Chapter 11

0Shares

“ஹலோ.. மேம்..”

அடையாளம் தெரியாமல் யோசிப்பாள் என்றுதான் வினோத் நினைத்தான்.. அவளோ இதமான அவளது பிரத்யேகப் புன்னகையுடன்..

“ஹலோ.. எப்படியிருக்கீங்க..?” என்றாள்..

“என்னை நினைவிருக்கிறதா..?” வினோத்துக்கு ஆச்சரியமாகி விட்டது..

“உங்களுக்கு என்னை நினைவிலிருக்கும்போது எனக்கு உங்களை நினைவிருக்காதா..?” சின்னச் சிரிப்புடன் கேட்டாள் அவள்..

“கூடவே என்னையும் நினைவில் வைச்சுக்கங்க மேம்..” ரமேஷ் வந்தான்..

“அட.. நீங்களும் இங்கேதான் இருக்கீங்களா..?”

“நாங்க ரெண்டு பேரும் நாலு வருசமா இங்கேதான் இருக்கோம் மேம்.. நீங்கதான் புதுசா வந்து நிற்கறிங்க…”

“புதுசா ஜாயின் பண்ண வந்தவங்க புதுசாத்தான் வந்து நிற்பாங்க..”

அவள் குண்டைத் தூக்கிப் போட்டதில் பத்தடி தள்ளி நின்ற ரமேஷ்..

“டேய்.. ஓடி வந்துருடா.. இவங்க புதுசா ஜாயின் பண்ண வந்திருக்காங்களாம்..” என்று அலறினான்..

“சும்மாயிருடா..” நண்பனை அதட்டிய வினோத்..

“ஐயாம் வினோத் மேம்.. ஃபைனல் இயர்.. இவன் ரமேஷ்.. என் கிளாஸ்தான்..” என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்.

“மை நேம் இஸ் பாரதி.. புதிதா வந்திருக்கிற லெக்சரர்..” தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பாரதி..

“நீங்க என்ன எல்.கே.ஜி ஸ்டூடண்டா..? இப்படி பயப்படறிங்க..? இந்த பாசாங்கை நான் நம்பிடுவேன்னு நினைச்சீங்களா..?” என்று ரமேஷிடம் புருவங்களை உயர்த்தினாள்..

“நிஜமாவே எனக்கு லெக்சரர்ஸ் மேலே பயம்தாங்க மேம்..”

“ஸோ.. அந்த பயத்தில நீங்க கிளாஸை கட்டடிச்சுட்டு பிலிம் பார்க்கப் போயிருவீங்கன்னு சொல்லுங்க..” மிகச் சரியாக யூகித்தாள் அவள்..

“எப்புடி மேம்..” ரமேஷ் விழிகளை விரிக்க..

“நீங்க பிலிம் காட்டறதைப் பார்த்தாலே தெரியுதே.. லெக்சரரைக் கண்டா உங்களுக்குப் பயமா..? லெக்சரர்ஸ் உங்களைப் பார்த்துப் பயந்தாப் பத்தாதா..?” என்றபடி அவள் நடந்து விட்டாள்..

“வாட் எ பிரண்ட்லி லெக்சரர்..”

அன்றைக்கு வியந்த அதே தொனியில் வியந்தான் வினோத்.

“இந்தக் காலேஜில இப்படியொரு லெக்சரரின் எண்ட்ரியா..?” அதே தொனியில் சொன்னான் ரமேஷ்..

“ஏண்டா..? இந்தக் காலேஜீக்கு என்ன..?”

“கடுவன் பூனை இருக்கிற இடத்தில பச்சைக்கிளியா..?”

“யார் கடுவன் பூனை..?”

“அந்த சிடுமூஞ்சி முரளிதரனை வேற எப்படிச் சொல்லுவ..?”

“சிங்கம்ன்னு சொல்லுவேன்.. பேசாம வா..”

“பாருடா வினோத்து.. உனக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்தான்.. நீ சொன்னா மலையுச்சியில இருந்துகூடக் குதிப்பேன்தான்.. அதுக்காக பேசாம இருக்கனும்னு மட்டும் சொல்லிராதேடா.. பேச்சு என் மூச்சுடா..”

“அடச்சீ.. வாயை மூடிக்கிட்டு வா..”

“திரும்பவும் வாயை மூடச் சொல்றியே..”

“அடங்குடா..”

“அதைச்சொல்லு.. செஞ்சுடறேன்..”

ரமேஷ்.. கடைசி வார்த்தையைச் சொல்லும் சமயத்தில்தானா முகுந்தன் அந்தப் பக்கமாக வர வேண்டும்..?

ரமேஷிடம் வம்பிழுக்க எதுடா சாக்கு என்று அலைந்தவன்.. ‘அகப்பட்டுக்கிட்டாண்டா மாக்கான்..’ என்று ஆனந்தமாகிப் போனான்..

“என்னடா சொன்னே..?” அவன் நின்று முறைத்ததிற்கு..

“நான் என்னடா சொன்னேன்..?” என்று கலவரமாகிப் போனான் ரமேஷ்.

முகுந்தன் கூட வந்த நண்பர்களும் அதையே கேட்க.. 

“இவன் என்னப் பாத்து ‘செஞ்சுடுவேன்’ன்னு சொல்லறாண்டா..?” என்று உக்கிரமானான்.

“அடப்பாவி..! நான் சொன்ன செஞ்சிடறேன்க்கு வேற அர்த்தம்டா..”

“அதெப்படி.. செஞ்சுடுவேன்னு சொல்றதுக்கு வேற அர்த்தத்தை கண்டு பிடிப்ப..?”

முகுந்தன் நெருங்குவதற்குள் ரமேஷை இழுத்துத் தன் முதுகுப் புறமாக மறைத்துக் கொண்ட வினோத்.

“சண்டைபோட்டுத்தான் ஆகனும்னா மோதிப் பார்த்துரலாம் வினோத்.. ஆனா இங்கே வேணாம்.. இது காலேஜ்.. வெளியே வா.. கச்சேரியை வைச்சுக்கலாம்..” என்று அழுத்தமாகச் சொன்னான்..

முகுந்தன் பின்வாங்கி விட்டான்.. முறைத்தபடி அவன் போய்விட.. 

“என்னடா இவன் இப்படி மல்லுக்கு வர்றான்..?” என்று அங்கலாய்த்தான் ரமேஷ்.

“அதான்.. போயிட்டான்ல்ல.. வா..”

“இப்பப் போயிட்டான்.. மறுபடி வந்தான்னா..?”

“அதை அப்பப் பார்த்துக்கலாம்..”

“அவன் ஒரு முடிவோடதான் இருக்காண்டா..”

“அதுக்கு..?”

“கிளாஸீக்கு வந்தா அங்கேயும் வம்பிழுப்பான்.. நான் கிளாஸீக்கு வரலைடா..”

“அதான் அவனுக்குத் தோதாப் போயிரும்.. கிளாஸிலன்னா நான் உன்கூட இருப்பேன்.. வெளியே தனியா அவன்கிட்ட மாட்டினேன்னு வை.. நீ சட்னிதான் மச்சி..”

“வேண்டவே வேண்டாம்.. எதுக்கு வம்பு..? நானும் உன்கூட கிளாஸீக்கு வந்து தொலைக்கிறேன்..”

“அஃது..”

“இப்படி ‘எஸ்’ஸாக முடியாம கார்னர் பண்ணிட்டானே..”

புலம்பியபடி வினோத்துடன் நடந்தான் ரமேஷ்.. முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவனைப் போல அழும்பு பண்ணி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.. எல்லாம் வினோத்தினால்தான் என்று மூக்கை உறிஞ்சினான்.. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வினோத் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் எரிந்து விழுந்தான்.

“டேய்.. வெளியே போய் தொலைடா.. உன் ரோதனை தாங்கல.. உன் படிப்பை நீ படிக்க பி.ஈன்னு டிகிரி வாங்கறதுக்கு உன்கிட்ட நான் பேச்சு வாங்கனுமா..?”

“நிஜமாத்தான் வெளியே போகச் சொல்றியா வினோத்..”

புளகாங்கிதப் பட்டுப் போனான் ரமேஷ்.. விட்டு விடுதலையான கிட்டுக்குருவியைப் போல வகுப்பறையை விட்டு வெளியே பாய்ந்தவன், போன வேகத்தில் சுவரில் அடித்து பந்தைப் போல திரும்பி வந்தான்.

“என்னடா ஆச்சு..?” விசாரித்தான் வினோத்..

“கடுவன் பூனை வருதுடா.. அது கிளாஸை கட்டடிச்சா கொன்னு புதைச்சுரும்.. திரும்ப நான் கிளாஸ் ரூமுக்குள்ள வர முடியாதபடி செய்துரும்..” சோகமாக சொன்னான் ரமேஷ்..

“முரளிதரன்சார் வர்றாரா..? உனக்கு அவர்தாண்டா லாயக்கு.. கிளாஸ் ரூமுக்குள்ள என்ன.. காலேஜீக்குள்ளேயே கால் வைக்க முடியாதபடி ஆப்படிச்சுருவார்.. அடங்கி உட்காரு..”

“அடங்கி உட்கார்ந்துட்டேண்டா… அடங்கித்தான் உட்கார்ந்திருக்கேன்.. இந்த மனுசன் கிளாஸில வேற எப்படிடா உட்காருகிறது..?”

புலம்பினான் ரமேஷ்.. மிடுக்காக வகுப்பறைக்குள் வந்த முரளிதரன் கடுப்பான பார்வையை மாணவர்கள் பக்கம் வீசினான்.. அதைக்கூட மாணவிகளின் பக்கம் வீசவில்லை.. மாணவிகளுக்கும் அவனுக்கும் ஜென்மப்பகைபோல முகத்தை வைத்துக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்கிறவனைப் போல கறாராக பாடத்தை நடத்தினான்..

அவனுடைய முகம்தான் முள்ளைக் கட்டி விட்டதைப் போல கடுமையாக இருக்கும்.. விரிவுரையோ தெளிந்த ஆற்று நீரோட்டம் போல அருமையாக இருக்கும்.. அதை உணர்ந்திருந்த மாணவ, மாணவிகள் கவனத்தை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் சிதற விடாமல் அவன் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் சேகரித்துத் தங்களின் நோட்டுகளில் சேமித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.. மழைக்குக்கூட கிளாஸ் ரூம் பக்கம் ஒதுங்காத ரமேஷ்கூட அவனையறியாமல் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தான்.

முரளிதரனின் வகுப்பு நேரம் முடிந்த மணியொலித்தது.. அதைக் கவனிக்காமல் அவன் விரிவுரையில் ஆழ்ந்திருந்தான்.. அடுத்த வகுப்பை எடுப்பதற்காக புதிய விரிவுரையாளரான 

பாரதி வந்து விட்டாள்.. அவள் வகுப்பறைக்குள் நுழைந்த போது அவளுக்கு முதுகு காட்டி நின்றபடி விரிவுரை கொடுத்துக் கொண்டிருந்தான் முரளிதரன்.. புதிதாக வந்திருக்கும் லெக்சரரைப் பார்க்கும் ஆர்வத்தில் மாணவ, மாணவிகள் வகுப்பறையின் வாசலில் நின்றிருந்த பாரதியைப் பார்க்க, அதைக் கவனித்த முரளிதரன் எரிமலையானான்..

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link