Chapter 18
தனித்து விடப்பட்ட காவ்யா தயங்கி தரையில் அமர்ந்தாள். திறந்திருந்த கதவை அடைத்துவிட்டு வந்த அசோகன் அவள் எதிரிலிருந்த கட்டிலில் அமர்ந்தான். ஜன்னல் வழியே வந்த கடல்காற்று உடலை வருடியது. மல்லிகையின் மணம் அவனது நாசியைத் தொட்டது. பழக்கமில்லாத மலர் மனம். அவன் மனம் மயங்கியது. எதிரே தரையில் அமர்ந்திருந்த காவ்யாவைப் பார்த்தான். அவள் கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிறு அவள் அவனுக்கு சொந்தமென்று அறிவித்தது, அவன் மெதுவாக, “காவ்யா” என்று அழைத்தான். அவள் தலைகுனிந்தவாறு “ஊம்” என்றாள்.
“ஏன் தரையில் உட்கார்ந்திருக்காய். கட்டிலுக்கு வா காவ்யா..”
“இருக்கட்டும். இது கொஞ்சம் வசதியாக இருக்கிறது.”
“நான் ஏன் உன்னை பிடிவாதமாய் இன்றே நம் ரூமிற்கு அழைத்து வந்துவிட்டேன் தெரியுமா..?”
‘என்ன?’ என்பதாய் அவள் பார்க்க அவன் தொடர்ந்தான்.
“இந்த நாளில்.. நாம் வாழ்க்கையை ஆரம்பித் திருக்கும் இந்த நாளில்.. இன்னும் நம் வாழ்க்கையை ஆரம்பிக்கப்போகும் இந்த நேரத்தில் என் வீட்டில்தான் நீ இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். நாம் வாழ்வை ஆரம்பிப்பது என் வீட்டிலாகத்தான் இருக்க வேண்டும். நான் ரொம்ப சுயமரியாதை பார்ப்பவன் காவ்யா.. என்ன பார்க்கிற காவ்யா..”
அவன் பேச கேட்டுக் கொண்டிருந்தவளின் பார்வை அறை வாசல் கதவில் படிந்து மீண்டதைப் பார்த்த அவன் வினவினான். அவள் முகம் சிவக்க ‘ஒன்றுமில்லை’ யென்பதாய் தலையசைத்தாள். அவள் முகச்சிவப்பை ரசித்த அசோகன் அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்க இயலாமல் தவித்தான். இருவரும் அறிமுக மானவர்கள். எத்தனையோ வார்த்தைகளை ஒருவர் முகம் பார்த்து மற்றொருவர் பேசியிருக்கின்றனர். ஆனால் இன்று இருவரையும் சூழ்ந்து நின்ற மௌனத்திரையை விலக்க இயலாமல் இருவரும் திணறினர். தாளமாட்டாத அசோகன் பேசினான்.
“காவ்யா. உன்மேல் எனக்கு அளவு கடந்த அன்பும், அக்கறையும் நேற்று சாயந்திரம் வரைக்கும் இருந்தது. ஆனால்…” காவ்யா விழிகளால் வினவ,
“நேற்று மாலையிலிருந்து அன்பு, காதலாகிவிட்டது. எப்படி என்று தெரியவில்லை.” காவ்யா மீண்டும் அறை வாசல் கதவைப் பார்த்தாள். பின்னர் ஏதோ சிந்தனையுடன் தரையில் விரலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். ஒரு எறும்பு அவள் கை மீது ஏற அசோகன் எழுந்து வந்து அதைத் தட்டிவிட்டான். அவன் கை பட்டவுடன் அவள் உடல் சிலிர்த்ததை உணர்ந்து கொண்ட அவன் அவளருகில் தரையில் அமர்ந்து கொண்டான். அவளது கரம் பற்றினான். அவள் கைகள் நடுங்க ஆரம்பிக்க கிறக்கத்துடன், “என்ன பயம் காவ்யா.. நான் உன்னுடைய அசோகன் இல்லையா..?” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் கைகளை விடுவித்துக் கொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள்.
அசோகனுக்கு விளங்கவில்லை.. “காவ்யா..?” என்றான் கேள்வியாக..
அவன் கேள்வி அவளுக்குப் புரிந்தது. அந்தக் கேள்வியில் இருந்த அழைப்பும், தாகமும் அவளை அவனருகில் அழைத்தது. ஆனால்..? அவள் இன்னும் நகர்ந்து அமர்ந்தாள். அவள் பார்வை மீண்டும் அறை வாசல் கதவிலேயே பதிந்தது. அவளது விலகல் கண்டவன் எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அவனது கூரிய பார்வை அவளது இதயத்தை துளைத்தது. நடந்து ஓய்ந்தவன் கட்டிலில் அமர்ந்து,
“ச்சு” என்று சூள் கொட்டினான் சலிப்பாக, அதைக் கண்ட காவ்யா அடி உதடுகளைப் பல்லால் கடித்துக் கொண்டாள். அவன் பார்வையின் கேள்விக்கு என்ன வென்று பதில் சொல்வது..?
“எனக்கு.. நான்.. இன்னும் கொஞ்சம் நாள் அவகாசம் வேண்டும்.. ஒரு.. ஒரு மாதம் போகட்டுமே..” என்றாள் அவஸ்தையாய். இதைச் சொல்வதற்குள் வெட்கத்தில் அவள் முகம் கன்றிச் சிவந்து விட்டது.
‘அவகாசம் வேண்டுமா..? எதற்காக..?’ புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது. அறிவில் பொறிதட்டியது. இவள் அடைக்கலம் வேண்டி இவனைத் திருமணம் செய்து கொண்டவள். இவன் மேல் உள்ள காதலால் அல்ல. இதை ஏன் அவன் மறந்தான். ஊர், உலகில் உள்ள மற்றவர்கள் போல மண வாழ்க்கை வாழ ஏன் ஆசைப்பட்டான்..? அவளுக்கு வேண்டியது பாதுகாப்பான ஒரு கூடு. அதைக் கொடுக்கத்தான் இந்தக் கல்யாணம். அதை மறந்துவிட்டு அவள் மேல் தாபம் கொண்டால் அவள் என்ன செய்வாள்..? பாவம். ஒரு வினாடியில் அவனது மனம் பொங்கி அடங்கியது. வானில் சிறகடித்த உணர்வுகளை மறைய மண்மேல் கால் பதித்தான். எழுந்து அவள் முகம் பார்க்காமல் பெட்சீட்டை எடுத்து தரையில் போட்டவன் தலையணை ஒன்றை உருவி எடுத்துக் கொண்டு அதில் படுக்கப்போனான். காவ்யா பதறிப் போனவளாய் எழுந்து,
“ப்ளீஸ் நான் தரையில் படுத்துக்கிறேன்..” என்று பெட்சீட்டை பிடுங்கி அதை விரித்து படுத்துக் கொண்டாள். ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் விளக்கை அணைத்து விட்டுப் படுத்தான். விடி விளக்கொளியில் ஒரு பக்கமாய் திரும்பி படுத்திருந்த அவளின் உருவம் ஒரு கோட்டோவியம் போல் அழகாய் இருந்தது. ‘என்ன மாதிரியான முதலிரவு இது..?’ என்று நினைத்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. கைக்கு எட்டும் தூரத்தில் கண்ணுக்கு அழகான மனதுக்கு பிடித்த புது மனைவி. அவள் வேண்டும் என்று உடலும் மனமும் துடிக்கின்றது. ஆனால் அவளோ அவகாசம் கேட்கிறாள். எதற்கு அவகாசம்..? அவன் மனைவியாய் அவள் முழுமையாய் ஆவதற்கு! என்ன என்னவோ சிந்தனைகள் மனதில் ஓட அதிகாலையில் கண் மூடித் தூங்க ஆரம்பித்தான்.
காலையில் சுப்ரபாதம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண் விழித்தவனின் நாசி சாம்பிராணி, ஊதுபத்தி வாசனையை நுகர ‘கோவிலில் ஏதும் உறங்கி விட்டோமோ’ என்று ஒரு வினாடி தூக்கிவாரிப்போட படக்கென்று எழுந்து உட்கார்ந்தவனின் முன்னால் காபிக்கோப்பை நீட்டப்பட திகைத்து கண் கசக்கிப் பார்த்தான். குளித்து முடித்து ஈரத்தலையின் முனையில் சிறு முடிச்சிட்டு, திலகமிட்டு மங்களகரமாய் காவ்யா நின்று கொண்டிருந்தாள். ‘அதற்குள் செட் ஆகிவிட்டாளே’ என்ற ஆச்சரியத்துடன் காபியை வாங்கிக் கொண்டவன்,
“காபி எப்படிப் போட்டே..?” என்றான். ஒயிலாய் திரும்பியவள்,
“ஏன்..? பால், ஜீனி, காபிப்பொடி போட்டுத்தான் போட்டேன்,” என்றாள்.
அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அவளது கேலியை ரசித்தவன் அவளைக் குறும்பாய் பார்த்தவாறு,
“என்ன ஒரு கண்டுபிடிப்பு..? எனக்கு இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே..” என்றான். அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. அதையும் ரசித்தவாறு,
“இது பிரம்மச்சாரி இருந்த ரூம். இங்கே ஏது ஸ்டவ் பாத்திரங்கள்..?”
“மாமிகிட்ட கேட்டேன். சின்ன ஸ்டவ், மண்ணெண்ணை, பாத்திரங்கள் எல்லாம் கொடுத்தாங்க.. பால் பாக்கெட், ஜீனி, காபிப்பொடியெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாங்க. கொஞ்சம் ரவையும் காய்கறியும் வாங்கித்தரச் சொன்னேன் இப்போதுதான் வந்து கொடுத்துவிட்டுப் போறாங்க. நீங்க காபி குடிச்சிட்டு குளிச்சுட்டு வாங்க. ரவை உப்புமா கிளறிவிடுகிறேன். இன்னைக்கு காலை டிபன் சிம்பிள்தான்.. இனி ஜமாய்ச்சிடறேன்.”
ஆச்சரியத்துடன் புருவங்களை உயர்த்தியவாறு காபியை பருகிக் கொண்டே அறையைச் சுற்றி பார்த்தான். அறையின் மூலையில் இருந்த டேபிளை அடுப்படி மேடையாக்கி ஸ்டவ்வை அதில் வைத்திருந்தாள். மூலையில் இரண்டு குடங்கள் தண்ணீருடன் இருந்தன. “இது என்ன தண்ணீர் குடம் புதுசா..? குழாயில் தண்ணீர் வருமே..?”
“இது நல்ல தண்ணீர் சமையலுக்கு பிடித்து வந்தேன்.”
“ஓகோ,” என்றவாறு அலமாரியைப் பார்த்தான். மேஜையில் இருந்த புத்தகங்களை மற்றைய பொருட்களை அலமாரியின் கீழ்தட்டில் சீராகவும் அழகாகவும் அடுக்கி யிருந்தாள். மேல்தட்டில் அசோகனது தாய் தந்தையரின் படமும் சுவாமி படமும் இருந்தது. இரண்டு படங்களுக்கும் பூப்போட்டு முன்னால் சிறு விளக்கெரிந்து கொண்டிருந்தது. நெகிழ்ந்தவன் விரைவாய் குளித்துவிட்டு வந்தான். சூடான உப்புமாவை தட்டில் பரிமாறி தண்ணீர் எடுத்து வைத்திருந்தாள். கட்டிலின் முன்னால் ஸ்டூலைப் போட்டு அதில் உணவு பரிமாறப் பட்டிருக்க துண்டினால் முகம் துடைத்துக் கொண்டே வந்து அமர்ந்தவன் சொன்னான்.
“இதோ பார் காவ்யா.. மாடியில் பூராவும் ஒரே வீடாய் பெரிதாக இருக்கும். வீட்டை காலி பண்ணச் சொல்லி விட்டேன். ஒரு மாதம் டைம் கேட்டிருக்காங்க. அவங்க காலி பண்ணியதும் வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர், கிச்சனுக்கு தேவையான பாத்திரங்கள் எல்லாம் வாங்கி விடலாம். இப்போது இந்த ஒரு ரூமில் நாம் புதிதாய் எதை வாங்கினாலும் அது வேஸ்ட்தான். நீ சமையல் பண்ணுகிறேன்னு அலட்டிக்க வேண்டாம். இந்த ஒரு மாதமும் நாம் மாமி மெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரவழைத்துக் கொள்ளலாம். நீ ரெஸ்ட் எடு.”
“அது சரி கல்யாணம் ஆன பின்னாலும் மெஸ் சாப்பாடா..? யாராவது கேட்டால் சிரிக்கப் போறாங்க. இது நேற்று சாயந்திரம் வரைதான் பிரம்மச்சாரி வீடு..” இயல்பாய் பேசிக் கொண்டிருந்தவள் அவனது பார்வை துளைக்கவும் வாயடைத்துப் போனாள்.
“சொல்லு காவ்யா.. நேற்று வரை இது பிரம்மச்சாரி வீடு. இன்று.. இது யார் வீடு..? மாறிவிட்டதா..?” என்று குற்றம் சாட்டும் குரலில் வினவினான் அவன்.
காவ்யா அவளது வழக்கமாய் பற்களால் கீழ் உதடுகளைக் கடித்தவளாய் சங்கடத்துடன் முகம் திருப்பிக் கொண்டாள். அவன் ஸ்டூலை நகர்த்தும் சத்தம் கேட்டு அவசரமாய் அவனருகில் வந்தவள்,
“தொட்டுக் கொள்ளத் தக்காளிக் கூட்டு வைத்திருக்கிறேன்..” என்றவாறு பரிமாற ஆரம்பித்தாள். அசோகன் மௌனமாய் சாப்பிட ஆரம்பித்தவன் உணவின் சுவையில் கவரப்பட்டவனாய்,
“பரவாயில்லையே சூப்பரா சமையல் பண்ணி யிருக்கியே..” என்று பாராட்டியவன் அவளை ஆழ்ந்த பார்வையால் பார்த்தபடி,
“கல்யாணத்துக்கு பின்னால் மெஸ்ஸில் சாப்பிட்டால் மட்டும்தான் சிரிப்பாங்களா..? கல்யாணம் ஆன பின்னாலும் பிரம்மச்சாரின்னா சிரிக்கமாட்டாங்களா..?” என்று கேட்டான்.
அவ்வளவுதான் காவ்யாவின் முகம் குங்குமமாய் சிவந்தேவிட்டது. முந்தானையை திருகியபடி தலை நிமிர முடியாமல் திணறியவளைப் பார்க்கும்போது மனத்தாங்கல் போய் சிரிப்பு வந்துவிட,
“சரி சரி. நீ தான் உலகத்தில் இல்லாத வழக்கமாய் புருசன் கூட பழகிப் பார்த்த பின்தான்னு அவகாசம் கேட்டிருக்கியே. விடு. பழகிப் பார்த்திட்டால் போச்சு…” என்றான். சிரமப்பட்டு இயல்பு நிலைக்கு குரலைக் கொண்டு வந்த காவ்யா, “வீட்டுக்கு சாமான் வேண்டும் லிஸ்ட் தரேன். வாங்கிக் கொடுங்கள்.” என்றாள். “வீடா எது..?” என்றான் அசோகன். முறைத்துப் பார்த்த காவ்யா..
“ஏன் நாம் குடியிருக்கிறதைப் பார்த்தால் வீடாய் தெரியலையா..?” என்றாள்.
“இதுவா.. ஹஹா.. இது ரூம்..” என்று சிரித்தான் அசோகன்.
“எனக்கு இதுதான் வீடு. நான் கேட்கிறதை வாங்கிக் கொடுங்கன்னா கொடுங்க..”
“பிடிவாதமா காவ்யா..?” என்றான் ஒரு மாதிரிக் குரலில் அர்த்தத்துடன்.
“ஏன் நான் பிடிவாதம் பிடிக்கக்கூடாதா..? அதற்கு எனக்கு உரிமையில்லையா..?”
“உரிமையை நீதான் மறுக்கிறாயே..” மீண்டும் அவன் வம்புக்கு இழுக்க அவள் சிரித்து விட்டாள். சிரிப்பினூடே லிஸ்டை நீட்டினவள்,
“நீங்க எப்படி வாழ்வை ஆரம்பிக்கும்போது அடுத்த வீட்டில் இருக்கக் கூடாதுன்னு நினைக்கறீங்களோ. அப்படித்தான்.. நானும் நான் வந்த பின்னால் நாம் சாப்பிடும் சாப்பாடு நான் சமைத்த நம் வீட்டுச் சாப்பாடாக இருக்கணும்னு நினைக்கிறேன். கொஞ்ச நாள் எளிமையான சாப்பாடாக இருக்கும் சகித்துக் கொள்வீர்கள்தானே..”
“நீ வெறும் பழைய சாதம் போட்டு பச்சைமிளகாய் கொடுத்தாலும் சரிதான். எனக்கு அது தேவாமிர்தம்.”
என்று பெருமையுடன் பதிலளித்த அசோகன் அவள் நீட்டிய லிஸ்டை வாங்கிக் கொண்டான். மனைவியின் சுயமரியாதை அவனுக்கு நிறைவைத் தந்தது. தெரு முனையில் இருந்த கடையில் சாமான்களை வாங்கியவன் வீட்டிற்கு வந்து மாடியேறிய போது மாடிப்படியில் ளுகூனு பூத் ஜெராக்ஸ் கடை நடத்தும் கல்யாணசுந்தரம் சிரித்தான்.
“என்ன சார். புது மாப்பிள்ளை! அதுக்குள்ளே குடும்பப் பொறுப்பு வந்துவிட்டதா..?”
சிரிப்புடன் அங்கீகாரமாய் தலை அசைத்தவன் மாடியேறி ரூம் கதவைத் தட்டினான். காவ்யா திறந்ததும் உள்ளே போய் சாமான்களை கொடுத்தவன்,
“காவ்யா மதியம் சாப்பிட வரமாட்டேன். உனக்கு..” என்று கூற ஆரம்பிக்க,
“எனக்கு நான் பார்த்துக் கொள்வேன். கவலை வேண்டாம்.” என்றாள் காவ்யா.
“சரி. ஏஜென்ஸிக்குப் போனதும் டேவிட்டை அனுப்பி வைக்கிறேன். அவன் ஒரு வேனில் இரண்டு புதிய கட்டில்களையும் ஒரு பீரோவையும் இறக்கி வைத்துவிட்டு இந்தப் பழைய கட்டிலை எடுத்துப் போய்விடுவான். யாரென்று தெரியாமல் பயந்து விடாதே.”
“எதுக்கு இப்போ அதெல்லாம்..”
“நீ தரையில் எறும்பு மத்தியில் படுத்திருக்கணுமா..? எப்படியும் நாம் புதிதாய் இதையெல்லாம் வாங்கித்தானே ஆகவேண்டும். என் டிரஸ்ஸையெல்லாம் வைக்க இந்த சுவர் அலமாரி போதும். ஆனால் இப்போது கல்யாணப் பட்டுப்புடவைகள் உன் நகைகளை வைக்க பீரோ வேண்டாமா,” என்று அசோகன் வினவ,
“ஆமாமில்லை,” என்று காவ்யா நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“இதுக்குத்தான் கொஞ்சம் கட்டினவன் பேச்சையும் கேட்கணும்கிறது.”
“கொஞ்சமென்ன நிறையவே கேட்கிறேன்.”
“அப்படியா நான் என்ன சொன்னாலும் கேட்பாயா..?” அவன் புருவத்தை இருமுறை உயர்த்திக் கேட்க காவ்யா முகம் சிவந்து முந்தானையை திருகலானாள் அவள். நிலையைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவன்,
“சரி சரி சேலையை கிழித்து விடாதே. இந்தா இதைப் பிடி…” என்று ஒரு கவரைக் கொடுத்தான். கேள்வியாய் பார்த்த காவ்யா அதைப் பிரிக்க உள்ளே பணமிருந்தது. “இப்போ எனக்கெதுக்கு பணம்..?”
“மாமியைக் கூட்டிக் கொண்டு போய் உனக்கு மாற்றுச் சேலைகளையும் மற்ற துணிகளையும் வாங்கிவிடு. இனி உமாவின் துணிகளை நீ உடுத்தக் கூடாது. அதை மாமி கிட்ட கொடுத்து தேவைப்படறவங்க யாருக்காவது கொடுத்து விடச் சொல்லு. நானே வாங்கியிருப்பேன். சேலை, நைட்டி மட்டும்தான் நான் வாங்க முடியும். மற்றவைகளை நீ பார்த்து வாங்கினால்தான் உனக்கு வசதி.”
“சரி போய் வாங்கி வந்து விடுகிறேன்.”
“அப்புறம் காவ்யா! உன் அம்மாவுக்கு நம்ம கல்யாணம் பத்தி எழுதிப் போட்டுவிடு. போனில் பேசலாம். அங்கே உன் அப்பாவோ, அண்ணனோ எடுத்துவிட்டால் தேவையில்லாத தகராறு வரும் என்பதோடு நீ சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போகும். உன் அம்மா அன்றைக்கு ரொம்பப் பதட்டப்பட்டாங்க காவ்யா. உனக்கு கல்யாணமாகி விட்டதுன்னு சொன்னால் கவலை குறையும். இன்னும் என்னைப்பற்றி நல்லதாக நாலு வார்த்தைகள் சேர்த்து எழுதிப் போட்டால் கவலை குறையும்.”
“உங்களைப் பற்றி நல்லதாக எழுதாமல் வேறு எப்படி எழுத முடியும்..?”
வெள்ளை மனத்துடன் காவ்யா கேட்க.. அசோகனின் மனம் அசைந்தது.
‘இது போதும் பெண்ணே.. உன் மனம் என்னருகில் இருக்கும்போது நீயும் என்னருகில் வந்துவிடுவாய்..’ நிறைவாய் சிரித்தவன், “போய் வரவா..?” என்று கொஞ்சலாய் கேட்க மென்மையான புன்னகையுடன் காவ்யா தலை அசைத்தாள். முதல்நாள் காலையில் ஒன்று சேர்ந்தவர்கள் போல இல்லாமல் காலம் காலமாய் வாழ்ந்தவர்கள் போல் இருவர் மனமும் உணர அசோகன் மெல்லிய சீழ்க்கையொழியோடு வேலைக்குக் கிளம்பினான்.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.