Chapter 01
“ஹலோ..” என்றபடி.. எதிரே வந்து நின்ற முகுந்தனை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள் நிவேதா..
‘என்ன இப்படிப் பார்த்து வைக்கிறா…’ முகுந்தனுக்குள் ஒரு வித ரசயான மாற்றம் நிகழ
ஆரம்பிக்க.. அவசரமாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.
‘ஊஹீம்.. கன்ட்ரோல் யுவர் செல்ப் முகுந்தா.. வீணாக வம்பில் மாட்டிக்காதே…’
எதிரே நின்றவனின் மனப் போராட்டத்தை அறிந்தவளைப் போல கேலியான புன்முறுவல் ஒன்றை இதழ்களில் தவழ விட்ட நிவேதா, முகுந்தனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.
“நான் தெரியாமத்தான் கேட்கிறேன் சார்…”
“நானென்ன உங்களுக்கு டீச்சரா…?”
“எதுக்கு இப்ப டீச்சர்களை வம்புக்கு இழுக்கிறீங்க..?”
“நீங்க கேள்வி கேட்டால்.. அவங்கதான் பதிலைச் சொல்லி உங்களுக்கு விளக்கம் சொல்வாங்க..
நீங்க தெரியாம கேள்வி கேட்கிறதுக்கு நான் ஆளில்லைங்க..”
அவனது பதிலில் ஒளிந்திருந்த இடக்கில் அவளது கண்கள் மின்னின.. ஒய்யாராமாக உதட்டைச் சுழித்தவள்..
“ஜோக்…?” என்றாள்..
“அப்படியெல்லாம் எனக்கு பேராசை இல்லீங்க…”
“இதை நான் நம்பணுமாக்கும்…?”
“அது உங்க இஷ்டம்…”
“என்னவோ.. போனில் கூப்பிடறதைப் போல.. ஹலோ.. ஹலோன்னு ஏலம் போடறீங்களே..
என்ன விசயம்..?”
“ஏங்க… ஹலோன்னு கூப்பிட்டா.. அது ஒரு தப்பா..?”
“பின்னே…? தப்பில்லையா…?”
அவள் சண்டைக் கோழியாய் சிலிர்த்துக் கொள்ள.. பதிலுக்கு முஷ்டியை மடக்கும் ஆசை முகுந்தனின் மனதில் துளிர்த்தது.. ஆனால் சவாலுக்கு அழைப்பவள் அவனுடைய தங்கைக்கு வருங்கால நாத்தனார். தங்கையோ விடிந்தால் கல்யாணம் என்ற நிலைமையில் மண மேடையில் ஏறத் தாயாராக திருமண மண்டபத்திற்கு பெற்றோரும்.. சுற்றமும் புடைசூழ வந்து இறங்கியிருக்கிறாள்..
இந்த நிலைமையில் மணப்பெண்ணின் கூடப்பிறந்த பாசமலர் அண்ணனான முகுந்தனால்.. மணமகனின் கூடப் பிறந்த பாச மலர் தங்கையிடம் எப்படி மல்லுக்கு
நிற்க முடியும்..?
சூழ்நிலையின் கைதியான முகுந்தன் வெற்றிகரமாக போர்க்களத்திலிருந்து பின்வாங்கினான்..
“தப்புன்னா மன்னிச்சுக்கங்க…”
“ஹலோ.. அப்படிச் சொல்லிட்டா நீங்க தப்பிச்சுக்க முடியுமா…?”
அவள் விரல் சொடுக்கி அழைக்க.. அவனது ஆண்மை சிலிர்த்தது.. அவன் நின்று அவள் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தான்..
“என்ன சார்.. முறைக்கறீங்க..?”
“முறைக்கலிங்க.. பார்த்தேன்…”
“இரண்டும் ஒன்றுதான்…”
“ரெண்டும் வேற.. வேறன்னு நான் சொன்னா நீங்க கேட்டுக்கவா போறீங்க.. சொல்லிக்கங்க…”
“அஃது.. அந்த பயம் இருக்கட்டும்…”
“ஓ கே.. அந்த பயம் இருக்கும். போதுமா… ஆளைவிடுங்க..”
“வெயிட்.. வெயிட்.. எதுக்காக என்னை முறைத்தீங்க..?”
“நான் ஹலோன்னு கூப்பிட்டா அது தப்பு.. அதுவே நீங்க ஹலோன்னு சொல்லிக் கூப்பிட்டா சரியா..? அதுவும் சும்மா கூப்பிடலை.. விரலை சொடுக்கிக் கூப்பிடறீங்க…”
“என் விரல்.. நான் சொடுக்குறேன்.. உங்களுக்கென்ன சார் அப்ஜெக்சன்..?”
“ஒரு செக்சனும் இல்லை.. போதுமா.. ஆளை விடுங்க..”
“ஆளைவிடாம.. கையைப் பிடித்தா நிறுத்தி வைத்திருக்கேன்..?”
அவள் வேண்டுமென்றே அவனைச் சீண்டுகிறாள் என்பது அவனுக்கு மிகவும் தெளிவாகவே புரிந்தது. இதுவே.. அவனது அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களாக இருந்தால் அதை அவன் அணுகும் முறையே வேறாக இருந்திருக்கும்.
அதற்கெல்லாம் வழியின்றி இவள் தான் மாப்பிள்ளைக்கு தங்கையாகப் போய் விட்டாளே…
“தெரியாமல் சொல்லிட்டேங்க.. மன்னச்சிருங்க..”
“ஆன்னா.. ஊன்னா.. உடனே மன்னிப்பை கேட்டு விடறீங்களே.. மன்னிப்பை லோடு.. லோடா உங்க மனசுக்குள் போட்டு வைத்திருக்கீங்களா…?”
“என் மனதில் எதையெதையோ போட்டு வைத்திருக்கேன்.. அது எதுக்கு உங்களுக்கு…”
“எதுக்காக சார்.. ஹலோன்னு கூப்பிட்டிங்க..”
எதற்காக கூப்பிட்டான்…? அவள் பண்ணிய கலாட்டாவில் அவனுக்கு அது சுத்தமாக மறந்து விட்டிருந்தது. அதைச் சொன்னதும் அவள்…
“பொய்…” என்றாள்
“பொய்யா…?”
“ஆமாம்.. உங்களுக்கு இது ஒரு சாக்கு…”
“சாக்கா…?”
“யெஸ்… நீங்க என் கூடப் பேசணும்.. அதுக்காக கற்பனையாய் ஒரு காரணம் சொல்றீங்க…”
“நான் எதுக்குங்க தேவையில்லாம உங்களோடு பேசணும்?”
“எனக்கென்ன தெரியும்? உங்க மனதில் என்ன இருக்கோ…?”
“ஒரு மண்ணும் இல்லை…”
“அப்படிச் சொல்லி விட்டால் ஆச்சா…?”
“ஆகாவிட்டால் போங்க.. எனக்கென்ன போச்சு…?”
“ஹை.. ஹை.. கண்ணுக்கு அழகாய் ஒரு பெண்ணைப் பார்த்து விடக் கூடாதே.. உடனே அவகூட பேசணும்னு அலைவீங்களே..”
நிவேதா இப்படிச் சொல்லியதும்.. முகுந்தன்.. அங்கு மிங்கும் பார்வையால் தேடினான்.
“யாரைத் தேடறீங்க…” அவள் புரியாமல் கேட்டாள்..
“அழகான பொண்ணுன்னு சொன்னீங்களே.. அவ எங்கேயிருக்கான்னு தேடறேன்..”
அவள் விழிகளில் சினம் படர்வதை ஒருவித திருப்தியுடன் பார்த்தபடி நகரப் போனான் முகுந்தன்.
“ஏம்ப்பா முகுந்தா… மாப்பிள்ளையோட தங்கச்சியை நலங்கு வைக்கிற இடத்துக்கு கூப்பிட்டுக் கொண்டு வரச்சொன்னா அதை விட்டுட்டு அரட்டையடிச்சுக்கிட்டு நிற்கிறயே…”
முகுந்தனின் அத்தை அகிலாண்டம் கடிந்து கொள்ள, ‘கேட்டுக்கிட்டயா…’ என்பதைப் போல அவளைப் பார்த்தான் அவன்…
“இந்தப் பார்வைக்கொன்றும் குறைச்சலில்ல…” அவள் பல்லைக் கடித்தாள்..
“வேற எதிலயும் குறைச்சலில்லங்க.. இப்பவாவது உங்களுக்குப் புரியுதா..?”
“எது..?”
“நான் வேணும்னே காரணத்தை உண்டு பண்ணிக்கிட்டு உங்ககூடப் பேச அலையலைங்கிறது… தேவையில்லாம நினைப்பை வைச்சுக்காதீங்க…”
“ஹலோ..”
“இப்ப நீங்க ஏங்க ஏலம் போடறீங்க…?”
“யாரு சார் நினைப்பை வைச்சுக்கிட்டு இருக்கிறது..? நான் உங்க நினைப்பை வைச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்கிறீங்களா…?”
“ஏங்க.. நான் அப்படியா சொன்னேன்..?”
“அப்படித்தான் சொன்னீங்க.. எங்கே.. உங்க மனசாட்சியைத் தொட்டு இல்லைன்னு பதில் சொல்லுங்க பார்ப்போம்…”
“இல்லை”
“எது இல்லை..? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..?”
‘என்னடா இது…’ முகுந்தன் வெறுத்துப் போய் விட்டான்…
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.