Chapter 14
காரில் ஒலித்த குத்துப் பாடலுக்குத் தாளம் போடுகிறேன் பேர்வழியென்று காரைக் குலுக்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்..
“ஒழுங்கா சீட் பெல்ட்டைப் போட்டுக்கிட்டு உட்காருடா.. இல்லைன்னா.. வழியிலேயே இறக்கி விட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்..” எச்சரித்தான் வினோத்..
“கழட்டி விடறதிலேயே குறியாய் இரு..”
“அடச்சீ.. பிரண்ட்கிட்டப் பேசற மாதிரி பேசித் தொலை..”
“ரசனையில்லாதவன்..”
“யாரு..? நானு..? உன் ரசனையைத்தான் போனவாரம் நடந்த கல்ச்சுரல் டே-யில பார்த்தேனே.. குத்துப் பாட்டுக்கு ஆடின ஆளுதானே நீ..”
“அந்த சோகத்தையேன் மச்சி கேட்கிற..”
“ஏண்டா..?”
“அன்னைக்குத்தான் சொப்னா இறங்கி வந்து சமாதானமானா..”
“இதப்பாருடா.. சொல்லவேயில்ல..”
“என்னத்தச் சொல்றது..? டூயட் பாடற விதி வந்திருச்சுன்னு மகிழ்ந்து போனேன்.. ஆனா சோலோ ஸாங்குதான் பாடித் தொலைக்கனும்னு வாழ்க்கை எனக்கு விதிச்சிருக்கு.. எல்லாம் காலக்கொடுமைடா மச்சான்..”
“நீ இம்புட்டுப் ஃபீல் பண்ற ஆளில்லயே.. சரியான சல்லிப் பயலாச்சே..”
“என்னைத்தானே சொல்ற..?”
“இல்லேன்னு சொல்வேன்னு நினைச்சியா..? இந்தக் காருக்குள் என்கூட நீ மட்டும்தான உட்கார்ந்திருக்கிற..? உன்னைச் சொல்லாம வேற யாரைச் சொல்வேன்..?”
“அவ மாத்துன மாத்து பத்தாதாடா மச்சான்.. நீயும் வேற மாத்துக் கொடுக்கனுமா..?”
“எத்தனை மாத்துக் கொடுத்தாலும் திருந்தற ஜென்மமாடா நீ..?”
“அவளும் இதையேதான் சொல்றா..”
“என்ன சொல்றா..?”
“நான் பொய், பொய்யா சொல்றேனாம்..”
“சொல்ல மாட்டாளா..? ஒரு நாளைக்கு இத்தனை பொய்தான் சொல்லனும்னு கணக்கு வைச்சுக்கிட்டாலும் பரவாயில்ல.. நீ கணக்கு வழக்கில்லாம பொய்களை அள்ளி விட்டா அவ காதில பிளட் கொட்டாதா..?”
“நீ அவளுக்கே சப்போர்ட் பண்ணு..”
“பாதிக்கப் பட்டவங்களுக்குத்தானே சப்போர்ட் பண்ண முடியும்..?”
“எதைச் சொன்னாலும் புரூஃப் கேட்கிறா மச்சி..”
“கொடுக்க வேண்டியதுதானே..”
“எதை..?”
“புரூஃபை..”
“போதுமான ஆதாரத்தோட நிரூபின்னு சொன்னா எப்படிடா நிரூபிக்கிறது..?”
“டேய்.. உண்மை உன்பக்கம் இருந்தா கிளியர் எவிடென்ஸ் கிடைச்சே தீரும்..”
“என்னத்தக் கிடைக்குமோ.. மொத்துதான் கிடைக்குது.. நீயே சொல்லுடா வினோத்.. குத்துப் பாட்டுக்கு ஆடிட்டு வந்தவன் நேரே சொப்னா கிட்டத்தான் போகப் போனேன்..”
“போய் தொலைய வேண்டியதுதானே.. ஆடிட்டோரியத்தில எந்த ஸ்பீடு பிரேக்கர் இருக்கு..?”
“இருந்துச்சுடா வினோத்.. வந்தனாங்கிற பெயரில அந்த ஸ்பீடு பிரேக்கர் என் வழியை மறிச்சுச்சு..”
“ஓ.. கதை அப்படிப் போகுதா..? சொப்னாவை மறந்து வந்தனாகிட்டக் கடலை போட்டுட்டியா..?”
“ஆமாண்டா வினோத்.. நீ குத்துப் பாட்டுக்கு செம்மையா.. பெர்பார்மென்ஸ் கொடுத்தேன்னு அவ பாராட்டினா.. நீயும் கூட ஆட வந்திருந்தா தூளா இருந்திருக்கும்ன்னு நான் சொன்னேன்.. அதை சொப்னா கேட்டுட்டா..”
“ஹா.. ஹா.. அப்புறம்..”
“குத்துப்பாட்டுக்கு ஆடிட்டு வந்த என்னை கும்மாங்குத்தாக் குத்திட்டுப் போயிட்டாடா மச்சான்..”
“வேணும்டா உனக்கு..”
வினோத் சொல்லிக் கொண்டிருந்த போது ரமேஷின் செல்போன் ஒலித்தது.. எடுத்துக் காதுக்குக் கொடுத்தவனின் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல ‘ஈ’ யென்று மாறியது..
‘எதுக்கு இப்படி இளிக்கிறான்..?’
யோசனையுடன் நண்பனைப் பார்த்தான் வினோத்.. நம்ப முடியாமல் விழிகளை விரித்தபடி செல்போனை அணைத்த ரமேஷ்.
“சொப்னாதாண்டா..” என்றாள்..
“என்ன சொல்றா.. இனிமே அவ முகத்தில நீ முழிக்கவே கூடாதுங்கிறாளா..?”
“இல்லைடா.. உடனே என் முகத்தில முழிக்கனும்ங்கிறாடா..”
ரமேஷினாலேயே அதை நம்பமுடியவில்லை என்பதில் வினோத்துக்குச் சிரிப்புத்தான் வந்தது.. ரமேஷைப் போன்ற எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத உல்லாச மனப்பான்மை கொண்டவனிடம் சொப்னாவைப் போன்ற ஆழ்ந்த உணர்வுகளைக் கொண்ட பெண்ணின் மனம் மையம் கொண்டிருப்பது விந்தைதான் என்று அவன் நினைத்துக் கொண்டான்..
அதையே வாய்விட்டுச் சொன்னான் ரமேஷ்..
“இந்தக் காதலிகள் ஏண்டா கிறுக்கச்சிகளா இருக்காங்க..?”
“உன்னைக் காதலிக்கிறவ வேற எப்படி இருப்பா..?”
கிண்டலாகக் கேட்டபடி காரை ஒடித்துத் திருப்பிய வினோத் சாலையின் ஓரமாக காய்கள் நிரம்பிய பையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த பாரதியைப் பார்த்து விட்டான்..
“டேய்.. அங்கே பார்த்தியா.. பாரதி மேம் போறாங்கடா..”
காரை பாரதிக்கு அருகே செழுத்தி நிறுத்திக் காரை விட்டு இறங்கினான்..
“மேம்..”
வினோத்தின் மரியாதையான அழைப்பில் திரும்பிப் பார்த்த பாரதி..
“ஹேய் வினோத்.. எங்கே உன் ஒட்டுப் புல்லைக் காணோம்..?” என்று சிரித்தாள்..
“இங்கேயிருக்கேன் மேம்..”
பவ்யம் போல முகத்தை வைத்துக் கொண்டு இறங்கினான் ரமேஷ்.. அவன் காட்டிய பவ்யத்தில் குபீர் என்று சிரித்தாள் பாரதி..
“உன் முகத்துக்கு இந்த ஓபிடியண்ட் பெர்பார்மென்ஸ் ஷீட் ஆகலை ரமேஷ்.. நேச்சரா பிஹேவ் பண்ணு..” என்றாள்..
“எப்படி மேம்..? என் ஒரிஜினல் பேஸைக் காட்டினேன்னா நீங்க என் இன்டர்னல் மார்க்கில கை வைச்சிர மாட்டிங்களா..?”
“மாட்டவே மாட்டேன்.. பயப்படாதே..”
“அப்பன்னாச் சரி.. ஒன் டவுட் மேம்..”
“என்னப்பா..?”
“பிகினிங்கில எங்களை வாங்க, போங்கன்னு கூப்பிட்டிங்க..”
“ஆமாம்.. அதுக்கென்ன..?”
“போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிருச்சே மேம்.. அதான்.. எங்களை வா, போன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டிங்களே.. இத்தோட நிற்குமா..? இல்லை.. வாடா, போடாங்கிற லெவலுக்கு இறங்குமா..?”
“யாருக்குத் தெரியும்..?”
“உங்களுக்கே தெரியாதா..?”
“ஊஹீம்..”
பாரதி தலைiயாட்டி சிரித்த விதத்தில் நெகிழ்ந்தான் வினோத்.. அவளை முதன் முதலாக பார்த்த மழைநாளிலும் அவள் சிரித்தாள் தான்.. இதமான சிரிப்பு அது.. இன்பம் நிறைந்த சிரிப்பில்லை.. இதோ, துள்ளலும் துடிப்புமாக தனது மாணவர்களிடம் சிரிக்கிறாளே.. இந்தச் சிரிப்பில் இருக்கும் உயிர்ப்பு அந்தச் சிரிப்பில் இல்லை..
முரளிதரனும் அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டான்.. பாரதியைப் பார்க்கும்வரை அவன் உயிர்ப்பில்லாமல்தான் இருந்தான்.. பாரதியை பார்த்த நொடியில் உயிர்த்தெழுந்தான்.. அவனது ஜீவசக்தி பாரதிதான் என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தினான்.. அவன் போலதான் பாரதியும் இருக்கிறாள்..
‘இவள் உயிர்ப்பைக் கொடுத்து உயிர்ப்பை பெற்றிருக்கிறாள்..’
பாரதியின் மீது பக்தி கலந்த பாசம் உண்டானது.. தாய்மைப் பெருக்குடன் கூடிய சகோதரியின் வடிவத்தில் அவளைக் கண்டான் வினோத்.. ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தவனின் மனம் அவளிடம் பாசம் கொண்டது.. வாத்சல்யத்துடன் அவள் கையிலிருந்த காய்கறிப் பையை வாங்கிக் கொண்டான்..
“என்னப்பா.. பையை அபேஸ் பண்ற..?” பாரதி சிரித்தாள்..
“காரில ஏறுங்க மேம்..” வினோத் கார் கதவைத் திறந்து விட்டான்..
“கிட்நாப் பண்ணப் பார்க்கறியா..?”
“ஊஹீம்.. உங்க கையில ஒரு கப் காபி குடிச்சிடனும்னு பார்க்கறேன்.. குடுப்பீங்களா..?”
வினோத்தின் சாதுர்யமான பேச்சைத் தலைசாய்த்து ரசித்த பாரதி..
“ஓ.. யெஸ்..” என்றபடி காரில் ஏறிக் கொண்டாள்..
பாரதி வழி சொல்ல அடுத்த தெருவிலிருந்த அவள் வீட்டை நோக்கிக் கார் விரைந்தது..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.