Chapter 29

0Shares

“நீ கேட்பாயா வாசவி..? நான் ஏழையாக இருந்தாலும் நீ அதை உன் பேரண்ட்ஸிடம் கேட்பாயா..?”

“கட்டாயம் கேட்பேன்..”

“ஏன்..?”

“தெரியவில்லை.. எதனால்ன்னு என் மனதிற்குப் பிடிபடவில்லையே.. கொஞ்ச நேரத்திற்கு முன்வரை.. நான்.. நானாக இருந்தேனே.. இப்போது மாறிப் போய் விட்டேனே..”

“எதனால்..?”

“எனக்குச் சொல்லத் தெரியவில்லை சந்தோஷ்..”

வாசவி தன்னையுமறியாமல் அவனது பெயரை உச்சரித்தாள்.. தான் சிறு பெண்.. கல்லூரிப் படிப்பில் இருப்பவள்.. அவன் வயதிலும்.. படிப்பிலும்.. வசதியிலும்.. பணத்திலும் மிக உயர்ந்தவன்.. தான் அவனைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று அவளுக்குத் தோன்றவேயில்லை..

என்னவோ.. காலம்.. காலமாய் அவனை அறிந்தவள் போல்.. அவள் அவன் பெயரை உச்சரித்தாள்.. அந்த அழைப்பு தந்த நெருக்கத்தில் சந்தோஷ் மனம் மகிழ்ந்து போய்விட்டான்.. தன் கரங்களுக்குள் இருந்த அவள் முகத்தில் தெரிந்த காதலை அவனால் உணர முடிந்தது.. குனிந்து மென்மையாக அவளது நெற்றியில் முத்தமிட்டான்..

அதை எதிர்பாராத வாசவியால் அந்த நிகழ்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவள் அவன் மார்பில் சட்டென்று முகம் புதைத்துக் கொண்டாள்..

திருமண மண்டபத்திற்கு உள்ளேயிருந்து நாதஸ்வர ஓசை கேட்டது.. நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதை உணர்ந்த வாசவி.. சட்டென்று சந்தோஷை விட்டு விலகினாள்.. அவன் அவள் கரத்தைப் பிடித்து நிறுத்தினான்..

“விடுங்கள் சந்தோஷ்.. எல்லோரும் வெளியே வர ஆரம்பித்து விட்டாங்க.”

“நான் உன்னுடையவன்தானே வாசவி..?”

சந்தோஷின் குரலில் இருந்த ஏக்கம் வாசவியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. அவ்வளவு பெரிய கோடீஸ்வரன்.. இப்படி உருகி வழிகிறானே..

“நான் உங்களுடையவள் சந்தோஷ்..”

வாசவி.. தன் கையைப் பற்றியிருந்த அவன் கையில் குனிந்து முத்தமிட்டுவிட்டுப் பதில் சொன்னாள்..

இதைவிட அழகான ஒரு பதில்.. காதலில் இருக்க முடியாது என்று சந்தோஷிற்குத் தோன்றியது..

அவள் அவனது கையை லேசாகத் தட்டிவிட்டுப் புள்ளிமான் போல் பின்னலாட.. மண்டபத்திற்குள் ஓடி மறைந்தாள்..

‘நான் உங்களுடையவள் சந்தோஷ்..’

அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள்.. காற்றோடு கலந்து சந்தோஷின் சுவாசத்தில் நுழைந்தன..

எத்தனையோ நாள்களுக்குப் பிறகு.. சந்தோஷின் மனம் அன்றுதான் இறகை விட லேசானதாய் மாறியது..

“இதுதான் நீ சொன்ன ஹோட்டலா சந்தோஷ்..? இந்த தகர டப்பாவையா நீ பெரிய ஹோட்டல்ன்னு பீற்றிக் கொண்ட..?”

ஆஷாவின் அலட்சியமான குரலும் கேள்வியும் சந்தோஷின் நினைவிற்கு வந்தது.. அவன் வேதனையுடன் கண்மூடி நின்றான்..

‘ஆஷா..’ அவனுடன் வெளிநாட்டில் படித்தவள்.. சந்தோஷின் கம்பீரமான தோற்றத்தில் கவரப்பட்டுக் காதல் சொன்னவள்..

“உன் பேரண்ட்ஸ் என்ன செய்கிறாங்க சந்தோஷ்..”

“ஹோட்டல் பிஸினெஸ்..”

சந்தோஷ் இதை இயல்பாகத்தான் சொன்னான்.. ஆனால் அவனுடைய வசீகரமான மேல்தட்டுத் தோற்றத்தை வைத்து அவன் மிகப் பெரிய ஹோட்டலை நடத்துகிறவரின் மகன் என்று நினைத்துத்தான் ஆஷா காதல் சொன்னாள் என்பது.. பின்னாளில் தெரிய வந்த போது.. சந்தோஷ் மனம் இறுகிப் போனான்..

சந்தோஷ் ஆஷாவைக் காதலிக்கவில்லை.. ஆனால் அவள் காதலிப்பதாகச் சொன்னதும் மனம் சலனப்பட்டான்.. வெளிநாட்டில் அவள் காட்டிய நெருக்கத்தில் மனம் தடுமாறினான்.. படித்து முடித்து.. இந்தியா திரும்பிய போது.. சந்தோஷ் ஆஷாவின் வீட்டைப்பற்றி விசாரித்தான்.

“எதற்கு கேட்கிறாய் சந்தோஷ்..?”

“முறைப்படி என் பேரண்ட்ஸைப் பெண் கேட்டு வரச்சொல்கிறேன் ஆஷா..”

“அவசரம் வேண்டாம் சந்தோஷ்.. நான் முதலில் பொள்ளாச்சிக்கு வந்து உன் ஹோட்டலைப் பார்க்கிறேன்.”

“நீ என்னைக் காதலிக்கிறாயா..? இல்லை.. என் ஹோட்டலைக் காதலிக்கிறாயா..?”

சந்தோஷ் அன்று விளையாட்டாகத்தான் கேட்டான். ஆஷா அதற்குப் பதில் சொல்லவில்லை.. ஆனால் அவள் பொள்ளாச்சிக்கு வந்து.. அவனது மெஸ்ஸைப் பார்த்து விட்டு முகம் சுழித்த போது.. அவனுக்குச் ‘சுளீர்’ என்று மனதில் வலித்தது..

“இதைப் போயா.. பெரிதாக நீ ஹோட்டல் பிஸினெஸ்ன்னு சொன்ன..?” என்று கேட்டாள்..

“புரியவில்லை ஆஷா.. என் பிஸினெஸ் எதுவாக இருந்தால் என்ன..? உனக்கு நான்தானே முக்கியம்..”

“இல்லை சந்தோஷ்.. எனக்கு உன் வாழ்க்கைத் தரம் தான் முக்கியம்.. உன் தோற்றத்தைப் பார்த்து.. நீ பொருளாதாரத்தில் செழிப்பானவன்னு நினைத்துத் தான் நான் காதல் சொன்னேன்..”

“ஓ.. நான் பணக்காரன் இல்லைன்னு இப்போது தெரிந்து விட்டது.. இப்போது என்ன செய்யப் போகிற..?”

சந்தோஷின் முகத்தில் இகழ்ச்சிப் புன்முறுவல் உதித்தது.. அவன் ஆஷாவை வெறுப்புடன் பார்த்தான்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link