Chapter 12
“அங்கேயென்ன பார்வை..? ஸ்டேண்ட் – அப்..”
முரளிதரன் பள்ளி மாணவனை அதட்டியதைப் போல ரமேஷை அதட்டி வைக்க.. அவன் மாணவிகளைப் பார்த்தபடி எழுந்து நின்றான்.. உள்ளங்கையால் வாயைப் பொத்திச் சிரித்த மாணவிகளால் நொந்து போன ரமேஷ்.. ‘வடை போச்சே..’ ரீதியில்
‘இமேஜ் போச்சே.. போச்சே..’ என்று மனதுக்குள் புலம்பினான்.
“இந்தக் கோராமைக்குத்தான் நான் கிளாஸ் ரூம் பக்கம் வரலன்னு சொன்னேன்.. கேட்டியாடா.. இப்பப்பாரு.. இந்த ஆளு என்னைப் பெஞ்சுமேலே ஏறி நிற்கச் சொல்றான்..” வினோத்திடம் முணுமுணுத்தான்..
“அங்கேயென்ன சீக்ரெட் வேண்டிக்கிடக்கு..?” முரளி அதட்டினான்..
“சார்.. இவன் பேசற சீக்ரெட் இவன் காதுக்கே கேட்காது சார்.. வாய்க்குள்ளேயே பேசிக்கிறான்..” வினோத் தப்பித்தான்..
“கிரேட் எஸ்கேப்புடா மச்சான்..” வினோத்தின் பக்கத்திலிருந்த நண்பன் சிலாகித்தான்..
“அதை சுபாஷ் சந்திரபோஸ் செய்தா ரசிக்கலாம்.. இவன் செஞ்சா மிதிக்கனும்..” பல்லைக் கடித்தான் ரமேஷ்..
“எங்கே.. மிதி.. பார்க்கலாம்..” வினோத்துக்கு கோபம் வந்து விட்டது..
“வாட்’ஸ் ஹேப்பனிங்..? இங்கே நானொருத்தன் லெக்சர் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. நினைவில் இருக்கா.. இல்லையா..?” முரளிதரன் விழிகளை உருட்டினான்..
“எங்களுக்கு நினைவில் இருக்கு சார்.. புதுசா வந்திருக்கிற லெக்சருக்குத்தான் கால் வலிக்குமோன்னு கவலையாய் இருக்கு. இஃப் யு டோன்ட் மைண்ட்.. அவங்களுக்கு ஒரு சேரைப் கொடுத்துட்டு நீங்க உங்க லெக்சரைக் கண்டினியு பண்ணலாமே..” போலிப் பணிவுடன் சொன்னான் ரமேஷ்..
“புது லெக்சரரா..?”
கேள்வியுடன் திரும்பிப் பார்த்த முரளிதரன் எப்படி எனது விரிவுரை முடியாமலிருக்கும்போது நீ வகுப்பறைக்குள் வரலாம் என்று பாரதியை ஒரு பிடி பிடிக்கப் போகிறான் என்று எதிர்பார்த்து காத்திருநத மாணவ, மாணவிகள் ஏமாந்து விட்டனர்.. கனல் பறக்கும் சண்டைக் காட்சிக்குப் பதில் காணக் கிடைக்காத ஒரு காட்சி அவர்களுக்குக் கிடைத்தது..
“பாரதி..??!!!”
இந்த ஒற்றைச் சொல்லில்தான் எத்துனை நவரசங்களை வெளிப் பட்டன.. முரளிதரனின் முகத்தில் மாறாமல் படிந்திருக்கும் கடுமை மறைந்து அளவிட முடியாத மென்மை அங்கு விரவியது.. அது போன்ற கனிவான முகத் தோற்றத்துடன் அவனைப் பார்த்திராத மாணவ மணிகள்.. ‘ஆ’வென வாய் பிளந்து இது முரளிதரன் தானா என்று அவனை அடையாளம் பார்த்தார்கள்..
“இது நீதானா பாரதி..?”
வகுப்பறை என்பதையும் மறந்து பரபரப்பாக அவளருகில் சென்றான் முரளிதரன்.. அவனுக்குக் குறையாத ஆர்வத்தையும் பரபரப்பையும் விழிகளில் தேக்கியிருந்த பாரதி.. ‘ஆம்’ எனும் விதத்தில் தலையை அசைத்தாள்..
“இங்கே.. நீ.. எப்படி பாரதி..?”
“இந்த காலேஜில லெக்சரரா இன்னைக்குத்தான் ஜாயின் பண்ணியிருக்கேன்.. இது என் கிளாஸ் டைம்ன்னு எனக்குக் கொடுத்த சார்ட்டில இருந்தது.. அதனால வந்திட்டேன்.. உங்க லெக்சர்ல இண்டர்பியர் ஆனதுக்கு ஸாரி..”
முரளிதரன் அவசரமாக கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான்.. இதுபோன்ற நியாயமான சரி பார்த்தல்களை அவன் செய்யக்கூடும் என்பதை அன்று வரை அறிந்திராத மாணவ, மாணவிகளுக்கு கண்ணைக் கட்டியது.. அது போதாது என்று அவன் அடுத்துப் பேசிய கனிவான மொழிகளில் மயக்கமே வந்தது..
“எதுக்கு ஸாரி சொல்ற..? இது உன்னோட கிளாஸ் டைம் தான்.. நான்தான் நேரம் போகிறதைக் கவனிக்காம லெக்சர் கொடுத்துக்கிட்டு இருந்திருக்கேன்..”
‘இது முரளிதரன்தானா..?’
வகுப்பறையே இமை கொட்டி அவனை உற்றுப் பார்த்தது.. அவன் விழிகளில் ஓர் உயிர்ப்புத் தெரிந்தது.. காணக் கிடைக்காத திரவியத்தைக் கண்டுவிட்டதைப் போல அவன் பாரதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.. பாரதியின் விழிகள் கலங்கியிருந்தன.. அதை மற்றவர்கள் அறியாதிருக்க இமைகளைச் சிமிட்டி நாசுக்காக கைக்குட்டையால் கண்ணீர் துளிகளை ஒற்றி எடுத்தபடி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்..
“இது என்ஜினியரிங் காலேஜ்தானே..?”
“இதிலென்ன சந்தேகம் பாரதி..?”
“இல்லை.. எல்.கே.ஜி பையனைப் போல என்ஜினியரிங் ஃபைனல் இயர் ஸ்டூடண்டை நிற்க வைத்திருக்கீங்களே.. அதனால கேட்டேன்..”
ரமேஷை முரளிதரன் நிற்க வைத்ததை அவள் சுட்டிக் காட்டிப் பேசியதில் மகிழ்ந்து போனான் ரமேஷ்.. ஆனானப்பட்ட முரளிதரனையும் கேள்வி கேட்க ஒர் ஆள் வந்து விட்ட சந்தோசத்தில்..
“நல்லாக் கேளுங்க மேம்..” என்று பாரதியை ஊக்குவித்தான்.
“டேய்.. சும்மாயிருடா.. வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்காதே..” வினோத் முணுமுணுத்தான்..
அப்படி எதுவும் ஆகி விடவில்லை.. ரமேஷீக்கு செமத்தியான அர்ச்சனை கிடைக்கப் போகிறது என்று காத்திருந்த வகுப்பறையை ஏமாற்றி விட்டான் முரளிதரன்..
“பார்த்தியா பாரதி.. நீ சப்போர்ட்டுக்கு வந்துட்டங்கிற தைரியத்தில ரமேஷ் கட்சிக் கொடியைக் கட்டறான்..” என்று சிரித்தான்..
“என்னடா இது..?” ரமேஷே அதிசயப் பட்டுப் போக.. ஆளுக்காள் சலசலக்க ஆரம்பித்தார்கள்..
மனம் விட்டுச் சிரிக்கும் முரளிதரனை இதற்கு முன்னால் அவர்கள் பார்த்ததில்லையே.. அதனால் கண்காட்சியில் வைக்கப் பட்டிருக்கும் சிலையைப் பார்ப்பதைப் போல முரளிதரனையே கண்கொட்டாமல் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்..
“சிட்-டவுன் ரமேஷ்..”
மிக அன்பாக முரளிதரன் சொன்னான்.. ரமேஷிடம்தான் இவ்வளவு அன்புடன் பேசுகிறானா என்று ரமேஷீக்கே சந்தேகம் வந்து விட்டது.. சுற்று, முற்றும் பார்த்தான்..
“உன்னைத்தான் சொல்றேன் ரமேஷ்..” மறுபடியும் அன்பொழுகினான் முரளிதரன்.
“ஒரே நாளில இம்புட்டு அதிர்ச்சின்னா.. தாங்கலைடா..” வினோத்திடம் அங்கலாய்த்தபடி உட்கார்நத்hன் ரமேஷ்..
“ஓகே பாரதி.. நீ கிளாஸை கண்டினியூ பண்ணு.. நாம அப்புறமா பேசிக்கலாம்..” முரளிதரன் சொன்னான்..
“ஷ்யூர்..” உறுதியளித்தாள் பாரதி..
அவளையே பார்த்தபடி முரளிதரன் நகர்ந்தான்.. அவனையே பார்த்தபடி பாரதி ஆசிரியர்களுக்கான மேடையில் ஏறினாள்.. வகுப்பறையின் வாசலுக்குச் சென்ற முரளி திரும்பினான்.. மேடையில் நின்று கொண்டிருந்த பாரதியை நோக்கினான்..
“கடுவன் பூனையும் நோக்குது.. மேமும் நோக்கறாங்க.. கண்ணோடு கண் கலந்து சைட்டும் அடிக்கிறாங்க..”
கம்பராமாயணத்தை கந்தலகோலம் பண்ணினான் ரமேஷ்.. வகுப்பறையே அந்தக் காவியக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தது.. நகர மனமில்லாமல் நகர்ந்தான் முரளிதரன்..
“இனி லெக்சர் கொடுக்கலாமா மேம்..” அறியாப்பிள்ளை போல குரல் எழுப்பினான் ரமேஷ்…
“உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கக் கூடாது.. அப்படியே நில்லுன்னு நிற்க விட்டிருக்கனும்..” சிரித்தாள் பாரதி..
‘எவ்வளவு இலகுவாக சிநேகிக்கிறாள்..!’
வினோத்துக்கு பாரதியை பிடித்து விட்டது.. இவளைப் போன்ற ஓர் பெண்ணுடன் பழக நேர்ந்தால் முசுட்டு மூஞ்சி முரளிதரன் சிரித்த மூஞ்சியாக மாறித்தானே தீருவான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
இவளை முரளிதரனுக்குத் தெரியுமா..? எப்படி..?
வினோத்தைப் போல நாசுக்கும், நாகரிகமும் நிறைந்தவனல்ல ரமேஷ்.. அவற்றையெல்லாம் என்ன தேவைக்காக கட்டிக் கொண்டு அழவேண்டும் என்று கேள்வி கேட்பான்..
ஆதலினால் வினோத் மனதுக்குள் கேட்ட கேள்வியை அவன் நேரடியாக கேட்டு வைத்தான்..
“எங்க முரளிதரன் சாரை உங்களுக்கு ஏற்கனெவே தெரியுமா மேம்..?”
வகுப்பறையே பாரதியின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தது.. அவள் நிமிர்ந்து ரமேஷைப் பார்த்தாள்.. அவளது விழிகளில் கடந்தகாலம் வந்து போனது..
“அதென்ன.. உங்க முரளிதரன் சார்..? ம்ம்ம்..? அவர் உனக்கு மட்டும் சொந்தமா..?” புருவங்களை உயர்த்தியவள்..
“தெரியும் ரமேஷ்.. நாங்க ரெண்டு பேரும் காலேஜ் மேட்ஸ்.. பி.ஈ யிலிருந்து எம்.ஈ வரை ஒரே காலேஜிலதான் படிச்சோம்..” என்றாள்..
‘இவர்கள் ஒரே காலேஜில படித்தவர்களா..?’ வகுப்பறை சளசளத்தது..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.