Chapter 12

0Shares

அன்று இரவில் பாத்ரூம் போக எழுந்த பர்வதம் காவ்யாவின் படுக்கையில் அவளைக் காணவில்லை என்றதும் பதறிப் போய் விட்டார். கணவனுக்கும், மகனுக்கும் தெரியாமல் அவள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தாள். காற்றில் வாசல் கதவு ஆடப் போய் பார்த்த போது கதவு திறந்திருந்தது. பர்வதத்திற்குப் புரிந்து விட்டது. மகள் சென்னைக்குச் சென்று விட்டாள் என்பதையறிந்த அவள் தாய் மனம் பதைத்துப் போனது. காவ்யா வீட்டார் பேச்சை மீறிப் போய் விட்டாள் என்பதற்காக அல்ல. நள்ளிரவில் வயதுப் பெண் வெளியே போய் ஏதேனும் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் என்ன ஆவது என்ற பயத்தால் பூஜையறைக்கு ஓடியவள் ‘கடவுளே. என் பெண்ணைக் காப்பாற்று’ என்று வேண்டிவிட்டு கணவரை எழுப்ப விரைந்தாள்.

“என்னங்க, என்னங்க”என்று பர்வதம் உலுக்கி எழுப்ப,

“அட ஏண்டி மனுசனை தூங்க விடாம ரோதனை பண்றே. நடு ராத்திரியில் போய் எழுப்பிக்கிட்டு.. போடி போய் தூங்கு..” என்றவாறு தூக்கக் கலக்கத்துடன் அவர் சுருண்டு படுத்தார்.

“அடச்சே. இந்த மனுசனுக்கு என் தவிப்பு புரியுதா..? நேரம் காலம் தெரியாம என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு.” என்று புலம்பியபடி அவரது தலையணையை அவள் உருவிய வேகத்தில் அவர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தவர் அப்போதுதான் விளக்கு வெளிச்சத்தில் மனைவி குமுறும் அழுகையை அடக்கியபடி நிற்பது புரிந்ததும் பதறி எழுந்தார்.

“என்னடி பர்வதம் சொல்லிட்டு அழுடி. என்ன ஆச்சு.. உடம்பு கிடம்பு சரியில்லையா..?”

“காவ்யா.. நம்ம காவ்யா…”

“காவ்யாவுக்கு என்னடி..? அழுகையை நிறுத்திட்டு சொல்லித் தொலை.”

“காவ்யாவைக் காணோங்க..” பர்வதம் கூறிய வார்த்தைகள் இடிபோல் ராமநாதனின் காதில் இறங்க, அவர் மனைவியை விலக்கிவிட்டு காவ்யாவின் படுக்கையை நோக்கி விரைந்தார். படுக்கையில் அவளைக் காணாதவர் ஆனந்தனின் அறைக் கதவைத் தட்டினார். தூக்கம் கலைந்து எழுந்த ஆனந்தன் கொட்டாவி விட்டபடி கதவைத் திறந்தான்.

“என்னப்பா இந்நேரத்தில்..”

“வெளியே வாடா சீக்கிரம். காவ்யா வீட்டை விட்டுப் போயிட்டாள்..”

“என்னது..” வினாடியில் தூக்கம் தொலைத்த ஆனந்தன் ஒரு முறை வீடு பூராவும் தேடிப் பார்த்து விட்டுக் காவ்யாவின் படுக்கையருகே வந்தான். படுக்கை மேலிருந்த கொலுசுகள் அவன் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தான்.

“என்னடா அது..?” என்று கேட்டார் ராமநாதன்.

“கொலுசுப்பா.. திட்டம் போட்டு வெளியேறியிருக்கிறாள். இவள்கிட்ட இப்படி ஒரு கள்ளத்தனம் இருந்திருக்கிறதை நம்பக்கூட முடியலைப்பா. சகஜமா இருந்தாள். நம்பிட்டோம். இப்பக் கழுத்தை அறுத்துட்டாளே. நம்ம வீட்டுப் பெண்ணா இப்படி..?” ஆனந்தன் கசப்பாய் கூற,

“டேய் ஆனந்தா.. அவளைத் தப்பா நினைக்காதேடா. அந்த வக்கீல் பய வந்து கண்டதைச் சொல்லியதும் புள்ளை மனசில் ‘ஐயோ பவாம்’ன்னு தோணியிருக்கும்லே. விவரம் தெரியாத பச்சை மண்ணுலே அது..” என்று பர்வதம் மகளுக்காய் பரிந்து பேசினாள்.

“அடிப்போடி போக்கத்தவளே. பச்சை மண் செய்கிற காரியமாடி இது..? என்னடா அப்பாவும், அண்ணனும் இவ்வளவு சொல்கிறார்களே. நம்ம நன்மைக்குத்தானே சொல்றாங்கன்னு நினைச்சுப் பார்க்காமல் இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறாள். நீ பச்சை மண்ணுங்கறே. அடியே. அவ திட்டம் போட்டு நம்ம கழுத்தை அறுத்திருக்காடி. ஒரு துளிகூட சந்தேகம் வராமல் அந்த கொலைகாரப் பய பேச்சையே எடுக்காமல் சம்பந்தமே இல்லாதது போல் இருந்திட்டு இப்ப வீட்டை விட்டு ஓடிட்டாளே எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இதை அவள் செய்திருப்பாள்..” என்று ராமநாதன் மனைவியை அடிக்கப் போனார்.

“அப்பா!” என்று அவரைத் தடுத்து நிறுத்திய ஆனந்தன்.

“இது ராத்திரி நேரம்பா.. பகலில் கொஞ்சம் சத்தமாய் பேசினாலே. ‘என்ன ஏது’ன்னு இல்லாததும் பொல்லாததும் பேசுகிற தெருப்பா இது. இந்நேரம் நம்ம வீட்டுப் பொண்ணைக் காணோம்ன்னு சொன்னால் நம்ம மானம், மரியாதை காற்றில் பறந்துவிட்டாதா..? அடக்கி வாசியுங்கள். இப்போது மேற்கொண்டு என்ன செய்வதுன்னு முடிவெடுக்கலாம். அதுதான் முக்கியம். சொல்லுங்கள் என்ன செய்யலாம்..?” என்றான்.

மகனின் வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தை உணர்ந்த ராமநாதன் யோசனையுடன் குறுக்கும், நெடுக்கும் நடந்தார். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் மகனைப் பார்த்தவர்,

“ஆனந்தா.. அந்த வக்கீல் கடன்காரர். அன்னைக்கு ஏதோ அட்ரஸ் சொன்னானே நினைவிருக்கா..?” என்று வினவினார்.

ஆனந்தனுக்கு மிக நன்றாகவே நினைவிருந்தது. காவ்யாவிடம் அவன் முகவரியைக் கூறியபோது எங்கே அந்த முகவரி அவள் மனதில் பதிந்து விடுமோ என்ற பயத்தில் அந்த முகவரியை மிக நன்றாக உள்வாங்கி இவன் மனதிற்குள் பதித்துக் கொண்டான்.

“எனக்கு நினைவிருக்குப்பா..”

“காவ்யா அந்த வக்கீல் கடன்காரனைத் தேடித்தான் போயிருக்கணும். நீ வாடகைக்காரை எடு. நாம் உடனே சென்னைக்குக் கிளம்பலாம். நம்ம குடும்ப மானத்தை அவ போலீஸ் ஸ்டேஷனில் கூண்டிலேத்துறதுக்கு முன்னாடி அவளைப் பிடிச்சுரணும்லே கிளம்பு.”

“அம்மா நீங்களும் கிளம்புங்க. ஒரு செட் டிரஸ் மட்டும் எதுக்கும் எடுத்துக்கங்க. க்விக். சீக்கிரம்.”

“அவ எதுக்குலே. வீண் அலைச்சல்.”

“இல்லேப்பா. அவங்க இங்கேயிருந்தா அக்கம் பக்கத்து வீட்டில் ஏதாவது உளறிக் கொட்டுவாங்க. கிளம்பி வரட்டும். அத்தோடு அவங்களும் வந்தால் குடும்பத்தோடு ஏதாவது கோவில், குளம்னு போனோம்ன்னு கதை சொல்லிக்கலாம்.”

அவசரமாய் சத்தம் எழுப்பாமல் கிளம்பிய அந்தக் குடும்பம் சென்னைக்கு வந்து தியாகராஜனின் வீட்டைக் கண்டு பிடித்தும் வந்து விட்டது. வாசலில் நின்று கொண்டிருந்த உமாவிடம் ஆனந்தன் மட்டும் காரை விட்டு இறங்கிச் சென்று விசாரித்தான்.

“சார் இல்லிங்களா மேடம்.”

“நீங்கள் யார்..?”

“நான் ஒரு கேஸ் விஷயமாய் வக்கீல் சாரைப் பார்க்கணுங்க..”

“அவர் இப்பத்தான் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன் போனார்..” என்று யதார்த்தமாய் உமா கூறி விட்டாள். பதறிக் கிளம்பின ஆனந்தன் வேகமாய் வந்து காரில் ஏறினான்.

“என்னலே..” என்ற ராமநாதனிடம்,

“அப்பா நாம சீக்கிரம் போய் அவள் சாட்சி சொல்வதற்குள் பிடித்து விட வேண்டும்.” என்றான்.

“ஓ. அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷன் போய் விட்டாளா. எந்த ஸ்டேசனாம் லே.”

“மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன்.”

காற்றை விட வேகமாகப் பறந்தது கார்.. போலீஸ் ஸ்டேஷன் வாசலை அடைந்ததும் ராமநாதனும், ஆனந்தனும் அவசரமாய் உள்ளே பாய்ந்தார்கள். மகளுக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பிலிருந்த பர்வதம் பின்னாலேயே ஓடினாள். அதற்குள் காவ்யா சொல்ல வேண்டியதை சொல்லி முடித்துவிட எவ்வளவு தடுத்து நிறுத்தியும் அவள் சாட்சி சொல்லியே விட்டாளேயென்ற ஆத்திரத்தில் ஆனந்தன் பாய்ந்து அவளை மிருகத்தனமாய் அடிக்க ஆரம்பித்து விட்டான்.

எஸ்.ஐ.யும், கான்ஸ்டபிளும் சேர்ந்து ஆனந்தனைப் பிரித்துக் காவ்யாவை விடுவித்தனர். அதற்குள் ராமநாதன் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்து வர அவரையும் பிடித்து அமர வைத்தார்கள்.

“உட்காருங்க சார். அட உட்காருங்கன்னு சொல்றேனில்லை. இது என்ன போலீஸ் ஸ்டேசனா இல்லை உங்கப்பன் வீடா..? நீங்க பாட்டுக்கு போலீஸ் ஸ்டேசனுக் குள்ள வந்து பொம்பளையைப் போட்டு அடிக்கறீங்க. பார்த்தா படிச்சவங்க போல இருக்கீங்க. அறிவில்லை..? முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தூக்கிப் போட்டிருவேன் ஜாக்கிரதை..” என்று எஸ்.ஐ. ராமநாதனையும் ஆனந்தனை யும் அரட்டிக் கொண்டிருக்க பர்வதம் எங்கே மகனையும். கணவரையும் உண்மையிலேயே உள்ளே தூக்கிப் போட்டு விடுவார்களோ என்று பயந்து போனாள். அந்தப் பயத்துடன் திரும்பியவள் லாக்-அப்புக்குள் இருந்த அசோகனைப் பார்த்து விட்டாள். அவ்வளவுதான் மடை திறந்த வெள்ளமாய் அவனை நோக்கி திட்ட ஆரம்பித்து விட்டாள்.

“அடப்பாவி! நாசக்காரா! உன் ஒருத்தனால என் குடும்பமே போலீஸ் ஸ்டேஷன்ல வந்து நிக்குதேலே. எம் பொண்ணைக் காரில் அழைச்சிட்டு நீ வரலைன்னு நாங்க அழுதோமா..? என்னைக்குக் காப்பாத்தினேன்னு கதை சொல்லிக்கிட்டு இந்தக் கடன்காரியைக் கொண்டு வந்து காரில் இறக்கி விட்டயோ அன்னைக்கு என் பொண்ணுக்கும் எங்ககுடும்பத்துக்கும் கெட்ட காலம் ஆரம்பிச்சுருச்சுலே. நீ நல்லாயிருப்பியா. நாசமாத்தான்லே போவே. உருப்படாம உருக்குலைஞ்சு போவலே..” பர்வதம் அனல் பறக்கும் வார்த்தைகளை வீச,

‘இதைவிட சாட்சி வேண்டுமா..?’ என்பது போல தியாகராஜன் சப்-இன்ஸ்பெக்டரை அர்த்தத்துடன் பார்த்தான். அவன் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட எஸ்.ஐ. லாக்-அப்பைத் திறந்து அசோகனை வெளியே விடச் சொல்லி கான்ஸ்டபிளுக்கு கட்டளை இட்டார். ஆனந்தனையும் ராமநாதனையும் கடுமையாக எச்சரித்தார்.

“ஏய்யா. உங்க மகள் கண்காணாத இடத்தில் ஆபத்தில் மாட்டியிருக்கிற போது ஒரு நல்லவன் காப்பாற்றி வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கிறானே. அந்த நல்ல மனிதர்கிட்ட இப்படித்தான் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்வீர்களா..? உங்களை மாதிரி ஆளுங்களால் தான் யாருமே ஆபத்துக்கு உதவி செய்யணும்னா அலறுகிறாங்க. போங்கய்யா. ஒழுங்கா வீடு போய் சேருங்க. இனிமேலாவது கொஞ்சமாவது மனிதத் தன்மையோடு நடந்துக்கப் பாருங்க..”

அசோகன் வெளியே வந்ததும் அவசரமாய் ராமநாதனைத் தேடி ஓடினான். அவன் மன்னிப்புக் கேட்க யத்தனிக்கையில் அவர் அவனைப் பாராதது போல் கார் கதவைத் திறந்தபடி,

“ஆனந்தா பர்வதத்தக் கூட்டிக் கொண்டு காரில் ஏறு” என்றார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை யூகித்த ஆனந்தன் பர்வதத்திடம் வந்து, “வாம்மா போகலாம்” என்றான். அவளோ மகளின் கையைப் பிடித்து இழுத்து, “வாடி இல்லைன்னா இதுக்கும் உங்கப்பா கையை ஓங்கப் போகிறார்.” என்றாள்.

“பர்வதம் அவளை விடு..” என்று ராமநாதன் அதட்ட எதுவும் புரியாதவளாய் அவள் மகளின் கையை விட ஆனந்தன் அவளை வலுக்கட்டாயமாய் காரில் ஏற்றினான். அசோகன் பதறி கை கூப்புவதை லட்சியம் செய்யாமல் அவன் அங்கு நிற்பதையே சட்டை செய்யாமல் தியாகராஜனிடம்,

“பாருய்யா வக்கீல். நீ ஜெயிச்சிட்ட. எம் பொண்ண வீட்டு வாசல்படி தாண்ட வச்சிட்ட. எப்ப அவ வீட்டை விட் வெளியே போனாளோ அப்பவே அவ செத்திட்டாள்ன்னு நாங்க தலை முழுகியிருக்கணும். ஆனால் பெத்த பாசம், வளர்த்த கொடுமை பின்னாடியே வந்து கூட்டிப் போயிடலாம்ன்னு வந்தோம். இங்கேயும் நீ ஜெயிச்சிட்ட. அவ வாயாலேயே அவள் ‘ராத்திரி பூராவும் காரில் அவன் கூட தனியா பயணம் செய்தேன்னு’ போலீஸில் சொல்ல வச்சிட்ட.. நீ கெட்டிக்காரன். அதனால் தான் இந்த சின்ன வயசிலேயே ‘இவ்வளவு பெரிய ஆள்’ன்னு பெயர் எடுத்திருக்கே. ஆனால் ஒன்னை நினைவில் வைச்சுக்க.. இனி அவள் எங்க வீட்டுப் பெண்ணில்லை. எம் மகளுமில்லை. எங்களைப் பொறுத்தவரை அவ செத்தாச்சு.” என்று நிதானமாய் அழுத்தம் திருத்தமாய் பேசியவர் காரில் ஏறிவிட்டார்.

அதுவரையில் அவர் என்ன பேசினாலும் மகளை கைவிட்டு விட மாட்டாரென்று நம்பிக் கொண்டிருந்த பர்வதம் கார் கிளம்புவதை உணர்ந்ததும்,

“ஐயோ! எம் பொண்ணுலே. எம் மகளே. காவ்யா வந்திருடி. சண்டாளப் பாவிகளா..! எம் பொண்ணை விட்டுட்டு வர்றீங்களேடா. காவ்யா! காவ்யா!…” என்று கதறினாள். அந்தத் தாய் கதறத் கதற கார் விரைந்து கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.

காவ்யா சிலையாக நின்றாள். மறைந்தது கார் மட்டுமல்ல. தன்னைப் பெற்று வளர்த்த பிறந்த வீடு தன்னை உதறிவிட்டு மறைந்து போகிறது என்பதை உணர்ந்தவளாய் திக் பிரமையடித்து நின்றாள்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link