Chapter 13

0Shares

அசோகனால் அந்தக் காட்சியை காண முடியவில்லை. திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் காவ்யா மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்ற காட்சி அவனது நெஞ்சைப் பிழிந்தது. தோள் மேல் கை வைத்து ஆறுதலாய் அணைத்த தியாகராஜனின் கையை கோபத்துடன் தட்டி விட்டான்.

“ஏன்டா என் மேல் கோபித்துக்கிற..?”

“பாருடா அவள் நிலைமையைப் பார். திக்குத் தெரியாத காட்டில் நிற்கும் நிலையில் நிற்பதைப் பார். அவள் குடும்பப் பறவைடா. இப்படி அவள் கூட்டைக் கலைத்து விட்டாயே..”

“நான் வேறு என்னடா செய்திருக்க முடியும்..?”

“பேசாதே. காவ்யாவை தொந்தரவு பண்ணாமல் என்னைக் காப்பாத்துன்னுதானே உன்கிட்ட சொன்னேன். உன்னை யாரு திருநெல்வேலி வரை போய் விசயத்தைச் சொல்லச் சொன்னது. இப்பப் பாரு என்ன ஆச்சுன்னு. இதுக்குத்தானேடா நான் தலை தலையாய் அடிச்சுக் கிட்டேன். கடைசியில் நான் பயந்தது போலவே நடந்திருச்சே.”

“இப்ப என்னடா நடந்திருச்சு. அவங்க குடும்பத்தில் அந்தப் பெண்ணைச் சேர்த்துக்கலை. அவ்வளவுதானே. கொலையா பண்ணிட்டாங்க. உயிரோடுதானே அந்தப் பொண்ணு இருக்கு..?”

“உன்னை அடிச்சே கொன்னுடுவேன். ராஸ்கல் ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணுக்கு அநாதையாய் தெருவில் நிற்க வேண்டிய நிலைமை வந்தால் எப்படியிருக்கும்..? ஏண்டா அந்தப் பெண்ணை உயிரோடு கொன்னுட்டு கொலையா பண்ணிட்டேன்னு நியாயம் வேற பேசுற.. உன்னால் எப்படிடா முடியுது.”

“ரொம்ப சிம்பிள். உனக்கு அந்தப் பெண்ணுடைய பாதுகாப்பு முக்கியம். எனக்கு நீ மட்டும் தான் முக்கியம். உன்னைக் காப்பாற்ற வேண்டி வரும்போது நான் என்னைப் பற்றியே கவலைப்பட மாட்டேன். யாரோ ஒரு பெண்ணைப் பற்றியா கவலைப்படப் போகிறேன்.”

“தியாகு. நீ என் நண்பனாக இருக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலியின் பார்வையில் பட்டதற்கு காவ்யா பாவம் செய்திருக்க வேண்டும்.”

“என்னடா அசோக் இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிட்ட உன் பார்வை பட்டால் பட்ட மரம் கூட பூப்பூக்கும்டா. முட்டாள்.”

“இல்லைடா தியாகு. நான் சின்ன வயதிலேயே தாய் தந்தையை தொலைத்தவன். குடும்பம்னு ஒரு கூடில்லாம தான் தோன்றியா அலைகிறவன். நான் காப்பாற்றப் போய் இப்போது ஒரு குணமான பெண் அவள் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு நிற்கிறாளே.” அசோகனின் நாத் தழுதழுத்தது. தியாகராஜனுக்கு பேச வாய் வரவில்லை. மௌனம் சாதித்தான். அசோகன் கண்களைச் சிமிட்டி கண்ணீரைக் கட்டுப் படுத்தினான். ஒரு முடிவோடு காவ்யாவின் அருகில் போய் நின்றான். தியாகராஜன் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறியாதவனாய் தொடர்ந்து வந்தான்.

“காவ்யா!” என்று அசோகன் அழைக்க காவ்யா ஏறிட்டாள்.

“வாங்க போகலாம்..” என்றான் அசோகன் ஆதரவான குரலில்.

அவள் ‘எங்கே?’ என்பது போல் பார்க்க,

“இப்போதைக்கு தியாகராஜன் வீட்டிற்குப் போவோம். அம்மாவை அழைத்துக் கொண்டு நான் திருநெல்வேலிக்கு உடனே போகிறேன். உங்கள் வீட்டில் அம்மா பேச வேண்டியவாறு பேசி சமாதானப்படுத்துவார்கள். நாங்கள் வரும் வரை நீங்கள் உமாவுடன் தியாகு வீட்டில் இருங்கள்.. காவ்யா.. ஒரு வேளை அவர்கள் சமாதானமாகா விட்டால்..” அசோகன் பேச்சை நிறுத்த காவ்யா ‘என்ன?’ என்பதாய் பார்த்தாள்.

“காவ்யா.. உங்கள் வீட்டில் சமாதானமாகா விட்டால்.. நீங்கள் தனியாகி விட்டோமென்று கவலைப் படக்கூடாது. உங்கள் வாழ்க்கை என் பொறுப்பு. என் உயிரிருக்கிற வரை நான் உங்கள் சொந்தக்காரன். என்னுடைய சொத்து அனைத்தையும் உங்கள் மேல் எழுதி வைக்கிறேன். மேலே படிக்க வேண்டுமா.. படியுங்கள். வேலைக்குப் போக வேண்டுமா.. நான் வேலை வாங்கித் தருகிறேன். உங்கள் வீட்டார் பார்ப்பதைவிட கோடி மடங்கு உயர்த்தியான அந்தஸ்தில் உங்களுக்கு மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்..” அசோகன் உணர்ச்சிக் குவியலாய் பேசிக் கொண்டே போக தியாகராஜனின் மூளையில் மணி அடித்தது. ‘ஆஹா’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

‘கதை அப்படிப் போகிறதா.. வாடாவா.. தனிக்காட்டு ராஜா.. உன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டாளே இந்த அறியாப் பெண்..’ என்று அதிசயப்பட்டவன், நண்பனின் வாழ்க்கையில் புதுத் திருப்பம் வரப் போகிறது, அது இனிமையான திருப்பமாக இருக்கப் போகிறது என்பதை அறிந்தவனாய் மகிழ்ந்து போனான்.

அசோகனின் உணர்ச்சி மயமான வார்த்தைகள் காவ்யாவை தன்நிலைக்கு கொண்டு வந்தன. தன்நிலையைக் கொஞ்சம் மறந்து எதிரே நின்று கொண்டு இருந்தவனின் நிலையை உணர்ந்தாள். உதடுகளில் இனம் புரியாத சோகப் புன்னகை மலர,

“ஆகட்டும் சார். எப்போது என்னைக் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றினீர்களோ அப்போதிருந்தே நீங்கள் என் சொந்தக்காரர் போல் தான் சார். உங்கள் அருகில் எனக்கு எந்தவிதப் பயமும் இல்லை. நீங்கள் எனக்கு நன்மையே செய்வீர்கள் என்பதை அறிவேன். நீங்கள் சொன்னது போல் நான் வக்கீல் சார் வீட்டுக்கு வருகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.” என்றாள்.

தியாகராஜன் மனதிற்குள் ‘சபாஷ்’ என்று சொல்லிக் கொண்டான்.

‘அவள் நிலையைக் கண்டால் அவன் வேதனைப் படுகிறான். அவன் வேதனையைக் கண்டு அவள் அதை மறைத்துப் பேசுகிறாள் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் அக்கறை நாளை என்னவாக மாறும்..?’

அவர்கள் மூவரும் வீட்டிற்குப் போனபோது மங்களம் வாசலிலேயே காத்திருந்தாள். அசோகனைக் கண்டதும் முகம் மலர,

“அசோக்! என் மகனே! உன்னைக் கண்ணால் காணுவதற்குள் எங்கள் உயிர் பறந்திருச்சேடா கண்ணா! உனக்குப் போய் இந்தத் துன்பமா..?” என்று அவனைக் கட்டிக் கொண்டு கண் கலங்கினாள்.

அதற்குள் உமா ஆரத்தியுடன் வந்து,

“அத்தை அண்ணனை விடுங்கள். திருஷ்டி கழிக்கணும்..” என்று கூற,

“ஆமாமாம். ஊர் கண்ணெல்லாம் என் பிள்ளை மேல் தான். எதற்கும் நான்னு முன்னால் போய் நிற்கிறானில்லை. நன்றாக ஆரத்தி எடும்மா.. பொல்லாத கண் பார்வை கழியட்டும்.” என்று அசோகனை விட்டு விலகி நின்றாள் மங்களம். உமா ஆரத்தி எடுத்து முடித்ததும், அசோகனைப் பார்த்து,

“என்னவோப்பா.. இப்பவாவது ஆண்டவன் கண் திறந்து உன்னைப் பார்த்தாரே அந்தப் பொண்ணு காவ்யா மட்டும் வராவிட்டால்.. நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. அந்தப் பொண்ணு மட்டும் அக்கறை யெடுத்து உன்னைக் காப்பாற்றா விட்டால் உன் நிலை என்னவாகியிருக்கும்..? நீ அந்தப் பெண்ணுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும்.” என்று மங்களம் கூற அசோகன் வேதனையோடு காவ்யாவைப் பார்த்தான். அவனைத் தொடர்ந்து காவ்யாவைப் பார்த்த மங்களம்,

“ஏம்மா காவ்யா முகம் வாடியிருக்கு..? வீட்டு நினைவாம்மா..? கவலைப்படாதே.. உள்ளே வா. சாப்பிட்டவுடன் கிளம்பி விடலாம். நானே கொண்டு வந்து விட்டு விட்டு வருகிறேன்னு சொல்லியிருக்கேனில்லை..? அப்புறம் என்ன பயம்..? உன் அம்மா அப்பா கிட்ட நான் எடுத்துச் சொல்கிறேன். தியாகு காரை ரெடி பண்ணு..” என்று கூறினாள்.

“அம்மா…” என்று தயக்கமாய் அழைத்தான் தியாகராஜன்.

“என்னடா..?”

“வாசலிலேயே நின்று பேசாமல் உள்ளே போய் பேசலாமே..”

“சரிதாண்டா. அசோகன் வந்து விட்ட சந்தோசத்தில் எனக்குத் தலை கால் புரியவில்லை. வாங்க வாங்க உள்ளே போய் பேசலாம்.” என்று மங்களம் குதூகலமாய் உள்ளே செல்ல மற்றவர்கள் மௌனமாய் பின் தொடர்ந்தார்கள்.

உள்ளே வந்தவர்கள் சுரத்தில்லாமல் வரவேற்பறை சோபாக்களில் அமர்வதைக் கண்ட மங்களமும், உமாவும் திகைத்தனர். புத்திசாலியான மங்களம். ‘என்னவோ நடந்திருக்கிறது’ என்பதை யூகித்து விட்டாள்.

“தியாகு என்னடா நடந்தது..? கேட்கிறேனில்ல.. மறைக்காம சொல்லு..” அவள் அதட்ட தியாகராஜனின் தைரியம் பறந்து விட்டது. கோர்ட்டில் அமர்ந்திருக்கும் நீதிபதி முன் அவனொரு சட்டப் புலி. ஆனால் வீட்டில் மங்களம் கூட்டியிருக்கும் இந்த நியாய சபையில் அவன் எலியாக மாட்டிக் கொண்டான். தாயார் பயந்தது போலவே நடந்து விட்டதை அவளிடம் சொல்லத் துணியாமல் மென்று விழுங்கினான்.

“தியாகு. நீ முழிக்கிற முழி சரியில்லை. என்னதான் நடந்தது..?”

உமாவிற்கு கணவன் சிறு பிள்ளை போல் தாயின் முன்னால் அடங்கி ஒடுங்கி அமர்ந்திருந்தது வேடிக்கையாக இருந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு,

“ஏங்க.. அத்தைதான் கேட்கிறாங்கல்ல.. பதில் சொல்ல இவ்வளவு நேரமா..?” என்று தூண்டி விட்டாள். மனைவியை முறைத்த தியாகராஜன் பல்லைக் கடித்தான்.

“அவளை ஏண்டா முறைக்கிற..? கேட்டது நான். எனக்குப் பதில் சொல்லு..” என்று மங்களம் கடிந்து கொள்ள அதற்கு மேல் முடியாதவனாய்.

“அம்மா.. காவ்யாவோட அண்ணனும், அப்பாம்மாவும் ஸ்டேசனுக்கு வந்திட்டாங்கம்மா. பெரிய கலாட்டா ஆகிப் போச்சு. கடைசியில்..”

“கடைசியில்..”

“காவ்யா. இனி எங்க பெண்ணில்லை. எங்க பெண் செத்திட்டாள்ன்னு சொல்லி ஸ்டேசன்லயே விட்டுட்டுப் போயிட்டாங்க.”

விக்கித்துப் போய் விட்டாள் மங்களம். ‘செத்து விட்டாளா..?’ ‘உயிரோடிக்கும் பெண் செத்து விட்டாளா.?’ காவ்யா மாதிரியான ஒரு உத்தமமான பெண்ணைப் பெற்றவர்கள் கூறும் வார்த்தையா இது..? அவர்கள் மனதிற்கு மாறாக தன் மனதிற்கு சரி என்று பட்டதைச் செய்ததால் அவளை உயிரோடு சாகடிப்பதா..? அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்..? அவளது தாய்மை உள்ளம் பதறியது.

“தியாகு. உனக்கு இப்பத் திருப்தியாடா..? அப்பவே படிச்சுப் படிச்சு சொன்னேனே. ஊரார் வீட்டுப் பெண்ணோட வாழ்க்கையில் இப்படி விளையாடி விட்டாயே.. அந்தப் பெண் உனக்கு என்னடா கெடுதல் பண்ணுச்சு..? இங்கிருந்து திருநெல்வேலிக்குப் போய் அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வரவச்சு இப்ப இந்த நிலைமையில் நிற்க வைச்சுட்டியே..”

“அம்மா அவங்களைக் காப்பாத்தப் போய் தானே அசோகன் ஆபத்தில் மாட்டிக்கிட்டான்.”

“சும்மா சும்மா அதையே கீறல் விழுந்த ரிகார்டு மாதிரி திருப்பித் திருப்பிச் சொல்லாதேடா. இப்படி அவளை உயிரோடு கொல்வற்கா அன்னைக்கு அவன் காப்பாத்தினான்..?”

மங்களம் பேசப் பேச தியாகராஜன் பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போனான். அசோகனோ, ‘ஏண்டா நாம் வெளியில் வந்தோம். நம்மால் தான் அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை..? ஒரு பெண்ணின் வாழ்வில் விளைளாடி விட்டோமே..’ என்ற நினைவில் குனிந்த தலை நிமிராமல் குன்றிப் போனான். காவ்யாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அரை மயக்க நிலையிலிருந்து முழு மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அங்கே யிருந்தவர்களில் யோசிக்கும் திறனோடு நிதானமாய் இருந்தவள் உமா மட்டும் தான். எல்லோரையும் ஒரு அதட்டல் போட்டு ‘மேற்கொண்டு என்ன செய்வது..?’ என்று யோசிக்க வைக்கா விட்டால் சரிப்படாது என்பதை உணர்ந்த உமா, மங்களத்தைப் பார்த்து,

“அத்தை.. இப்போ எதுக்கு கோபப்படறீங்க.? இப்ப என்ன நடந்திருச்சு..?” என்று கேட்டாள்.

“என்னம்மா உமா நீ கூட இவனுக்குச் சப்போர்ட் பண்ற..? இவன் செய்தது சரியா..?”

“நிச்சயம் சரி. அவர் வேறு என்னதான் செய்திருக்க முடியும்? அவர் என்ன காவ்யாவின் வாழ்க்கையைக் கெடுக்கணும்னு இந்தச் செயலைச் செய்தாரா..? இல்லை பொய்யாய் காவ்யாவை இந்த வழக்கில் சம்பந்தப் படுத்தி விட்டாரா..? அசோகண்ணன் கொலை செய்யலைன்னு காவ்யாவுக்கு மட்டும் தானே தெரியும்..? அதனால்தானே உங்க மகன் அவங்களை சாட்சி சொல்லக் கூப்பிட்டார்..? அதுவும் காவ்யாவைப் போய் தனியாப் பார்த்து, வீட்டை விட்டு வெளியே வந்து சாட்சி சொல்லும்மான்னு சொன்னாரா..? இல்லையே பெரியவங்களைத்தானே நேரில் போய் பார்த்திருக்கிறார்..? கெஞ்சியிருக்காரு அத்தை. காலில் விழுகாத குறையாய் கெஞ்சியிருக்கார். உங்க மகளைக் கூட்டி வந்து ஒரேயொரு வார்த்தை உண்மையைச் சொல்லி விட்டுப் போங்கன்னு கெஞ்சியிருக்கார். அவங்க நாயை விரட்டுற மாதிரி உங்க மகனை விரட்டி விட்டாங்களா இல்லையா..? அப்புறம் காவ்யா என்னதான் செய்வாங்க..? அவங்க வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அத்தை. காவ்யா அதைத்தான் செய்திருக்க முடியும். வேறு வழியே இல்லை.”

“ஆனால் இப்ப காவ்யாவோட நிலைமை என்ன ஆகிறது..?”

“ஒன்றும் ஆகவில்லை. நாம எல்லாம் இல்லையா..? நாம அவங்களை தனியா விட்டு விடுவோமா..? அத்தை. காவ்யா வீட்டுக்குத் தெரியாமல் சினிமா பார்க்கக் கூட வெளியில் போனதில்லை. அப்படிப் பட்டவங்க வீட்டை விட்டு வெளியே வந்திருக்காங்கன்னா.. எதுக்கு வந்தாங்க..? யாரையாவது காதலிச்சு வெளியேறி விட்டாங்களா..? இல்லையே. உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வதற்காக வெளியே வந்தாங்க. அவங்க மட்டும் உண்மையைச் சொல்ல வெளியே வராமல் இருந்திருந்தால் அசோகண்ணா தூக்கில் தொங்க வேண்டியதுதான். உங்களுக்கு அது சம்மதமா..?”

“ஐயோ! என்ன உமா இப்படிப் பேசுற.. அசோகனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் தாங்குவேனா..?”

“தெரியுதில்லை..? அப்புறம் எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் பண்றீங்க..? தலையே போனாலும் உண்மையைத்தான் சொல்லணும்னு காவ்யா வந்திருக்காங்க. அது பாராட்டப் பட வேண்டிய விஷயம். அவங்க வந்து சரியான சமயத்தில் சாட்சி சொன்னதால் அசோகண்ணன் வெளியே வந்திட்டார். இது நாம சந்தோசப்பட வேண்டிய விசயம். காவ்யாவின் வீட்டில் கோபப்பட்டு விட்டார்கள். என்ன செய்யலாம்..? இது மட்டும் நடந்திருக்கக் கூடாது. என்ன செய்வது..? நடந்து விட்டது. விதியை மாற்ற முடியுமா..? இனி மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பெரியவங்க நீங்க பார்த்து ஒரு முடிவெடுப்பீங்களா..? அதை விட்டு விட்டு.. நீ அப்படிச் செய்திருக்கக் கூடாது.. இப்படிச் செய்திருக்கக் கூடாதுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே அத்தை.. ஒன்னைத் தெரிஞ்சுக்குங்க.. இப்ப நடந்தவைகளை எப்படியும் செய்திருக்க முடியாது. எல்லோருமே.. உங்க பிள்ளை, காவ்யா உட்பட எல்லோருமே இப்படித் தான் செய்திருக்க முடியும். இதுதான் சரி. இப்போது முதலில் எல்லாரும் எழுந்து சாப்பிட வாங்க.. என்னங்க.. அண்ணனைக் குளிக்க வைத்து கூட்டிக் கொண்டு வாங்க.. ம்.. சொல்ல மறந்துட் டேனே.. அண்ணனை தலைக்கு குளிக்கச் சொல்லுங்க.. பிடிச்ச பீடையெல்லாம் போகட்டும். தலையை முழுகிட்டு நிம்மதியா வாங்கண்ணா.. ம்ம்.. எழுந்திரிங்க.”

கிராமத்துப் பெரிய தனக்காரரின் மகள். ஊர் நியாயம் சொல்லும் அப்பாவுக்குத் தப்பாமல் நியாயம் பேசி விட்டாள். அவள் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்த மங்களம் அமைதியானாள். ‘மேலே என்ன செய்வது’ என்ற யோசனையோடு காவ்யாவை எழுப்பி,

“வாம்மா சாப்பிடலாம் வா..” என்று அழைத்துக் கொண்டு போனாள். அசோகன் குளித்து விட்டு வர எல்லோரும் ஒருவித மௌனத்தோடு சாப்பிட்டு முடித்தார்கள்.

“உமா காவ்யாவுக்கு மாடியில் உன் ரூமிற்கு பக்கத்து ரூமைக் கொடு. மாற்ற உன் துணிகளை எடுத்து அங்கே அடுக்கி வை. போம்மா காவ்யா. இதை உன் வீடு போல் நினைத்துக் கொள். எனக்குப் பெண்ணில்லாத குறைக்கு நீ வந்திருக்கிறேன்னு நான் நினைக்கிறேன். என்னை உன் அம்மாவாக நினைத்துக் கொள். போய் படுத்து ரெஸ்ட் எடு. எதைப் பற்றியும் கவலைப்படாதே. நாங்களிருக்கிறோம். உமா காவ்யாவை கூட்டிக் கொண்டு போம்மா..” என்றார் மங்களம்.

உமா காவ்யாவை அழைத்துக் கொண்டு மாடியேறினாள்.

“தியாகு. நீ வீட்டில் இரு. பத்திரம்.. அந்தப் பெண் நம்மை நம்பி வந்திருக்கிறது. பார்த்துக் கொள். நானும் அசோகனும் திருநெல்வேலிக்கு இப்போதே கிளம்புகிறோம். அவங்க 

வீட்டில் பேசி சமாதானப்படுத்தலாம்.. பெத்தவங்க கோபத்தில் போயிருப்பாங்க. நான் பேசி சரி பண்ணுகிறேன்.” என்றவள் உடனே கிளம்பத் தயாரானாள்.. அசோகன் மங்களம் சொல்படி உடனே வண்டியை எடுத்தான். இருவரும் அப்போதே பயணத்தைத் தொடங்கி விட்டனர். விடியலின் அருகாமையில் இரவு இருக்கும்போது அவர்கள் காவ்யாவின் வீட்டை அடைந்து விட்டனர்.

அங்கே நடந்தது அசோகனின் வாழ்வைத் திறக்கும் கதவாக இருந்து விட்டது. ஆனால் கதவு திறக்கும் முன்னர் அசோகன் பட்ட வேதனை.. அதனால் மங்களம் எடுத்த முடிவு.. வாழ்க்கையை தன் போக்கில் வாழ்ந்தவன் வாழ்வில் கடமையைக் கொண்டு வந்தாள் அந்தத் தாய். அந்தக் கடமையை ஏற்க வைத்தாள் காவ்யாவின் தாய். இதுவும் காலத்தின் விளையாட்டு.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link