Chapter 02
எப்போதும் போலவே அதிகாலையில் விழிப்பு வந்து விட்டது அசோகனுக்கு. உள்ளங்கைகளை விரித்து அதில் பார்த்துக் கொண்டவன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்தான். அறையின் கதவுக்குக் கீழே பேப்பர் பையன் தள்ளி விட்டிருந்த பேப்பர் பாதி உள்ளே பாதி வெளியேயென்று இருந்தது. குனிந்து பேப்பரை எடுத்துக் கொண்டவன் அறை ஜன்னல் திரையை விலக்கி சாலையின் எதிர்புறம் தெரிந்த காபி ஸ்டாலைப் பார்த்தான். கடைக்காரப் பையன் நிமிர்ந்து மாடி ஜன்னலில் தெரிந்த அசோகனைப் பார்த்து கை ஆட்டினான். பதிலுக்குக் கையாட்டிவிட்டுப் பேப்பரைப் பார்த்துக் கொண்டே அறையின் மூலையில் கிடந்த சேரில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது கதவு தட்டப்பட்டது. திறந்தான்.
“காபி..” என்றான் ரங்கன். காபி ஸ்டால் பையன்.
“படுவேகம் தான் போ..” என்று பாராட்டுதலாய் கூறிய படி காபியை வாங்கிக் கொண்ட அசோகன் அதை அருந்தியபடி பேப்பரில் மூழ்கினான். பேப்பர் கப்பை அறையின் மூலையிலிருந்த குப்பைக் கூடையில் போட்டவன் எழுந்து குளித்து உடை மாற்றி தலையை வாரிக் கொண்டு கீழே இறங்கினான். மாடிப்படியில் இறங்கும்போது மாடிப்படியின் அடியில் கடையமைத்து எஸ்.டி.டி பூத் நடத்தும் கல்யாண சுந்தரம்.
“குட்மார்னிங் சார்..” என்றான்.
“என்ன கல்யாணம் காலையிலேயே வந்திட்டபோல.” என்று கேட்டான் அசோகன்.
“ஆமாம் சார். நைட் பார்க்கும் பையனை அனுப்பனுமே. அவன் காலேஜ் படிக்கிற பையன். பார்ட் டைமா இங்கே வேலை பார்க்கிறவன். சீக்கிரம் அனுப்பினாத் தானே அவனும் காலேஜ்&க்குப் போக முடியும்.”
“இப்போ இருக்கிற வயசுப் பிள்ளைகளெல்லாம் ரொம்பத் தெளிவா இருக்கிறாங்க. படிக்கும்போதே தன் செலவுக்கு சம்பாதிக்கிறான் பார். பிழைச்சுக்குவான்..” என்று கூறிய அசோகன் விடை பெறும் பாவனையில் கல்யாண சுந்தரத்திடம் தலையாட்டி விட்டு சாலையில் இறங்கி நடந்தான்.
பேன்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டபடி சீழ்க்கையடித்துக் கொண்டே
நடந்த அசோகன் கறுப்பு நிறத்தினன். உயரமாய், ஆஜானுபாகுவாய், கம்பீரமாய் தோற்றமளிப்பவனுக்கு ஒரு முரட்டுத் தோற்றத்தையும் சேர்த்து அளிப்பது அவன் நெற்றியில் புருவத்தின் மேலேயிருந்து வரும் அகலமான நீண்ட தழும்பு.
இளம் வயதிலேயே ஒரு விபத்தொன்றில் சிக்கியபோது ஏற்பட்ட தழும்பு அது. அந்த விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதையானவன். வசதியான பெற்றோர் நகரத்தின் மையத்தில் ஒரு மாடி வீட்டையும், சில கடைகளையும், கிராமத்தில் ஒரு வீட்டையும் பத்து ஏக்கர் நிலத்தையும் கணிசமான பேங்க் பண இருப்பையும் விட்டுப் போயிருக்க அந்த வங்கிப் பணத்தின் வட்டியில் படித்து முடித்தான். கிராமத்து நிலங்களை குத்தகைக்கு விட்டு விட்டு கிராம வீட்டைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமித்து, குத்தகை வருமானத்தில் அவனுக்குச் சம்பளப் பணமும் அளித்தான். மீதமுள்ள வருமானம் வருடம் தோறும் வங்கியில் சேரும். அவனுடைய வீட்டின் கீழ்தளத்தையும், மாடித்தளத்தையும் வாடகைக்கு விட்டு விட்டு மாடியில் ஒரு அறையில் தான் குடியிருக்க வசதி செய்து கொண்டு வசித்து வருகிறான். கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறான்.
மாடிப்படியின் அடியில் ஒரு கடையமைத்து அதையும் எஸ்.டி.டி. பூத் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடையாக மாற்றி வாடகைக்கு விடும் அளவிற்கு யோசித்துச் செயல்படும் கெட்டிக்காரன். படித்து முடித்தவுடன் வேலை தேடாமல் சொந்தமாய் வங்கிப் பணத்திலிருந்து பாதி எடுத்து ‘டிராவல் ஏஜன்ஸி’ ஆரம்பித்து வெற்றிகரமாய் நடத்தி வருகிறான். அவனது டிராவல் ஏஜன்ஸியில் பத்து கால் டாக்ஸிகள், எட்டு டாடா சுமோ வண்டிகள், ஆறு வேன்கள் மற்றும் இரண்டு டூரிஸ்ட் பஸ்கள் இருக்கின்றன.
இருபது பேருக்கு வேலையளித்து மாதச் சம்பளம் கொடுக்கும் முதலாளி. கடைகள், வீடுகள், கிராமத்து குத்தகைப் பணம் ஆகியவை சேர்ந்து அவன் பாங்க் இருப்பை உயர்த்திக் கொண்டிருக்க டிராவல் ஏஜன்ஸி மூலமும் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கும் சிறு தொழிலதிபன். திருமணத்தில் ஆர்வமில்லாதவன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். சிறு வயதிலேயே தனித்து வளர நேர்ந்ததால் எதையும் முரட்டுத் தனமாய் எதிர்கொள்பவன். அதே சமயம் மிக நேர்மையானவன். மிக மிக நல்லவன்.
சற்றுத் தொலைவில் தெருமுனையிலிருந்த ‘சீதாலட்சுமி மெஸ்’ஸில் நுழைந்தான் அவன்.
“வாடாப்பா! அசோகா!” என்று வரவேற்றாள் மெஸ் மாமி.
அவளது இயற்பெயர் சீதாலட்சுமி. மெஸ் நடத்தி வந்த அவளது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழ அவருக்கு உதவி செய்து வந்த மாமி வாழ்க்கையை நடத்த மெஸ் நடத்தும் பொறுப்பை மேற்கொண்டாள்.. குழந்தையில்லாதவள்.. கணவர்
நோயில் விழுந்து அவள் பரிதவித்து நின்ற போது பெற்ற பிள்ளை போல் கை கொடுத்தவன் அசோகன். சீதாலட்சுமியின் கணவர் கோதண்டராமனின் வைத்தியச் செலவை ஏற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தது முதல் மீண்டும் மெஸ் நடத்த மாமிக்கு பண உதவி செய்தது வரை அவன் சீதாலட்சுமிக்கு செய்த உதவிகள் மிக அதிகம்.
“இந்தப் பணத்தை எப்போ, எப்படிடா திருப்பி அடைப்பேன்..” என்று மாமி கண்ணீர் விட்டபோது,
“என்ன திருப்பிக் கொடுக்கப் போறீங்களா…? உங்க பிள்ளைன்னு என்னை நினைச்சா எனக்கு உதவி செய்கிற கடமையிருக்குன்னு பேசாம வேலையைப் பாருங்க. இல்லைன்னு நினைச்சா அதை திருப்பிக் கொடுக்கிறதைப் பத்தி யோசியுங்க..” என்று தாய், மகன் பந்தத்தில் அவளைச் சிக்கச் செய்து கடன் பட்ட உணர்விலிருந்து அவளைத் தப்புவித்தவன் அசோகன்.
மகனாய் அவனை நினைக்கும் சீதாலட்சுமி கடவுளுக்கு அடுத்தபடி கணவரை நேசிப்பவள், கணவருக்கு அடுத்த படி பெற்ற பிள்ளையாய் அசோகனை நேசித்தாள்.. அவன் மேல் அவள் காட்டும் வாத்சல்யம் சொல்லில் அடங்காதது. மெஸ் நடத்தும் மாமி என்ற பெயர் மறுவி ‘மெஸ் மாமி’ என்று ஆகி இப்போது அவளது இயற்பெயர் அனைவராலும் மறக்கப்பட்டு ‘மெஸ் மாமி’ என்ற பெயரே நிலைத்து விட்டது.
“என்ன மாமி! ஊத்தாப்பம் ரெடியா..?” என்றபடி இலையின் முன் அமர்ந்தான் அசோகன்.
“இதோ ரெடியாயிடுத்து..” என்றவாறே இலை போட்டுப் பரிமாறினாள் மெஸ் மாமி. பசேலென்ற இலையில் வட்ட வடிவமாய் விழுந்த ஊத்தாப்பமும் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னியும், தக்காளி சட்னியும் துணைக்கு சாம்பாரும் அணிவகுத்து பார்க்க அழகாகவும் நாவில் உமிழ் நீரை ஊற வைப்பதாகவும் இருந்தது.
ஏறக்குறைய அசோகன் சாப்பிட்டு முடிக்கும் நேரம் மெஸ்ஸின் வாசலில் சத்தம் கேட்டது. நிமிர்ந்தான். பல வேசம்..! குடிகாரன். என்ன வேலை செய்கிறானென்று அந்தத் தெருவிலும், சுற்று வட்டாரத்திலும், போலீஸிலும் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். தினந்தோறும் யாரையாவது அடித்துச் சம்பாதிக்கும் ‘அடியாள்’ அந்தத் தெருவில் நடந்த கலாட்டாக்களில் நிறைய முறை அசோகன் அவனை எச்சரித்திருக்கிறான். ‘இங்கே எதற்கு வந்தான்..?’ என்ற யோசனையுடன் எழுந்து கைகழுவி விட்டு வந்தபோது பலவேசம் மெஸ் மாமியிடம் உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தான்.
“ஏய்ய்…! நான் கேட்கிறது காதில் விழுகலையா..? சிக்கன் பிரியாணியும், மீன் வறுவலும் கொண்டு வான்னு கத்திக்கிட்டு இருக்கேன். மரமாட்டம் நிற்கிற. போ.. போய் கொண்டு வா..”
“ஏண்டாப்பா, காலங்கார்த்தாலே வந்து என் பிராணனை வாங்கணுமா..? இங்கே அது மாதிரியெல்லாம் சாப்பாடு கிடையாதுடாப்பா..”
“பின்னே ஏன் முனியாண்டி விலாஸ் நடத்துற..?”
“ராமா! முனியாண்டி விலாஸ் போக வேண்டியவன் இந்த மாமி மெஸ்ஸுக்கு வந்து கத்துறானே பெருமாளே! இது என்ன சோதனை! நாராயணா! நான் புலம்பறது உன் காதில் விழுகலையா..?”
“இன்னாம்மே! ஓராளு, ரெண்டாளு, மூணாளு பேரு சொல்லி என்னை மிரட்டுற..? யாரு அந்த ராமு, பெருமாளு, நாராயணா வரச் சொல்லு அந்த மூணு பேத்தையும்.. என்னா! அவங்க என்ன என்னைவிடப் பெரிய வஸ்தாத்தா..? இந்தப் பேட்டைக்கே தெரியும். பலவேசம்ன்னா யாருன்னு.. அவங்க மூணு பேத்தையும் ஒத்தையா நின்னு வெத்தல பாக்கு போட வைக்கல என் பேரு.. என் பேரு…” என்று தள்ளாடியவன் அருகே சென்று கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி,
“என் பேரு என்னடா..” என்றான் குடிபோதையில் தன் பெயரையே மறந்தவனாய். அவன் தலையில் அடித்துக் கொண்டு விலகிச் செல்ல மாமி திணறிப் போனாள். அவள் பார்வை உதவிக்காக அசோகனைத் தேடியது. பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து கைகளையும், வாயையும் துடைத்துக் கொண்ட அசோகன் அதை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே பலவேசத்திடம் போனான்.
“வெளியே போடா..” என்றான் பலவேசத்திடம்,
“ஏய்ய்.. யாருடா நீ..? என்னை வெளியே போகச் சொல்ல நீ யாருடா..?”
“ம்ம்.. நான்தாண்டா அந்த ராமன், bருமாள், நாராயணன்.”
“என்னாது..” என்று கண்கள் மேல் கைகளை விரித்து அசோகனின் முகத்தைப் பார்த்த பலவேசம் குடிபோதையில் தள்ளாடியவாறு.
“யாரை ஏய்க்க்ப் பார்க்கிற. மூணு பேரு வரணுமே.. நீ ஒத்தை ஆளுள்ள நிற்கிற..” என்றான்.
“மூணு பேரும் சேர்ந்து ஒரே ஆளா வந்திருக்கேண்டா. வெளியே போடா குடிகார நாயே! குடிச்சா உனக்கு அறிவு இல்லாமப் போயிடுமா..? எத்தனை தடவை சொல்லி யிருக்கேன்டா மகனே! இந்த மாதிரி வாலாட்டாதேன்னு.. சாப்பிடுற இடத்தில் வந்து கலாட்டாவா பண்றே.. வா வெளியே..” என்று பேசிக் கொண்டே அசோகன் பலவேசத்தை நெட்டி வெளியே தள்ளிக் கொண்டு வந்தான். வெளியே அவன் தள்ளிய வேகத்தில் நிற்க முடியாமல் குடி போதையில் தள்ளாடிய பலவேசம் தெருவில் விழுந்தான். விழுந்த வேகத்தில் போதை தெளிய எழுந்தவன்,
“ஏய்ய்.. யாரைத் தள்ளி விடுற..” என்று கத்தியவாறு அசோகன் மேல்பாய அசோகன் ரௌத்ரமானான். இரு வரும் மாமி கடை வாசலில் கட்டிப் புரண்டார்கள். கடைசியில் தோற்றுப் போன பலவேசம்.
“டேய்ய்.. ராத்திரி வந்து ஒன்ன பொலி போடறேண்டா. ஒன்ன ரெண்டுல ஒண்ணு பாக்கலேன்னா இந்தப் பலவேசம் ஆம்பள இல்லடா..” என்று கத்திக் கொண்டே போனான்.
“போடா போ.. யாரை யார் பொலி போடறாங்கன்னு பார்ப்போம்..” என்றவாறு கை, கால்களில் தூசி தட்டிக் கொண்டிருந்த அசோகனை கையெடுத்துக் கும்பிட்டாள் மெஸ் மாமி.
“உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம்டா குழந்தே! எவ்வளவு வசதியான பிள்ளையாண்டான் நீ. இந்த மாமிக்காக குடிகாரனோடு ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டியே. நீ சொன்ன மாதிரி நீ பெருமாள் தாண்டா குழந்தை! சாட்சாத் அந்த விஷ்ணுவே வந்து என்னைக் காப்பாத்தின மாதிரி தோணுதுடா.. நீதாண்டா என் பிள்ளை..”
“சரி சரி விடுங்க மாமி.. இது பெரிய விசயமா..? மதியம் சாப்பிட வரமாட்டேன். ராத்திரி சாப்பாட்டை கேரியரில் ரூமுக்குக் கொடுத்து விடுங்க..” என்றவாறு தனது இருசக்கர வாகனத்தில் ஆரோகணித்தான் அசோகன்.
டிராவல் ஏஜன்ஸியை அடைந்து உள்ளே சென்று அமர்ந்தபோது அவனது செல்போன் மணியடித்தது.
“ஹலோ! அபிராமி டிராவல் ஏஜன்ஸி..” என்று தனது அம்மா அபிராமி பெயரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் டிராவல் ஏஜென்ஸியின் பெயரைச் சொன்னான் அசோகன்.
“தியாகு பேசறேண்டா..” என்றது மறுமுனை.
“அடடா.. நம்பரைப் பார்க்க மறந்திட்டேன்டா..”
“உனக்கு மறதியே வராதே.. டியூட்டி கான்சியஸ்னு சொல்லு. டிராவல் ஏஜன்ஸிக்கு வந்திட்டால் தொழில் ஞாபகம்தான்..” என்றான் தியாகு என்ற தியாகராஜன். அசோகனின் உயிர் நண்பன். பள்ளியிலிருந்து கல்லூரி வரை சேர்ந்தே படித்தவர்கள். பட்டம் பெற்றதும் அசோகன் ‘அபிராமி டிராவல் ஏஜன்ஸி’யை துவக்கி விட்டான். தியாகராஜன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தான். இன்று நகரில் உள்ள திறமையான இளம் வக்கீல்களில் அவனும் ஒருவன். அன்பான தாய், அழகான இளம் மனைவி, சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையென்று வாழ்க்கையில் செட்டிலானவன்.
“சும்மா வாராதேடா வக்கீல். என்ன காலையிலேயே போன் பண்ணியிருக்க..? இந்நேரம் கோர்ட்டில் கேஸ் கட்டுக்களோடு குடும்பம் நடத்திக்கிட்டு இருப்பியே..?”
“இப்போ வீட்டில் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன். என் மாமனார் கிராமத்திலிருந்து வந்திருந்தார். அவரை ஊரில் விட்டு விட்டு வர வேண்டும். கார் ரிப்பேர்.. டாக்ஸி வேண்டும்.”
“டேவிட், மணி ரெண்டு பேரும் ரெண்டு டாக்ஸி யோட போயிட்டாங்க. வல்லரசு வேனை எடுத்துட்டுப் போயிட்டான். மத்தவங்க ஆன் லைன்.. ம்ம்.. சரி. நானே ஒரு வண்டியை எடுத்துக்கிட்டு வரேன்.”
“சிரமமில்லையே..”
“அடச்சீ! என்னடா சிரமம். உன் மாமனார். உமாவோட அப்பா.. அவரை ஊரில் விட்டு விட்டு வருவது என் கடமையில்லையா..?” என்றான் அசோகன். உமா, தியாகராஜனின் மனைவி. அசோகனின் உடன் பிறவா தங்கை.
நண்பனின் மாமனாரை அவரது கிராமத்தில் விட்டு விட்டு திரும்பி வரும்போது இருட்டத் தொடங்கியிருந்தது. டேப்பில் பாட்டைப் போட்டு விட்டு கூடவே மெலிதாகப் பாடிக் கொண்டு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். சென்னை நகரின் எல்லை ஆரம்பமாகியிருந்தது. தூரத்தில் ஒரு இளம் பெண் பெட்டிகளோடு நடு ரோட்டில் நிற்பது போல் தெரிந்தது.
‘என்னடா இது நட்ட நடு ரோட்டில் நிற்கிறாள். பயமேயில்லையா..’ என்று நினைத்தவன், ‘ஒருவேளை மோகினிப் பிசாசோ..’ என்று எண்ணமிட்டான்.
‘நடுராத்திரியை விட்டு விட்டு பொழுது மங்கினவுடன் மோகினிப் பிசாசு வந்துவிடுகிறது போல..’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான். கூடவே ‘எந்த மோகினிப் பிசாசு பெட்டிகளோடு நிற்கும்..’ என்ற எண்ணமும் வர சிரிப்பு அதிகமாகியது. வண்டி நெருங்க, நெருங்க உண்மையிலேயே ஒரு இளம் பெண் கைகளை ஆட்டியபடி வண்டியை நிறுத்த முயன்று கொண்டிருந்தது தெரிந்தது. நிறுத்துவது போல் அருகில் வண்டியைக் கொண்டு போன அசோகன் அந்தப் பெண் ஓடி பெட்டிகளை எடுக்கும்போது ஆக்ஸிலேட்டரை அழுத்தினான்.
கார் நிற்காமல் பறந்தது.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.