Chapter 17

0Shares

சந்தன நிறமென்றும் சொல்ல முடியாத, வெந்தய நிறமென்றும் சொல்ல முடியாத இடைபட்ட நிறத்தில் ஜரிகை வேலைப் பாடுகளுடன் கூடிய சேலையை அணிந்திருந்தாள் பாரதி.. காதுகளில் ஜிமிக்கி.. மற்ற காதணிகளை விட ஜிமிக்கியே அவளுக்கு அழகாக இருக்கிறது என்று ஆழ்ந்த காதல் மயக்கத் தருணமொன்றில் முரளிதரன் சொல்லி விட்டான் என்பதற்காக அழகழகான வண்ணங் கொண்ட கல் ஜிமிக்கிகளையே மாற்றி, மாற்றி அணிந்து வந்தாள் பாரதி.. அன்றும் அப்படித்தான்.. வெந்தய நிறத்துக்கு ஏற்றாற்போல கல் இல்லாத தங்க ஜிமிக்கியை அவள் அணிந்திருந்ததில் அவள் அழகு பன்மடங்கு கூடித் தெரிந்தது..

என்ஜினியரிங் கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவியாக கல்லூரி ஆண்டு விழாவின் அரங்கத்தில், மேடையில் நின்றிருந்தவளின் முகத்தில்.. கல்லூரியில் காலடி பதித்த முதல் நாளில் முரளிதரனிடம் மாட்டிக் கொண்டு நடுநடுங்கிய பயம் தென்படவில்லை.. துறுதுறுப்பும், குறுகுறுப்பும்தான் தெரிந்தது.. அந்தி மந்தாரையின் அழகோடு ஆளை ஈர்க்கும் பொற்பாவையாய் அவள் ஜொலித்தாள்.. அரங்கில் இருந்த முரளிதரன் நகரும் திசைகளில் எல்லாம் அவளது பார்வையும் நகர்ந்தது.. அடிக்கடி மேடையைப் பார்த்து அவன் அதை உறுதிபடுத்திக் கொண்டதில்.

“தரையைப் பார்த்து நடடா.. மேடையைப் பார்த்து நடந்து தடுக்கி விழுந்து தொலைச்சிராதே..” என்று பார்த்திபன் கிண்டலடித்தான்..

“ஆல்ரெடி.. அவகிட்ட தடுக்கி விழுந்தாச்சு..” காதலின் கர்வத்தோடு சொன்னவனைப் பார்த்த பார்த்திபனின் மனதில் சன்னமான பொறாமை வந்தது..

பாரதியைப் போன்ற அழகி முரளிதரனிடம் மயங்கி விட்டதில் நிறைய நண்பர்களுக்கு பொறாமை உண்டுதான்.. அதை வாய் விட்டுச் சொல்லியும் இருக்கிறார்கள்..

“போங்கடா.. பொறாமை பிடிச்ச பசங்களா..” நட்புடன் சிரித்து அதைப் பெரிது பண்ணாமல் நகர்ந்து விடுவான் முரளிதரன்.. அதில் அவர்களின் பொறாமை பஸ்பமாகி காணாமல் போய் விடும்.

“என்ன மச்சி.. உன் ஆள் என்ன சொல்லுது..?” என்று அவர்கள் சகஜமாகி விடுவார்கள்..

என்று.. எப்போது.. எந்த நொடியில் என்றெல்லாம் குழம்பத் தேவையில்லாமல்.. அன்று அவள் ‘நேற்று இந்த நேரம்..’ என்று பாடிய பொழுதில் அவளிடம் தடுக்கி விழுந்தான் முரளிதரன்.. அவளும் அப்படித்தான் என்பதை அடுத்தடுத்த நாள்களில் அவனைத் தேடியலைந்த அவளது பார்வை காட்டிக் கொடுத்தது..

அவளுடைய மருட்சியை உடைத்து வெற்றிகரமாக அவளை அணுகி விட்டவன் முரளிதரன்.. காதலை வாய் விட்டுச் சொல்லும் முன்பே.. அவர்களின் காதலை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.. வலை விரிக்க முற்பட்ட அந்த சேட்டைக்காரன் அவன் விரித்த வலையில் அவனே மாட்டிக் கொண்டான்.. பாரதியின் மீதான மீள முடியாத காதலில் தடுக்கி விழுந்தான்.

“நேற்று இந்த நேரம்..

ஆற்றங்கரை ஓரம்..

உன்னைத் தொட்டு

என்னைத் தொட்டு

தென்றல் செய்த கோலங்கள்..

ஜாலங்கள்.. ஆஹா..”

பாரதி பாட ஆரம்பித்து விட்டாள்.. அரங்கத்தின் சுவரில் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் முரளிதரன்.. மையலுடன் அவனைப் பார்த்தபடி பாடிய பாரதியைக் கடித்துத் தின்றுவிட வேண்டும் போன்ற கிளர்ச்சி அவனுக்குள் ஏற்பட்டது.

அவளுடனான நெருக்கமான நேரங்களில் அதைச் செய்திருக்கிறான்தான்.. அத்து மீறத் துடிப்பவனை ஓர் புன்னகையில் அடக்கும் அங்குசம் அவளிடம் இருந்தது.. மதங்கொண்ட யானையாக புஜம் தட்டுபவனை மிக எளிதாக புன்னகையில் வீழ்த்தி அன்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தாள் பாரதி.. இரும்பு வேலியால் கூட அடக்க முடியாதவனை பூவேலிக்குள் 

சிறை வைத்தாள்.. இரும்புக் கோட்டையையும் தகர்க்கும் வல்லமை கொண்டவன் அவள் போட்ட பூவேலியைத் தகர்க்க முற்பட்டதில்லை.. அவளது கண்ணசைவிற்குக் கட்டுப்பட்டான் முரளிதரன்..

“ஆணும் பெண்ணும் சேர்ந்தால்..

காதல் ஒரு யோகம்..

நாள் பார்ப்பதில்லை..

கேட்பதில்லை, யாரையும்..

சொந்தமென்ன, பந்தமென்ன..?

அத்தனையும் பெண்தானே..

கீழ்வானமே வானம்..!

நேற்று இந்த நேரம்..”

துள்ளலுடன் அவள் பாடி முடித்தவுடன் அரங்கயே கை தட்டி ஆர்ப்பரித்தது.. அடுத்துப் பாடிய முரளிதரன்..

“நின்னயே ரதியென்று

நினைக்கிறேனடி கண்ணம்மா..”

என்று பாடி பாரதியை ஆகர்ஷித்தான்..

அவள் வேறு, அவன் வேறு என்றில்லாமல் இருவரும் ஒருவராக அவர்கள் பிரேமை கொண்டிருந்த போதுதான் 

முரளிதரன் இறுதியாண்டை முடித்து விட்டுக் கல்லூரியை விட்டு வெளியேறினான்..

“அப்புறம்..?”

பாரதி கொட்டிக் கொண்டிருந்த கடந்த காலக் காதலை செவி மடுத்துக் கொண்டிருந்த ரமேஷ் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டான்.. வினோத் அவனை முறைத்தான்.. பாரதி அதை குற்றமாக நினைக்கவில்லை..

“அப்புறம் அவர் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.. அடிக்கடி நாங்க மீட் பண்ணிக்கிட்டோம்.. நான் பி.ஈ முடிச்சதும் அமெரிக்காவுக்கு வந்த விடச் சொல்லி என் பேரண்ட்ஸ் ஃபோர்ஸ் பண்ணினாங்க.. அங்கே எனக்கு வேலை காத்துக்கிட்டு இருந்தது.. எப்படித் தட்டிக் கழிக்கிறதுன்னு யோசிச்ச நான் எம்.ஈ படிக்கப் போறேன்னு சொல்லி மேலே படிக்கிறேன்ங்கிற பெயரில இந்தியாவிலே ஸ்டே பண்ணினேன்.. நான் எம்.ஈ படிச்ச அதே காலேஜிலேயே முரளியும் எம்.ஈ படிக்கச் சேர்ந்தார்..”

“அவரோட வேலை..”

“ஐடி கம்பெனியில நைட் டைம் வொர்க் பண்ணலாம்.. வீட்டிலே இருந்தும் புராஜெக்ட் வொர்க்கை முடிச்சுக் கொடுக்கலாம்.. முரளிக்கு நைட் அண்ட்டே ரெஸ்டில்லாத அலைச்சல்.. எனக்காக.. என் கூடவே இருக்கனும்ங்கிறதுக்காக அவர் அதை ஏத்துக்கிட்டார்..”

பாரதி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. அடங்கா வானரமான ரமேஷ்.. அடக்க ஒடுக்கமாக வாலைச் சுருட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.. இப்படியோர் காதலா என்று முரளிதரனின் மீது அவனுக்குள் பிரமிப்பு ஏற்பட்டிருந்தது..

“எம்.ஈ முடிக்கிறவரை எதிர்காலத்தைப் பத்தி யோசிக்காம நாங்க சந்தோசமா இருந்தோம்.. எனக்காக முரளி, முரளிக்காக நான்.. இந்த நினைப்பே எங்களுக்கு இனிப்பா இருந்தது.. இடையில் இருந்த என் பேரண்ட்ஸைப் பத்தி நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை.. ஃபைனல் இயர் எக்ஸாம்ஸ் எழுதி முடிச்ச மறுநாளே என் பேரண்ட்ஸ் வந்து நிற்பாங்கன்னோ.. கையில் பாய்சன் பாட்டிலைக் காண்பிச்சு என் மேரேஜை பிக்ஸ் பண்ணுவாங்கன்னோ.. என் கல்யாண இன்விடேசனை என் கையாலேயே முரளிதரனுக்கு கொடுக்க வைப்பாங்கன்னோ நான் நினைச்சும் பார்க்கலை..”

“என்ன மேம் சொல்றீங்க..?”

அதிர்ச்சியான வினோத்தின் முகம் பார்க்க முடியாமல் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் பாரதி.. அந்த துயரத்தில் தாக்கப்பட்டவர்களாக சிலையாக சமைந்து போய் விட்டார்கள் வினோத்தும் ரமேஷீம்..

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link