Chapter 02

0Shares

கிரிக்கெட் மட்டையுடன் பேட்ஸ் மேனாக நின்றிருந்த வினோத் குனிந்து அவனை நோக்கிப் பறந்து வந்த கிரிக்கெட் பந்தை அர்ஜீனன் அம்பு விடுவதற்கு முன்னால் குறி பார்ப்பதைப் போல உன்னிப்பாக பார்த்தான்.. மட்டையை வீசியடித்தான்.. சுழன்று வந்த பந்தை அவனது கிரிக்கெட் மட்டை சுழற்றியடித்ததில் அது மைதானத்தைத் தாண்டி வானில் பறந்தது..

“சிக்ஸர்..”

ஸ்டேடியத்தில் கூடியிருந்த கல்லூரி மாணவ மாணவிகளின் கூட்டம் உற்சாகத்துடன் ஆரவாரித்தது.. சிவந்த நிறத்துடன் கவர்ச்சிகரமான அழகனாக இருந்தவனை நோக்கிப் பறக்கும் முத்தங்கள் பாய்ந்தன.. அவற்றால் பாதிக்கப்படாதவனாக அவன் திரும்பி நின்று கொள்ள ரமேஷ் அங்கலாய்த்தான்..

“நெல்லுக்குப் பாயறதை கொஞ்சம் புல்லுப் பக்கமும் தள்ளி விடக் கூடாதாடா..?”

“என்னத்தடா உளருகிற..?”

“உனக்கு உளறலாத்தான் இருக்கும்.. பறந்து வர்ற பிளையிங் கிஸ் முழுசும் உன் பக்கமாவே பாயுது பாரு.. அந்தக் கொலஸ்ட்ரால்டா உனக்கு..”

“நானாடா கேட்டேன்..?”

“நான் கேக்கறேங்கிறதைச் சொல்லிக் காட்டறியா..?”

“இப்ப என்னங்கிற..? என் பக்கம் வர்ற பிளையிங் கிஸ்ஸை 

உன் பக்கமா திருப்பனும்.. அவ்வளவுதானே..? திருப்பிட்டாப் போச்சு..”

“நக்கல்..? உனக்குன்னு எல்லாம் வந்து சேருது.. எனக்குத்தான் எதுவும் மாட்ட மாட்டேங்குது..”

“சொப்னா மாட்டினாளே.. என்ன ஆச்சு..?”

“மனுஷியாடா அவ..? வானம் அழகு.. பூமி அழகுன்னு பாடாய் படுத்தி எடுக்கிறா.. கவிதைன்னு சொல்லி எதையோ கிறுக்கிக் கொண்டு வந்து நீட்டறா..”

“காதல் கவிதைதான.. சந்தோசப்படுவியா.. அதை விட்டுட்டுப் புலம்பற..”

“ஏண்டா நீ வேற கடுப்பைக் கிளப்பிக்கிட்டு.. அதெல்லாம் இயற்கையை வர்ணிச்சு எழுதின கவிதைடா..”

“ரசனையா இருக்காளேன்னு சந்தோசப்படு..”

“கடுப்படிக்காதே.. கல்லைப் பார்.. புல்லைப்பார்.. மண்ணைப் பார்ன்னு எழுதறதெல்லாம் கவிதையாடா..?”

“தா பாருடா ரமேஷ்.. அவனவன் காதலிக்காக என்னென்னவோ செய்யறான்.. அட்லீஸ்ட்.. நீ அவ எழுதித் தள்ளற கவிதைகளையாச்சும் ரசித்துத் தொலையேண்டா..”

“அதில நான் தொலைஞ்சு போயிடுவேன் போல இருக்கேடா.. ஆஹா.. இந்தக் கவிதைல்லாம் அற்புதம்ன்னு சொல்ல எனக்கும் ஆசைதான்.. வாயா வலிக்கப் போகுது..? எங்கே..? அப்படிச் சொல்லித் தொலைச்சாத்தான் அவ வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்க்கச் சொல்லி உனக்கு என்ன தோணுதுன்னு இம்சிக்கிறாளேடா..”

“ஏதாச்சும் தோணினதச் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே..”

“சொன்னேனே.. நான் சொல்லாம இருப்பேனாடா.. வினோத்..? இருந்திருந்து என் முகரையையும் ஒருத்தி காதலிக்கிறேன்னு சொல்றான்னா அவளைத் தக்க வைச்சுகனும்னு நானும் மெனக்கெட மாட்டேனா..? அவளைக் கை நழுவ விடனும்னு எனக்கென்ன நேர்த்திக் கடனா இருக்கு..? அப்படி வாயைத் திறந்தினால வந்த வினைதான் இது.. அவ என்னை முறைச்சுப் பார்த்துட்டு கழட்டி விட்டுட்டுப் போயிட்டாடா மச்சி..”

“த்சு.. த்சு.. நீ பாவம்தான்.. அப்படி ரசனையாய் என்னதான் சொல்லி வைச்ச..”

“வானத்தைக் காட்டினா.. வட்டம், வட்மாய் மிதந்து போகிற மேகங்களைப் பார்த்தா உனக்கென்ன தோணுதுன்னு கேட்டா..”

“நீ யென்ன சொன்ன..?”

“ஆப்பம் போல இருக்குன்னேன்..”

“அடப்பாவி..! ஹா.. ஹா..”

“அப்ப பீச்சில இருந்தோமா.. கடலைக் காட்டி அலைகளைப் பார்த்தா உனக்கென்ன ஃபீலிங் வருதுன்னு கேட்டா..”

“நீ உடனே ஆப்பத்துக்கு ஊத்திக்கிற தேங்காய் பாலைப் போலவே இருக்குன்னு சொல்லியிருப்பியே..”

“எப்படிடா கரெக்டா கண்டுபிடிச்ச..?”

ரமேஷ் ‘ஆ’வென வாய் பிளக்க.. கொசுவொன்று அவன் வாய்க்குள் பிரயாணித்து நின்று நிதானமாக சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்தது.. இளைப்பாறுதலை முடித்து அடுத்த பந்தை அடிக்கத் தயாரான வினோத்..

“இதுக்கெதுக்கு இத்தனை பில்ட்-அப்..? உன் புத்தி எப்படி யோசிக்கும்ன்னு எனக்குத் தெரியாதா..? பாவம் சொப்னா..” என்று பரிதாபப்பட்டான்..

“அவளாடா பாவம்..? ஆப்பத்துக்கும் தேங்காய் பாலுக்கும் அருமையான உவமை சொன்னேன்னு மகிழ்ந்து போகாம வெறுத்துப்போய் என்னைப் பார்த்தாடா..”

“ஹா.. ஹா.. அப்புறம்..?”

“அப்புறம் என்ன.. விட்டுட்டுப் போயிட்டா..”

தன் சொந்தக்கதை, சோகக்கதையை சொல்லியபடியே வினோத்துக்கு எதிர் திசையில் சென்று நின்ற ரமேஷ் பேட்டால் மணலை நிரடினான்.. பால் போடப் போன முகுந்தன் கோபமாகி..

“என்னத்துக்குடா பூமியிலே பள்ளம் பறிக்கற..? தண்ணி பீய்ச்சப் போகுது..” என்று பல்லைக் கடித்தான்..

“போடா.. போடா.. போய் பாலைப் போடுடா..” என்று கை காட்டினான் ரமேஷ்..

“நீ பண்ற கூத்தில எனக்கு கவனம் டைவர்ட் ஆகுது.. டேய் வினோத்.. இவனை என்னன்னு கேட்க மாட்டியா..?”

“கேட்டுட்டாலும் கழுதையில..! நீயேண்டா அவனைப் பார்க்கிற..?”

“பார்க்காம பாலைப் போட்டா இவன் பல்bல்லாம் எகிறிரும்.. பரவாயில்லையா..?”

முகுந்தனின் உக்கிரத்தில்..

“ஆத்தி..” என்று பயந்து போய் வாயை இறுக மூடிக் கொண்ட ரமேஷ் பேட்டால் மண்ணில் பள்ளம் பறிக்கும் வேலையை உடனடியாக கைவிட்டான்..

“அஃது..”

ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்து விட்டுப் போன முகுந்தன் ஓடி வந்து பந்தை வீசினான்.. காத்திருந்த வினோத் அடுத்த சிக்சரை விளாசித் தள்ளினான்.. பறந்து போன பந்தை உற்சாகமாக பார்த்த ரமேஷ்..

“உன்கூட ஜோடி சேர்ந்து பேட்டைப் பிடிச்சா ஓட வேண்டிய வேலையே இல்லாம ரன்னைக் குவிக்கலாம்டா..” என்று மெச்சிப் போனான்..

எறிகிற பந்தையெல்லாம் வினோத் அடித்து வீழ்த்தும் கடுப்பில் இருந்த முகுந்தன் வினோத்தின் மீது இருந்த கடுப்பை ரமேஷிடம் காட்டி வம்புக்கு இழுத்தான்.

“ஆடாம ஜெயிக்கலாம்ன்னு நினைக்கிற போல இருக்குடா ரமேஷ்.. இப்பத்தான் தெரியுது.. சொப்னா ஏன் உனக்கு குட்பை சொன்னான்னு..”

விசமப் பார்வையுடன் முகுந்தன் சொல்லி முடிப்பதற்கு..

“டேய்..” என்றபடி அவன்மீது பாய்ந்து விட்டான் ரமேஷ்..

அம்பயரும் கோச்சும் அருகே ஓடிவந்தார்கள்.. விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இரு அணியாகப் பிரிந்து ரமேஷையும் முகுந்தனையும் பிரித்தெடுத்து நிறுத்தினார்கள்..

“உன்னைப் பத்தித் தெரியாதாடா.. நீ உலக மகா கஞ்சன்.. ஹனிமூன் போனாலும் தனியாத்தான் போவ.. பெண்டாட்டியைக் கூப்பிட்டுக்கிட்டுப் போனா வீண்செலவும்ப.. நீ..! என்னைச் சொல்ல வர்றியா..?”

ரமேஷ் கத்திய கத்தலில் முகுந்தன் ரௌத்ரமானான்.. இருவரையும் அதட்டிய கோச் விசிலை ஊத.. முரட்டுக் காளைகளாய் பிரிந்து நின்ற இருவரும் ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்.. வினோத் அடித்துத் தள்ளிய சிக்சர்களில் ஸ்டேடியம் அதிர அவனது அணி வெற்றிவாகை சூடியது.. அவன் அன்றைய தினத்தின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப் பட்டான்.

முகுந்தனின் பந்தினால் எந்தவிதச் சேதாரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று கவனமாக ‘நின்று..’ விளையாடிய ரமேஷ் ஆட்டம் முடிந்ததும் ‘அப்பாடா..’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

‘இன்னைக்கு இவன்கிட்டயிருந்து தப்பிச்சாச்சு.. நாளை சங்கதியை நாளைக்கே பார்த்துக்கலாம்..’ என்ற உத்தேசத்துடன் எதற்கும் இருக்கட்டுமென்று வினோத்தை ஒட்டியபடியே நின்று கொண்டான்..

ஆட்டம் முடிந்தது என்று இரு அணிகளும் ஒருவரையொருவர் கட்டித் தழுவ ஆரம்பித்தனர்.. கண்களில் ஒளிர்ந்த வன்மத்துடன் முகுந்தன் கைகளை விரித்தபடி ரமேஷைத் தழுவ வந்தான்.. அரண்டு போன ரமேஷ் அவசரமாகப் பின்வாங்கி அருகிலிருந்த வேறு ஒரு மாணவனைக் கட்டித் தழுவித் தப்பித்தான்..

‘நாள, பின்ன மாட்டாமலா போவ..?’

கண்களில் எச்சரிக்கை வாசகத்தை எழுதித் தள்ளி ரமேஷின் பக்கம் தள்ளியபடி நகர்ந்து விட்டான் முகுந்தன்..

அவனது ‘இருக்குடி உனக்கு..’ என்ற சூளுரையில் கலவரமாகிப் போன ரமேஷ்..

“என்னடா இவன் இப்படி முறைக்கிறான்..?” என்று வினோத்திடம் முறையிட்டான்.

“விடுடா.. இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு.. வீக் எண்டில கூப்பிட்டுக்கிட்டுப் போய் கரெக்ட் பண்ணு..”

வினோத் ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து கொண்டிருந்தாள் வெல்வெட்.. மூன்றாமாண்டு என்ஜினியரிங் மாணவி.. அவளைப் பார்த்ததும் கள்ளுண்ட நரியான ரமேஷ்..

“அதுக்கென்ன மச்சான்.. கரெக்ட் பண்ணிட்டாப் போச்சு..” என்று ஜொள்ளினான்..

“உன் ரிங் டோனே கரெக்டா வல்லியே..”

ரமேஷின் குரல் மாற்றத்தில் சந்தேகித்த வினோத்.. கடந்து போன வெல்வெட்டைப் பார்த்து விட்டு..

“அடப்பாவி..! சொப்னாவே உனக்குச் சொப்பனமா ஆகிட்டா.. இவ வெல்வெட்..! கையில நிக்காம வழுக்கிக்கிட்டுப் போயிருவா.. ஆனாலும் உனக்கு இம்புட்டுத் தன்னம்பிக்கை இருக்கக் கூடாதுடா..” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“விடு மச்சி.. இது வாலிப வயசு..”

ரமேஷ் விசிலடிக்க முற்பட்டான்.. காற்றுத்தான் வந்தது..

“வராததை ஏண்டா டிரை பண்ற..?” வினோத் திட்டினான்..

ஊர்வசியை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ்.. 

“அப்படிங்கற..? இது எனக்குத் தோணாம போச்சே..” என்றான்..

“எது..?”

“எம்புட்டுத்தான் டிரை பண்ணினாலும் இது வராதுங்கிறது..”

‘இவன் என்ன சொல்றான்..?’

புருவங்களை உயர்த்திய வினோத் ரமேஷின் பார்வையைப் பின்பற்றித் தன் பார்வையைச் செழுத்தினான்.. அங்கே ஊர்வசி வர்ஷாவுடன் ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.. பல்லைக் கடித்தவன்..

“டேய்.. நீ அடங்கவே மாட்டியா..?” என்று நண்பனை அதட்டினான்..

“அடங்கிட்டாலும்..”

ரமேஷ் முணுமுணுத்தான்.. வினோத்தைப் பாராட்டிக் கை குழுக்க நீ, நானென்று பெண்கள் கூட்டம் அலை மோதியது.. பிடித்த கரத்தை விட மனமில்லாமல் அவர்கள் நிற்க, வினோத் நாசுக்காக தன் கையை உறுவிக் கொண்டான்.. பட்டும் படாமலும் கை குலுக்கிய வர்ஷாவின் கையை மட்டும் இறுக்கிப் பிடித்தான்.. அவள் முறைப்புடன் தன் கையை உறுவிக் கொண்டு போனாள்.. போனவளை ஆர்வத்துடன் பார்த்த வினோத்தை ஆட்சேபமாகப் பார்த்தான் ரமேஷ்..

“காலேஜே உன்னைப் பார்த்துச் ஜொள்ளு விடுது.. நீ என்னடான்னா முத்தின கத்தரிக்காயைப் பார்த்து ஜொள்ளு விடறவளைப் பார்த்து ஜொள்ளு விடற.. தேவையாடா..?”

“எனக்கு அவ தேவைதாண்டா..”

“அவளோட தேவை அந்த முரளிதரனாமே..”

“அவரோட தேவை இவ இல்லைல்ல.. அவர் ஆட்டத்துக்கே வர மாட்டாருடா.. ஒன்லி ஒன் மேன் ஆடற மேட்ச்சுடா இது.. வர்ஷா எனக்குத்தான்..”

“அவ மனசில நீயில்ல..”

“பட்.. என் மனசில அவதான் இருக்கா..”

“உன் ரேன்ஜே வேற வினோத்.. நீ காலேஜோட சூப்பர் ஸ்டார்..”

“அவ ரேன்ஜீம் வேறதாண்டா.. அவ காலேஜோட பியூட்டி குவின்..”

காரில் ஏறிக் கொண்டிருந்த வர்ஷாவைப் பார்த்தபடி தன் கார்க் கதவைத் திறந்தான் வினோத்.. அந்தக் கல்லூரியே கதாநாயகன் எனக் கொண்டாடப் படுபவனைத் துச்சமாகப் பார்த்தபடி காரைக் கிளப்பிப் பறந்து விட்டாள் வர்ஷா.

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link