Chapter 15
மகிழம்பூ மரம் இருந்த வீட்டின் வாசலில் கார் நின்றது..
“இதுதான் சங்க இலக்கியங்களில் வர்ற கௌன்றை மரமா..?”
மரத்தை அண்ணாந்து பார்த்த ரமேஷ் கேட்டான்..
“உனக்கு சங்க இலக்கியம் கூடத் தெரியுமா..?” பாரதி ஆச்சரியப் பட்டாள்..
“சும்மா நுனிப்புல் மேயறதுதான் மேடம்..”
எதிர்வீட்டைப் பராக்குப் பார்த்தபடி சொன்னான் ரமேஷ்.. அவன் பார்வை போன திக்கைப் பார்த்தாள் பாரதி.. பால்கனியில் ஒரு டீன்-ஏஜ் பெண் நின்றிருந்தாள்..
“அவளோட அப்பா சூப்பரிண்டெண்ட் ஆஃப் போலிஸ்..” என்றாள் பாரதி..
அவசரமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்ட ரமேஷ்..
“அச்சு அசப்பில அந்தப் பொண்ணு என் தங்கச்சியைப் போலவே இருக்கு மேம்..” என்று திருவாய் மலர்ந்தருளினான்..
“ஈஸிட்..?” நம்பாத தொனியில் கேட்டபடி வீட்டைத் திறந்தாள் பாரதி..
“வெல்கம் கைஸ்..” என்றவள் ரமேஷைப் பார்த்து..
“உனக்கு தங்கை இருக்கிறாளா..?” என்று கேட்டாள்..
“இல்லை மேம்.. அண்ணன்னு ஒரு கடன்காரன் இருக்கான்..” அலுப்புடன் சொன்னான் ரமேஷ்..
“அப்புறம் எப்படி எதிர்வீட்டுப் பெண்ணப் பார்த்தா உன் தங்கை மாதிரியே இருக்குன்னு சொன்ன..?” பிரிட்ஜைத் திறந்து பழங்களை எடுத்தபடி கேட்டாள் பாரதி..
“ஜீஸெல்லாம் வேண்டாம் மேம்..” வினோத் மறுத்துக் கொண்டிருந்த போதே..
“எனக்கு ஆப்பிள் ஜீஸ் மேம்..” என்று பறப்பாய் பறந்து வினோத்தின் மானத்தை வாங்கினான் ரமேஷ்..
“சாப்பாட்டு ராமா..”
பாரதி அங்கிருப்பதையும் மறந்து ரமேஷைத் திட்டினான் வினோத்..
“சும்மாயிருடா மச்சான்.. என் இனம் நிறையப் பேருடா..” அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான் ரமேஷ்..
மெச்சுதலாக ரமேஷைப் பார்த்த பாரதியின் பார்வையில் குறும்புக்காரக் குழந்தையின் சேஷ்டைகளை ரசிக்கும் தாய்மை இருந்தது..
“முரளியும் இப்படித்தான்..”
அவளையும் அறியாமல் சொல்லி விட்டாள்.. வியப்புடன் அவளைப் பார்த்தான் வினோத்.. அவளாக வெளிப்படுத்தி விட்ட அன்பை சல்லடை போட்டுத் துளைத்துக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை.. பாரதியும் அந்தப் பேச்சை மறந்தவளாக ஜீஸ் போட ஆரம்பித்து விட்டாள்..
வினோத் கடைபிடிக்கும் நாசுக்கையும் நாகரிகத்தையும் ரமேஷ் கடை பிடிப்பதே இல்லையே… அவற்றையெல்லாம் கிலோ என்ன விலையென்று கேட்டு வைப்பானே..
“பாருங்க மேம்.. கோபம் வந்தா நாலு மொத்து மொத்திருங்க.. ஆனா.. முரளி சார்கூட மட்டும் என்னை இணை கூட்டாதீங்க..” என்ற வேண்டுகோளை வைத்தான் அவன்..
“ஏன்..?” ஜீஸை கண்ணாடி தம்ளர்களில் ஊற்றியபடி கேட்டாள் பாரதி..
“ஏனா..? முரளிதரன் சாருக்கும் பெண்களுக்கும் ஆகவே ஆகாது.. சுத்தச் சிடுமூஞ்சி.. சிரிக்கக் கூலி கேட்கிற ஆள்களைப் பார்த்திருக்கோம்.. இவர் கூலி கொடுத்தாலும் அதை நம்ம முகத்தில தூக்கி எறிஞ்சுட்டு கத்தோ கத்துன்னு கத்துவாரு.. கோடி ரூபாய் கொடுத்தாலும் அவரைப் போல நானுங்கிற பெயர் எனக்கு வேண்டாம் சாமி..” தலையைச் சிலுப்பிப் பயப்படுவதைப் போல பாவனை செய்தான் ரமேஷ்..
“அடிங்..” அவனை முறைத்தான் வினோத்..
“உனக்கென்னடா.. அவரை மனிதர் குல மாணிக்கம்ன்னு சொல்லுவ.. அவரைப் போல யாரிருக்காம்பே.. அவரையே தாங்க முடியல.. அவரைப் போல இன்னொருத்தர் வந்தா ஓடியே போயிருவேன்..” ரமேஷ் சிலிர்த்தான்..
“ரொம்பவும் சிலுப்பாதே.. முரளியைப் பார்த்தா உனக்குப் பயமாய் இருக்கா..? நம்பச் சொல்றியா..? எங்கே ஓடுவ.. உலகத்தோட ஓரத்துக்கு ஓடுவியா..?” ரமேஷிடம் ஆப்பிள் ஜீஸ் தம்பளரை நீட்டியபடி கேட்டாள் பாரதி..
“ஐ ஆப்பிள் ஜீஸ்..” முரளியை மறந்து ஆப்பிள் ஜீஸைக் கைப்பற்றினான் ரமேஷ்..
“காணாததைக் கண்டது மாதிரி பறக்காதேடா..” தலையில் அடித்துக் கொண்டான் வினோத்..
அவனிடம் மாதுளம்பழ ஜீஸை நீட்டி விட்டு அவர்களுக்கு எதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்த பாரதியின் முகத்தில் ஆழ்ந்த யோசனை இருந்தது..
“என்னத்தை யோசிக்கறீங்க மேம்..?” ஒரே மூச்சில் ஆப்பிள் ஜீஸைக் குடித்து முடித்து விட்ட ரமேஷ் கேட்டான்..
“ம்ம்ம்.. உன் அண்ணனைக் கடன்காரன்னு நீ எதுக்குச் சொன்னன்னு யோசிக்கிறேன்.. உன்னிடம் கடன் வாங்கி யிருந்தாப்புலயா..?” பாரதி புருவங்களை உயர்த்தினாள்..
“ஹா.. ஹா..” அடக்க மாட்டாமல் சிரித்த வினோத்..
“இவன்தான் அவரோட பர்ஸைக் காலி பண்ணுவான் மேம்..” என்று போட்டுக் கொடுத்தான்..
“அதானே பார்த்தேன்.. இதிலே எதிர் வீட்டுப் பெண்ணைப் பாத்தா சாரோட தங்கை மாதிரியே இருக்காம்.. என்னமா சீன் போடற ரமேஷ்..”
“தங்கச்சி இருந்திருந்தா அந்தப் பொண்ணப் போலதான் இருக்கும்ங்கிற நினைப்பில சொன்னேன் மேம்..”
“மேம்.. இவன் வில்லங்கமானவன்.. இவன நினைப்பைப் பத்தியெல்லாம் கேட்டிங்கன்னா அவ்வளவுதான்..”
“நான் கேட்கவே மாட்டேன் வினோத்..”
பாரதி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மகிழம்பூ மரத்தில் அவள் பார்வை படிந்தது..
“இந்த மரத்தைப் பார்த்ததும் இந்த வீட்டில்தான் குடியேறனும்னு நான் டிசைட் பண்ணிட்டேன்..”
மகிழம்பூவின் நறுமணத்துடன் அவளது பேச்சு இழைந்தது.. ஏதோ பேச வாயெடுத்த ரமேஷை வினோத்தின் பார்வை அதட்டி வாயை மூட வைத்தது.. மௌனமான இரு நண்பர்களும் பாரதியின் பேச்சுக்கு இடையூறு செய்யாமல் அமைதியாகி அவளைப் பேச விட்டார்கள்..
“முரளியை முதன்முதலா நான் பார்த்தப்ப அவர் மகிழம்பூ மரத்தடியிலதான் நின்றிருந்தார்.. எங்க காலேஜில மகிழம்பூ மரம் இருந்தது.. யூசுவலா முரளியும் அவரோட பிரண்ட்ஸீம் மகிழம்பூ மரத்தடியிலதான் இருப்பாங்க.. பி.ஈ படிக்கிறப்ப முரளி எனக்கு சீனியர்.. அவர் தேர்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்தார்.. நான் பர்ஸ்ட் இயர்ல உள்ளே நுழைஞ்சேன்.. ராகிங் அது, இதுன்னு கலாட்டா பண்ணினார்.. நான் பயந்ததில இம்ரெஸ் ஆனார்.. அப்புறமா காலேஜ்டே வந்தது.. நான் பாடினேன்.. அவரும் பாடினார்.. என் பாட்டில அவரும்.. அவர் பாட்டில நானும் இம்ப்ரெஸ் ஆனோம்.. அது ஒரு காலம்..”
அழகான நிலாக்காலத்தின் கனவு நாள்களை பகிர்ந்து கொண்டிருந்தாள் பாரதி.. அவளது மனம் கடந்த காலத்தில் இருந்தது.. அதன் நினைவுகளைத் துழாவுவதைப் போல பாரதியின் பார்வை மகிழம்பூ மரத்தைத் துழாவியது..
“நானும், முரளியும் ஆப்போசிட் போல்ஸ்.. பேசவே பயப்படுவேன்.. முரளி சரவெடியாய் வெடிப்பார்.. ரெண்டு பேரோட மனசும் எப்ப.. எந்தத் தருணத்தில.. ஒரே நேர்கோட்டில டிராவல் பண்ண ஆரம்பிச்சதுன்னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியல..”
இமைகளைச் சிமிட்டினால்கூட அது பாரதியின் மோன நிலைக்குத் தடங்கல் விளைவித்து விடுமோ என்று அஞ்சியவனைப் போல அசைவற்று உட்கார்ந்திருந்தான் வினோத்..
ரமேஷினால் அப்படியெல்லாம் உட்கார முடியவில்லைதான்.. ஆனாலும், அசைந்தால் வினோத் அவனை உண்டு, இல்லையென்று ஆக்கி விடுவான் என்ற பயத்தில் கை, கால்களை அசைக்காமல் இம்சையுடன் உட்கார்ந்திருந்தான்..
“வாழ்க்கை முறையிலும் அப்படித்தான்.. அவர் கட்டுக் கோப்பான குடும்பத்தில பிறந்தவர்.. என்னோட பேரண்ட்ஸ் அமெரிக்கன் சிட்டிசன்ஸ்.. நான் இந்தியாவில கும்பகோணத்தில இருந்த தாத்தா, பாட்டி வீட்டில இருந்து பி.ஈ. படிச்சேன்..”
தழதழத்த பாரதியின் குரல் முரளிதரனுடன் பின்னிப் பிணைந்திருந்த அவளது கடந்த கால நினைவுகளைக் கொட்ட ஆரம்பித்தது..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.