Chapter 02
இப்படியா ஒரு பெண் விதண்டாவாதம் பண்ணுவாள்..? எந்தப் பக்கம் போனாலும்… அந்தப் பக்கம் வந்து வழிமறிக்கும் அவள் செய்த நிழல் யுத்தத்தில் முகுந்தனின் பொறுமை காற்றில் கரைந்து விட்ட கற்பூரமாக.. காணாமல் போய் விட்டது….
அவளது விழிகளுக்குள் பார்த்தவன்..
“இப்ப உனக்கு என்ன வேணும்..?” என்று கேட்டான்..
“என்னது.. ‘உனக்கா…?'”
“ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?”
“என்ன மிஸ்டர்.. மரியாதை குறையுது…”
“நீ என்னை விட ஆறுவயது சின்னவள்.. உனக்கெல்லாம் இந்த மரியாதை போதும்…”
“நான் யார் தெரியுமா..?”
“தெரியுமே.. நீ நிவேதா…”
‘இதைச் சொல்ல உனக்கு இத்தனை நேரமா..?’ அவள் நினைத்துக் கொண்டாள்..
“நான் மாப்பிள்ளைக்கு தங்கை…”
“அதனால்தான்.. இவ்வளவு நேரமும் நீ பண்ணிய அழும்புக்கு பொறுமையா நின்னேன்….”
‘அதானே பார்த்தேன்.. என்னடா, சூறாவளிக் காத்து இந்தப் பம்மு… பம்முதுன்னு…’ அவனை கீழ்பார்வையில் பார்த்தாள்…
“நடிச்சீங்களா..?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது.. நீ வேணும்னா சொல்லிக் கொடு…”
‘நீ சின்னப் பப்பா.. நான் வந்து சொல்லிக் கொடுக்கணும்… உன்னை எனக்குத் தெரியாதா..?’ உதட்டைச் சுழித்தாள் நிவேதா…
“நானென்ன நடிகையா..? இருங்க.. என் அண்ணனைக் கூப்பிட்டு நியாயம் கேட்கிறேன்…”
“மிரட்டிப் பார்க்கறியா..?”
‘ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிற…?’ மனதுக்குள் சிலுப்பிக் கொண்டாள் அவள்…
“என் அண்ணன்தான் எனக்கு எல்லாமும்.. அவனிடம் நியாயம் கேட்காமல் நான் வேற யாரிடம் நியாயம் கேட்பேன்…?”
“ஏன்… என்கிட்டக் கேளு… நான் உனக்கு நியாயம் சொல்கிறேன்…”
‘நீ சொல்லிட்டாலும்…’ அவள் மனம் அழகு காட்டியது…
“உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு..?”
“இதைத்தானேம்மா… அப்போதிலிருந்து அடிச்சுச் சொல்லிப் பார்க்கிறேன்.. நீ கேட்க மாட்டேன்கிறியே…”
“அடிப்பீங்களா…? அவ்வளவு தைரியமிருக்கா..?”
“அதுசரி.. இப்போதைக்கு நீ நிறுத்தமாட்ட…”
முகுந்தன் சுற்றுமுற்றும் பார்த்தான்.. திருமண மண்டபத்தில் எல்லோரும் காலில் சக்கரம் கட்டி விடப் பட்டதைப் போல இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்க… சன்னக்குரலில் அவளிடம் சீறினான்…
“ஏய்ய்.. கொழுப்பாடி..?”
அவள் மனம் சிறகடித்தது…
இதற்காகத்தான்.. இந்த ஒரு வார்த்தைக்காகத்தான்.. அவள் அவனிடம் வம்பு வளர்த்தாள்…
நினைத்தது கிடைத்து விட்ட நிறைவுடன் அவளும் அவனைப் போலக் குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசினாள்…
“ஆமாம்.. நீங்க போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டதால் வந்த கொழுப்பு….”
“நான் ஏண்டி உனக்கு சாப்பாடு போடணும்..? நீ சாப்ட்வேர் இன்ஜினியர்.. கைநிறைய.. இல்லையில்லை… மடி நிறைய சம்பாதிக்கிறவ… உனக்கு நான் சாப்பாடு போடணும்கிற அவசியமே இல்லையே…”
‘இதையே எத்தனை தரம்தான் இவன் சொல்லுவான்’ என்ற நினைவில் மனம் கனத்துப் போனாள் நிவேதா…
“நான்தான் சாப்ட்வேர் என்ஜினீயர்.. சார் யாரு..? வெறும் கை நாட்டா..? நீங்களும் என்னைப் போல என்ஜினீயரிங் படிச்சவர்தானே…”
“உன்னைப் போல் சம்பாதிக்கலை…”
“த்சு.. அது ஒரு பெரிய குறையா..?”
‘எனக்குக் குறைதான்..’ அவனுக்குள் ரோசம் மூண்டது..
“இதோ பார் நிவேதா…”
“பார்த்துப் பார்த்துத்தானே இந்த நிலைமையில் வந்து நிற்கிறேன்..? இன்னும் வேற பார்க்கணுமா…?”
“ஏய்ய்.. உன்னை எனக்குத் தெரியும்ன்னோ.. உனக்கும் எனக்குமிடையில் பழக்கம் இருந்ததுன்னோ நம்ம இரண்டு வீட்டுக்கும் தெரியாது…”
“அதுக்காக…?”
“அடக்கி வாசி.. இது என் தங்கையின் கல்யாணம்..”
“எனக்கும்தான் என் அண்ணனின் கல்யாணம்…”
“உனக்கு ஒன்றுமில்லைம்மா.. ஆனா.. எனக்கு அப்படியில்லை… நான் நிலையில்லாம அலைகிறவன்.. நான் ஏதாவது செய்து இந்தக் கல்யாணத்துல குழப்பம் வந்தா என் வீட்டில் என்னை சும்மா விடமாட்டாங்க…”
“முகுந்த்…”
“ப்ளீஸ் நிவேதா… என்னைத் தொந்தரவு செய்யாதே…”
“நீங்க என்னைவிட்டு விலகறீங்க முகுந்த்…”
“ஆல்ரெடி.. விலகிட்டேன்…”
“அதுதான் எதுக்கு..?”
“வேண்டாம் நிவி… நமக்குள் நடந்தது இந்தக் கல்யாணத்தைப் பாதிக்க வேண்டாம்…”
அவன் பேச்சின் போக்கில் ‘நிவி’ என்று அழைத்து விட.. அவளுக்கு கண்ணீர் அரும்பி விட்டது…
அவன்.. அவளுடைய முகுந்தன்.. யாரோ போல ஒதுங்கி நின்று வார்த்தை வளர்த்தவன்… தன்னையு மறியாமல் உரிமையுடன் அவளை அழைத்து விட்டான்…
“இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கும் முகுந்தன்.. என்னால் எந்தக் குழப்பமும் ஏற்படாது…”
“தேங்க்ஸ்…”
“பட்.. ஒன் திங்..”
“என்ன..?”
“நான் உங்களை விட மாட்டேன்.. நிழலாய் பின் தொடர்வேன்…”
அவள் சட்டென்று அங்கேயிருந்து போய் விட்டாள்.. முகுந்தனின் மனம் வலித்தது.. காற்றாட அவன் மண்டப வாசலுக்கு வந்து நின்றான்…
இது ஒரு வரம்…
ஒரு பெண்ணை விரும்புவது.. விரும்பிய பெண்ணுக்கு விருப்பமானவனாக இருப்பது…
அவனுக்கு அது வாய்த்திருந்தது.. அவன் நேசித்த பெண்.. அவனை நேசித்தாள்.. உயிருக்குயிராய் நேசித்தாள்..
அது வெறும் உடல்சார்ந்த உறவல்ல.. மனம் சார்ந்த உறவு…
அவளுக்கு அவனைப் பார்த்தால் மட்டுமே போதும்.. அவளது பார்வை மின்னும்.. ஜென்மம் முழுவதும் அவனோடு சேர்ந்து வாழ்ந்து விட்ட நிறைவை அவளது அந்த ஓர விழிப் பார்வை சொல்லும்…
முகுந்தன் அந்தப் பார்வைக்கு கட்டுப்பட்டவன் தான்.. அவளது ஓரவிழிப் பார்வை உணர்த்தும் ஓராயிரம் செய்திகளைப் பற்றி மனப்பூர்வமாக அறிந்தவன்தான்….
ஆனாலும்.. வாழ்க்கையின் சில மேடு பள்ளங்கள் அவர்கள் இருவருக்கும் இடையே வந்து நிற்க… விலகிப் போனான்.. அவள் விக்கித்துப் போனாள்…
நினைத்தவனை மறக்கச் சொன்னால்… காதல் கொண்ட மனம் எப்படி மறக்கும்..?
அவள் மனம் அவனை மறக்காது… மறக்கவும் அவளால் முடியாது.. இதை அவன் ஏன் அறியாமல் போனான்..?
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.