Chapter 16
காவ்யா அவளுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த அறையை விட்டு வெளியே வரவேயில்லை. சாப்பிட்ட தாய்.. அதுவும் மற்றவர்களுக்காக.. பெயர் பண்ணிவிட்டு அறையிலேயே அடைந்து கிடந்தாள். அவள் மனம் சொல்ல முடியாத பயத்தில் தவித்தது. தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். தான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்று? ‘தவறே இல்லை’ என்ற பதிலைத்தான் மீண்டும் மீண்டும் அவளது மனச்சாட்சி அளித்தது. செய்யாத தவறுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா..? ஒரே நாளில் அவளது உறவுகள் மறையுமா..? அவ்வாறு மறைதல் நியாயமா..? ஒரே நாளில் அவளது உறவுகள் மறையுமா..? அவ்வாறு மறைதல் நியாயமா..? ஒரே நாளில் அவளது வாழ்வு திசை மாறிவிட்டதே. பெற்று வளர்த்து மடியில் போட்டுச் சீராட்டி வளர்த்த அன்னையின் அன்பு மடி இனி அவளைத் தாலாட்டாதா..? பர்வதத்தின் மொழி கடுமைதான். ஆனால் பழாப்பழம் போல் வெளியே முள்ளாகவும் ஊடுருவிப்பார்த்தால் இனிப்பாகவும் இருக்கும் அன்பு அது. அவளுக்கு லேசாக தலைவலி வந்தால் கூட தாங்க முடியாத தாய் அவள். இன்று உயிரோடு அவள் உறவை அறுத்துக் கொண்டு சென்று விட்டாளே. பார்த்து வளர்த்த தந்தையின் கண்டிப்பான மொழிகளை இனி அவள் வாழ்வில் கேட்கக் கிடைக்குமா..? உடன் பிறந்தவனின் உரிமை பாராட்டும் பாதுகாப்பு அவளை விட்டுப் போனது போனதுதானா..? எண்ணி எண்ணி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். திருநெல்வேலி போய் திரும்பி வந்த மங்களமும் அசோகனும் அவளிடம் ஏதும் சொல்லாமல் மௌனம் காத்தனர். அவர்களின் மௌனமே அவர்களின் தோல்வியை பறைசாற்ற காவ்யா எதுவும் கேட்காமல் மனதிற்குள் உடைந்தாள்.
அறைக் கதவு தட்டப்பட்டது. எழுந்து கதவைத் திறந்தாள். உமா நின்றிருந்தாள்.
“என்ன காவ்யா என்ன செய்துக்கிட்டு இருக்க..?”
“ஒன்னுமில்லைங்க. சும்மா படுத்திருந்தேன்.”
“கொஞ்சம் மொட்டை மாடிக்கு வர்றயா.. அத்தை கூப்பிடுறாங்க.”
பதில் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தாள் காவ்யா. மொட்டை மாடியில் சேர்கள் போடப்பட்டு இருந்தன. மங்களம் ஒரு சேரில் அமர்ந்திருந்தாள். சேர்களில் அமராமல் கைகளை முன்புறம் கட்டிக் கொண்டு ஒரு பக்க மாடி கைபிடிச் சுவரில் அசோகனும், அருகே தியாகுவும் அமர்ந்திருந்தனர். மங்களத்தின் மடியில் தியாகுவின் குட்டிப் பெண் அமர்ந்திருந்தது. காவ்யா மாடியேறி வந்து அவர்கள் எல்லோரையும் கண்டதும் எதையோ தொலைத்து விட்ட குழந்தை போல் மருண்டு விழித்தாள். அந்தப் பார்வையைக் கண்டதும் அங்கிருந்த மூவருக்கும் காவ்யாவைத் தொடர்ந்து வந்த உமாவிற்கும் இரக்கம் சுரந்தது.
“இப்படி வந்து உட்காரு காவ்யா..” என்று தன் முன்னாலிருந்த சேரைக் காட்டினாள் மங்களம். காவ்யா பணிவுடன் வந்து அமர்ந்து கொண்டாள். உமா அப்படியே மாடி மேல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள். அவளது குழந்தை பாட்டியின் மடியிலிருந்து இறங்கி தவழ்ந்து அருகில் வர தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள். காவ்யா மங்களத்தின் முகத்தை கலக்கத்துடன் பார்த்தாள். மங்களம் பேச ஆரம்பித்தாள். “காவ்யா. நாங்க திருநெல்வேலி போய் வந்தது தெரியும்தானே..” காவ்யா ‘ஆமா’மென்பதாக தலையை ஆட்ட மங்களம் தொடர்ந்தாள்.
“உங்க அப்பா அவர் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார் காவ்யா. உங்க அண்ணனும் அவரை சப்போர்ட் பண்ணுகிறான். உங்க அம்மா மட்டும்தான் உன்னை நினைத்து புலம்புகிறாங்க. ஆனால் அவங்களால் என்ன செய்ய முடியும்..?” காவ்யாவின் கண்கள் அன்னையின் நினைவில் கலங்கின.
“இனி மேலே என்ன செய்வதுன்னு நாம் யோசிச்சாகணும்.”
“எனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணி வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டால் போதும்மா. வேறு உதவி வேண்டாம்.” என்றாள் காவ்யா. அசோகனின் விழிகள் ‘பார்த்தாயா’ என்பதுபோல் மங்களத் தைப் பார்க்க அவள் அதைக் கவனியாதவள் போல்,
“அது சரி வராது காவ்யா. நாங்கள் இத்தனை பேர் இருக்க நீ அநாதைபோல் ஹாஸ்டலில் தங்குவது சரியாகாது.” என்று மறுத்தாள்..
“அதற்காக இங்கேயே எத்தனை நாள் நான் தங்க முடியும்..?”
“காலம் பூராவும் நீ இங்கே தங்கலாம் காவ்யா. அதில் உனக்கு சந்தேகம் வேண்டாம். ஆனால் குடும்பத்தை இழந்து விட்ட நீ இங்கே ஒட்டமாட்டாய். நீ செய்திருக்கும் உதவி ஈடுசெய்ய முடியாதது. அதனால் உன்னை நல்ல முறையில் வாழவைப்பது எங்களின் கடமையாகிறது காவ்யா.”
“ஈடு செய்ய முடியாத உதவி அப்படி என்னம்மா நான் செய்துவிட்டேன்..? நடந்த உண்மையை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் சொன்னேன். இது நான் செய்ய வேண்டிய செயல் தானேம்மா..”
“அந்த உண்மையை நீ சொன்னதற்கு நீ பட்டுக் கொண்டிருக்கும் துன்பம்தான் எங்களுக்கு சகிக்கவில்லை செல்லம். உன் வீட்டார் உன்னை அடித்திருந்தாலோ இல்லை திட்டியிருந்தாலோ நாங்கள் கவலைப்பட்டிருக்க மாட்டோம். உன் வீட்டாருக்கு உன்மேல் இல்லாத உரிமையான்னு அமைதியாகப் போயிருப்போம்.
ஆனால் அவங்க உன்னை ஒட்டு மொத்தமா உதறிவிட்டுப் போயிட்டாங்களேம்மா. நீ உன் குடும்பத்தை இழந்து விட்டாயே.”
“அதனால் பரவாயில்லை அம்மா. நான் மனதறிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் கடவுள் ஏனோ என்னை சோதிக்கிறார். நடந்ததுக்கு நீங்கள் யாரும் காரணமில்லையே. எனவே நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.”
“கவலைப்படாமல் இருக்க முடியாது காவ்யா.. நீ யாருக்காக வீட்டை விட்டு வெளியில் வந்தாய்..?”
“இது என்னம்மா புதிதாய் கேட்கிறீர்கள். அசோகன் சாருக்காகத்தான்”
“அப்போ.. இனிமேல் நீ அவனுடைய பொறுப்பா கிறாய் காவ்யா. உன்னைக் காப்பாற்றுவது இனி அவன் கடமையாகிறது.”
“நான் படிச்சிருக்கேன்ம்மா. என்னை நானே காப்பாற்றிக் கொள்வேன்.”
“புரியாமல் பேசாதேம்மா. வேலை வயிற்றுக்கு சோறு தரும். வாழ்க்கைத் தராது.”
“வாழ்க்கைன்னு நீங்க எதைக் குறிப்பிட்டு சொல்றீங்கம்மா..?”
“காவ்யா.. குடும்பமாக வாழ்வதுதான் வாழ்க்கைன்னு நான் நினைக்கிறேன். உன்னைக் கடைசி வரைக்கும் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு இருக்கிறதாக அசோகன் நினைக்கிறான். அவனுடைய கடைகளையும், வீட்டையும் உன் பெயரில் எழுதி வைத்து நல்ல வாழ்க்கையை அதாவது நல்ல மாப்பிள்ளையையும் தேடிக் கல்யாணம் பண்ணி வைக்கிறதா அவன் சொல்கிறான்..”
காவ்யாவின் பார்வை அசோகன் மேல் கேள்வியாய் படிந்து மீண்டது. அந்தப் பார்வையில் ஒரு கேள்வி இருந்ததுபோல அசோகனுக்கு தோன்றியது. என்னவென்று அவன் யோசிக்கையில் காவ்யா பேசினாள்.
“அம்மா உரிமையில்லாத சொத்து எனக்கு வேண்டாம். அவருடைய சொத்துக்கு நான் எப்படி உரிமையுள்ளவள் ஆகமுடியும்..? அது அவருடைய பெற்றவர்கள அவருக்காக விட்டுச் சென்றது. எனவே இனி இப்படிப் பேச வேண்டாம்ன்னு சொல்லுங்கள்.”
“நானும் அதையேதான் சொன்னேன். காவ்யா உரிமையில்லாத சொத்தை ஏத்துக்க மாட்டாள்ன்னு. ஆனால் அந்தப் பிடிவாதக்காரன் தன்னுடையது எல்லாம் உன்னுடையதுன்னு சொல்கிறானேம்மா.. அதில் நியாயமும் இருக்கே.”
“அம்மா எனக்காக அவர் துன்பப்படறதில் எனக்கு விருப்பமில்லை.”
“இதில் உன் விருப்பமோ அவன் விருப்பமோ வரவில்லையம்மா. நீ அவனுக்காக வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டாய். இனி கடைசி வரை உன்னைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் அவனுக்கு இருக்குங்கிறதில் அவன் உறுதியாக இருக்கிறான். என் கருத்தும் அதுதான். அதில் மாற்றமில்லைம்மா..”
“அம்மா என்னைச் சுமக்கும் பொறுப்பு அவருக்கு வேண்டாம்.”
“வேண்டாம்ன்னு நீ சொல்லிவிட்டால் ஆச்சா. இது சுகமான சுமைன்னு அவன் நினைக்கிறான், காவ்யா. அவன் ஒரு இடத்திலும், நீ ஒரு இடத்திலும் தனித்தனியாக இருந்து ஒருவரை நினைத்து ஒருவர் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறதுக்கு ஒரு நல்ல முடிவை நீ ஏன் எடுக்கக் கூடாதும்மா..?”
“நானா.. நான் என்ன முடிவு எடுக்க..?”
“ம்ம்.. நான் சொல்லவா..? நீயும் அவனும் கல்யாணம் செய்து கொள்வதுதான் அந்த முடிவு.”
“என்.. என்னம்மா.. சொல்றீங்க..?”
“காவ்யா! தன்னுடையதெல்லாம் உன்னுடையதுன்னு அசோகன் சொல்கிறான். உரிமை இல்லாதது எனக்கு வேண்டாம்ன்னு நீ சொல்கிறாய். நீ உன் குடும்பத்தை இழந்து நிற்கிறாயின்னு நாங்க எல்லோருமே கவலைப் படறோம்.. நீ அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவன் ஆசைப்படி அவனுடையது எல்லாம் உன்னுடையதாக ஆகிவிடும். உன் கொள்கைப்படி உரிமையுள்ள சொத்தாக அது இருக்கும். எங்க எல்லோருடைய விருப்பப்படி உனக்குன்னு ஒரு வீடு குடும்பம் வந்துவிடும். எல்லா பிரச்சனைகளுக்கும் இது ஒன்னுதான் சரியான தீர்வு காவ்யா.”
காவ்யா மௌனமாய் இருக்க உமா எழுந்து அருகில் வந்தாள்.
“என்ன காவ்யா யோசிக்கிறே. அத்தை சொல்வது தான் சரி காவ்யா.. சரின்னு சொல்லு..”
ஆனால் அசோகனோ, “உமா அவங்களை வற்புறுத்தாதே. அவங்களுக்கு இஷ்டமில்லைன்னா இந்தக் கல்யாணம் வேண்டாம்,” என்றான். காவ்யா விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள். “கொஞ்சம் சும்மாதான் இரேண்டா..” என்று அசோகனை அதட்டிய மங்களம், “சொல்லு காவ்யா உனக்கு சம்மதம்தானே..” என்றாள். அசோகன் சூள் கொட்டினான்.
“அம்மா உங்க விருப்பத்தை அவங்க மேல் திணிக்காதீங்க. சம்மதம்தானான்னு கேளுங்கள். சம்மதம் தானேன்னு கேட்காதீர்கள்.”
இப்போது காவ்யாவின் இதழ்கள் விரிந்தன.
“முதலில் அவர் சம்மதித்தாரா அம்மா. அவரை நீங்கள் வற்புறுத்தினீர்களா..?” அசோகனின் கண்கள் மின்னின. இமையோரம் துடிக்க,
“அம்மா எனக்கு சம்மதம்ன்னு சொல்லிடுங்க. அவங்க சம்மதிக்கிறாங்களா..?” என்று ஆர்வத்துடன் வினவ காவ்யா அவனை நேராய் பார்த்து,
“சம்மதம்,” என்றாள்.
தன் காதுகளையே நம்ப முடியாமல் அசோகன் விழிகளை விரிக்க மங்களம் நிம்மதியான புன்னகை புரிய தியாகு “ஹோய்” என்ற கூச்சலுடன் அசோகனைத் தூக்கி தட்டாமாலை சுற்ற உமா, “கன்கிராஜூலேசன்ஸ் அண்ணா,” என்று அசோகனுக்கு கை கொடுக்க எதுவும் புரியாத தியாகராஜனின் குழந்தை கூட கை தட்டி சிரிக்க காவ்யா இது எதிலும் பங்கேற்காமல் வானத்தைப் பார்த்தாள். வானம் மேகங்கள் அகன்று நிர்மலமாய் காட்சி தந்தது. விண்ணும் மண்ணும் தொடும் தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளி மின்னி மறைந்தது.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.