Chapter 10

0Shares

சுவர் கடிகாரத்தின் ‘டிக் டிக்’கென்ற சத்தம் தவிர வேறு சப்தம் எதுவும் கேட்காத நள்ளிரவின் நிசப்தம் தெரு அடங்கியிருந்தது. காவ்யா மூச்சடக்கி எழுந்தாள். கால் கொலுசை அவிழ்த்து படுக்கையின் மேல் வைத்தாள். தலையணைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கைக்கு அடக்கமான அந்தச் சிறிய மணி பர்சை எடுத்துக் கொண்டாள். மெதுவாய் எழுந்து அடி மேலடி வைத்து முன்னறைக்கு வந்தாள். கதவைத் திறக்கப் போகையில் உள்ளறையில் பர்வதம் புரண்டு படுப்பது தெரிந்தது. மூச்சை அடக்கி சத்தம் செய்யாமல் காத்திருந்தாள். மேற்கொண்டு எந்த அசைவும் பர்வதத்திடம் தெரியாமலிருக்க ஓசைப் படாமல் கதவைத் திறந்தாள். மீண்டும் கதவை சத்தமில்லாமல் மூடியவள் தெருவில் இறங்கி முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு விடுவிடுவென நடந்தாள். சிறிது தூரம் நடந்த பின் பஸ் நிலையம் தெரிந்தது. நடையை விரைவு படுத்தியவள் பஸ் நிலையத்தை அடைந்தாள். சென்னை செல்லும் பஸ் நின்று கொண்டிருந்தது. ஏறி அவள் அமர்ந்து கொள்ள காத்திருந்தது போல் பஸ் வேகமெடுத்து சென்னை நோக்கிப் பறந்தது. அவள் பிறந்து வளர்ந்த ஊரான திருநெல்வேலி கண்ணை விட்டு மறைந்தது. திரும்பி பின்னுக்குச் சென்று மறையும் தன் ஊரைப் பார்த்துக் கொண்ட காவ்யாவின் கண்கள் கலங்கியது. கண்களைத் துடைத்துக் கொண்டவள் துக்கத்துடன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண் மூடினாள்.

தியாகராஜன் வந்து சென்றவுடன் வீட்டில் காவ்யாவுக்குக் கட்டுக் காவல் அதிகமாகிறது. அவள் மௌனம் காத்தாள். அசோகன் விசயம் பற்றி அவள் வீட்டார் எவ்வளவு பேசினாலும் அவள் வாயே திறக்கவில்லை. அவளது நடவடிக்கைகளில் வீட்டார் திருப்தி அடைய மூன்று நாட்கள் பிடித்தன. கட்டுக்காவல் தளர்த்தப்பட்ட நான்காம் நாள் இரவில் காவ்யா வீட்டை விட்டு வெளியேறி சென்னை பஸ் ஏறி விட்டாள் அசோகனைக் காப்பதற்காக.

வேலைக்கு இருக்கும் பெண் வாசலில் தண்ணீர் தெளித்துப் பெருக்கிக் கோலம் போடுவதை மேற்பார்வை யிட்டுக் கொண்டிருந்த உமா, தியாகராஜனின் மனைவி, வாசலில் தயங்கித் தயங்கி வந்து நின்ற அந்தப் பெண்ணை வியப்புடன் பார்த்தாள். இரவு நேரப் பயணம் செய்த களைப்பு முகத்தில் தெரிந்தது. அந்தக் களைப்பிலும் அழகாயிருந்த அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு வியந்தவள்.

“யாரைப் பார்க்கணுங்க..?” என்றாள்.

“லாயர் தியாகராஜனின் வீடு..?”

“இந்த வீடுதான். உள்ளே வாங்க..” என்று காவ்யாவை உள்ளே அழைத்துச் சென்ற உமா வரவேற்பறையில் ஒரு கையில் காபிக் கோப்பையும் இன்னொரு கையில் பேப்பருமாக அமர்ந்திருந்த தியாகராஜனிடம்,

“இவங்க உங்களைப் பார்க்க வந்திருக்காங்க..” என்று கூறினாள்.

nப்பரைக் கீழே இறக்கி யாரென்று பார்த்த தியாகராஜன் அதிர்ச்சியில் பேப்பரை நழுவ விட்டு விட்டு எழுந்தான்.

“வாங்க காவ்யா! வாங்க.. உமா அம்மாவைக் கூப்பிடு. நீங்க உட்காருங்க காவ்யா…”

காவ்யா தயக்கமாய் வரவேற்பறை சோபா ஒன்றில் அமர்ந்தாள். உள்ளேயிருந்து தியாகராஜனின் அம்மா மங்களம் உமா பின் தொடர அங்கே வந்தாள்.

“என்னப்பா தியாகு. எதுக்குக் கூப்பிட்டே..” என்றவர் காவ்யாவைப் பார்த்ததும்.

“யாருப்பா இந்தப் பொண்ணு..” என்று வினவினார்.

“அம்மா! இவங்க பெயர் காவ்யா.. நம்ம அசோகன் ஒரு பெண்ணைக் காப்பாற்றி திருநெல்வேலியில் விட்டு விட்டு வந்ததாகக் கூறினானே, அந்தப் பெண் இவங்க தான்..” என்று காவ்யாவை அறிமுகப்படுத்தினான் தியாகராஜன்.

உமா ஆச்சர்யமாய் காவ்யாவின் அருகே போய் அமர்ந்து கொள்ள மங்களம் கூர்மையாய் காவ்யாவைப் பார்த்தாள். அந்த அழகிய பெண்ணின் மருண்ட விழிகளில் ஓடிய பயரேகையும் அவளது மெல்லிய உடலின் சிறு நடுக்கமும் அந்த மூதாட்டிக்கு எதையோ உணர்த்த மங்களம் காவ்யாவை நோக்கி, “ஏம்மா வீட்டில் சொல்லி விட்டுத்தானே கிளம்பி வந்தாய்..?” என்று கேட்டாள்.

காவ்யாவின் கண்கள் கலங்கியது. வீட்டினரை மீறி எதையும் நினைக்கக் கூடச் செய்யாதவள் இன்று அவர்களை மீறி அவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டே வந்திருக்கிறாள். குற்ற உணர்வில் தவித்தவள்.

“இல்லைங்கம்மா.. நான் என் வீட்டிற்குத் தெரியாமல் தான் வந்திருக்கிறேன்..” என்றாள். அவள் குரலில் நடுக்கத்தை உணர்ந்த உமா அவள் கைகளை உடனே பற்றிக் கொண்டு மெல்லத் தட்டிக் கொடுத்தாள்.

மங்களம் தியாகராஜனை முறைக்க தியாகராஜன் தோளைக் குலுக்கிக் கொண்டு ‘என்ன செய்வது..?’ என்ற பாவனையில் கைகளை விரித்தான்.

தியாகராஜன் இதை நிச்சயமாய் எதிர்பார்த்திருந்தான். அசோகன் சொன்னது போல் அவள் நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருந்தால் நன்றி மறக்காமல் அவனைக் காப்பாற்ற தேடி வருவாள் என்று நம்பினான். அப்படி அந்தப் பெண் வீட்டை மீறி அசோகனைக் காப்பாற்ற முனைந்தால் தன் வீட்டிற்கு வர முகவரி தெரிய வேண்டும் என்று தானே அவனது முகவரியை அழுத்தம் திருத்தமாய் அவள் காதில் விழுமாறு சத்தமாகக் கூறி விட்டு வந்தான். எனவே அவள் வீட்டுக்குத் தெரியாமல் வந்ததை அவன் இயல்பாக எடுத்துக் கொள்ள மங்களம் அதிர்ந்தாள். உமா, காவ்யாவை விட மூன்று, நான்கு ஆண்டுகள் மூத்தவள். திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பவள். ஊர் நியாயம் சொல்லும் கிராமத்து நாட்டாண்மைக்காரனின் மகள். அவளுக்கு காவ்யாவின் பக்கம் இருந்த நியாயம் புரிந்தது. அவளுக்கு வேண்டியது மன ஆறுதல் என்பதை உணர்ந்த வளாய் காவ்யாவின் கையை அவள் விடவே இல்லை.

“சொல்லாமல் ஏம்மா வந்தாய்..? சொல்லி விட்டு வந்திருக்கலாமே..?” என்று மங்களம் கேட்க, தியாகராஜன் குறுக்கிட்டான்.

“அம்மா அவங்களா விடுவாங்க..? அவங்களால் வீட்டில் சொல்லிவிட்டு வர முடியாது. சொல்லியிருந்தால் அவங்க வீட்டில் நிச்சயமாய் இவங்களை விட்டிருக்க மாட்டாங்க.. வீட்டில் போட்டுப் பூட்டியிருப்பாங்க. காவ்யாவால் வேறு என்ன செய்ய முடியும்? சொல்லாமல் தான் அவங்க வரவேண்டியிருக்கும். காவ்யா இதைத்தான் செய்திருக்க முடியும். அவங்க செய்ததில் தப்பேயில்லை.”

“தியாகு! என்ன பேசறேன்னு புரிந்துதான் பேசுறயா..? வயதுப் பெண் பெத்தவங்களை மீறி இப்படி வரலாமா..? நீ அதை நியாயப்படுத்தி வேற பேற. இது நல்லாயில்லை தியாகு. உன் கிட்ட நான் இதை எதிர்பார்க்கலே.”

“ஆனால் காவ்யா கிட்ட நான் இதை எதிர்பார்த்தேன் அம்மா..”

“என்னடா தியாகு சொல்ற..?”

“ஆமாம்மா. அசோகன் திரும்பச் திரும்பச் சொன்னான். ‘அந்தப் பெண் நல்ல பொண்ணுடா.. என் நிலைமை தெரிந்தால் கட்டாயம் என்னைக் காப்பாற்ற ஓடி வந்திரும்’ன்னு. அவன் கணக்கு சரியா இருந்தால் காவ்யா கட்டாயம் அசோகனைக் காப்பாற்ற எப்படியும் வந்திடுவாங்கன்னு நான் எதிர்பார்த்தேன்.. அதனால்தான் நம்ம அட்ரஸைக் காவ்யாவின் காதில் விழுமாறு சத்தமாய் சொல்லி விட்டு வந்தேன். அவன் கணக்கும் தப்பவில்லை. என் கணக்கும் தப்பவில்லை.”

“ஏண்டா.. ஒரு வயசுப் பெண்ணோட வாழ்க்கையில் விளையாடிக்கிட்டு வாயடிக்கிறயா..? அந்தப் பெண்ணோட வாழ்க்கை நீ போட்டுப் பார்க்கிற கூட்டல் கழித்தல் கணக்காடா..?”

“அம்மா. ஆபத்துக்குப் பாவமில்லை. அசோகனின் உயிர் இவங்க கையில் தான் இருக்கு. இவங்க இதைச் செய்துதான் ஆகணும்.”

‘அசோகனின் உயிர்’ என்றதும் மங்களம் வேகம் தணித்தாள்.

“தியாகு உன்னால் இந்தப் பெண்ணை தொல்லை பண்ணாமல் வேறு சாட்சி ரெடி பண்ண முடியாதா..?”

“ரெடி பண்ணினால் அது பொய் சாட்சியாகதா அம்மா! அது எப்படி நிலைத்து நிற்கும். மெய்யிருக்கப் பொய் எதற்கு..? உண்மையான சாட்சியாக காவ்யா இருக்கும் போது ஏன் பொய் சொல்ல வேண்டும். உண்மைதான் சரியான வழி அம்மா.”

“பொய்மையும் வாய்மையிடத்துன்னு வள்ளவரே சொல்லியிருக்கார். இந்தப் பெண்ணைக் காப்பாற்று வதற்காக நீ ஏன் பொய் சாட்சி ரெடி பண்ணக் கூடாது..?”

“பொய் சாட்சின்னு எவ்வளவு ஈஸியா வழி சொல்றீங்க அம்மா. இதெல்லாம் பேச நல்லாயிருக்கும். செயல்ன்னு வரும்போது நாலையும் யோசிக்கணும். இது கொலைக் கேஸ் அம்மா. நாளைக்கு நான் கொண்டு போய் நிறுத்தினது பொய் சாட்சின்னு போலீஸ் கண்டு பிடித்து விட்டதுன்னு வைங்க. அப்புறம் நான் உண்மை சாட்சியாய் காவ்யாவைக் கொண்டு போய் நிறுத்தினாலும் அவங்க நம்ப மாட்டாங்க. அசோகனை இப்ப சந்தேகத்தின் பேரில் தான் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. நீங்க சொல்கிறபடி செய்தால் கன்பர்மா அசோகன்தான் கொலை பண்ணியிருப் பான்னு முடிவே பண்ணிடுவாங்க. சும்மா சமாளி, சமாளின்னு சொல்றீங்களே. சமாளிக்கிறதுக்கு இது என்ன சாதாரண கேஸா..? கொலைக் கேஸ் அம்மா. எதையாவது பொய்யாய் சொல்லி அவனை வெளியில் கொண்டு வந்து விட்டுப் பொய் சாட்சி பல்டி அடித்து விட்டால் அசோகன் கதி என்னாகிறது..? செய்யாத தப்புக்கு அசோகன் தூக்கில் தொங்க வேண்டுமா..?”

“சொல்லாதே..” என்று அலறிய மங்களம் காதுகளைப் பொத்திக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“தியாகு! அசோகன் உன் கூடப் பிறந்த பிறப்பு மாதிரிடா. அவனை நீ எப்பாடு பட்டாவது காப்பாற்றித்தான் ஆக வேண்டும். இந்தப் பெண்ணின் நிலையை நினைத்தால் தான் பாவமாயிருக்குடா..” என்றாள் தாய் இரக்கத்துடன்.

“அம்மா அன்றைக்கு அசோகன் இவங்களைக் காப்பறாமலிருந்திருந்தால் இவங்க நிலைமை என்ன வாகியிருக்கும்..? அந்த நிலைமைக்கு இந்த நிலைமை மோசமில்லை..” என்றான் மகன் கடினத்துடன்.

தாய், மகனின் போராட்டம் முடிவுறாது என்று தோன்றிய நிலையில் காவ்யா மனச் சஞ்சலத்துடன் குறுக்கிட்டாள்.

“அம்மா! எனக்காக சாரை எதுவும் திட்ட வேண்டாம். அவர் மேல் தப்பில்லை. அவர் சொன்னாலும சொல்லா விட்டாலும் அசோகன் சாருக்கு ஆபத்து என்று தெரிந்த பின்னால் நான் அவரைக் காப்பாற்றக் கிளம்பாமல் இருந்திருக்க மாட்டேன். கொலை நடந்த இரவு என்னுடன் காரில் வந்து கொண்டிருந்தார். இது நடந்த உண்மை. அப்படியிருக்க நான் அந்த உண்மையைச் சொல்லாமல் இருப்பது நானே அசோகன் சாரைக் கொல்வதற்குச் சமம். என்னால் நன்றி கொல்ல முடியாது. சார் சொல்வது போல் அன்று அசோகன் சார் என்னைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். அவர் செய்தது மிகப் பெரிய உதவிம்மா. அதற்கு ஈடு இணை கிடையாது. அந்த நன்றியை ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியுமா..? அம்மா! என்னால் அவருக்கு நல்லது செய்ய முடியா விட்டாலும் சிக்கலையாவது உண்டு பண்ணாமல் இருந்திருக்கலாம். சிக்கல் உருவாகி விட்டது. இப்போது அதிலிருந்து அவரை வெளியே கொண்டு வருவது என் கடமைம்மா..”

“ஆனால் காவ்யா உன் வீட்டில்…”

“என் வீட்டுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் இதைச் செய்யாமல் இருக்க முடியாதும்மா. அம்மா! உங்களுக்கு ஒன்று தெரியுமா..? ‘என் அப்பா ஓர் இரவு அவனோடு தனியாக இருந்தேன்னு என் பொண்ணு சொல்லணுமா’ன்னு கேட்டார். அவர் கேட்டதற்குப் பின்னால்தான் எனக்கு புரிந்தது. ஓர் இரவு… ஓர் இரவு பூராவும் நான் அவரோடு காரில் பயணம் செய்தேன்ம்மா. வழியில் காபி வாங்கிக் கொடுத்தார். சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். இரவு பூராவும் தூங்காமல் வண்டியோட்டினார். அந்த ஓர் இரவின் 14 மணி நேரத்தில் ஓர் வினாடி கூட ஓர் அந்நிய ஆடவனுடன் நாம் தனியாகப் போகிறோம்ங்கிற பய உணர்ச்சி எனக்கு ஏற்படவே இல்லைம்மா. இத்தனைக்கும் நான் என் பெற்றவர்கள், அண்ணன் இல்லாமல் தனியே வெளியூர் சென்றதில்லை. மூன்று வருடம் இங்கே சென்னையில் படித்தாலும் பகல் வேளைகளில் என் தோழி ஹரிதாவுடன் மட்டுமே வெளியே போவேன். அதுவும் அஷ்ட லட்சுமி கோவிலுக்குப் போவேன். தனியே போனதில்லை. அன்று தான் தனியாகப் போக நேர்ந்தது அம்மா! ஓர் சிறு பார்வை வித்தியாசம் கூட இல்லாமல் பண்பாட்டுடன் பழகினார். என் பயத்தை மதித்து என்னுடன் துணையாக வந்தார். அவர் போன்ற நல்ல மனிதருக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அம்மா! இது உதவி இல்லை. நான் செய்ய வந்திருப்பது என் கடமையை.”

காவ்யா பேசுவதை அமைதியின்றி கேட்டுக் கொண்ட மங்களம் கொஞ்ச நேரம் யோசனையாய் இருந்தாள். அதன் பின்,

“உமா! இந்தப் பெண் மாற்றுத் துணி எடுத்துக்காமல் கிளம்பி வந்திருக்கு. உன் துணிகளை எடுத்துக் கொடு. போம்மா காவ்யா! போய் குளித்துக் துணி மாற்றிக் கொண்டு வா. சாப்பிட்டு விட்டு அசோகனைப் பார்க்கப் போகலாம். அவன் வெளியே வந்த பின்னால் நானே உன் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு வருகிறேன். நீ கவலைப் படாமல் போ. உன் நல்ல மனதுக்கும், பொறுப்பான குணத்துக்கும் நியாய புத்திக்கும் நீ நல்லாத்தான் இருப்பே. ஒரு கெடுதலும் உனக்கு வராது. நாங்க வர விட மாட்டோம்.” என்று கூறினாள்.

“நன்றிம்மா..” என்று கூறி விட்டு உமாவைப் பின் தொடர்ந்து சென்ற காவ்யாவைப் பார்த்துக் கொண்டே நின்றாள் மங்களம். தைரியமாகப் பேசினாலும் தளர்ந்த நடையுடன் சென்றவளைப் பார்த்து அந்தத் தாயின் மனம் வலித்தது. ‘இது நேரும் என்று ஒரு வாரத்திற்கு முன் இவள் அறிவாளா..? கல்லூரி பட்டாம் பூச்சியின் சிறகுகள் ஒரே வாரத்தில் உதிர்ந்து விட்டதே…’ என்று நினைத்து மனம் கலங்கினார்.

கோட்டைத் தாண்டிய சீதையின் கதைதான் வீட்டைத் தாண்டிய பெண்களின் கதை என்பதை அறிந்தவராயிற்றே. அசோகன் மங்களத்திற்கு மகன் தான். ஆனால் அந்த மகனுக்காக தியாகராஜன் உயிரைக் கொடுத்திருக்கலாம். அதை விட்டு இந்தப் பேதைப் பெண்ணின் உயிரை எடுக்கலாமா..? என்று கேள்வி கேட்டது அந்த முதிய பெண்மையின் நெஞ்சம்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link