Chapter 04

0Shares

ஆனந்தன் பரபரத்துக் கொண்டிருந்தான். இன்னும் முப்பது நிமிடத்தில் அவன் குளித்துச் சாப்பிட்டுப் போயாக வேண்டும்.. இரவு மருத்துவமனையில் தந்தைக்குத் துணையாக தங்கியிருந்தவன் காலையில் நர்ஸை துணைக்கு வைத்து விட்டு அவசரமாய் வீட்டுக்கு வந்திருந்தான். போகும் வழியில் தாயை மருத்துவமனை யில் விட்டு விட்டு அவன் அலுவலகம் செல்ல வேண்டும்.

“அம்மா.. சீக்கிரம் இன்னும் சமையல் ரூமில் என்ன பண்றீங்க. கிளம்புங்க..” என்று சமையலறையைப் பார்த்துக் கத்தினான் ஆனந்தன்.

“அடடா. கொஞ்சம் பொறுடா. நீ கத்துற கத்தில சுடுகாப்பியை கையில் ஊத்திக்கிட்டேன். உங்க அப்பா ஒருத்தர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறது பத்தாதா..? நானும் போய் துணைக்கு அட்மிட் ஆகணுமா..?” என்று சலித்துக் கொண்டாள் பர்வதம்.

“ஏம்மா.. நான் ஒருத்தனா ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்கும் ஆபீஸுக்கும் பறந்துக்கிட்டு இருக்கேன். இறக்கை மட்டும் தான் இல்லை. சமையலை சீக்கிரம் செய்யணும்னு எண்ணமேயில்லாம இப்படி அமைதியா எப்படிம்மா பேச முடியுது..?”

“கொஞ்சம் பொறுமையாய் பேசுடா. இதோ காபியை பிளாஸ்க்கில் ஊத்திட்டேன். காலை டிபனையும், மதியச் சாப்பாட்டையும் கேரியரில் எடுத்து வைச்சிட்டேன். உன்னோட டிபன் பாக்ஸ் இந்தா எடுத்துக்க..” என்றவாறு சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்த பர்வதம், “ஆனந்தா….” என்று மெதுவான குரலில் அழைத்தாள்.

“என்னம்மா.. இன்னும் என்ன விசயம்..?”

“காவ்யா இன்னும் வரலையேடா. அவள் வந்த பின் கிளம்பலாமே.”

“ஏம்மா உங்க பெண்ணுக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா இல்லாமல் போய் விட்டது. மனுசன் இருக்கிற நிலைமை என்ன.. இப்போப் போய் தொண தொணன்னு..” என்று சலித்துக் கொண்டவன் என்ன நினைத்தானோ, “ஒரு போனாவது பண்ணலாமில்லை. இது வரைக்கும் தனியாகவே வந்ததில்லை. நான் என்னன்னு நினைப்பேன். வீட்டுக்கு ஒரு போன் பண்ணக் கூடவா நாம் சொல்லித் தரணும். வரவர காவ்யாவிற்கு பொறுப்பே இல்லை..” என்று பொரிந்தான்.

“நல்லாயிருக்குடா உன் நியாயம். அவளுக்கு ஒரு செல்போன் வாங்கித் தாடான்னா பெண் பிள்ளைகள் செல்போன் வைத்துக்கக் கூடாதுன்னு சொன்ன.. பெண் பிள்ளைகள் செல்போன் வைத்துக்கக் கூடாதா..? அவகிட்டத்தான் செல் போனில்லையே..” பர்வதம் சண்டைக்கு வந்தாள்.. 

“அவளுக்குத்தான் செல்போன் இல்ல.. எனக்கு இருக்கில்ல..?” எரிந்து விழுந்தான் ஆனந்தன்..

“உன்கிட்ட இருந்து என்ன பிரயோசனம்..?”

“ஏம்மா, தெருவுக்கொரு காயின் போனிருக்கு. அங்கேயிருந்து ஒரு போன் பண்ணக்கூடாதா..?” 

“ஆனந்தா.. எனக்கு என்னவோ பயமாயிருக்குடா. அவள் பத்திரமா வீடு வந்து சேர்ந்ததைப் பார்த்திட்டுக் கிளம்பினால் எனக்கு நிம்மதியாயிருக்கும்.”

“அம்மா! எனக்கு மட்டும் கவலையில்லையா..? ஆனால் அப்பா இப்போது இருக்கும் நிலைமையில் அவர் தானே முக்கியம். அவரைத் தனியாக விட்டு விட்டு வந்திருக்கிறேன். ஒரு காபி கூட அவர் இன்னும் குடிக்கவில்லை. நீங்கள் கிளம்புங்கள். பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டுக் காவ்யா வந்ததும் எனக்குப் போன் பண்ணச் சொல்லிவிட்டுப் போகலாம். அவள் வந்ததும் எனக்குப் போன் பண்ணுவாள். நான் உடனே கூப்பிட்டு வந்து ஆஸ்பத்திரியில் விட்டு விடுகிறேன். போதுமா, இப்போது கிளம்புங்கள்.” என்று சமாதானப் படுத்தினான் ஆனந்தன். பர்வதம் கால் மனதாய் கிளம்ப முனையும் போது வாசலில் கார் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். காவ்யா இறங்கிப் பெட்டிகளை எடுத்துக் கொண்டவள் இறங்காமல் அமர்ந்திருந்த அசோகனிடம்,

“என்ன சார் இறங்காமல் உட்கார்ந்திருக்கீங்க. இறங்கி உள்ளே வாங்க சார். இதுதான் என் வீடு. என் அம்மாவும், அண்ணாவும் உள்ளே இருக்கிறாங்க. வாங்க சார். இவ்வளவு தூரம் என்னை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி சென்னையிலிருந்து திருநெல்வேலி வரைக்கும் உங்க காரிலேயே பாதுகாப்பாய் கூட்டி வந்து என் வீட்டில் பொறுப்பாய் விட்டிருக்கீங்க. வாசலோடு போனால் எனக்கு மனதுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும் சார். ப்ளீஸ் எனக்காக இறங்கி வந்து ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டு என் அம்மாவையும் அண்ணாவையும் பார்த்து விட்டுப் போங்க சார். ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.

தயக்கத்துடன் இறங்கிய அசோகன் அவளைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் செல்லப் போனான். வாசலில் காய்கறிக்காரரிடம் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டம்மாள் அவ்வளவு நேரமாய் காய் வாங்குவதை நிறுத்திவிட்டு ஏதோ நாடகம் பார்ப்பது போல் காவ்யாவும் அசோகனும் பேசிக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவள், காய்க்காரர்.

“ஏம்மா கத்தரிக்காய் எவ்வளவு போட கால் கிலோவா, அரைக்கிலோவா..” என்று கேட்பதைக் கவனிக்காதவளாய் காவ்யாவிடம்,

“வாம்மா காவ்யா! இப்போதுதான் வந்தாயா..? காரில் வந்திருக்க போல…” என்று கேட்டவாறு காவ்யாவை விட்டு விட்டு அசோகனை மேலும் கீழும் ஆராய்ச்சியாய் பார்த்தாள்.

“ஆமாம் ஆன்ட்டி..” என்று நின்று பதில் சொன்ன காவ்யாவிடம்,

“கார் யாருதும்மா..? தம்பியோடதா..? தம்பி கூடத்தான் காரில் வந்தாயா..? தம்பி யாரு.. உங்க சொந்தமா..?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

“அப்புறமாய் இதற்கெல்லாம் பதில் சொல்லுகிறேன் ஆன்ட்டி.. இப்போது காய் வாங்குவதைக் கவனியுங்கள்..” என்று பதில் கொடுத்த காவ்யா, “நீங்க வாங்க சார்..” என்று அசோகனிடம் கூறிவிட்டு உள்ளே விரைந்தாள்.

அவளை உடனே தொடர்ந்து உள்ளே செல்லாமல் நிதானித்த அசோகன் பக்கத்து வீட்டு அம்மாள் பக்கம் பார்வையைத் திருப்பினான்.. அவள் தன்னை ஏற இறங்க அளவிட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்தான் கேலியாய் புருவத்தை ‘என்ன’ வென்னும் பாவனையில் உயர்த்தினான். அவனின் இந்தச் செய்கையை எதிர் பார்க்காத அந்தப் பெண்மணி அவசரமாய் காய் பேரத்தைப் தொடர்ந்தாள்.

‘அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்த்துக் கேள்வி கேட்கும் இந்தக் குணம் என்றுதான் நம்மவர்களை விட்டுப் போகுமோ..?’ என்று எண்ணமிட்டபடி அசோகன் காவ்யா வின் வீட்டிற்குள் நுழைந்தான். காவ்யாவைக் கண்டதும் பர்வதம் மகிழ்ச்சியுடன்.

“இதோ காவ்யா வந்திட்டாளே..” என்று கூறியபடி வந்து பெட்டிகளை வாங்கிக் கொண்டாள்.

“ஏம்மா இவ்வளவு லேட்.. ஒரு போன் பண்ணி யிருக்கக் கூடாதா..?” என்று ஆனந்தன் மனத்தாங்கலாய் கேட்டான்.

“இல்லைன்னா.. அது வந்து..” என்று காவ்யா விவரம் சொல்ல ஆரம்பிக்கும்போது அசோகன் உள்ளே வந்தான்.

“யாரும்மா இவர்..?” என்று ஆனந்தன் விசாரிக்கும் போது “உட்காருங்கள் சார்..” என்று அவனை உட்கார வைத்த காவ்யா,

“அம்மா சாருக்கு உடனே காபி கொண்டு வாங்க..” என்றாள்.

பர்வதம் புரியாதவளாய் ஆனந்தனைப் பார்த்து விட்டு உள்ளே சென்று காபி கொண்டு வந்து அசோகனிடம் கொடுத்தாள். அவன் குடித்து முடிக்கும் வரை காத்திருந்த ஆனந்தன்.

“இப்போச் சொல்லு யார் இவர்..?” என்றான் கண்டிப்பான குரலில். காவ்யா நடந்ததைச் சொன்னாள். கேட்டு முடித்ததும் அவர்கள் அசோகனுக்கு நன்றி சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்க, “அடிப்பாவி!” என்று அலறினாள் பர்வதம்.

“என்னலே சொலறே? ராத்திரி முழுவதும் இவன் கூட தனியாவா காரில் வந்தே…?” என்று பர்வதம் முறைக்க,

“காவ்யா..! நீ சின்னப் பெண்ணா..? சென்னையில் படிச்சு பட்டம் வாங்கினவ ஒழுங்காய் ஒரு டிரெய்னோ, பஸ்ஸோ பிடித்து ஊர் வந்து சேர முடியலைன்னு சொல்கிறாயே. நான்சென்ஸ்..” என்று ஆனந்தன் வார்த்தைகளைக் கொட்டினான்.

“அண்ணா! நான் எக்மோருக்குப் போகத்தான் ஆட்டோவில் ஏறினேன். ஆட்டோக்காரன்…” என்று காவ்யா பதற்றத்துடன் ஆரம்பிக்க..

“சும்மா நிறுத்து. அதையே சும்மா தொண தொணன்னு சொல்லி மானத்தை வாங்கிக்கிட்டு.. உன்னை யாரு ஆட்டோவில் ஏறச் சொன்னது. பஸ் பிடித்து எக்மோருக்குப் போக முடியாதா..?”

“அண்ணா! ஹாஸ்டலைக் காலி செய்து விட்டுப் பெரிய பெரிய பெட்டிகளாய் இரண்டு பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் வரை எப்படிப் போவதுன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா..?”

“ஏன் ரெண்டு பெட்டிகளைத் தூக்கிக்கிட்டு உன்னால் நடக்க முடியாதா..?”

விக்கித்துப் போனாள் காவ்யா. அவள் என்ன குற்றம் செய்தாள்..? குற்றவாளி போல் தாயும், தமையனும் விசாரிக்கக் காரணம் என்ன..? எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறாள். அவர்கள் சொல்வது போல் ஆட்டோவில் ஏறியது அவள் தவறென்றாலும் ஆபத்தில் மாட்டி மீண்டு வந்தவளை இப்படிக் குற்றம் சாட்டுவது சரியா..? அவ்வளவு கொடுமையான ஆபத்திலிருந்து காப்பாற்றி வீடு வரை கொண்டு வந்து விட்டவனுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டாம். அவன் முன்னாலேயே இப்படி விசாரித்தால் அவன் என்ன நினைப்பான்..? வாசலோடு போக இருந்தவனை வீட்டுக்குள் அழைத்தது தவறாகி விட்டதே. காவ்யா தவித்துக் கொண்டிருக்கும் போது,

“பர்வதம்” என்று நீட்டி முழக்கியபடி பக்கத்து வீட்டம்மாள் வந்தாள்.

“கொஞ்சம் முறுக்கு உலக்கு இருந்தால் தருகிறாயா..? முறுக்குப் பிழியணும். எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வைத்து விட்டுப் பார்த்தால் அவசரத்திற்கு முறுக்கு உலக்கு கிடைக்குதா.. அதுதான் உன்கிட்டே இருக்குமேன்னு ஓடிவந்தேன். ஆமாம். இந்தத் தம்பி உனக்கு என்ன முறையில் சொந்தம்..? சென்னையிலிருந்து காவ்யாவை அழைச்சுக்கிட்டு வந்திருக்கிறாரே. காரிலிருந்து ரெண்டு பேரும் ஒன்னா இறங்கி வாரதைப் பார்த்தேன். அதான் கேட்டேன்..” என்று விடாக் கண்டியாய் துருவினாள்.

“சென்னையிலிருந்து எங்க காவ்யா பஸ்ஸில் தான் வந்திருக்கா அக்கா. தம்பி நம்ப ஆனந்தன் கூட வேலை பார்க்கிறவரு. நம்ப ஆனந்தனப்பாவைப் பற்றி விசாரிக்க வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தவர் காவ்யா பஸ் ஸ்டாப் புல நிற்கிறதைப் பார்த்திட்டு கூட்டிக்கிட்டு வந்தாராம்..” என்று அவசரமாய் கதை பிணைந்த பர்வதம், “இந்தாங்க அக்கா முறுக்கு உலக்கு. பாவம் எண்ணெயை காய வைச்சுட்டு வந்திருக்கீங்க. ரொம்ப வேலையிருக்கும் எடுத்துட்டுப் போங்க..” என்று விரட்டாத குறையாய் கூறினாள்.

ஆனால் அந்த அக்கா அசையவில்லை.

“அது எப்படி ஆஸ்பத்திரியில் இருக்கிற ஆனந்தனோட அப்பாவை வீட்டில் வந்து விசாரிக்கறாங்க. அவரை விசாரிக்க ஆஸ்பத்திரிக்குத்தானே போகணும்.” என்று கொக்கிப் போட்டாள்.

“வீட்டில் வந்து என்னைக் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகலாம்ன்னு வந்தார் ஆன்ட்டி. நாங்க கிளம்பணும். இப்ப நீங்க கிளம்பறீங்களா..” என்று ஆனந்தன் கோபமாய் முறைக்க,

“ஓகோ..” என்று நம்பாத தன்மையுடன் பார்த்தபடி முறுக்கு உலக்கு வாங்காமலே அந்த அம்மாள் சென்றாள்.

“பார்த்தாயா.. உன் கண் குளிரப் பார்த்தாயா.. அந்தம்மா பார்வையையும் பேச்சையும் பார்த்தாயா..? கேட்டாயா..? போதுமா..? உன்னால் அம்மாவும், நானும் மாறி மாறி பொய் சொல்லி நாடகம் ஆடி… அப்பா அங்கே ஆஸ்பத்திரியில் கிடக்கிறாரேயென்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் நீ செய்திருக்கிற வேலை இருக்கிறதே.. ச்சே..! உன்னை… போ.. கண்காணாமல் என் முன் நிற்காமல் உள்ளே போய்விடு..” ஆனந்தன் கோபத்தில் உடல் நடுங்க வெறுப்புடன் வார்த்தைகளை உதிர்த்தான்.

“அண்ணா!” என்று விதிர்த்துப் போனாள் காவ்யா.. ‘ச்சே’யென்று யாரைப் பார்த்துச் சொன்னான்..? அவளைப் பார்த்தா.. ‘அண்ணா,அண்ணா’ என்று பணிவாய் அழைத்து அவன் கிழித்த கோட்டைத் தாண்டாமல் இருப்பாளே. அந்தத் தங்கையைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லலாமா..? அடுத்தவர்கள் ஆயிரம் பேசலாம். பெற்றவர்களும் உடன் பிறந்தவனும் அந்தச் சொல்களி லிருந்து காப்பாற்ற வேண்டியதை விட்டு விட்டு அவர்களைப் போலவே இவர்களும் பேசலாமா..? தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்பதால்தானே அவள் அவசரமாய் புறப்பட்டாள். அவளுக்கு அவரைப் பற்றிய கவலையில்லை என்று கூறலாமா..? இவள் என்ன தவறு செய்து விட்டாளென்று ‘ச்சே’யென்று கூறிவிட்டான். வாழ்க்கையில் முதல் முறையாக காவ்யாவின் குரல் உயர்ந்தது.

“முட்டாள் தனமாய் பேசாதீர்கள். நான் என்ன ஆபத்து வரவேண்டுமென்று ஆசைப்பட்டா அந்த அயோக்கிய ராஸ்கலின் ஆட்டோவில் ஏறினேன்..? ஆபத்து வந்து விட்டது. தப்பிப் பிழைத்து வந்திருக்கிறேன். அதையா குற்றம்ன்னு பேசறீங்க..” என்று அவள் காட்டமாய் கேட்க அந்தக் கேள்வியின் உண்மை உறைத்ததில் ஆனந்தனுக்கு இயலாமையுடன் கூடிய கோபம் வந்தது. அந்தக் கோபத்துடன் ஓங்கி ஒரு அறை விட்டான். காவ்யா அறையின் மூலையில் சுருண்டு விழுந்தாள்.

பர்வதம், “ஐயோ! என் பொண்ணை அடிக்காதேலே. பாவி. அவள் சொன்னதில் என்னலே தப்பிருக்கு. எப்பேர்ப் பட்ட கொடுமையிலிருந்து என் புள்ள தப்பிச்சு வந்திருக்கா. நினைச்சுப்பாருலே..” என்றவாறு மகளிடம் ஓடினாள்.

அதைக் காதில் வாங்காதவனாய் மீண்டும் ஆனந்தன் கையை ஓங்க அவ்வளவு நேரம் குடும்பத்தினரின் வாக்கு வாதத்தில் நுழைந்து சமரசம் செய்ய சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அசோகன் சடாரென்று பாய்ந்து அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.

“எதிர்த்தா பேசுற..? எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு வளர்ந்திட்டயா..? இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது..? யார் கொடுத்தது..? தொலைத்து விடுவேன் தொலைத்து..” என்று பொறுமிக் கொண்டிருந்த ஆனந்தனிடம்,

“தப்புத்தான் சார். தப்புத்தான். மன்னித்து விடுங்கள். அவங்க பஸ்ஸில் போகிறேன்னுதான் சொன்னாங்க. நான் தான் தனியாப் போனால் திரும்பவும் ஆபத்தில் மாட்டி விடுவாங்களோன்னு பயந்துக்கிட்டு கூட்டி வந்தேன். எனக்கும் இங்கே ஒரு வேலை இருந்ததால் காரில் கெர்ணடு வீட்டில் பாதுகாப்பாய் விட்டு விடலாம்ன்னு நினைத்துத் தான் கூட்டி வந்தேன். இவ்வளவு பிரச்னை வரும்ன்னு தெரியாமப் போச்சு.. மன்னித்து விடுங்கள்..” என்று நயந்து பேசினான் அசோகன்.

“வழியில் போறவங்க ஆயிரத்தைச் சொல்வாங்க.. இவளுக்கு எங்கே போச்சு புத்தி. நீயென்ன சொந்தமா, பந்தமா..? உன் கூட ஏன்லே என் தங்கை தனியா வரணும். இவளைக் கொன்னு புதைச்சாத்தான் என்ன..?” என்று ஆனந்தன் பாய,

“பொறுடா. நீ போடற சத்தத்தில் அக்கம் பக்கத்தில் என்னவோ ஏதோன்னு நினைச்சிரப் போறாங்க.. ஆனந்தா! நடந்தது நடந்துப் போச்சுலே. அவசரத்தில் புள்ள தெரியாம தப்புப் பண்ணிட்டா.. அதையே பெரிசு பண்ணாதேலே. விட்டுடு.” என்று பர்வதம் கெஞ்சினாள்.

காவ்யா பதறிப் போனாள். அம்மா சமாதானப் படுத்துகிற லட்சணம் அவளுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் அவமானத்தைத் தந்தது. என்ன நடந்தது..? எதைப் பெரிது பண்ணாமல் விட்டு விட வேண்டும்..? ‘அம்மா’ என்று மனதிற்குள் பல்லைக் கடித்துக் கொண்டவள், அடுத்து அசோகன்,

“அம்மா சொல்வது சரிதான். அக்கம் பக்கம் தப்பாக நினைத்துக் கொள்வார்கள். விட்டு விடுங்கள் சார். நடந்தது தவறென்று நீங்கள் நினைத்தால் அதன் முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன். உங்கள் கோபத்தை என் மேல் காண்பியுங்கள். தயவு செய்து என் தவறை மன்னித்து விடுங்கள்..” என்று கை கூப்பி மன்னிப்பு கேட்கவும் பதறிப் போனாள்.

“சார். நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.” என்று அவள் பதறுவதைக் கவனிக்காதவன் போல் விடுவிடென்று அந்த வீட்டை விட்டு வெளியேறிக் காரில் ஏறிக் கொண்டான் அசோகன்.

அவனது கார் கிளம்பும் ஓசை கேட்ட காவ்யா ஓடி வந்து ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தாள். அவனது கார் புழுதி பறக்கச் சென்று விட்டது. அவனது கார் சென்ற திசையை ஜன்னல் வழி பார்த்தபடி அசையாது நின்ற காவ்யாவின் விழிகளில் கண்ணீர் பெருகி வழிந்தது.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link