Chapter 05
சொல்லுவது யாருக்கும் எளிதான ஒன்றுதான்.. ஆனால் சொல்லிய வண்ணம் செய்து முடிக்க வேண்டுமே.. அதுதானே முடியாத ஒன்று..?
நிவேதாவும் அப்படித்தான்.. முகுந்தனின் மனதை தன்னிடம் மீட்டுக் காட்ட முடியும் என்று எளிதாக சொல்லிவிட்டாள்.. ஆனால்… அது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்கவில்லை…
அவளால் முகுந்தனைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை… அவளுக்கும் அவனுக்குமான பொதுவான நண்பர் குழாமில் கேட்டுப் பார்த்து விட்டாள்…
“முகுந்தா..? நேற்று ஒரு வேலை.. இன்னைக்கு ஒரு வேலைன்னு இருப்பான்.. அவன் எங்கேயிருக்கிறான்.. எப்படி வருகிறான்னே தெரியாதே நிவேதா… திடீர்ன்னு ஒருநாள் தலையைக் காட்டுவான்.. வந்த வேகத்திலேயே காணாமல் போய் விடுவான்…”
இதே ரீதியான பதிலையே எல்லோரும் வார்த்தைகளை மாற்றி மாற்றிச் சொல்ல, நிவேதா இடிந்து போய் விட்டாள்..
நண்பர்களிடம் திடீரென்று தலையைக் காட்டுபவன் அவளை மட்டும் எப்படி மறந்தான்..?
அவள் நினைவே அவனுக்கு இல்லையா..? அவள் அவனில் ஒரு பாதியில்லையா..?
அவளுக்கு நெஞ்சம் துடித்தது.. அவனைத் தேடி தவித்தது…
‘ஏன்தான் அப்படிப் பேசித் தொலைத்தேனோ…’
அவள் தன்னைத்தானே தினமும் நொந்து கொண்டாள்… எங்கேயாவது அவன் தட்டுப்படுகிறானா என்று இருபத்திநான்கு மணி நேரமும் அவளது விழிகள் தேடிச் சோர்ந்த வேளையில்தான் அவளது அண்ணன் நித்தியானந்தத்திற்கு பெண் பார்க்கப் போன வீட்டில்.. பெண்ணுக்கு அண்ணனாக அவனை அவள் பார்த்தாள்…
“அம்மா.. என்னை விட்டு விடுங்க.. நீங்களும் அப்பாவும் அண்ணன் கூடப் போய் பெண்ணைப் பாருங்க.. பிடித்திருந்தால் கல்யாணத்தைப் பண்ணி வையுங்க…”
“என்ன பொண்ணுடி நீ.. கூடப் பிறந்தவன் ஒருத்தன் தான்… அவன் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கப் போறோம்.. கூட வர இத்தனை யோசிக்கிறயே…”
“எனக்கு வேலையிருக்கும்மா…”
“நீதான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிற… கல்யாணத்தை பண்ணிக்க நினைக்கிறவனுக்காவது பொண்ணு பார்க்க கூடவா…”
“நீங்க பெரியவங்களா போனால் ஆகாதா..?”
“இத்தனை நாளா நீயில்லாமத்தானே போய் வந்தோம்..? ஒரு இடம் கூட தோதா வரலை… நீ வருகிற ராசியிலாவது உன் அண்ணனின் கல்யாணம் சீக்கிரமாய் நடக்கட்டும்…”
நிவேதாவின் தாய் கல்யாணி விடாமல் மகளை வற்புறுத்த, நிவேதா.. அலுப்புடன் வீட்டுக்குள் பார்த்தாள்..
நித்யானந்தன் கண்ணாடியின் முன்னால் நின்று அழகு பார்த்துக் கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது…
‘கல்யாண ஆசை…?’
அவள் மனதில் சிரிப்பு வந்தது.. அவள் தலைவிதி.. தனியாக வாடுகிறாள்.. அண்ணனாவது பிடித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு நிம்மதியாக வாழட்டுமே என்ற எண்ணத்துடன் ஒரு வழியாக அவளும் தயாராகி பெண் பார்க்கக் கிளம்பிப் போனாள்…
“வாங்க.. வாங்க…”
பெண் வீட்டினர் இரு கரம் கூப்பி வரவேற்றார்கள்…
ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த போது தற்செயலாக வாசல் பக்கம் பார்த்த நிவேதாவின் விழிகள் மின்னின….
“அப்பா.. மாப்பிள்ளை வீட்டில் வந்துட்டாங்களா…?” என்று கேட்டபடி அங்கே வந்து கொண்டிருந்தான் முகுந்தன்..
‘அப்பாவா..?’
நிவேதாவின் விழியில் ஹாலில் மாட்டப்பட்டிருந்த குடும்ப போட்டோ பட்டது…
நடுநாயகமாக பெற்றோரை அமரவைத்து.. இரண்டு பக்கமும் முகுந்தனும்.. நித்தியானந்தனுக்கு பார்க்க வந்திருந்த பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்…
‘ஹ… இவன், பெண்ணுக்கு அண்ணனா…?’
போட்டோவில் பார்த்த போதே மாதங்கியின் முகம் அறிமுகமானதைப் போல ஏன் தோன்றியது என்று இப்போது நிவேதாவிற்குப் புரிந்தது…
மாதங்கியிடம் முகுந்தனின் ஜாடை சிறிதளவு இருந்தது…
பெண்ணை நேரில் பார்ப்பதற்கு முன்னாலேயே மாதங்கிதான் தனக்கு அண்ணியாக வரவேண்டும் என்று நிவேதா முடிவு எடுத்து விட்டாள்..
“அம்மா.. எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு…”
கல்யாணியின் காதோரமாக அவள் முணுமுணுக்க.. அவளோ மகளை விசித்திரமாகப் பார்த்தாள்…
“என்னடி ஆச்சு உனக்கு..?”
“ஏன் இப்படிக் கேட்கறிங்க..?”
“இன்னும் பெண்ணையே நாம பார்க்கலை.. அதுக்குள்ள பெண்ணை உனக்குப் பிடிச்சுப் போயிருச்சா..?”
“அது.. அது.. அது வந்து.. போட்டோவைப் பார்த்தப்பவே எனக்குப் பிடிச்சுப் போயிருச்சும்மா…”
“அதையேன் வீட்டிலேயே நீ சொல்லலை..?”
“சொல்லத்தான் நினைத்தேன்…”
“என்னவோ சினிமாப்பட டைட்டில் போல பேசறியே…”
“ஏம்மா.. எனக்கு இரண்டில் ஒன்று தெரியணும்…”
‘எந்த இரண்டு..? அந்த இரண்டில் ஒன்றுன்னா எது..?’ என்று அடிமுதல் நுனிவரை ஒரு விவரமும் பிடிபடாமல் கல்யாணி திகைத்துப் போய் விட்டாள்…
“வந்த இடத்தில்தான் உளறணுமா..? வீட்டிலெல்லாம் ஒழுங்காகத்தானேடி நீ இருந்த..?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது.. அண்ணனின் கல்யாணத்தை முடிவு பண்ண எனக்கு உரிமையிருக்கா.. இல்லையா…?”
கல்யாணிக்கு மகள் சொன்ன இரண்டில் ஒன்று என்பது இதுதான் என்று பிடிபட்டு விட்டதில் ஒரு சந்தோசம் வந்தது…
“பொண்ணு என்ன சொல்றா..?”
கல்யாணியின் கணவர் மேகநாதன் வாய் திறந்தார்…
“பொண்ணுன்னா நீங்க எந்தப் பொண்ணைக் கேட்கறீங்க…?”
கல்யாணிக்கு திரும்பவும் விவரம் பிடிபடவில்லை…
“யாருடி இவ..? பார்க்க வந்த பொண்ணுதான் இன்னும் ஹாலுக்கு வந்து சேரலையே… நான் நாம பெத்த பொண்ணைக் கேட்டேன்..”
“ஓ.. நீங்க நம்ம நிவேதாவைக் கேட்டிங்களா..?”
“ஆமாண்டி.. ஆமாம்…”
“பெயரைச் சொல்லிக் கேட்கிறதுக்கென்ன..? எல்லாம் என் நேரம்…”
இப்படி நேரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு கல்யாணி தலையில் அடித்துக் கொண்டால்.. அவள் திருமணமான நேரத்தைப் பற்றித் தான் குறிப்பிடுவாள் என்பதை அறிந்து வைத்திருந்த அனுபவசாலியான மேகநாதன் வாயை மூடிக் கொண்டார்…
“இவ உங்க பொண்ணுதானே.. உங்களைப் போல்தானே நேரம் காலம் தெரியாம பேசிவைப்பா..?”
கல்யாணி மீண்டும் அலுத்துக் கொள்ள.. மேகநாதன் இயலாமையுடன் மகளைப் பார்த்தார்.. அவளோ அவரைப் பார்க்காமல் வாசலில் நின்றிருந்த முகுந்தனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
தேடியலைந்த திரவியத்தைக் கண்டு பிடித்து விட்ட குதூகலம் அவள் நெஞ்சத்தில் பரவியது…
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.