Chapter 32
சந்தோஷ் உதட்டைக் கடித்துக் கொண்டு யோசித் தான்.. பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தான்.. உறவினர்களின் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து கொண்டு அவர்கள் கலகலப்பாய்க் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.. சந்தோஷ் நிம்மதியாய் உணர்ந்தான்.
வாசவியைச் சமாதானப்படுத்தாமல் அவனால் அங்கிருந்து நகர முடியாது என்று அவனுக்குத் தோன்றி விட்டிருந்தது.. அவள் எங்கே என்று தேடினான்.. சுகந்தியின் அறையில் அவள் இருந்தாள்..
“ஹாய்.. சுகந்தி..” வாசவியைப் பார்த்துக் கொண்டே சுகந்தியின் அருகில் உட்கார்ந்தான்..
“வா அண்ணா.. உன்னை மண்டபத்தில் பார்க்கவே முடியவில்லையே.. எங்கே போயிருந்தாய்..?” என்று நிச்சயதார்த்தப் பட்டுப் புடவையை மடித்த வண்ணம் சுகந்தி வினவினாள்..
“நீ என்னை எங்கே பார்த்தாய்..? பிரசன்னா எங்கே நின்று கொண்டிருந்தாரோ.. அந்தப் பக்கம்தானே.. சூரியனைத் தேடித் தலை சாய்க்கும் சூரியகாந்திப் பூப்போல.. உன் பார்வை திரும்பிக் கொண்டிருந்தது..” சந்தோஷ் கேலியாக நகைத்தான்..
“போ.. அண்ணா.. என்னைக் கேலி செய்கிறாயா..? ஆமாம்.. எங்கேயிருந்து இப்படிக் கவிதை போல் பேசக் கற்றுக் கொண்டாய்..? உனக்குக் கவிதை கூடத் தெரியுமா..?” சுகந்தி புருவம் உயர்த்தினாள்..
“அதுவா.. அதை எனக்கு ஒரு டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க..” என்றபடி சந்தோஷ்.. சுகந்தி அறியாத வண்ணம்.. வாசவியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்..
வாசவி.. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. சுகந்தி எழுந்து பெட்டியைத் திறந்து புடவையை வைத்துக் கொண்டிருந்த போது.. சந்தோஷ்.. வாசவியின் கைபிடித்து ஒரு காகிதத்தைத் திணித்தான்.. வாசவிக்கு வியர்த்துக் கொட்டியது.. சுகந்தி திரும்பிய போது.. சந்தோஷ் இயல்பாக அவள் முகத்தைப் பார்த்தான்.. வாசவி மட்டும் பேயறைந்தவள் போல் ஆகிவிட்டாள்..
“என்ன வாசவி.. இப்படி விழிக்கிற..?”
“ஒன்றுமில்லை அண்ணி..”
“உன் நாத்தனாருக்கு மந்திரித்து விடு சுகந்தி..”
“போ.. அண்ணா.. உனக்கு எல்லாமே விளையாட்டுத் தான்..”
“விளையாட்டை விளையாட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டும் சுகந்தி.. சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.”
“இங்கே யார் அதை சீரியஸாக எடுத்துக் கொண்ட தாம்..?”
“நிறையப் பேர் எடுத்துக் கொள்கிறார்கள்.. சரி.. நீ சீக்கிரம் தூங்கு.. நான் கிளம்புகிறேன்..”
சந்தோஷ்.. மாடிப்படியில் இறங்கி.. வாசல் பக்கம் சென்று.. சற்று முன் நின்ற இடத்தை விட்டுத் தள்ளி.. தோட்டத்தின் செடி மறைவில் நின்று காத்துக் கொண்டிருந்தான்..
“தனியே.. தன்னந்தனியே.. நான்
காத்துக் காத்து நின்றேன்..”
திருமண மண்டபத்தின் ஒலி பெருக்கியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க.. அவன் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்..
அங்கே.. மாடியறையில் சுகந்தியின் அருகேயிருந்த வாசவி எழுந்து ஜன்னலோரமாக வந்து.. கையிலிருந்த பேப்பரைப் பிரித்துப் படித்தாள்..
‘உன் துணையென்று..
எனை நீ நினைத்தால்..
தோட்டத்திற்கு வா..’
என்று எழுதப்பட்டிருந்தது.. மனம் குறுகுறுக்க.. அறையை விட்டு வெளியே வந்து படியிறங்கினாள்..
“வாசவி..” அவளுடைய பெரியம்மா அழைக்க..
“என்ன பெரியம்மா..” என்று நின்று கேட்டாள்..
“கனகாவைப் பார்த்தாயா..?”
“இங்கேதானே நின்று கொண்டிருந்தாள்..” வாசவி வெளியேற முடியாமல் தவித்தாள்..
“காணோமே..” என்றவாறு பெரியம்மா மகளைத் தேடிக் கொண்டு சென்றுவிட.. ஆசுவாசப் பெருமூச்சுடன்.. மற்றவர்கள் கண்ணில் படாமல்.. வாசல் பக்கம் விரைந்தாள்.
“இன்னொருத்தி நிழலையும்..
கண்ணெடுத்துப் பார்ப்பது..
தவறென்று நினைத்து விட்டாள்..
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி..
ஹலோ சொல்லிக் கைகொடுக்க..
தங்க முகம் கறுத்து விட்டாள்..”
சந்தோஷ் பாடலின் வரிகளில் லயித்திருந்தான்.. அவன் கண்களில்.. கண்ணீர் மல்க.. பிரிந்து சென்ற வாசவியே நின்றாள்..
“அந்தக் கன்னி பிரிந்து சென்றாள்..
நான் ஜீவன் உருகி நின்றேன்..
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்துப் பறந்து விட்டாள்..”
சந்தோஷ் உதடு கடித்து.. திருமண மண்டபத்தின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் வரும் வழியில் விழி பதித்துக் காத்துக் கொண்டிருந்தான்..
“மீண்டும் வருவாள்.. நம்பினேன்..
அதோ.. அவள் வரும்வழி..
தனியே.. தன்னந் தனியே..”
வாசவி.. திருமண மண்டபத்தின் வாசலில் தோன்றினாள்.. சுற்று முற்றும் பார்த்தபடி.. விரைவாகப் படிகளில் இறங்கி.. தோட்டத்துப் பக்கம் வந்தாள்.. இருளின் போர்வையில் மறைந்து நின்றவனை அவளால் பார்க்க முடியாமல் போக.. அவள் திரும்ப முனையும்போது.. சந்தோஷ் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.