Chapter 03
அப்பாவின் உடல்நிலை பற்றிய கவலையும் தனியாக இரவுப் பயணம் செய்து பழக்கமில்லாதவள் இன்று தனித்துப் பயணம் செய்ய வேண்டி வந்ததால் தோன்றிய இனம் புரியா பதட்டம் நிரம்பிய பயமும் கொண்டிருந்த காவ்யா வெகு நேரம் கழித்துத்தான் ஆட்டோ பாதை மாறிப் போவதைக் கவனித்தாள்.
“டிரைவர்! என்ன இது..? இது எக்மோர் போகும் பாதையில்லையே..?” என்று கேட்டாள். ஆட்டோ டிரைவரிடமிருந்து பதிலேதும் வரவில்லை. இப்போது ஆட்டோ சாலையிலிருந்து மேடு பள்ளமான பாதைக்கு மாறியிருந்தது. கலவரமாகிப் போன காவ்யா.
“ஏய்ய்! வண்டியை நிறுத்து..” என்று கூச்சலிட்டாள். ஆட்டோ வேகம் கூடியதேயொழிய நிற்பதாக இல்லை. ஆட்டோவிலிருந்து குதிக்க முடியாத வேகம். திகிலெடுத்தது காவ்யாவிற்கு. முன்னால் சாய்ந்து ஆட்டோ டிரைவரின் சட்டையைப் பற்றி உலுக்கினாள். அவன் தள்ளிய வேகத்தில் பின் சீட்டில் விழுந்தவளின் பின்னந் தலையில் எதுவோ இடித்தது. எடுத்துப் பார்த்தாள். இரும்புக் கம்பி. எடுத்த வேகத்தில் ஓங்கி ஒரு போடு போட்டாள். “ஆ” வென்ற சத்தத்துடன் தலையைப் பிடித்துக் கொண்டான் அவன். ஆட்டோ ஒரு மரத்தில் மோதி நின்றது.
அப்படியே முன்னே சாய்ந்தான் அவன்.
இறங்கி பெட்டிகளைத் தூக்கிக் கொண்ட காவ்யா ஒரே ஓட்டமாய் திரும்பிப் பார்க்காமல் ஓடினாள். தூரத்தில் சாலை தெரிந்தது. வண்டிகள் போய்க் கொண்டிருந்தன. பதட்டத்துடன் சாலையை அடைந்தவள் வாகனங்களை நிறுத்த முயன்று கையை ஆட்டிக் கூச்சலிட்டாள். எந்த வண்டியும் நிற்கவில்லை. பதைப்புடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் அவன் வருவது தெரிந்தது. அதிர்ந்தாள். ‘கடவுளே காப்பாற்று..’ என்று வேண்டிக் கொண்டவள் நடுச்சாலைக்குப் போய் நின்று கொண்டாள். ஒன்று அடுத்து வரும் வண்டி நிற்க வேண்டும். இல்லா விட்டால் அவள் அடிபட்டுச் சாக வேண்டும்.
கார் ஒன்று வருவது தெரிந்தது. இரு கைகளையும் ஆட்டி நிறுத்த முயன்றாள். நிறுத்துவது போல் வேகம் குறைத்த கார் அவள் ஓடிப் பெட்டிகளை எடுக்க முயலும் போது வேகமெடுத்துப் பறந்தது. அதே நேரம் அவள் தோளில் அருகே நெருங்கியிருந்த ஆட்டோ டிரைவரின் கை விழுந்தது. நெருப்புப் பட்டவளாய் அவன் கையை உதறிய காவ்யா பெட்டிகளைப் போட்டுவிட்டு அப்படியே ஓட ஆரம்பித்தாள். பின்னால் அவன் தூரத்திவர புலியின் கையில் அகப்படாமல் பறந்தோடும் மானின் வேகத்தோடு ஓடியவள் எதன் மீதோ மோதி நின்றாள்.
அதே நேரம் பின்னால் துரத்தியவன் அருகே வந்து விட நடுங்கிய காவ்யா மீண்டும் ஓட முயல அவனின் கரம் பற்றி நிறுத்தியது. அசோகனின் கரம். காரின் முன் விளக்குகளைப் போட்டவன் துரத்தி வந்தவனை நிமிர்ந்து பார்த்தான். அசோகனை லட்சியம் செய்யாமல் காவ்யாவை நெருங்கியவனை விரல் சொடுக்கி அழைத்தான் அசோகன். அவன் திரும்பிப் பார்க்க,
“போய்விடு..” என்றான் ஒற்றைச் சொல்லாய்.
“போகலைன்னா..?”
“போக வைப்பேன்..”
“அவளை விடு போகிறேன்..”
“இவள் யார்..? உன் தங்கையா..?”
“அந்த உறவு முறையெல்லாம் சொல்லாதே..”
“வேறெந்த உறவு முறை..? நீதான் சொல்லு. கேப்போம்.”
“அவன் எனக்கு எந்த உறவு முறையுமில்லை..” என்றாள் காவ்யா. மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் நடுங்கியபடி.
“பின்னே ஏன் இவன் கூட வந்தாய்..?” என்றான் அசோகன்.
“இவன் ஆட்டோ டிரைவர். இவன் ஆட்டோவில் எக்மோர் போக ஏறினேன். நான் இவன் கூட வரவில்லை. இவன் ஆட்டோவில் வந்தவள்.”
“அப்படிப்போடு. ஐயா எக்மோருக்குப் போகாமல் ராங்க் ரூட்டில் போகிறார். அப்படித்தானே..?”
“ஆமாம்..”
“ஏண்டா அறிவு கெட்ட நாயே! உன்னை நம்பித்தானே உன் ஆட்டோவில் ஏறியிருக்கிறாள். நீயானால்.. ச்சீ..” என்று காரி உமிழ்ந்த அசோகன் காவ்யாவின் கையைப் பிடித்து அழைத்தபடி திரும்பி நடக்க முயல அவன் முன்னே வந்து மறித்தான். இப்போது அவன் கைகளில் கத்தி முளைத்திருந்தது.
“மரியாதையாய் அவளை விட்டுவிடு. இல்லைன்னா..” என்றபடி கத்தியை மேலும், கீழும் ஆட்டினான் அவன்.
“ஏண்டா. நீ செய்யறதே ஈன வேலை. இதில் மரியாதை வேறு கேட்குதா உனக்கு..? மரியாதை யில்லாமல் சொல்றேன். நான் இவளை விட்டுப் போக மாட்டேன். என்னடா செய்வே..?”
“கீசிடுவேன் கீசி…”
“சரியாப் போச்சு போ. இன்னைக்குக் காலையில் முழிச்ச முழி சரியில்லைப்பா. எல்லோரும் என்னை பொலி போடவும் கீசவும் அலையறாங்க..”
பேசிக் கொண்டே அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவன் மேல் பாய்ந்த அசோகன் அவனின் கைகளைப் பற்றி பின் பக்கம் கொண்டு போய் முறுக்கிக் கத்தியைக் கீழே போட வைத்தான்.. மேற்கொண்டு அசோகன் அவனை பிழிந்து எடுத்து துவைத்து விட்டான்.
கிழிந்த துணிச்சுருளாய் சாலையில் கிடந்தவனை எட்டி உதைத்து விட்டுக் காவ்யாவைப் பார்த்து,
“இவன் ஒருவனை வைத்து ஆட்டோக்காரர்களைத் தவறாக நினைத்து விடாதே. ஆட்டோவில் தவற விட்ட கல்யாண நகைகளை வீடு தேடிப் போய் கொடுத்து விட்டு வரும் ஆட்டோக்காரர்கள்தான் அதிகம். இவனைப் போல இருக்கிறவர்கள் சொற்பம்..” என்றான். மழையில் நனைந்த கோழிச் குஞ்சு போல் ஏற்கனவே நடுங்கிக் கொண்டு இருந்தவள் அவன் சொன்னதற்கு ‘சரி’யென்பதாய் தலையாட்டினாள்.
காரின் பின் கதவைத் திறந்து ஏறிக் கொள்ளச் சொன்னதும் தயங்கிக் கொண்டே ஏறி பின் சீட்டில் ஒடுங்கி அமர்ந்தாள். காரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்த அசோகன் அரை வட்டமடித்துக் காரைத் திருப்பி வந்த வழியே ஓட்டினான்.
“என்.. என்னது.. இது.. காரும் வேறு பாதையில் போகுதே..” என்று காவ்யா பதறிhள்.
“மெள்ள.. மெள்ள.. காரிலிருந்து குதிச்சுராதீங்க. உங்க பெட்டியை நடு ரோட்டில் போட்டு விட்டு வந்திருக்கீங்களே. எடுத்துக்கலாமா, வேண்டாமா..?”
“ஐ ஆம் சாரி!..” அவள் முகம் வெட்கத்தில் கன்றியது.
“தப்பா நினைக்காதீங்க.. நான் ரொம்ப பயந்து போயிருக்கிறேன். அதுதான் அப்படிக் கேட்டு விட்டேன்..” என்றாள் மன்னிப்புக் கேட்கும் குரலில்.
“இட்ஸ் ஆல்ரைட்..” என்றபடி இறங்கிப் பெட்டி களை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவற்றை வாங்க கை நீட்டியவளை காரின் உள்புற வெளிச்சத்தில் முதன் முறையாக நன்றாகப் பார்த்தவன் அயர்ந்து போனான்.. என்ன ஒரு மென்மையான அழகு! மருண்ட விழிகளின் கண்ணீர் பார்வை அவன் மனதைப் பிழிந்தது. பார்வைக்கு நல்ல குடும்பத்துப் பெண் போல் குடும்பப் பாங்காய் இருந்தாள்.
‘ரயில்வே ஸ்டேசன் போக வேண்டியவள் இந்த அத்துவானக் காட்டில் மாட்டிக் கொண்டு.. ஐயோ பாவம்..!’ என்று எண்ணிக் கொண்டான்.
‘சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகள் ஆகி என்ன.. காந்தி கண்ட கனவு சுதந்திரம் வரவேயில்லையே..’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவன் காரை விரைவாய் செலுத்தினான். சென்னை மாநகரில் கார் நுழைந்தது.
“இப்போ எக்மோருக்கு வண்டியை விடவா..” என்று கேட்டான் அசோகன்.
“திருநெல்வேலி டிரெய்ன் போயிருக்குமே..” என்றாள் காவ்யா.
“திருநெல்வேலி தான் உங்க ஊரா..?”
“ஆமாம்..”
“சென்னைக்கு எதற்காக வந்தீங்க..?”
“காலேஜ் படிக்க. இங்கேதான் டிகிரி படித்தேன். ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். நேற்று ஃபைன்ல எக்ஸாம் முடிந்து விட்டது. இன்று அண்ணன் வந்து என்னைக் கூப்பிட்டுப் போவதாக இருந்தது. அப்பாவுக்கு திடீர்னு ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டதால் அண்ணன் போன் பண்ணி என்னைக் கிளம்பி வந்து விடச் சொன்னார்.”
“காலையில் போயிருக்கலாமே. இரவில் தனியாகக் கிளம்பலாமா..?”
“தப்புத்தாங்க. இப்பத்தான் புரியுது. அப்பாவுக்கு என்ன ஆச்சோன்னு பதட்டத்தில் தனியாகப் போகிறோம் கிறதை மறந்திட்டுக் கிளம்பிட்டேன்.”
“அங்கே திருநெல்வேலியில் காலேஜ் இல்லையா..?”
“அண்ணனுக்கு திடீர்னு மெட்ராஸுக்கு மாறுதல் வந்து விட்டது. அதனால் இங்கே காலேஜில் இடம் வாங்கிச் சேர்த்து விட்டார்கள். கடைசி நிமிடம் டிரான்ஸ்பர் கேன்சலாயிருச்சு. திருநெல்வேலியில் காலேஜில் இடம் கேட்கப் போனால் முடிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டாங்க. அதனால் இங்கேயே ஹாஸ்டலில் தங்கிப் படிச்சேன்.”
“இங்கே எந்தக் காலேஜில் படிச்சீங்க..?”
அவள் காலேஜின் பெயரைச் சொன்னாள். கேள்விகளுக்குச் சரளமாய் பதிலளித்துக் கொண்டே வந்தாலும் அவளது குரல் அழுகையுடன் நலிந்து ஒலித்தது. நடந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து அவள் இன்னும் வெளிவரவில்லையென்பதை உணர்ந்த அசோகன் அவளை சகஜமாக்க மேலும் கேள்விகளைக் கேட்கலானான்.
“என்ன படிச்சுக்கிட்டு இருந்தீங்க..”
“பி.எஸ்ஸி. மேத்ஸ்..”
“ஓகோ. இப்போ திருநெல்வேலிக்குப் பஸ்தான் உடனே கிடைக்கும். பஸ் ஸ்டாண்டு வரை வந்து பஸ் ஏற்றி விடுகிறேன். போய் விடுவீர்களா..?”
“சார்…” அவள் தயக்கமாய் அழைத்தாள்.
“சொல்லுங்க..”
“அது… வந்து.. வந்து…” அவள் தயங்கினாள்.
“என்னம்மா..?” என்றான் அவன் கனிவான குரலில்.
அந்தக் கனிவில் தைரியம் பெற்றவளாய் காவ்யா தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“எனக்குப் பயமாக இருக்கிறது. ஒரு வேளை அவன் திரும்பவும் பின்னாடியே வந்து விட்டால்.. அதனால்…”
“அதனால்..?”
“அதனால்.. நீங்களும் என் கூட துணைக்கு திருநெல்வேலி வரை முடியுமா..?”
அவள் படாரென்று கேட்டு விட்டாள். அவன் யோசித்தான். அவன் யோசிப்பதைக் கண்டு பயந்தவள்.
“உங்களுக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுத்து விடுகிறேன் சார். திரும்பி வர பஸ் சார்ஜும் கொடுத்து விடுவேன்.” என்றாள்.
அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. வாய் விட்டுக் கடகடவென்று சிரித்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த குழந்தையைப் போலிருந்தாள். அவனது பண பலம் தெரியாத அவளது எளிமை உணர்வு அவனைக் கவர்ந்தது. காரை நிறுத்தாமல் வேகம் கூட்டி ஓட்ட சீக்கிரத்தில் நகரத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டுச் சாலையில் வேகமெடுத்து கார் ஓட ஆரம்பித்தது.
“ஐயோ.. கார் பஸ் ஸ்hடண்டிற்குப் போகலையே..” என்று அவள் பதற,
“ஆமாம் பஸ் ஸ்டாண்டிற்குப் போகலை. திருநெல்வேலிக்குப் போகிறது..” என்று புன்முறுவலுடன் பதில் சொன்னான் அவன்.
“காரிலேயே திருநெல்வேலி போகிறோமா..?”
“ஆமாம்..” என்றவாறு காரை ஓட்டியவாறு செல்போனை எடுத்தவன் உதவியாளர்களுக்கு அவன் இல்லாதபோது மேற்பார்வை செய்து வேலையை நடத்தக் கட்டளைகள் பிறப்பித்தான். அவன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது பணபலம் புரிந்தது. அவனிடம் பஸ் சார்ஜ் கொடுக்க எண்ணி அதையும் வாய்விட்டுச் சொல்லிய தன் முட்டாள் தனத்தை நினைத்து வருந்தியவள்,
“ஐ ஆம் சாரி.. நீங்கள் இவ்வளவு வசதியானவர்னு தெரியாமல் நான் சிறு பிள்ளைத்தனமாய் பேசிட்டேன்.” என்று கூறினாள்.
“அதனால் பரவாயில்லை. உங்களைப் பத்திரமாய் திருநெல்வேலியில் உங்கள் வீட்டில் விட்டு விட்டுத் தான் திரும்பி வருவேன். நல்லவேளை பெட்ரோலுக்குப் பணம் கொடுக்கிறேன்னு சொல்லிச் சிரிப்பை மூட்டப் போறீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை. சுதாரிச்சிட்டிங்க. இப்போதைக்கு பயப்படாமல் தூங்கிக்கிட்டு வாங்க..” என்றான்.
அவள் எல்லையற்ற நன்றியுடன் அவனைப் பார்த்தாள். வெகு நேரத்திற்குப் பின் கிடைத்த பாதுகாப்புணர்வில் நிம்மதியாய் கண் மூடினாள். மேலே நிலவு பொழிந்தது. பௌர்ணமியாக இருந்ததால் முழு நிலவாய் காட்சி தந்து காருடன் சேர்ந்து வருவது போல் உடன் நகர்ந்தது. அந்த ஒரு இரவு நேரப் பயணம் அந்த இருவரின் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியமைக்கப் போகிறது என்பதை அறிந்த காலமும் அந்தக் காருடன் சேர்ந்து நகர்ந்தது.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.