Chapter 06

0Shares

அசோகனுக்கு எதுவும் புரியவில்லை. என்ன நடக்கின்றது இங்கே? போலீசார் இங்கே எதற்கு வந்தார்கள்..? பூட்டிய வீட்டில் எப்படி நுழைந்தார்கள்..? ஏன் அவனை கைது செய்கிறார்கள் என்று திகைத்தவனாய் அந்த எஸ்.ஐ.யிடம் கேட்டான்.

“என்னைக் கைது செய்கிறீர்களா..? எதற்கு சார்..? நான் என்ன குற்றம் செய்தேன்..?”

“என்ன குற்றம் செய்தாயா..? கொலைக் குற்றம் செய்தாய்…”

அசோகன் அதிர்ந்து போனான். கொலைக் குற்றமா..? அவன் மீதா..? அவன் யாரைக் bhகலை செய்தான்..?

“பலவேசத்தை கொலை செய்தாயே. அந்தக் கொலை குற்றத்திற்காக…” என்றார் எஸ்.ஐ. அவன் மனதைப் படித்தவர் போல்.

“என்னது பலவேசம் செத்து விட்டானா..? எப்போது..?”

“நேற்று ராத்திரி.. எப்போது.. நேற்று ராத்திரி.. நீ காணாமல் போய்விட்டு திரும்பி வந்திருக்கிறாயே.. அந்த ராத்திரியில்.. நீ அவனைக் கொன்றது.. நேற்று ராத்திரி..” அந்த எஸ்.ஐ. ஏற்ற இறக்கத்துடன் நாடக பாணியில் அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

“சார் நேற்று அவன் செத்து விட்டால் நான் எப்படி அதற்குப் பொறுப்பாவேன்..? என்னை எப்படி நீங்கள் குற்றம் சொல்லலாம்..? அவன் ஒரு ரௌடி. நான் சொசைட்டியில் கண்ணியமான வாழ்க்கை வாழ்பவன்.. அவனைக் கொன்றவனைத் தேடுவதை விட்டு விட்டு என் மேல் அபாண்டமாய் குற்றம் சொன்னால் நான் சும்மாயிருக்க மாட்டேன்.”

“ந்தா.. சும்மா இந்த உதாரையெல்லாம் என்கிட்ட காட்டுகிற வேலையை விட்டுவிடு. நான் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டுத்தான் உன்னை அரெஸ்ட் பண்ணி யிருக்கிறேன்.. அப்படியே நல்லவன்போல் என்னமா ஆக்ட் கொடுக்கிற கண்ணு நீ.. ம்ம்.. நடிகர் திலகம்ன்னு வேணும்னால் பட்டம் கொடுக்கிறேன். ஆனால் உன் நடிப்பை நம்ப மாட்டேன்.”

“சார். மேலே மேலே பேசிக்கிட்டே போறீங்க சார். நீங்க போலீஸ்ங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பேசி விடுவதா..? என்ன விசாரித்தீர்கள்..? உங்களுக்கு என்னதான் தெரியும்..?”

“எனக்கு எல்லாம் தெரியும்பா. பலவேசம் ரௌடி தான். ஆனால் நீ என்னவோ இந்தத் தெருவிற்கே காக்கும் கடவுளாமே.. அவனை நிறைய முறை அடித்திருக் கிறாயாம்.. உண்டா.. இல்லையா..?”

“சார் அவன் ரௌடித்தனம் பண்ணினான். தட்டிக் கேட்டேன் அது தப்பா..?”

“அது சரியா, தப்பாங்கிறது இப்பப் பிரச்னையில்லை. உனக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்டை வருமாமே.. அதுதான் பிரச்னை..”

“சரி. ரௌடிக்கும் எனக்கும் ஆகாதுன்னா எனக்கு என்ன பிரச்னை வரும் சார்..? அவனுக்கு வேண்டியவனா நான் இருந்தால் அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எனக்குத் தொடர்பிருக்கும். என்னை நீங்கள் விசாரிக்கலாம். ஆகாதுன்னு ஆனவனைப் பத்தி என்கிட்ட என்ன சார் விசாரணை..?”

“பொறு. பலவேசம் செத்த அன்னைக்கு அதாவது நேற்று காலையில் உனக்கும் அவனுக்கும் தகராறு வந்ததா இல்லையா..?”

“வந்தது சார் ஆனால்…”

“அப்போது நீயும் அவனும் சினிமாவில் வருவது போல் அடித்துக் கொண்டு ரோட்டில் கட்டி உருண்டு சண்டை போட்டீர்களா இல்லையா..?”

“ஆமாம் சார். ஆனால்…”

“அவன் உன்னைப் பார்த்து ‘இன்னைக்கு ராத்திரி உன்னைப் பொலி போடலேன்னா இந்தப் பலவேசம் ஆம்பளை இல்லைடா’ன்னு கத்திட்டுப் போனானா இல்லையா..?”

“அவன் தானே சார் கத்தினான். நானா கத்தினேன்..?”

“ஆமாம். அவன் தான் கத்தினான். நீ நேத்து ராத்திரி வரும்போது உன்னை வழி மறிச்சு கொல்ல வந்திருக்கான். நீயும், அவனும் போட்ட சண்டையில் நீ அவனைக் கொன்று விட்டு ஓடி விட்டாய்.”

“சார்.. அவனை நான் பார்க்கவேயில்லை சார்.”

“அவன் உன்னைப் பார்க்கக் கட்டாயம் வந்திருப்பான்.”

“ஆனால்..”

“தம்பி, இந்த ஆனா, ஆவன்னாவையெல்லாம் வேறு ஆள் கிட்ட வைத்துக் கொள். எனக்கு லைன் கிளியிரா இருக்கு..”

“என்னத்தை சார் கிளியரா இருக்கு. கோணல் மானலா இருக்கு..”

“சரி. என்ன கோணல் நீயே சொல்லு பார்க்கலாம்.” என்ற எஸ்.ஐ. நிதானமாய் சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்து இருந்தார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் கறாராய்ப் பேசினாலும் அசோகனை மரியாதையாகவே நடத்தினார். பலவேசம் அந்த ஏரியாவில் பெரிய ரௌடி. அவன் நேற்று இரவு கொலை செய்யப் பட்டிருக்கிறான். அவனைக் கொலை செய்ததைப் பார்த்த சாட்சி யாரும் இல்லை. வழக்கமாக இந்த முறையில் ஒரு ரௌடி கொலை செய்யப்பட்டுக் கிடந்தால் போலீஸ் அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாது. அதிலும் இந்த பலவேசம் என் கவுண்டரில் போடப்பட வேண்டிய ஆள். என் கவுண்டர் லிஸ்டில் அவன் பெயர் இருந்தது. சமயம் பார்த்து போலீஸ் துறை காத்துக் கொண்டிருக்க அவன் தானாய் கொலையுண்டு கிடந்தான். தலைவலி மிச்சம் என்று எதிர் கோஷ்டி தகராறு என்று கேஸை முடித்து விடலாம் என்று பார்த்தால் இரண்டு சிக்கல்கள் முளைத்தன. ஒன்று பலவேசத்தின் அரசியல் பின்புலம். இரண்டு அவனுடன் காலையில் சண்டை போட்ட அசோகன் கண்ணில் படாமலிருந்து மறுநாள் நள்ளிரவில் திருடன் போல வந்தது. அசோகனைப் பற்றி விசாரிக்கும் போது யாருமே அவனைப் பற்றித் தவறாக ஒரு சிறு வார்த்தை கூடக் கூறவில்லை. மாறாக எல்லோருமே ஏதேனும் ஒரு வகையில் அவன் செய்த நன்மைகளைப் பட்டியலிட்டனர்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா..? என்று ஆச்சர்யப்பட்டுப் போனார் சப்-இன்ஸ்பெக்டர். ஆனால் விசாரணை என்று வரும்போது அசோகன் மேல் உண்மையிலேயே குற்றமில்லை என்று நிரூபிக்க ஒரு சாட்சி வேண்டும் அவருக்கு. அந்த இரவில் அவன் எங்கு இருந்தான்..? அந்த சாட்சி கிடைக்காத வரை இந்த வழக்கில் அசோகன் தான் குற்றவாளி.

“அவனைக் கொல்ல எனக்கு காரணமில்லை சார்..” என்றான் அசோகன்.

“அதில் தான் தம்பி பாயிண்டே இருக்கு.. உங்களுக்கு அவனைக் கொல்ல காரணமில்லை. ஆனால் அவனுக்கு உங்க மேல் விரோதம் இருந்தது. உங்களைக் கொல்லு வேன்னு கத்தியிருக்கான். அவன் உங்களைத் தாக்கும் போது தற்காப்பு முயற்சியாய் நீங்கள் அவனைத் திருப்பித் தாக்கியிருக்கலாம். அதனால் உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள். உங்களுக்கு தண்டனை குறைத்துக் கிடைக்கும் படி நான் வழக்கைப் பதிவு செய்கிறேன்.”

“நன்றாகக் கதை சொல்லுகிறீர்கள் சார். நான் தான் நேற்றுக் காலையிலிருந்தே சென்னையில் இல்லையே சார்.”

“ஒரு திருத்தம். நேற்று ராத்திரியிலிருந்து அதாவது பலவேசம் கொலை செய்யப்பட்ட நேரத்திலிருந்து சென்னையில் இல்லை.”

“சார் நேரில் பார்த்தது போல் அபாண்டமாய் பேசாதீர்கள்..”

“குறுக்க, குறுக்க நீதான் பேசுற.. நீதான் கொலை செய்துட்டு ஊரை விட்டு ஓடிட்டேன்னு நான் நிச்சயமாய் சொல்றேனே.. ‘அப்புறம் நான் ஊரிலில்லை சார்’ன்னு என்னத்தை வியாக்கினம் பேசுற.. நேற்று ராத்திரி கொலை செய்துட்டு ஓடினவன் இன்னைக்கு பூராவும் தலை மறைவா இருந்திட்டு இப்போ பணமெடுக்கிறதுக்காக நடு ராத்திரிக்கு மேல் திருடன் மாதிரி மறைஞ்சு மறைஞ்சு வந்தே. என் வலையில் மாட்டிக்கிட்ட..”

தான் வலை விரித்து கொலைகாரனைப் பிடித்த கதையைப் பெருமையாகச் சொல்வதுபோல் வேண்டுமென்றே எஸ்.ஐ. பேச ‘ஐயோ’ என்றிருந்தது அசோகனுக்கு.

“சார் பணம் எடுக்க ரூமிற்கு வர வேண்டிய அவசியமேயில்லை. ஏன்னா… நான் ரூமில் பணம் வைப்பது கிடையாது..”

“அப்புறம் ரூமுக்கு எதுக்கு வந்தே..?” என்று ஆராய்ச்சியாய் பார்த்தபடி கேட்டார் எஸ்.ஐ.

“என் ரூமிற்கு எதற்க வருவேன் சார். தூங்க, குளிக்க என்று என் வேலைகள் ஆயிரம் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் நான் ஏன் ரூமிற்கு வந்தேன் என்று கேட்பது..” எரிச்சலுடன் பதில் சொன்னான் அசோகன்.

“நாங்க வேலையை முடித்துட்டு வீட்டிற்குப் போகிறோம்.”

“நானும் அப்படித்தான் என் வேலையை முடித்து விட்டு என் ரூமிற்கு வந்தேன்.”

“அப்படியா.. ம்ம்ம்.. என்ன வேலை..? டிராவல் ஏஜன்ஸியில் நேற்று காலையிலிருந்து நீ இல்லை. ஒரு காரை எடுத்துக் கொண்டு போய் விட்டாய்ன்னு சொன்னாங்க.”

“சார் அதுதான் நேற்று காலையிலிருந்தே நானில்லைன்னு காட்டுக் கத்தலா கத்திக்கிட்டு இருக்கேனே சார். நீங்களும் அதைத்தானே சொல்கிறீர்கள். தெரிந்துக்கிட்டே கேட்கிறீர்களே சார்..”

“தெரியும் மேன். நேற்று ராத்திரி நீ சென்னையிலிருந்து வெளியூருக்கு அவசர வேலையாப் போறேன்னு உன் டிராவல் ஏஜென்ஸிக்கு போன் பண்ணியதும் தெரியும்..”

“ஆமாம் சார். நான் வெளியூரில் வேண்டியவங்க ஒருத்தரை விட்டு விட்டு வரப் போயிருந்தேன்.”

“அப்படி நீ சொன்னால் நான் நம்பிரணுமா..?”

“நம்பித்தான் சார் ஆகணும்.. அதுதான் உண்மை..”

“அப்படியா..? அப்படின்னா நீ கூட்டிக் கொண்டு போய் விட்டு விட்டு வந்த ‘வேண்டியவங்க’ யார்..? எந்த ஊரில் கொண்டு போய் விட்டாய்.. ஊம்ம்.. சொல்லு.. ஊர் பெயர், ஆள் பெயர், அட்ரஸ் எல்லாம் சொல்லு. கூப்பிட்டு விசாரிக்கிறேன். நீ சொல்வது உண்மையாயிருந்தால் உன்னை விட்டு விடுகிறேன்.”

“அவங்க பெயர்…” என்று ஆரம்பித்த அசோகனின் வாய் அடைத்துப் போனது. சட்டென்று மௌனம் அவனைச் சூழ்ந்தது. எப்படிச் சொல்வது..? ஓர் இரவு தனியாக அவனுடன் காரில் பயணம் செய்தது பக்கத்து வீட்டுக்குக் கூடத் தெரியக் கூடாது என்று நினைக்கும் அவளது குடும்பம் இவனோடு நேற்ற இரவு பயணித்தது தான் தான் என்பதை போலீஸ் ஸ்டேஷனில் வந்து காவ்யா சொல்லி ஒப்புக் கொள்வதை விரும்புமா..? அவளை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது மட்டுமன்றி இப்படியொரு நெருக்கடியை உண்டு பண்ணிக் கொண்டதற்காக அவள் அண்ணன் ஆனந்தன் அவளை அடித்தே கொன்று விடுவான். வேண்டாம். அவள் பெயரை போலீஸ் ஸ்டேஷன் வரை இழுக்கக் கூடாது.

எவருக்கும் நன்மையே செய்யும் முரட்டுத் தோற்றம் கொண்ட அந்த இளைஞன் கொலைப் பழி தன் மீது  விழுந்தும், தன்னைக் காப்பாற்ற ஒரு பெண்ணின் நிம்மதியைப் பணயம் வைக்க விரும்பாமல் வருவதை எதிர்கொள்ளத் தயாரானான்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link