறியாமல் நமக்குள் சில மாற்றங்கள் நிகழ்ந்து விடுவதுண்டு.. அன்று.. அந்த அந்தி மயங்கி.. இரவு வந்த நேரத்தில் அப்படியொரு ரசாயன மாற்றம் வாசவிக்குள் நிகழ்ந்து விட்டது..
சந்தோஷ் பெண்களிடம் வழியும் ரகமில்லை என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.. அவனது கம்பீரமான ஆண்மை ததும்பும் தோற்றம் பெண்களை வசீகரிக்கும் தன்மை கொண்டது என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்..
அவனை அவளுக்குப் பிடித்திருந்தது.. ஆனாலும் அதைக் காதல் என்று இனம் பிரித்து அவள் நினைத்த தில்லை..
‘ஆள் ஜம்மென்றுதான் இருக்கிறான்..’ இது மட்டுமே அவளது நினைவு..
மற்றப்படி அவனுடன் பேசிப் பழக வேண்டுமென்று அவள் நினைக்கவில்லை.. திலகம் அவளை வளர்த்திருந்த விதம் அப்படி.. வீட்டிலும்.. கல்லூரியிலும் துறுதுறுப்பாகப் பேசுவாள்.. பழகுவாள்.. ஆனால் அந்நியரிடம் அவ்வளவு எளிதாகப் பேசிப் பழகிவிட மாட்டாள்..
அப்படிப்பட்ட வாசவி.. இன்று அந்நியனான சந்தோஷின் கரத்தினுள் தன் கரத்தை விட்டு வைத்துத் தடுமாறி நின்றாள்..
‘இது தவறு வாசவி..’ அவள் மனம் எச்சரித்தது.. முதல் முறையாக அவள் மனதின் எச்சரிக்கையைப் புறக் கணித்தாள்.. எதுவென்று இனம் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் அவள் உணர்ச்சி வெள்ளத்தில் சிக்குண்டு விட்டாள்..
‘இனம் விளங்கவில்லை..
எவனோ.. என் அகம் தொட்டுவிட்டான்..’
வாசவி தன் வாழ்வில் முதன் முறையாகப் பேச்சிழந்து நின்றாள்.. அவனுடைய கைக்குள் அடங்கியிருந்த அவளுடைய கை நடுங்குவதை அவன் உணர்ந்தான்.. காற்றில் ஆடும் தளிர்கொடி போல்.. தொய்ந்து நின்றிருந்த அவளுடைய தோற்றம் அவனைக் கவர்ந்தது..
அவளது கையை அழுத்திப் பிடித்து.. அருகினில் அவளை இழுத்தான்.. அவர்கள் நின்றிருந்த இடத்தில்.. கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும்.. திருமணத்தின் முந்தைய நாள் இரவென்பதாலும்.. திருமண மண்டபத்தின் உள்ளே நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்ததால் உறவினர்கள் அங்கேயே அமர்ந்து விட்டதாலும்.. அவர்களை யாரும் கவனிக்கவில்லை..
இப்படி ஒரு சூழலில் அவனது கைப்பிடித்து நிற்க நேருமென்று சற்று முன் வரை கனவிலும் நினைத்தறியாத வாசவி.. உணர்ச்சி வேகம் தாங்காதவளாய்க் கண் கலங்கி விட்டாள்..
“ப்ளீஸ்..” என்று அதற்கு மேல் பேச முடியாதவளாய் அவள் நாத் தழுதழுக்க.. சந்தோஷ் அவளுடைய நிலையைப் புரிந்து கொண்டான்..
“நானிருக்கிறேன் வாசவி.. கலங்காதே..” ஆதரவாய் அவளது தோள் தொட்டான்.. அவள் நிற்க முடியாமல் தொய்ந்து தடுமாற.. ஆதரவாய் அணைத்துக் கொண்டுடான்..
“அலையே.. கடல் அலையே..
நீகலங்காதே.. மனம் மயங்காதே..
உன் அருகினில் நானிருப்பேன்..
என்னென்னவோ.. உன் ஆசைகள்..”
திருமண மண்டபத்து ஒலிபெருக்கியில் வாசவியின் மனத்தை அறிந்தது போல் பாடல் ஒலித்தது.. சந்தோஷின் கரங்கள்.. ஆதரவாய் அவளது தலைகோதி.. அந்தப் பாடலின் வரிகளை அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தன.. வாசவி விலக முயன்றாள்.. அவனது கரம் இறுகி.. அவளை விட மறுத்தது..
“ஏன் வாசவி.. என்னைப் பிடிக்கவில்லையா..?” அவன் அவளது செவியோரம் முணுமுணுத்தான்..
வாசவி பதில் சொல்லாமல் விசும்பினாள்..
“ச்சு.. அழக்கூடாது.. ஏன் அழ வேண்டும்..? உனக்கு என்ன பயம்..? நான் உன் சந்தோஷ்..” அவன் உரிமையுடன் அதட்டினான்..
“வேண்டாம்.. இது நடக்காது..”
“ஏன் நடக்காது..?”
“நீங்கள் அதிகம் பணக்காரர்..”
“என்னிடம் பணமில்லாவிட்டால்… உனக்கு என்னைக் காதலிப்பதில் பிரச்சனை இருக்காதா..?”
சந்தோஷ் இந்தக் கேள்வியை ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டான்.. அவளுடைய பதிலை அறிந்து கொள்ள அவனுடைய மனம் துடித்தது..
“நிச்சயம் பிரச்சனை இருக்காது.. அது எவ்வளவு ஆறுதலை எனக்குத் தரும் தெரியுமா..?”
வாசவியின் இந்தப் பதில் சந்தோஷின் மனதிற்கு எவ்வளவு பெரிய ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது என்பதை உணராதவளாக.. வாசவி.. அந்த வார்த்தைகளை உண்மையாகச் சொன்னாள்..
“வாசவி.. என் வாசவி..” அவண் கண்மூடிக் கிறங்கி நின்றான்..
வாசவிக்கு அந்த அனுபவம் புதிது.. அவள் விலக நினைத்தும் விலக இயலாதவளாக அவன் மார்பில் தலை சாய்த்தாள்..
“வாழ்க்கை நடத்தப் பணம் வேண்டாமா வாசவி..?”
“வேண்டும்தான்.. என்னைக் காலம் பூராவும் உட்கார வைத்துக் காப்பாற்றும் உழைப்பு உங்களிடம் இருக்கிறதே அது போதாதா..? அதையும் மீறி.. கோடீஸ்வரி என்ற பட்டம் எனக்கு எதற்கு.?”
“உன் பேரண்ட்ஸ் நான் பணக்காரனாக இல்லாமல் ஏழையாக இருந்தால்.. எனக்குப் பெண் தருவாங்களா..?”
“ஏன் தரமாட்டார்கள்..? அவர்கள் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள்.. நான் கேட்டால் ஏழையாக இருந்தாலும் பெண் தருவார்கள்..”
வாசவியின் முகத்தை உயர்த்தி.. அவளது விழிகளுக்குள் பார்த்தான் சந்தோஷ்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.