Chapter 19
இரவு வீடு திரும்பும்போது மனதில் கடந்த சில நாட்களாக அரித்த வேதனை மறைந்து மனம் நிம்மதியாக இருந்தது. காவ்யாவை நிராதரவாக்கி விட்ட குற்றவுணர்வு இல்லாமல் அவள் தன் வீட்டில் தன் மனைவியென்ற சொந்தத்துடன் இருக்கிறாள்
என்ற உணர்வே மன அமைதியைத் தந்தது. அந்த அமைதியோடு கதவைத் தட்டினான். திறந்தவளோ எளிமையான புது நூல் புடவையில் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் ஒரு சங்கலியும், காதினில் சிறு தோடு, கைகளில் இரண்டு வளையல்கள் தவிர வேறு அணிகலன்கள் இல்லாமலேயே தேவதையாக நின்றாள். பின்னலிட்ட தலையில் வைத்திருந்த சிறு முல்லைச்சரம் கூட அவளுக்கு அலாதியான அழகைத் தந்தது. ‘பிரம்மன் படைப்பின் எல்லா அழகுகளையும் ஒன்று சேர்த்து இவளை உருவாக்கி விட்டாரோ’ என்று வியந்தவன் உள்ளே நுழைந்தவாறு,
“நகைகள் நிறைய வாங்கிக் கொடுத்திருக்கிறேனே எதுக்கு பூஜை போடவா..?” என்று கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் புதிராகச் சிரித்தாள்.
“அந்த வீட்டுக்குப் போனதும் போட்டுக் கொள்கிறேன்.”
“ஏன் இந்த ரூமும் உனக்கு வீடுதானே..” என்று சிரிப்புடன் வினவினவன் பேசிக்கொண்டே உடையை மாற்றினான். “குளித்து விட்டு வருகிறேன்.” என்று கூறி விட்டுச் சென்று அவன் குளித்து வருவதற்குள் காலையிலேயே செய்தது போலவே கட்டிலின் அருகே ஸ்டூலை வைத்து அதில் உணவு பரிமாற தயாராக இருந்தாள் காவ்யா. அவள் தோற்றத்தைப் போலவே எளிமையான ஆனால் சுவையான உணவு. சாதம் வடித்து சாம்பார் வைத்து அப்பளம் பொரித்திருந்தாள். தொட்டுக் கொள்ள ஊறுகாய் பருப்பு ரசம் வைத்திருந்தாள். கடைத் தயிர் வைத்திருந்தாள்.
“நாளைக்கு வீட்டுத் தயிர். இன்று மட்டும்தான் கடைத் தயிர்..” என்றாள். அவன் புன்னகையுடன், “அதனாலென்ன வீட்டுக்காரி சொன்னால் சரிதான்,” என்றான். சாப்பிட்டு முடித்தவுடன், “உண்மையிலேயே நல்லா இருக்கு சாப்பாடு,” என்று கூற, “பொய்யாய் கூடச் சொல்வீர்களா..?” என்று சிரித்தாலும் அவள் முகம் மலர்ந்துவிட்டது. தானும் சாப்பிட்டு, சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்ணியவள் அவனுக்கு பால் சுட வைத்துக் கொடுத்தாள். இரவு படுக்கும் முன்னர் பாலருந்திப் பழக்கமில்லாதவன் வியப்புடன் வாங்கிக் கொண்டான். வயிற்றுக்கு இதமாக பால் உள்ளே இறங்கியது மிக இதமாக இருந்தது. சிறு வயதிலிருந்து தாயில்லாப் பிள்ளையாக வளர்ந்தவன் அவன். கவனிக்க ஆளில்லாத காட்டு மரம் அவன். இன்று அவனுக்காக சமைத்து அவன் முகம் பார்த்து பரிமாறி அவள் கவனித்த விதம் மன நெகிழ்வைத் தந்தது.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க..” அவன் பால் சாப்பிட்ட தம்ளரை வாங்கிக் கொண்டே அவள் கேட்டாள். அவன் கண்கள் கலங்கின. அவள் பதறிப்போய்,
“என்னங்க.. ஏன் கலங்கறீங்க..” என்றாள்.
“இல்லை காவ்யா. தாய்க்கு பின் தாரம்கிறது எவ்வளவு பெரிய உண்மை..? அம்மா என்னைக் கவனித்துக் விட்டது நிழல்போல்தான் நினைவில் இருக்கிறது. இன்று நீ வயிறார நான் சாப்பிட சமைத்து..” எண்ணியதை சொல்லி முடிக்கும் முன்னர் அவள் கடிந்து கொண்டாள்.
“நல்லாத்தானிருக்கு நீங்க பேசுவது..? ஒரு மனைவி சமைத்து சாப்பாடு போடுவது பெரிய விசயமா.. தூங்குங்கள் பேசாமல்..”
அறையில் புதிதாய் வாங்கிய இரு கட்டில்களும் இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்தன. அழகாய் மெத்தை விரிப்பு வாங்கி விரித்திருந்தாள். அவளது பரிவான கவனிப்பில் கட்டில்களுக்கு இடையேயான இடைவெளி அவனுக்கு ஒரு பொருட்டாக தோன்றவில்லை. கட்டிலில் அமர்ந்து தலையணையை மடியில் வைத்து அதில் கைகளை ஊன்றிக் கொண்டவன் அறையைச் சுற்றிப் பார்வையை சுழலவிட்டான். அறையின் வாசலுக்கும், ஜன்னல்களுக்கும் கெட்டியான திரைச்சீலை மாட்டி யிருந்தாள்.
“இது என்ன புதிதாய் வாங்கினியா..?”
“ஆமாம். இன்று ஷாப்பிங் போனபோது வாங்கி வந்தேன்.”
“வெரிகுட்.. அறையை சுத்தமா மாற்றிவிட்டாயே. அடையாளமே தெரியவில்லை. என் ரூம் கூட இவ்வளவு அழகாய் மாறும்ன்னு நான் நினைக்கவே இல்லை. ம்ம்ம்.. பெண்ணின் கை பட்டால் மந்திரக்கோல் பட்டதுபோல் இடமே மாறிவிடும்போல..” என்றவன் சிரித்துக் கொண்டான்.
அவளது கட்டிலில் அவன் புறமாக திரும்பி படுத்துக் கொண்டு அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவள், “என்ன சிரிப்பு..?” என்று கேட்டாள்.
“இல்லை.. காலையில் கண் விழித்ததும் சுப்ரபாதப் பாட்டும் ஊதுபத்தி வாசனையுமா இருந்ததா..? ஒரு வேளை கோவிலில் படுத்துக் தூங்கி விட்டோமோ என்று நினைத்துவிட்டேன்..” என்று அவன் கூற பொங்கி வந்த சிரிப்புடன், “அப்புறம்..?” என்றாள் காவ்யா.
“அப்புறமென்ன என் கண் முன் காபி கோப்பையை நீட்டினாயா..? கடவுள் காபியெல்லாம் கொடுக்க மாட்டாரேன்னு தெளிஞ்சேன்னு வைய்யேன்.”
காவ்யா வாய்விட்டு கலகலவென்று சிரித்தாள். அவள் சிரிப்பதை ரசித்தவன்,
“ஆனால் ஒண்ணு உண்மை காவ்யா..?” என்றான்.
“என்னவாம்..?” என்றாள் அவள் உரையாடலின் சுவாரஸ்யத்தில்.
“உன்னை மாதிரி தேவதை கால்பட்டால் வீடு கோவிலாகத்தான் ஆகிவிடும்.”
“கேலி செய்யாமல் படுத்துத் தூங்குகிறீர்களா..?” என்று முகம் சிவக்க அவள் கூறினாள்.
“ஆனால் உனக்கெதுக்கு இந்த வேலை..? அந்த வீட்டுக்குப் போன பின்னால் வேலைக்கு ஆள் வைத்து விடுவேன். அங்கே இதையெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாதா..? இப்ப ரெஸ்ட் எடுக்கலாமில்ல..?”
“எனக்கும் பொழுது போகணுமில்ல..?”
“அதுவும் சரிதான். இந்த ரூமில் பாதுகாப்பில்லைன்னு டி.வி. கூட நான் வைத்துக் கொள்ளவில்லை….” என்றவன் அவள் படக்கென்று நிமிர்ந்து பார்ப்பதைக் கண்டதும், “என்னடா..?” என்றான். அவனது அந்த அழைப்பில் குளிர்ந்தவள் பார்வை கதவில் பதிந்து மீண்டது.
“ஒன்றுமில்லை. தூக்கம் வருகிறது. தூங்கலாமா..?”
“ம்ம்.. தூங்கலாம்.. குட்நைட் காவ்யா..” என்றபடி எழுந்து விளக்கை அணைத்து விட்டுப் படுத்தான் அசோகன்.
வெகுநாட்களுக்கு பின் கிடைத்த அமைதியாய் இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும் ஒருவரின் அருகாமையில் மற்றவர் இருக்கும் நிறைவிலும் நிம்மதியாய் ஒரே கூரையின் கீழ் உறங்கினார்கள்.
“பால் பொங்கி விட்டது காவ்யா.. இறக்கி வைத்து சுவாமியின் முன் விளக்கேற்றி வணங்கு,” என்றாள் உமா. பால் பொங்கிய பாத்திரத்தை காவ்யா இறக்கி வைத்து விட்டுக் கடவுள் படத்தின் முன் விளக்கேற்ற மெஸ் மாமி பால் பாத்திரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் இட்டாள். உமாவும், மெஸ் மாமியும் பால் பாத்திரத்தை சுவாமி படத்தின் முன் வைத்துவிட்டு முன்னறைக்கு வந்தார்கள்.
“எல்லோரும் வாங்க. பால்காய்ச்சியாச்சு,” என்று உமா கூறவும் எல்லோரும் எழுந்து சாமி கும்பிட வந்தார்கள். தியாகராஜனின் கையிலிருந்த அவனது குழந்தை தாயிடம் தாவ, உமா வாங்கிக் கொண்டாள். மங்களம் வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, “பரவாயில்லைடா அசோகா, புதிது போல் ஆக்கிவிட்டாய்,” என்றாள்.
மாடி வீட்டில் குடியிருந்தவர் வீட்டைக் காலி பண்ணி கொடுத்து விட்டார். அசோகன், காவ்யாவிடம் கலந்து பேசி அவளுக்கு பிடித்த வர்ணங்களைப் பூசி புதிது போல் வீட்டை ஆக்கியிருந்தான். வீட்டிற்கு தேவையான சோபா, டைனில் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள் மற்றும் சமையலறைக்கு தேவையான மிக்ஸி முதல் பிரிட்ஜ் வரை அனைத்து பர்னிச்சர்களையும் வாங்கிப் போட்டிருந்தான். அவற்றை உரிய இடங்களில் வைத்து இல்லத்தை மேலும் அழகூட்டி இருந்தாள் காவ்யா. சுவர்களில் அழகிய ஓவியங்களை வாங்கி மாட்டி வைத்திருந்தாள்.
“அடடா அசோகா உன் ஆம்படையா கண்ணுக்கு மட்டும் ரதியில்லடா.. அவ காலடி எடுத்து வைத்து உன் ஆத்தையே அழகாக்கிட்டா.. காசை காசுன்னு பார்க்காமல் நீ சாமான்களை வாங்கிப் போட்டு என்னடா ஆச்சு.. எதை எங்கே வைத்தால் அழகாயிருக்கும்ன்னு உனக்கு தோணுச்சோ. அதுதான் பொம்மனாட்டி இருக்கிற அகம்கிறது..” மெஸ் மாமி வாயார மனமார பாராட்டினாள்.
மங்களம் பெருமையாய் காவ்யாவைப் பார்த்து புன்னகைத்தாள். காவ்யாவோ “போங்க மாமி.. எப்பப் பார்த்தாலும் என்னை ஏதாவது சொல்லிக்கிட்டு…” என்று வெட்கத்துடன் சிணுங்கினாள். அசோகன் அதை ரசிக்க உமா காட்டிய ஜாடையில் அசோகனைக் கவனித்த தியாகராஜன் அவனை ரசிக்க ஆரம்பித்தான்.
“உன் அகம் மட்டுமில்லைடி குழந்தே.. உன் ஆத்துக் காரனையும் பாரு எப்படி மினுமினுக்கிறான். மாமி சாப்பாட்டில் என் பிள்ளையாண்டன் வத்திப்போய் கிடந்தான். ஆத்துக்காரி கவனிப்பில் கன்னத்திலே சதை போட்டு உடம்பெல்லாம் உப்பி ஜம்முன்னு ஆயிட்டானே.” என்றாள் மாமி கரிசனையுடன்.
உள்ளே புதிதாக வாங்கியிருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன்னாடி நின்று கொண்டிருந்த அசோகன் ஆளுயுரக் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக் கொண்டான். மாமி சொல்வது உண்மையென்பதை சதைப்பிடிப்பான அவனது தோற்றம் தெரிவித்தது. வெளியே ஹாலில் மாமி நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
“பெத்தவா இல்லாம தானாய் வளர்ந்த குழந்தைடி. அவன் சாப்பிட்டதை யார் கண்டா..? சாப்பிட்டாததை யார் கண்டா..? நல்லது கெட்டதை யார் கேட்டா..? இப்ப பெத்த தாய்க்கும் மேலா நீ கவனிச்சுக்கறே.. தாய்க்கு பின்னால தாரம்கிறது உன் வகையில் சரியாகத்தாண்டி இருக்கு..” என்றாள் மாமி மெச்சுதலாய்.
இருபது வயது வரை பெற்றவர்கள் கவனிப்பில் வளர்ந்த தன்னாலேயே இந்தப் பிரிவை தாங்க முடிய வில்லையே.. மனம் பதறுகின்றது.. தன்னுடைய பெற்றோராவது உயிரோடு இருக்கின்றார்கள். என்றாவது ஒருநாள் பார்த்துக் கொள்ளலாம். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவனுக்கு எப்படியிருக்கும்..? தாய்மை உணர்வு அவள் இதயத்தில் முட்டி எழுந்தது. அசோகனைப் பார்க்கும்போது, ‘நீ இத்தனை கஷ்டப்பட்டா தனியாக வளர்ந்தாய்..?’ என்ற ஆதுரம் பொங்கியது. சிந்தனையோடு மாமியின் உதவியுடன் மங்களத்தின் மேற்பார்வையில் விரைவாய் விருந்தை சமைத்தாள். அனைவருக்கும் டைனிங் டேபிளில் தலைவாழை இலை போட்டு அப்பளம் வடை, பாயசத்துடன் விருந்து பறிமாறினாள். சாப்பிட்டு முடித்தவுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த மங்களத்தின் குடும்பம் விடை பெற்றுச் சென்றுவிட மாமியும் கடைக்குப் போவதற்காக கிளம்பிப் போய்விட அசோகனும் டிராவல் ஏஜென்ஸிக்கு கிளம்பினான். காவ்யா, “என்னங்க…” என்று தயக்கமாய் அழைக்க கேள்வியாக நிமிர்ந்து பார்த்தான் அசோகன்.
“என்ன காவ்யா பணம் எதுவும் வேணுமா..?”
“பணம் வேண்டாம். எனக்கு கொஞ்சம் வெளியே போகணும்..?”
“மாமியைக் கூப்பிட்டுக் கொண்டு போய்வா.. இதற்கெல்லாம் என்கிட்ட பெர்மிசன் வாங்கிட்டுத்தான் போகணுமா..? நீ மாமியோடு போய் விட்டுவா..?”
“மாமிதான் எனக்கு தாலிகட்டியிருக்கிறார்களா..?” காவ்யா வெடுக்கென்று வினவ அசோகனின் உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது.
“என்னடி சொன்னே..?” அவன் கண்கள் மின்ன கேட்க, அவள் வெட்கத்தில் முகம் சிவக்க முகம் திருப்பிக் கொண்டாள். அவள் முகத்தை திருப்பிக் கொண்டாலும் அகத்தில் தனக்கு இடம் கொடுத்து விட்டாளென்பதை அறிந்தவனாய் அசோகன் அவளை நெருங்கினான். கனிவு வயப்பட்ட இருவரும் காதல் வயப்பட்டு விட்டதை அறிந்த காலம் நகைப்புடன் நகர்ந்தது.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.