Chapter 04
தலையைப் பிடித்துக் கொண்டு சோர்வாக அமர்ந்திருந்த நிவேதாவின் முன்னால் சூடான காபித் தம்ளரை வைத்தாள் ரூபா…
“அப்புறம் என்னடி ஆச்சு…?”
“ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ஃப் சண்டைக்குள்ள வரக்கூடாதுன்னு அந்த ரௌடிக இடத்தைக் காலி பண்ணிட்டாங்க…”
“டீசண்ட் ஃபெல்லோஸ்…”
“யெஸ்.. எனக்கும் அதை நினைத்தால்தான் ஆச்சரியமாயிருக்கு ரூபா…”
“நிவி.. இந்தக் காலத்தில் வொயிட்காலர் மனுசங்ககிட்டத்தான் ஆயிரம் சூது இருக்கும்… ரௌடின்னு சொல்லிக்கிட்டு முரட்டுத்தனமாய் தெரிகிறவங்ககிட்ட ஆயிரம் நியாயம் இருக்கும்…”
“நீ சொல்றது நிஜம்தாண்டி…”
“தாதாக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா..?”
“எங்க தாத்தாவைப் பற்றித்தான் கேள்விப் பட்டிருக்கேன்…”
“தாதாக்கள் உலகமே தனி நிவி.. அவங்களுக்குன்னு சில நியாயம் இருக்கும்.. ஒருத்தரோட ஏரியாவில் இன்னொத்தர் கால் வைக்க மாட்டாங்க.. வாக்குக் கொடுத்துட்டா வார்த்தை மாற மாட்டாங்க… நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டாங்க.. ஒரு தாதா இறந்து விட்டால் அவரோட குடும்பத்துப் பெண்கள் கிட்ட மத்த தாதாக்கள் வாலாட்ட மாட்டாங்க…”
“கிரேட்…”
“அவங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கும்.. அது நம்மிடம் கூட இருக்காது…”
“விட்டால் ஒரு தாதாவை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்குவ போல இருக்கே…”
“ஏண்டி.. ஒருத்தங்களை அட்மைர் பண்ணினா கட்டாயம் அவங்களை காதலிச்சுத்தான் ஆகணுமா..?”
“கேலிக்குச் சொன்னேன்டி…”
“நீ எதுக்குச் சொன்னாலும்.. இதை மட்டும் கேட்டுக்க…”
“நீ சொல்ல ஆரம்பிச்சுட்ட.. கேட்டுத்தானே ஆகணும்…?”
“ஆண்.. பெண் பழக்கத்தில.. ஒண்ணு.. கூடப் பிறந்த பாசமலரா இருக்கணும்.. இல்லைன்னா.. அம்பிகாபதி.. அமராவதி காதலா இருக்கணும்னு ஏதும் சட்டம் கிட்டம் இருக்கா…?”
“புரியலை…”
“இது இரண்டுக்கும் நடுவில் அழகான ஒரு நட்பாய் ஏன் அது இருக்கக் கூடாது..?”
“அது முடியுமா..?”
“முடியணும்.. முடிந்தால் தான் அது ஆரோக்கியமான விசயம்…”
“இப்ப இதைப் பத்தி பேசி எனக்கென்ன ஆகப் போகுது..?”
“ம்ஹூம்.. உனக்கு உன் பிரச்சனை.. இந்த கருமத்திற்குத் தான் நான் இந்தக் காதல் கீதலில் எல்லாம் சிக்கிக் கொள்ளவில்லை…”
“கெட்டிக்காரி…”
“நீயும் கெட்டிக்காரியாய் இருப்பதுக்கென்ன..?”
“எனக்கு மட்டும் காதலித்துத்தான் ஆகணும்னு நேர்த்திக்கடனாடி..? அது வந்து தொலைந்து விட்டது.. இப்ப அதுக்கு ஒரு வழியைச் சொல்லு…”
“என்னடி.. என்கிட்ட வழியைக் கேட்கிற..?”
“வேற யாருகிட்டக் கேட்க..?”
“உன் லவ்வர்கிட்டக் கேளு..”
“அந்த மனுசன்தான் கோவிச்சுக்கிட்டு ‘டூ’ விட்டுட்டாரே…”
“நீ பழம் விடு…”
“அவர்.. அதுக்கெல்லாம் மசிகிற ரகமில்லை.. மலையேறினால் அவ்வளவு சீக்கிரமாய் இறங்கமாட்டார்..”
“நீ வேப்பிலையடிச்சு மலையிறக்கு…”
“அகப்பட்டால்தானே வேப்பிலை அடிக்க முடியும்..?”
“அகப்படாமல் தப்பித்து ஓடி விட்டாரா..?”
“ஏறக்குறைய அப்படித்தான் ரூபா.. அன்றைக்குப் போனவர்.. இன்றைக்கு வரை வரவேயில்லை…”
“நீ போன் பண்ணினாயா..?”
“பண்ணாமல் இருப்பேனா..?”
“என்ன சொன்னார்..?”
“அவர் சொல்லவில்லை… ‘ஸ்விட்ச் ஆஃப்’ன்னு போன் சொல்லுது…”
“என்னதான்டி உங்களுக்குள்ள பிரச்னை..?”
“எந்த வேலையிலயும் நிலைச்சு நிற்க மாட்டேங்கிறார்.. அதுதான் பிரச்னை…”
“ஏன் அப்படி…?”
“அவருக்கு சொந்தமா கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கணும்ங்கிற எண்ணமிருக்கு ரூபா…”
“அதில் தப்பில்லையே…”
“அதையாவது செய்யலாமே.. முதலீடு போட பணம் வேண்டாமான்னு கேட்கிறார்…”
“நியாயமான கேள்விதான்…”
“கம்பெனி ஆரம்பிக்க பணமில்லை.. அதே நினைப்பில் இவரால் வேலைக்கு போக முடிவதில்லை.. மீறிப் போனாலும் ஒருவாரத்துக்கு மேல் நிலைச்சு நிற்க மாட்டார்..”
“கஷ்டம்தான்..”
“இதைத்தான் சொல்லிட்டேன்.. ‘இப்படி இருந்தா எப்படிங்க’ன்னு கேட்டுட்டேன்.. ‘உங்களை நம்பி எப்படி கழுத்தை நீட்டறது’ன்னு வார்த்தைகளை விட்டுட்டேன்.. இப்ப பாடாய் படறேன்..”
“உன்மேல் தப்பில்லையே நிவி..”
“அவர் அப்படி நினைக்கலை.. கன்வின்ஸ் பண்ணலாம்ன்னு நினைச்சா கிடைக்க மாட்டேங்கிறார்..”
“இப்ப என்ன செய்யப் போகிற..?”
“தெரியலை…”
“அவர் வீடு எங்கேயிருக்கு..?”
“மாம்பலத்தில்…”
“ஆபீஸ் அட்ரஸ்தான் கிடையாது.. நிலைச்சு ஒரு இடத்தில் வேலை செய்கிறவர் இல்லைங்கிற.. வீட்டுக்குப் போய் பாரேன்..”
“எப்படிடீ.. தெரியாதவங்க வீட்டுக்கெல்லாம் போய் பழக்கமில்லடி.. அதோடு.. அவர் மாம்பலத்தில் இருக்காருன்னு தெரியும்.. ஆனா கிளியர் அட்ரஸ் தெரியாது…”
கவலையுடன் சொன்ன நிவேதாவை இரக்கத்துடன் பார்த்தாள் ரூபா…
‘இந்தக் காதல்தான் மனுசரை என்ன பாடு படுத்துது..?’
“நிவி.. நான் சொல்கிறேன்னு தப்பாய் எடுத்துக்காதே..”
“சொல்லு…”
“நீயே உன் ஆள் நிரந்தரமாய் ஒரு வேலையில் தங்க மாட்டாருன்னு சொல்கிற… இப்படிப்பட்ட ஒரு ஆளை நம்பி உன் எதிர்காலத்தை ஒப்படைக்கப் போகிறியா…?”
நிவேதா தெளிவான முகத்தோடு ரூபாவை ஏறிட்டாள்.. நிதானமான.. ஆனால்.. உறுதியான குரலில் சொல்ல ஆரம்பித்தாள்…
“காதல் என்பது மனதில் ஏற்படும் ஓர் உணர்வு ரூபா.. அது தானாக யார் மீதும் அவ்வளவு எளிதாக வந்து விடாது.. அவர் நல்லவரா.. கெட்டவரா.. ஏழையா.. பணக்காரரா.. நிலையான வேலையில் இருப்பவரா.. இல்லை.. நிலையில்லாமல் அலைகிறவரான்னு பார்த்து காதல் செய்தால்.. அதற்குப் பெயர் காதலில்லை.. எனக்கு முகுந்தனின் மேல் ஏற்பட்டிருக்கும் காதல் தானாக அவர் மேல் வந்தது.. அது வேறு யார் மேலும் எனக்கு வராது..”
“நான் அப்படிச் சொல்லலைடி…”
“நீ எப்படிச் சொல்லியிருந்தாலும் என் பதில் இதுதான்.. என்னால் முகுந்தனை விட முடியாது..”
“அவர் உன்னை விட்டு விட்டாரே…”
“வாய் வார்த்தையால் தானே அப்படிச் சொன்னார்..? செயலில் காட்டி விட்டாரா..? நான் அவரை மீட்டுக் காட்டுகிறேன்…”
நிவேதா என்னவோ எளிதாக சொல்லி விட்டாள்…
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.