Chapter 23
அர்ச்சகர் வந்து எல்லோரிடமும் இருந்து அர்ச்சனைத் தட்டைப் பெற்றுக் கொண்டார். பர்வதத்தின் முறை வந்த போது கொடுத்து விட்டு ‘காவ்யா, ரோகிணி நட்சத்திரம்’ என்றாள். பக்கத்தில் நின்றிருந்த பக்கத்து வீட்டு சந்தானலட்சுமி.
“என்ன பர்வதம் கோவிலுக்குப் போகலாம் வாக்கான்னே. வந்தால் காவ்யா பெயருக்கு அர்ச்சனை செய்கிற. சரிவிடு. பெத்த மனசு பித்து. பிள்ளை மனசு கல்லுன்னு அவள் பாட்டுக்கு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டாலும் உன் மனசு பதறத்தானே செய்யும். ஆனால் இன்னைக்குன்னு ஏன் உன் மகள் பெயருக்கு அர்ச்சனை செய்கிற..? இன்னைக்கு அவள் பிறந்த நாளுமில்லையே. இருபது வருசமா ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீடுகளில் குடியிருக்கிறோம். இது கூட எனக்குத் தெரியாதா..?” என்று வினவினாள்.
பர்வதம் புன்னகையுடன். “ஆமாக்கா. இன்று காவ்யாவின் பிறந்த நாள் இல்லை. அவளுக்குன்னு ஒரு குழந்தை பிறக்கப் போகுதுன்னு செய்தி தெரிஞ்ச நாள். எங்க காவ்யா உண்டாகியிருக்காளாம்..” என்றாள்.
“அப்படியா சந்தோசம். ஆமாம் உனக்கெப்படித் தெரியும்..?”
“காவ்யாதான் வாரத்திற்கு இரண்டு தடவை லெட்டர் போடுகிறாளே..”
“அதுதான் சரி. வீட்டில் ஆம்பளைகள் முறுக்கிக் கிட்டு இருக்கிறாப்புல பொம்பளைங்க நாமளும் இருக்க முடியாதுல்ல.. உன் மகளுக்குப் பத்திரமாய் எப்படி இருக்கணும்னு எழுதிப் போட்டு விடு.”
“போடணும்க்கா. ஆனால் என் கையால் ஆக்கிப் போட்டு என் தங்கத்தை உள்ளங்கையில் வைத்துக் தாங்க எனக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சே..”
“யாருடி இவ.. நேரம் காலம் புரியாம பேசிக்கிட்டு இப்பத்தான் அவ உண்டாகியிருக்கான்னு சொல்லியிருக்க இல்ல. நாளைக்குப் பேரனோ, பேத்தியோ பிறந்து விட்டால் உன் புருசனும், மகனும், தாத்தன், தாய்மாமன் சீர் செய்ய பறந்து போய் கூட்டி வந்து விடுவார்கள். பச்சை மண்ணு முகத்தைப் பார்த்தால் பத்தும் பறந்து போய் விடுங்கறப்போ கோபம் மட்டும் எப்படி நிலைச்சிருக்கும்.”
அர்ச்சகர் தீபாராதனை தட்டைக் காட்டி காந்திமதி அம்மனுக்கும் நெல்லையப்பருக்கும் ஆரத்தி எடுத்தார். ஆரத்தி ஒளியில் அம்பாளின் கண்களில் அருள் பாலிக்க அம்மையப்பனை வணங்கிய இருவரும் கோவிலை வலம் வந்த பின் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வீடு திரும்பினர்.
வீட்டில் ராமநாதனிடமும், ஆனந்தனிடமும் விபூதி பிரசாதத்தைக் கொடுத்து விட்டு அமர்ந்தாள் பர்வதம்.
“என்ன பர்வதம் நாம திட்டம் போட்டபடி சந்தான லட்சுமியிடம் பேசினாயா..?”
“ஆமாம் பேசினேன். அவளே ‘நாளைக்கு குழந்தை பிறந்தா எல்லாரும் ஒன்னாச் சேர்ந்திடுவாங்கன்னு’ ஆறுதல் சொன்னா..”
“இப்படியே பேச்சைக் கொண்டு போ. நாளை பின்னே காவ்யா குழந்தையோடு நம்ம வீட்டுக்கு வரப் போக ஆரம்பிக்கும்போது யாரும் வம்பு பேச மாட்டாங்க..”
“ம்ம்.. ஆனால்.. அந்த அம்பாசமுத்திரம் பெண் வீட்டாருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க. நாம ஆனந்தனுக்குப் அந்தப் பெண்ணைப் பாத்து சம்மதம்ன்னு சொல்லி ஏழெட்டு மாதமாகிப் போச்சுல்ல. நிச்சயம் பண்ணி தேதி குறிக்க எப்ப வர்றீங்கன்னு போன் மேல போன் வருதே. நம்ம காவ்யா காதல் கல்யாணம் பண்ணிக் கிட்டான்னு மத்தவங்களுக்கு சொன்னது போல் அவங்களுக்கும் சொல்லியாச்சு. இது ஊர் உலகத்தில் நடக்கிற சமாச்சாரம்தானே. நம்ம வீட்டுப் பொண்ணு கல்யாணத்த நாம ஏத்துக்கிட்டு பொண்ணு, மாப்பிள்ளையை முறைப்படி கல்யாணத்துக்கு அழைச்சி ரலாம்ன்னு அவங்க வீட்டில் சொல்றாங்க. அதைப் பத்தி ஒரு பேச்சுமில்லையே..”
“நாம என்ன சொல்ல பர்வதம். ஆனந்தன் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்கிறானே..”
“என்னலே ஆனந்தா.. அப்பா இப்படிச் சொல்லுறாரே.”
“ஆமாம்மா.. காவ்யா தன் புருசன் புள்ளையோடு நம்ம வீட்டுக்கு வரட்டும் அவள் வந்து நாத்தனார் முடிச்சை என்னைக்குப் போடுறாளோ அன்னைக்கு நான் தாலி கட்டுகிறேன்.”
“ஏண்டா ஆனந்தா அப்படிச் சொல்றே.. இப்பவே நாம் சென்னைக்குப் போய் அவளைப் பார்ப்போம். மாப்பிள்ளை கிட்ட சமாதானம் பேசுவோம்.”
“இப்ப வேண்டாம்பா. காவ்யா உண்டாகி இருக்கிற சமயத்தில் பதட்டம் வேண்டாம். அசோகன் நம்மைப் புரிந்துக்குவார்ன்னு என்ன நிச்சயம்..? மாறாக நிலைமை மோசமாகி விட்டால்.. கர்ப்பிணிப் பெண்ணுக்கு மனச் சங்கடம் வேண்டாம்.”
“அது சரிடா. அப்போ அந்த அம்பாசமுத்திரம் பெண்..?”
“இன்னும் ஒருவருடம் ஆகும்ன்னு சொல்லுங்க. காத்திருந்தால் காத்திருக்கட்டும். இல்லைன்னா நல்ல இடம் வந்தால் அவங்க பெண்ணைக் கொடுத்து விடட்டும்.”
அப்போது போன் அடிக்க பர்வதம் எழுந்து போனை எடுத்தாள். போனின் வாய்ப் பகுதியை மூடியவாறு ராமநாதனிடம், “அவங்கதான்” என்றாள். அந்தப் பெண்ணின் மீது ஆனந்தனுக்கு எவ்வளவு அன்பு என்று ராமநாதனுக்குத் தெரியும். இருந்தும் இப்படி ஒரு பதில் சொல்ல வேண்டி வந்து விட்டதே என்று வருந்தியபடி அவர் எழுந்து போனின் அருகே செல்ல ஆனந்தன் மனவேதனையுடன் உள்ளே சென்று விட்டான். சற்று நேரத்தில் கதவு தட்டப்பட எழுந்து சென்றான்.
“அந்தப் பெண் அகிலா லைனில் இருக்குப்பா. உன் கூட பேசணுமாம்..” என்றார் ராமநாதன். அகிலா ஆனந்தனுக்கு பார்த்து வைத்திருந்த பெண்.
ஆனந்தன் யோசனையுடன் வந்து போனை எடுத்துப் பேசினான்.
“ஹலோ ஆனந்தன் பேசுகிறேன்.” என்றதும் மறுமுனையில் அந்தப் பெண் அகிலா பேசினாள்.
“கல்யாணத்தை ஒரு வருடம் கழித்துத்தான் வைக்க முடியும். காத்திருக்க விருப்பமில்லைன்னா வேறு யாருக் காவது கட்டிக் கொடுத்திடுங்கன்னு சொன்னீங்களாமே.”
“ஆமாம்.. அதுக்கென்ன இப்ப..? உங்க வீட்டில் அவசரப்பட்டால் யாருக்கு..”
“பொறுங்க. எங்க வீட்டில் அவசரப்பட்டால்ன்னு தானே இப்பவும் உங்க வாயில் வருது. அகிலா இஷ்டப் பட்டால்ன்னு ஏன் வரலை..?”
ஆனந்தன் மௌனம் சாதிக்க அகிலா தொடர்ந்து பேசினாள்.
“ஏன்னா நான் இஷ்டப்பட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும். இப்ப என்ன..? நான் உங்க வீட்டுக்கு முறைப்படி உங்க மனைவியாகவும் உங்களைப் பெத்தவங்களுக்கு மருமகளாகவும் வர ஒரு வருடம் காத்திருக்கனும் அவ்வளவுதானே! இதைச் சொல்லலாமே. உங்களுக்காக நான் இந்த ஜென்மம் பூராவும் காத்திருப்பேனே. அதை விட்டு விட்டு ஏன் வார்த்தைகளைக் கொட்டனும்..? உங்கள் தங்கை நாத்தனார் முடிச்சு என்றைக்கு போடுகிறாளோ அன்று நீங்கள் தாலி கட்டுங்கள். நான் கழுத்தை நீட்டுகிறேன். இனி என் வீட்டிலிருந்து யாரும் நம் கல்யாண விஷயமாகப் போன் பண்ணி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆனால் நான் தினமும் போன் பண்ணுவேன் உங்களுடன் பேசாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது.”
ஆனந்தனின் கண்கள் கலங்கின, “அகிலா நான் கொடுத்து வைத்தவன்” என்றான்.
“என்னை விடவா..?” என்று பதில் கேள்வி கேட்டு விட்டு அவள் போனை வைத்தாள். மகனின் ஒளிர்ந்த முகம் உணர்த்திய சேதி புரிய ராமநாதன் மகிழ்ச்சியுடன்,
“பர்வதம் பாயசம் வை. நம் மருமகளும் நமக்கு நல்ல சேதி சொல்லியிருக்கு..” என்றார். பர்வதம் மகிழ்வுடன் உள்ளே சென்றாள்.
காலிங் பெல் சத்தம் கேட்டதும் காவ்யா கதவைத் திறந்தாள். உமா கையில் குழந்தையுடன் நின்றிருக்க மங்களம் கையில் பெரிய சில்வர் தூக்குடன் நின்றிருந்தாள். பின்னால் தியாகராஜன் பெரிய எவர்சில்வர் டப்பாவைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
“அண்ணா. என்னண்ணா இது நீங்க போய் சுமந்துக் கிட்டு இங்கே கொடுங்க..” என்று காவ்யா வாங்க முயல.
“விடும்மா. அவன் தானே சுமந்து வரணும். தங்கைக்கு வளைகாப்புன்னா அண்ணன்காரன்தானே செய்யணும். சுமக்கட்டும்.” என்றபடி மங்களம் உள்ளே வர உமா குழந்தையை சோபாவில் உட்கார வைத்து விட்டு முந்தானையை இழுத்துச் செருகியபடி சமையலறையில் நுழைந்தாள்.
“உட்காரு உமா. உனக்கும் அம்மா, அண்ணனுக்கும் காபி போடுகிறேன்.” என்று காவ்யா கூற,
“நீ போய் உன் அம்மாவோடும், அண்ணனோடும் உட்கார். குழந்தையைப் பார்த்துக்கிட்டால் போதும்.” என்றபடி அவள் மளமளவென்று வேலையை ஆரம்பிக்க மெஸ் மாமி ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்தாள்.
“என்னடி பெண்டுகளா..? என்ன பண்ணிக்கிட்டு இருக்கேள். சித்ரான்னம் தயார் செய்ய இந்த மாமியை அடிச்சுக்க ஆள் இருக்கா..? என்னடி உமா சாமானெல்லாம் வாங்கியாச்சா..? அட இங்கே இத்தனை பைகளில் நிரப்பி வாங்கியிருக்கியே கெட்டிக்காரிதான்.”
“மாமி. நேற்றே சாமானையெல்லாம் சொல்லச் சொல்ல வாங்கி வந்து இறக்கி வைத்து விட்டுப் போயிட்டாங்க..” என்று காவ்யா குற்றம் சாட்ட,
“ஏம்மா பிறந்த வீட்டிலிருந்துதான் எல்லா சாமானும் வாங்கி வரணும்மா.. அதுதான் முறை. உப்பு புளி கூட நாங்கதான் கொண்டு வரணும்மா..” என்றாள் மங்களம்.
காவ்யாவின் மனம் வருந்தியது. ஒரு வார்த்தை சொன்னால் திருநெல்வேலியிலிருந்து ஊரையே இறக்குமதி செய்து சென்னை நகரையே கலக்கி வளைகாப்பு பண்ணி விடுவார்கள் அவளது பிறந்த வீட்டில். ஆனால் பெற்ற மகளின் நல்வாழ்வுக்காக அவர்கள் கெட்ட பெயரை ஏற்றுக் கொண்டு விலகியிருக்கிறார்கள் என்று இது மாறும்..? அவள் முகம் வாடியதைக் கண்ட மங்களம்,
“காவ்யா நான்தான் உன் அம்மா. தியாகுதான் உன் அண்ணன். ஒரு குறைவும் வராமல் நாங்க சீரும் சிறப்புமா உனக்கு முறை செய்வோம். யாரும் இல்லைன்னு வருந்தக் கூடாது.” என்றாள்.
காவ்யாவின் மனம் நெகிழ்ந்தது. யாருமில்லை யென்று அவள் நின்றபோது அணைத்து, இல்லத்தில் தங்க வைத்து அசோகனுக்கு மணம் முடித்து வைத்து இன்று வளைகாப்பும் செய்ய வந்திருக்கும் இந்தத் தாய், பெற்ற தாயை விட மேலானவள் அல்லவா? அவள் மனம் நோகலாமா..? பெற்றவர்களும் உடன் பிறந்தவனும் நல்லவர்களாகவே இருக்கட்டும். அது இவர்கள் யாருக்கும் தெரிந்தாலும் சரி. தெரியாவிட்டாலும் சரி. அதைக் காலம் முடிவு செய்யட்டும். இன்று நன்றி மறவாதவளாக கணவனைச் சேர்ந்தவர்கள் மனது போல் வாழ வேண்டும் என்ற முடிவோடு,
“நீங்களெல்லாரும் இருக்கும்போது யாரு மில்லைன்னு நான் நினைப்பேனா அம்மா. நீங்கள் சொன்னபடி கேட்கிறேன்..” என்றாள் சாதுப் பெண்ணாக,
அழைத்திருந்த விருந்தினர், அக்கம் பக்கம் வீட்டினர், டிராவல் ஏஜன்ஸியில் வேலை பார்த்தவர்களின் வீட்டுப் பெண்கள் அனைவரும் வந்துவிட நல்ல நேரத்தில் மணப்பெண் போல் தலைப்பின்னலில் பூத்தைத்து பட்டுச் சேலையுடுத்தி கழுத்து, கைகள் கொள்ளாத நகைகள் அணிந்திருந்த காவ்யாவை ஹாலின் நடு மையத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர வைத்து வளையல்கள் அடுக்கினார்கள். மருதாணியிட்டிருந்த கைகளில் நிறைய வளையல்கள் குலுங்க கணவனை நிமிர்ந்து பார்த்தாள் காவ்யா. மனைவியின் தாய்மைக் கோலத்தில் மனம் லயித்தவன் வைத்த கண் வாங்காமல் மனைவியை ரசிக்க விழா இனிதே முடிந்தது. சாஸ்திரப்படி அன்று பிறந்த வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டுமென்ப தால் மங்களம் குடும்பத்தார் காவ்யாவை அன்று அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட மறுநாளே அசோகன் போய் கையோடு அழைத்து வந்து விட்டான்.
அடுத்த ஒரு மாதத்தில் அசோகனுக்கு சிங்கக் குட்டி போல் ஒரு மகன் பிறந்தான். அசோகன் சிறகேயில்லாமல் வானில் பறந்தான்.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.