Chapter 21

0Shares

வீட்டு வாசலில் இறக்கிவிட்ட அசோகன் போய் வருகிறேனென்று கூடச் சொல்லாமல் காரை கிளப்பிக் கொண்டு போக முயல காவ்யா தடுத்தாள்.

“கோவிலுக்கு போய் வந்தால் வீட்டில் ஒரு நிமிசமாவது உட்கார்ந்து விட்டுப் போகணும்.”

தோளைக் குலுக்கினாலும் அவள் பேச்சை அலட்சியம் செய்யாமல் அவளைத் தொடர்ந்து வந்து ஹாலில் அமர்ந்தான் அவன். மின்விசிறியை சுழலவிட்டு விட்டு சென்று பிரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தந்தாள் காவ்யா.. வியப்பான பார்வையுடன் வாங்கிப் பருகினான். குளிர்ச்சியான தண்ணீர் தொண்டையில் இறங்கி தாகம் தணித்தது.

“வெளியே போய்விட்டு வந்தால் நாக்கு வரளும். தண்ணீர் தாகம்ன்னு தெரியாது. இப்போ நீ கொடுக்கவும் ரொம்ப ரிலிஃபா இருக்கு. இந்த பழக்கெல்லாம் எப்படி பழகினே..?”

“இது என்ன கேள்வி..? விவரம் தெரிந்த வயதிலிருந்து அம்மா சொல்லிக் கொடுத்ததுதான்.”

“ஸோ. எங்கேயிருந்தாலும். யார் உன்னை என்ன செய்தாலும் பிறந்த வீட்டை மறக்கமாட்ட..?”

காவ்யா எதையோ சொல்ல வாயெடுக்க அதைக் கவனிக்காதவன் போல் அவன் விருட்டேன்று எழுந்து வெளியே சென்று விட்டான். ஸ்தம்பித்துவிட்ட காவ்யா பயந்துவிட்டாள். எப்படி அவனுக்குப் புரியவைப்பது..? என்னவென்று சொல்வது..? பெற்றவரும், உடன் பிறந்தவனும் நமது நலம் விரும்பிகள் என்று சொல்ல வாய்வரை வரும் வார்த்தைகளை எப்படி வெளியில் உதிர்ப்பது..? வழி தெரியாமல் தவித்தாள். ‘காலம் வரும் என்று அப்பா சொன்னாராமே.. என்று அந்தக் காலம் வரும்..?’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள்.

“இருட்டிவிட்டது விளக்கைக் கூடப் போடாமல் என்ன பெருமூச்சு..? பொழுது சாயும் நேரத்தில் வீட்டில் வாழ வந்த பெண் விளக்கைப் போடாமல் ஏக்கப் பெருமூச்சு விட வேண்டுமென்று தான் உன் அம்மா சொல்லி வளர்த்தார்களா..?” என்ற குத்தல் மொழிகளைத் தொடர்ந்து அறையில் விளக்கு எரிந்தது. அசோகன் நின்று கொண்டிருந்தான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த காவ்யாவிற்கு அவன் தன் அம்மாவை இழுத்தது கோபத்தை உண்டு பண்ணியது. இருந்தாலும் இயல்பான பொறுமையுடன் காபி போட சமையலறைக்குச் சென்றாள். பின்னோடு வந்தவன்,

“புருசன் கேட்டால் சட்டை செய்யாமல் போகணுமின்னு யார் சொல்லி வளர்த்தார்கள்..? உன் அப்பாவும், அண்ணனுமா.?” என்றான்.

காவ்யா திரும்பி முறைத்தாள். மீண்டும் மௌனமாகி வேலையைத் தொடர்ந்தாள். சூடான காபியை கோப்பையில் ஊற்றி அவனிடம் நீட்ட எரிச்சலுடன் அவளை நோக்கியபடி வாங்கிப் பருகியவன் அப்படியே சமையல் மேடையில் வைத்துவிட்டு,

“கோபம் வந்தால் நேரே பேசி விடுவது என் வழக்கம். ஆனால் பிடிக்காத புருசனுக்கு கொதிக்கற காபியைக் கொடுக்கிறதுதான் உன் குடும்ப வழக்கமா..?” என்று கேட்டான். இப்போது காவ்யா வெகுண்டாள்.

“என் குடும்பத்தைப் பற்றி இன்று அதிகம் பேசுகிறீர்கள். பிடிக்காத மனைவின்னு அபாண்டமாய் பேசி துன்புறுத்துவது உங்கள் வழக்கமாக இருக்கலாம். எனக்கு அந்த வழக்கம் இல்லை.”

“இப்போது சொன்னாயே இது மிகச்சரி. அப்பேர்ப்பட்ட உன் அப்பாவுடனே உன் அம்மா குடும்பம் நடத்தி முப்பது வருடங்களாய் குப்பை கொட்டியிருக்கும் போது.. நீ வெற்றிகரமாய் குடும்பம் நடத்தி விடுவாய்.. ஒரு விசயத்தை ஒத்துக் கொண்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி.”

“எதற்குன்னு நான் கேட்காவிட்டால் நீங்கள் அதற்கும் ஏதாவது சொல்லி விடுவீர்கள். இன்று என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதுதான் உங்கள் குறிக்கோளாக இருக்கிறது. எனவே கேட்டு விடுகிறேன். எதற்கு..?”

“அதுதான். என்னைப் பிடிக்காத புருசனென்று ஒத்துக் கொண்டதற்கு.”

அசோகன் அவிழ்த்துப் போட்ட ஷூவில் காலை நுழைத்துக் கொண்டு வெளியேறி மாடிப்படி இறங்கிப் போய்விட்டான். காவ்யா ஓடிச்சென்று பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள். அவன் தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு புயல் வேகத்தில் போவது தெரிந்தது. காவ்யாவிற்கு அழுகை ஆரம்பித்தது. இன்று எப்பேர்ப்பட்ட நாள்..? புது வீடு பால்காய்ச்சி குடித்தனம் வந்திருக் கிறார்கள். அத்தோடு.. காலையில் வீடு வந்திருந்த உறவினர் சென்றபின் நேர்ந்த அற்புத அனுபவம்.. இன்று போய் இப்படியா இருமனமும் விரிசல் காண வேண்டும்..? பெருமாளே! இது என்ன சோதனை தாங்க முடியாத வேதனை. பெற்றவர்களின் பேச்சை அவள் எடுக்கவே இல்லையே.. அப்பா தெரிந்து தான் சொல்லியிருக்கிறார். காலம்தான் அசோகனின் காயத்தை ஆற்றும் என்று. காத்திருக்கலாம் என்றுதானே அவளும் நினைத்தாள். இப்படித் தண்டிக்கிறானே.. ஆனால் காவ்யா அறியமாட்டாள். அசோகனின் சினத்திற்குக் காரணம் தன் பெற்றோர் பற்றிய பேச்சை ஹரிதா பேசியது அல்ல… ‘வினோத்’ என்றவனைப் பற்றி ஹரிதா பேசிய பேச்சுத்தான் அவனது கோபத்தை தூண்டிவிட்டிருக்கிறது என்பதை.

அசோகன் நல்லவன். மிகமிக நல்லவன். அதே சமயம் பிடிவாதக்காரன். கோபக்காரன். அவனுடையது என்பது உயிரற்ற வீடு, வயல், சொத்து, பணமாகத்தான் இதுவரை 

இருந்தது. இளமையில் பெற்றோரை இழந்தவனுக்கு கிடைத்த நட்புக்கள் அவன் வாழ்வை இதமாக்கியிருக்கலாம். ஆனால் சோலையாக்கவில்லை. தனக்கென்று சொந்தமென்று உயிரோடு உள்ள உறவாய் அமையக் கொடுத்து வைக்காதவனின் வாழ்வில் பாலை வனச் சோலையாய் காவ்யா வந்தாள். அவளுக்கு எதுவுமில்லையென்ற பரிதாபம் தோன்றி அவளைக் காக்கும் பொறுப்பை ஏற்றவனுக்கு தனக்குத்தான் எதுவுமில்லை. தன்னைப் போற்றிக் காக்கும் சொந்தமாய், உறவாய், உயிராய், வாழ்க்கையாய் அவள் வந்திருக்கிறாள் என்பது பிடிபட்ட போது அவள் மேலிருந்த அன்பு, காதலாகி, காதல் அவள் தனக்கு மட்டும் சொந்தமென்று கொண்டாடும் உரிமையாகி அவளை சிறைவைத்தது. இன்று அவளுக்கு இவ்வளவு நடந்தும் பெற்றவர், உடன்பிறந்தவன் மேலிருக்கும் பாசம் போகவில்லையென்பது மனத்தாங்கலா யிருக்கும்போது அவளை தனக்கு முன்னால் ஒருவன் விரும்பியிருக்கிறான், அதை அவளிடம் தெரிவித்தும் இருக்கிறான் என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் காவ்யாவை ஒருவன் நினைத்ததாவது.. என்ற கோபம்  தலைக்கேற அந்தக் கோபம் ஹரிதா ‘வினோத்’ என்பவனைப் பற்றிப் பேசும்போது கடிந்து கொள்ளாத காவ்யாவின் பக்கம் திரும்பியது. மனதிலிருப்பதை வெளிக்காட்ட முடியாமல் அவளைப் புண்படப் பேசினான். அவளோடு வேண்டும் என்றே சண்டை வளர்த்தான்.

இரவு வெகுநேரம் வரை அசோகன் திரும்பவில்லை. காவ்யா சாப்பிடாமல் காத்திருந்தாள்.. கணவன் வந்தவுடன் உணவு பரிமாறினாள். அவன் மௌனமாகச் சாப்பிட்டு அவளோடு ஓர் வார்த்தை கூடப் பேசாமல் சென்று படுத்துவிட்டான். அவனது விலகலைக் கண்டும் மனம் நொந்தவள் அமைதியின்றி தானும் உறங்கச் சென்றாள்.

அடுத்தடுத்த தினங்களில் இருவரிடையேயும் ‘மௌன ராகம்’ கொடிகட்டிப் பறந்தது. அவசியமற்ற வார்த்தைகள் பேசாமல் ‘தாமரையிலைத் தண்ணீர்’ போல ஒருவருக்கொருவர் ஒட்டாமல் வாழ்க்கையை நடத்தினர்.

திருமணமான முதல் இரவில் அவள் ஒரு மாதகால அவகாசம் கேட்டதற்கு இப்போது புதுவிளக்கம் கண்டு பிடித்தான் அசோகன். வினோத்தை மறந்து தன்னை அவள் மனம் ஏற்கவே ஒருமாதகால அவகாசம் கேட்டாள் என்று நம்பினான்.

கணவனே ஆனாலும் சுயமரியாதையை விட்டு விட்டு எப்படி வாழ்வது..? என்ற மனக்குமைச்சல் காவ்யாவிற்கு. நெருங்கி, நெருங்கி அவள் போனாலும் அவன் விலகி விலகிப் போவது போல் தோன்ற அவளது இயல்பான சங்கோஜ சுபாவத்தால் அவளும் தனக்குள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு சுருங்கிவிட்டாள்.

அவனது தேவைகளை கவனிப்பதில் ஒரு குறையும் வைப்பதில்லை காவ்யா. அவனுக்கான துணிகளை கடைகளுக்குப் போய் அவள்தான் வாங்கி வருகிறாள். அவை அவனுக்கு மிகப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும். அவன் குளித்து வருமுன்னர் அவன் அன்று உடுத்தவேண்டிய உடைகளை பொருத்தமானதாக எடுத்து வைத்துவிடுவாள். ஷூ பாலிஷ் போடப்பட்டு அன்றன்று துவைக்கப்பட்ட சாக்ஸோடு தயாராக இருக்கும். தோற்றத்தில் அக்கறைகாட்டாதவனை ஜாடை பேசி தினந்தோறும் ஷேவ் செய்ய வைத்தாள். மதிய உணவிற்கு அவன் வராவிட்டால் அவள் சாப்பிடமாட்டாளென்பதை அறிந்து வைத்திருந்தவன் ஒழுங்காக வந்து சாப்பிட்டுச் செல்லுமாறு அவனை வழக்கப்படுத்தியிருந்தாள். இதமான நேரங்களும் இடையில் வந்து போகாமல் இல்லை.

அன்று அப்படித்தான் குளித்துவிட்டு வந்தவனுக்கு உடைகள் தயாராய் எடுத்து வைக்கப்பட்டிருக்க லேசான மனத்தோடு அவற்றை எடுத்துப் பார்த்தான். கிரிம்கலர் பேண்ட். மெரூன் கலர் சர்ட். புன்முறுவலோடு அணிந்து கிளம்பத் தயாராகி வாசல் கதவைத் திறக்கப் போனவன், “ச்சை..” என்று அழுத்துக் கொண்டான். சட்டையின் பட்டன் ஒன்று அறுந்து விழுந்திருந்தது. இனி சட்டை  தேடி எடுத்து மாற்ற வேண்டும் என்று சலித்தபடி அவன் ஷூவை அவிழ்க்க முனையும் போது “ஒரு நிமிசம்!” என்ற படி காவ்யா அருகில் வந்தாள். கையில் ஊசி, நூல் வைத்திருந்தாள். அறுந்து விழுந்திருந்த பட்டனை எடுத்து அவன் சட்டையில் வைத்து வினாடியில் தைத்து முடித்து விட்டாள். அவள் நெருங்கி விலகியபோது வந்த முல்லை மலரின் வாசம் அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல மனம் மயங்கியவன் கிறக்கமாய் “போய் வரவா..?” என்றான். மலரெனும் சிரிப்போடு அவள் தலை அசைத்தாள். பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று தன் வண்டியை எடுத்தவன் மனம் வேதனைப்பட்டது. அந்த வினோத் கடன்காரனுக்கு சைட் அடிக்க வேறு பெண் கிடைக்கவில்லையா..? அவனது காவ்யாதான் கிடைத்தாளா என்று பொறுமியபடி வண்டியை எடுத்தவன் எதிரே சிரித்த முகமாய் வந்த மெஸ் மாமியை கவனிக்காமல் போய் விட்டான். அசோகனின் குழப்பமான நிலைமையை நொடியில் கணித்த மெஸ் மாமி யோசனையுடன் மாடியேறினாள். காலிங்பெல்லை அழுத்தவும் கதவைத் திறந்த காவ்யாவைக் கண்டதும், “என்னடி மாட்டுப் பெண்ணே! என்ன பண்ணின்டு இருக்கே..” என்று கேட்டபடி உள்ளே போனாள்.

“வாங்க மாமி உட்காருங்க,” என்று காவ்யா சிரித்தபடி உபசரித்துவிட்டு எதிரேயிருந்த சோபாவில் அமர,

“இன்னைக்கு மெஸ்ஸில் காலை வேலையெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடுத்து. உன்னை ஒரு எட்டுப் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன். சித்த நாழி உன்கிட்ட பேசிக் கிட்டு இருந்தாத் தேவலை. சமையல் வேலை ஏதும் இருக்கோ..” என்றாள் மாமி.

“இன்னும் ஒன் அவர் கழித்து ஆரம்பித்தால் போதும் மாமி. நீங்க சொல்லுங்க..”

“பிள்ளையாண்டன் முகத்தில் சுரத்தேயில்லாம நான் வர்றதைக் கூடக் கவனிக்காம வண்டியை எடுத்துட்டுப் போறான். எதித்தாப்புல பார்த்திட்டுத்தாண்டி வரேன். கொஞ்ச நாளா நானும் பார்க்கிறேன் அசோகன் எதையோ மனசில போட்டுக் குழம்பிக்கிட்டு இருக்காப்புல இருக்கே. என்னடி விசயம். ஆம்படையானை நன்னா கவனிக்கிறயா இல்லை அம்போன்னு அவன் பாட்டுக்கு போக வர இருக்கட்டும்ன்னு விட்டுட்டியா..?”

“ஐயோ என்ன மாமி இப்படிப் பேசுறீங்க. நானாவது அவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாவது. அவர் ஏதோ நினைவில் உங்களைக் கவனிக்காமல் போனால் என்மேல் பழியா..?” என்று மழுப்பலாய் சிரித்தாள் காவ்யா.

“யாருகிட்டடி மாட்டுப் பெண்ணே காதுகுத்தறே. நான் உன்னை மாதிரி பொம்மனாட்டிகளை தெரிந்தவ தாண்டி. என் புத்திக்கு சந்தேகம் வந்தா ஏதோ நடந்திருக்காம இருக்காது. சொல்லு. அசோகன் தினமும் ராத்திரிக்கு எத்தனை மணிக்கு வர்றான்.”

“அது தினமும் லேட்டாத்தான்.. ஒரு பத்தரை பதினொரு மணிக்குத்தான் வருகிறார்.”

“ஏண்டிம்மா. நீயென்ன பல்லுப் போன கிழவியா..? வயசா போயிடுத்து..? புதுசா கல்யாணமானவ ஒரு சினிமா, பீச்சுன்னு போவாள்ன்னு கண்டோம். அதுவுமில்லைன்னா நாள் கிழமைன்னா கோவிலுக்காவது போவள்ன்னு பார்த்தா இங்கே அதுவுமில்லையே. ஏண்டிம்மா, தெரியாமல்தான் கேட்கிறேன். பொம்மனாட்டி பாட்டுக்கு ஆத்துக்குள்ளே அடுக்களையே கதின்னு கிடக்க, ஆம்படையான் ராத்தூங்க மட்டும் வீட்டுக்கு வந்தால் கேட்க நன்னாவே இல்லைடி. இதுதான் நீ குடித்தனம் பண்ற லட்சணமா..?”

“அவருக்கு வேலை அதிகம். மாமி. அதனால்தான் லேட்டா வர்றார்.”

“அப்படின்னு நீ சொன்னா நான் நம்பிடணுமா..? எங்கானும் ஷாப்பிங் போகணுமின்னா என்னோட பிராணனை வாங்கி தொணைக்கு அழைச்சுண்டு போற.. அந்த ஷாப்பிங்கை ஆத்துக்காரனோடு போய் முடிக்கக் கூடாதோ..”

எப்படிப் போக என்று காவ்யாவிற்கு ஆற்றாமையாய் வந்தது. சுயமரியாதையை விட்டுவிட்டு, அவனிடம் எப்படிக் காதலை யாசிப்பது..? அவளது மனதைப் படித்தவள் போல,

“ஆம்படையான்கிட்ட என்னடி சுயமரியாதை வேண்டிக்கிடக்கு..?” என்றாள் மாமி. மெஸ் மாமி அதை மட்டுமா கூறினாள். குருஷேத்திர யுத்தத்தில் படைக் கருவிகளை தூக்கி எறிந்த பார்த்தனுக்கு சாரதியாய் கீதையை உபதேசம் செய்த பார்த்தசாரதி போல் காவ்யாவுக்கு உபதேசம் செய்து வழிகாட்டினாள். கண்ணனின் உரையைக் கேட்டு காண்டிபம் எடுத்த அர்ஜூனன் போல் மாமியின் உரையைப் கேட்டு போர்க்கொடி தூக்கினாள் காவ்யா. அன்று இரவு வீடு திரும்பிய அசோகனிடம் போர் முரசு கொட்டினாள். இருவருக்கும் இடையே மூண்ட வார்த்தை யுத்தத்தில் அவளும் வென்றாள். அவனும் வென்றான். அவர்களுடைய காதலுல் வென்றது.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link