Chapter 10
காலையில் விழித்த போதே மனதுக்குள் ஒர் புத்துணர்வு ஏற்படுவதைப் போல உணர்ந்தான் முரளிதரன்.. காபி கொண்டு வந்த அபிராமியிடம் சிரித்த முகமாக.
“குட்மார்னிங்..” சொல்லவும் செய்தான்.
“முரளி..? நீதானாடா..?”
அபிராமி கண்களைக் கசக்கிக் கொண்டு தன் மகன்தான் எதிரில் நிற்கிறானா என்று அடையாளம் பார்த்தாள்..
அவள் மகன்தான் நின்றான்.. சாட்சாத் இது முரளிதரன்தான் என்று உறுதிபடுத்திக் கொண்ட அபிராமி செய்தியைக் கணவனிடம் ஒளிபரப்ப விரைந்து சென்றாள்.
“பார்த்தும்மா.. கால் தடுக்கிறப் போகுது..”
சிரித்தபடி தாய்க்கு எச்சரிக்கை செய்த முரளிதரனுக்கே இது தான்தானா என்ற சந்தேகம் எழுந்தது.. மனதில் உண்டான புத்துணர்வுக்குக் காரணம் புரியவில்லை.. இன்று புதிதாகப் பிறந்ததைப் போன்ற குதூகலம் ஏன் அவன் மனதில் உண்டாகிறது.?
வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து குளித்து உடைமாற்றி கல்லூரிக்குப் போகத் தயாராகி அவன் டைனிங் டேபிளுக்கு வந்தபோது, ஹாலில் இருந்த டிவியில்..
“புத்தம் புது ஓலை வரும்..” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..
“அந்தக் காலத்தில ஓலையை டெலிவரி பண்ண எந்த போஸ்ட் ஆபிஸ் இருந்திருக்கும்..?”
சிரித்தபடி கேள்வி கேட்ட மகனைப் பார்த்த விஸ்வநாதனின் மனம் லேசானது.. இப்படிப்பட்டக் கேள்விகளைச் சிரிக்காமல் கேட்டு வைப்பவன்தான் முரளிதரன்.
‘அப்படி இருந்தவன்தான் எப்படி மாறிட்டான்..’ பெருமூச்சு விட்டார்..
“பூரி கிழங்கா..? போடுங்க.. போடுங்க..”
வெகு காலத்திற்குப் பின்னால் ரசித்துச் சாப்பிட்ட மகனுக்காக ஓடியோடிப் பரிமாறிய அபிராமியின் கண்கள் பனித்திருந்தன.
‘இப்படி ரசிச்சு, ருசிச்சு இவன் சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சு..’
எண்ணையில் பொரிந்த பூரிகளை எடுத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
‘ரொம்ப நாளைக்குப் பின்னால பிள்ளை மூஞ்சியில சிரிப்பு வந்திருக்குது.. அழுமூஞ்சித்தனமா நின்னு அந்த சிரிப்பைத் துரத்திறக்கூடாது..’
தாய்மையின் பொறுப்புணர்வுடன் மலர்ச்சியாக முகத்தை வைத்துக் கொண்டு மகனின் தட்டை நிரப்பினாள்.. அவனும் மறுக்காமல் சாப்பிட்டான்.. சன்னமாக விசிலடித்தபடி காரைக் கிளப்பினான்.. வாசலுக்கு வந்திருந்த விஸ்வநாதனும், அபிராமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..
“இன்னைக்கு என்னடி ஆச்சு..? நம்ம புள்ள முகத்தில இம்புட்டு சந்தோசம் இருக்கு..?”
“கண்ணைத் துடைங்க.. நம்ம கண்ணே பட்டிறப் போகுது.. என்னான்னு எனக்கும் தெரியலைதான்.. ஆனா முரளி சந்தோசமா இருக்கிறதில மனசெல்லாம் ரொம்பிப் போச்சுங்க.. சாப்பிடக் கூடத் தோணலை..”
“எனக்கும் அப்படித்தான் இருக்கு அபிராமி..”
“இந்த சந்தோசம் நிலைச்சு இருக்கனும்..”
“நிலைக்கும்டி அபிராமி.. நிச்சயமா நிலைக்கும்.. நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலை.. நம்ம புள்ளை சந்தோசமாத்தான் இருப்பான்..”
பெற்றவர்கள் மனம் நெகிழ தோட்டத்திலேயே உட்கார்ந்து விட்டார்கள்.. சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தவர்கள் மரம், செடி கொடிகளைப் பார்த்தபடி பழைய நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தார்கள்.
கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து அசைபோடுவதும் ஓர்விதமான சுகம்தான்.. அந்த சுகத்தில் அவர்கள் ஆழ்ந்திருக்க, புதிதாக பிறந்திருக்கும் ஆனந்தத்தின் சுகத்தில் ஆழ்ந்தபடி கல்லூரியில் காரை விட்டு இறங்கி நடந்தான் முரளிதரன்.
“குட்மார்னிங் சார்..”
எதிர்பட்ட மாணவ, மாணவியரின் காலை வணக்கத்திற்கு இன்முகத்துடன் தலையை அசைத்தான்.
“என்னடா இது..? இந்த ஆளு முரளிதரன்தானா.. இல்லை அவருடைய குளோனிங்கா..?”
ஆச்சரியப்பட்டுப் போன மாணவ மணிகள், அவர்களது கையைக் கிள்ளி சந்தேகத்தை நிவர்த்தி செய்யாமல், அருகிலிருந்த அவர்களின் தோழமையின் கையைக் கிள்ளி, அவர்கள் அலறுவதை வைத்து..
“ஆஹா.. இது முரளிதரன் சாரேதான்..” என்று தெளிந்தார்கள்.
கிள்ளு வாங்கிய தோழமைகள் பதிலுக்குக் கிள்ளி அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டார்கள் என்பது வேறு விசயம்..
எல்லோருக்கும் சிரித்த முகமாய் தலையை அசைத்தவன் வர்ஷாவுக்கு மட்டும் தலையை அசைக்காமல் முறைத்து விட்டுச் சென்றதில் வர்ஷாவின் தோழிகள் அவளைக் கேலி பண்ணிச் சிரித்தார்கள்.
“என்னதான் தலைகீழா மாறினாலும் உன் விசயத்தில மட்டும் மாறாம முரளிசார் இரும்பு போல உறுதியா இருக்காருடி..”
வர்ஷாவின் முகம் சிறுத்தது.. அவளை உதாசீனம் செய்யும் முரளிதரனை அவளது கைக்குள் சிறைபிடிக்கும் நாள் வராதா என்று அவள் ஏங்கிப் போனாள்.. அந்த ஏக்கம் முரளிதரனுக்கானதா இல்லை அவனை வெல்வதற்கானதா என்று அவளது மனம் கேட்டதற்கான விடை அவளிடம் இல்லை..
“பேசாம கிராமத்திலயே இருந்திருக்கலாம்.. பட்டணத்துக்குப் போகலாமடி பொம்பள, பணங்காசு சேர்க்கலாமாடின்ன எங்கப்பா பாடுன பாட்டுக்கு எங்கம்மா நீ முன்னால போனா நான் பின்னால வர்றேன்னு எசைப்பாட்டுப் படிச்சுக்கிட்டு எங்கப்பா பின்னால வந்தாங்க.. நாங்க இந்த சென்னை மாநகரத்தில செட்டிலாகித் தொலைச்சிட்டோம்..” அலுத்துக் கொண்ட ரமேஷ் முரளிதரனைப் பார்க்கவில்லை..
பார்த்திருந்தால்.. என்னடா இந்த ஆளு சிரிச்சுக்கிட்டே போறான்.. இவனுக்குச் சிரிக்கத் தெரியுமா என்று கேட்டிருப்பான்.
நண்பனுடன் வாய் வளர்த்தபடி கல்லூரி வாசலின் பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் அடியில் காரை நிறுத்தி விட்டு அதன் மேல் சாய்ந்து நின்றிருந்த வினோத்துக்கும் முரளிதரனின் சிரித்த முகத்தைப் பற்றி எதுவும் தெரியாது.. அதனால் அவன்..
“என்னடா.. திடிர்ன்னு உன் கரிசனம் வில்லேஜ் பக்கம் திரும்புது..?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
“அங்கே பிளஸ்டூ படிச்சவனைக்கூடப் பெரிய படிப்பு படிச்சிருக்கான்னு சொல்லுவாங்க மச்சி… என்ஜினியரிங் படிச்சிருக்கேன்… என்கிட்ட எத்தனை கிராமத்து பைங்கிளிக மடங்குவாங்கன்னு நினைச்சுப் பாரு..”
“நினைச்சுக்கிட்டே இரு.. இப்பல்லாம் சிட்டி கேர்ள்ஸைவிட வில்லேஜ் கேர்ள்ஸ்தான் படு தெளிவா இருக்காங்க.. இளவட்டக் கல்லைத் தூக்கச் சொல்லி உன்னை ஒருவழி பண்ணிருவாங்க..”
“இளவட்டக் கல்லைப் பத்தி உனக்கெப்படிடா தெரியும்..?”
“எங்க கொள்ளுத்தாத்தா கிராமத்துப் பண்ணையாரு..”
“சொல்லவே இல்ல..”
“இப்பச் சொல்லிட்டேனில்ல.. கேட்டுக்க.. எங்க தாத்தா பிஸினெஸ் பண்ண சென்னைக்கு வந்தாரு.. செட்டிலாகிட்டாரு.. பட்.. பூர்வீக கிராமத்தில இருக்கிற லேண்ட்ஸையெல்லாம்
விற்கக் கூடாதுன்னு எங்க கொள்ளுத்தாத்தா எங்க தாத்தாகிட்ட பிராமிஸ் வாங்கிக்கிட்டாராம்.. ஸோ.. அந்த லேண்ட்ஸெல்லாம் அப்படியேதான் இருக்கு.. அதுக்குன்னு ஆளுக இருக்கிறாங்க.. விவசாயத்திலயும் பணம் வருது..”
“ம்ஹீம்.. உன்னைப் போல வரம் வாங்கி பிறந்தவனுக்கு எல்லாப் பக்கமிருந்தும் பணமா கொட்டும்.. என்னைச் சொல்லு..”
“வேணும்னா உன் பெயரில நூறு ஏக்கர் வாங்கித் தரேன்.. கிராமத்தில போய் விவசாயம் பண்ணிப் பணம் பாரு.. அப்படியே இளவட்டக் கல்லைத் தூக்கி ஏதாச்சும் ஒரு பச்சைக்கிளியை உஷார் பண்ணிரு..”
“இளவட்டக் கல்லுதானே..? தூக்கிட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்பேன்.. ஃபிகருக்காக எல்லாம் கல்லைத் தூக்கற காலம் மலையேறிப் போச்சுடா மச்சான்.. வேனும்னா ஒரு பேப்பர்ல இளவட்டக் கல்லுன்னு எழுதி அதைத் தூக்கிக் காட்ட வேண்டியது தான்..”
“நீ இருக்கியே..”
செல்லமாக அலுத்தபடி கல்லூரி வாசலைப் பார்த்தான் வினோத்..
“இவங்க எங்கேடா இங்கே வர்றாங்க..” என்றான்..
“யாரைடா சொல்ற..?” வாசலைப் பார்த்தான் ரமேஷ்..
அங்கே ஆட்டோவில் இருந்து இறங்கி பணம் கொடுத்துக் கொண்டிருந்தாள், அன்றொரு நாள் மழையில் குடையை விரிக்காமல் நனைந்தபடி சென்ற அந்தப் பெண்..
ஆட்டோவை அனுப்பி விட்டு நிதானமாக நடந்து வந்தவளின் எதிரில் சென்று நின்றான் வினோத்.
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.