Chapter 03
‘நினைக்கத் தெரிந்த மனமே – உனக்கு
மறக்கத் தெரியாதா…?
பழகத் தெரிந்த உயிரே-உனக்கு
விலகத் தெரியாதா…?’
கண்ணதாசன் என்னவோ.. எளிதாகக் கேட்டு விட்டார்.. ஆனால் அது எப்படி சாத்தியமாகும்…?
நினைக்கப்படும் நினைவில் உண்மையிருந்தால்.. அந்த நினைவு என்றைக்கும் விலகாது…
பழகிய பழக்கத்தில் நிஜமான நேசம் இருந்தால் பழகிய உயிர் என்றைக்கும் விலகாது…
நிவேதாவிடம் அந்த உண்மையிருந்தது.. முகுந்தனிடம் நிஜமான நேசத்தை அவள் கொண்டிருந்தாள்.. அதனால்தான் அவன் விலகிப் போக முயன்றபோது விலகிவிட அவளால் முடியவில்லை…
“ஏன் முகம் ஒரு மாதிரியாய் இருக்கு முகுந்த்…?”
“வேலையை விட்டு விட்டேன்…”
“இந்த வேலையையுமா..? ஒரு இடத்தில் நிலையாக வேலை செய்ய உங்களால் முடியவே முடியாதா முகுந்தன்..? இப்படியிருந்தால் எப்படி உங்களை நம்பி நான் கழுத்தை நீட்ட..?”
கோபத்தில் வந்த வார்த்தை… மனம் தாளாமல் நிவேதா பேசிவிட்ட வார்த்தைகள்.. தொட்டதெற்கெல்லாம் கோபப்பட்டு வேலையை விடுகிறவனைக் கேள்வி கேட்கவென்று வந்த வார்த்தைகள்…
‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் -ஆறாதே..
நாவினால் சுட்ட வடு…’
ஈரடியில் ஹைக்கூ கவிதைகளை அந்த நாளிலேயே எழுதி வைத்த பொய்யாமொழிப் புலவரின் வார்த்தைகள் பொய்க்கவில்லை…
காதலிக்கிறவளின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள் முகுந்தனின் மனதைச் சுட்டு விட்டன…
“என்னைக் காப்பாற்ற உனக்கு வக்கு இருக்கிறதா..? எந்த தைரியத்தில் உனக்கு நான் கழுத்தை நீட்ட..?”
இந்த அர்த்தத்தில் காதலித்தவள் கேட்டால் எந்த ஆண்மகன்தான் பொறுத்துக் கொள்வான்..?
முகுந்தன் கோபக்காரன்.. ரோசக்காரன்…
ஏற்கெனவே கம்பெனியில் மோதலைச் சந்தித்து அதனால் வேலையையும் விட்டுவிட்டு நின்றவனுக்கு அவளது பேச்சைக் கேட்டதும் கோபம் அதிகமாகி விட்டது..
“என்னை நம்பாமல் வேறு எவனை நம்பி கழுத்தை நீட்டப் போகிற…?”
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்…”
“மைண்ட் பண்ணிட்டுத்தான்டி கேட்கிறேன்.. பதில் சொல்லு…”
“திஸ் இஸ் டூ மச்…”
“ஏய்ய்.. த்திரீ மச்சாவே இருக்கட்டும்.. என் கேள்விக் கென்ன பதில்…?”
“நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன கேட்கறீங்க..?”
“என்னத்தை விளக்கம் படிக்கிற..? உன்னை நம்பி கழுத்தை நீட்ட முடியுமான்னு நீதானேடி கேட்டே..? வேற எவனை நம்பிக் கழுத்தை நீட்டப் போறேன்னு நான் கேட்காமல் என்ன செய்வேன்…?”
“முதல்லயாவது மாதத்துக்கு ஒரு வேலைன்னு மாறிக்கிட்டு இருந்தீங்க.. இப்ப தினத்துக்கு ஒரு வேலை.. ஏன் இப்படின்னு கேள்வி கேட்டா… என்னையே எக்குத்தப் பாய் கேள்வி கேட்கறீங்க…”
“ஏய்ய்.. நான் இப்படித்தான்டி இருப்பேன்.. இஷ்டம்ன்னா எனக்கு கழுத்தை நீட்டு… இல்லைன்னா எவன் உன்னை வைச்சுக் காப்பாத்துவான்னு நினைக்கறியோ அவனுக்குக் கழுத்தை நீட்டு.. ஐ டோண்ட் கேர்…”
அவ்வளவுதானா..? அவள் மேல் அவனுக்கிருக்கும் அக்கறையின் அளவு அவ்வளவுதானா..? அவள் யாருக்கு கழுத்தை நீட்டினாலும் அவனுக்குக் கவலையில்லையா..?
அவள் இதயம் அதிர அவனைப் பார்த்தாள்.. அந்தப் பார்வையிலே எதைக் கண்டானோ.. அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அசைவற்று நின்றுவிட்டான்….
அவனால் அவளை அந்த நிலைமையில் விட்டு விட்டுப் போக முடியவில்லை…
“கிளம்பு..”
“எங்கே…?”
“என் வீட்டுக்கு இல்லை.. உன் வீட்டுக்கு…”
“அதுதான் தெரிஞ்சு போச்சே…”
“என்ன தெரிஞ்சு போச்சு..?”
“என்னைக் கழட்டிவிடும் உத்தேசத்துடன் தான் இத்தனை நாளும் என்னுடன் பழகியிருக்கிறீங்கன்னு தெரிஞ்சு போச்சு…”
அவன் மீண்டும் நிதானத்தை இழந்தான்.
“தெரிஞ்சு போச்சில்ல.. அப்புறமென்ன..? கிளம்பு..”
“எனக்கு என்வீட்டுக்குப் போக வழி தெரியும்.. நீங்க போங்க…”
“எப்படிப் போறது..?”
“எப்படி வந்தீங்களோ அப்படிப் போங்க…”
கடற்கரையில் இருள் கவிந்திருக்க.. சற்று தூரத்தில் கும்பலாக அமர்ந்திருந்த ரௌடிக் கூட்டத்தை அவன் கவலையோடு பார்த்தான்…
“ஏய்ய்.. அவனுக முழியே சரியில்லைடி…”
“அவங்க பார்வை எப்படியிருந்தால் எனக்கென்ன..?”
“முரண்டு பிடிச்சவளே.. அவனுக உன்னைத்தான் ஒரு ‘மார்க்கமா’ பார்த்துக்கிட்டு இருக்கானுக…”
“அதுக்கென்ன இப்ப..?”
“வீட்டுக்குப் போய் தொலைடி…”
“அதை ‘ஐ டோன்ட் கேர்..’ன்னு சொன்னவர் சொல்லக்கூடாது…”
“உனக்கும்.. எனக்குமான சண்டையை விட்டுத் தொலை.. இப்ப இடத்தைக் காலி பண்ணு…”
“முடியாது…”
“முடியாது..?”
முகுந்தன் கோபத்துடன் அவளை அறைந்து விட்டான்… அதற்காகவே காத்திருந்ததைப் போல.. அந்தக் கூட்டம் எழுந்து வந்து அவர்களைச் சுற்றிக் கொண்டது…
“இன்னாப்பா.. பாப்பாகிட்ட என்ன தகராறு..?” என்றான் ஒருவன்…
முகுந்தன் அவன் கேட்டதற்குப் பதிலைச் சொல்லாமல் அந்தப் ‘பாப்பா’வை முறைத்துப் பார்த்தான்.. அவள் பயத்துடன் அவன் பின்னால் ஒண்டிக் கொண்டாள்..
“நீ பயப்படாதே பாப்பா.. நானிருக்கேன் உனக்கு…”
அடுத்தவன் கரிசனமாக அருகில் வர.. முகுந்தன் அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டான்.. அவன் மண்ணில் விழுந்தான்…
“இன்னா தைரியமிருந்தா என்மேல நீ கையை வைப்ப.. கபாலி.. அந்தக் கத்தியை எடுடா…”
மண்ணில் விழுந்தவன் கத்த.. அந்தக் கபாலியாகப் பட்டவன் முகுந்தனை முறைத்தபடி.. கத்தியை எடுத்தான்..
“டாய்.. யாருடா நீ.. இந்தக் குட்டி யாரு..?”
“என் பெண்டாட்டி…”
“இன்னாது.. உன் பொஞ்சாதியா..?”
கத்தியை மடித்த கபாலி.. மண்ணில் விழுந்தவனின் தலையில் ஒரு தட்டு தட்டி.. தள்ளிக் கொண்டு சென்றான்..
“ஏண்டா கசமாலம்.. புருசன் பொஞ்சாதி சண்டையில ஊடால போகலாமாடா…?”
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.