Chapter 08

0Shares

“பையன் சாஃப்ட்வேர் என்ஜினியர். சொந்தமா கம்யூட்டர் கம்பெனி ஒண்ணை ஆரம்பிக்கணும்கிற பிளானோடு இருக்கான்..” சங்கரன் பதில் சொன்னார்..

அவரை நன்றியுடன் நிவேதா பார்த்து வைத்த பார்வை அவர் மனதில் பதிந்தது…

அந்தப் பார்வை.. அவருக்கு ஒரு இக்கட்டு வந்து மீண்டால்.. அவரது மனைவி கோதாவரி எப்படிப் பார்ப்பாளோ.. அதைப் போன்ற பார்வையாக இருந்தது..

‘இந்தப் பெண் ஏன் இப்படிப் பார்க்குது..?’

மாதங்கியின் பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் நிவேதாவின் பார்வையைப் பற்றிய ஆராய்ச்சி பின் தள்ளப்பட.. அவர் அதை மனதில் புதைத்துக் கொண்டு.. மேற்கொண்டு நடக்க ஆரம்பித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்…

“எங்க நித்தியா அக்ரி ஆபிசர்..” கல்யாணி பெருமையாகச் சொன்னாள்..

“எங்க மாதங்கி டிகிரி முடிச்சிருக்கு.. வேலைக்கு போகப் பிரியப்பட்டுச்சு.. கல்யாணத்தை முடிச்சுக்-கிட்டு புருசன் வீட்டில் என்ன சொல்றாங்களோ.. அதுப்படி செய்யுன்னு சொல்லிட்டோம்..” சாரங்கபாணி மேகநாதனைப் பார்த்தபடி கல்யாணிக்கு பதிலைச் சொன்னார்..

இது மாதிரியான சமயங்களில் மேகநாதனுக்குக் கோபம் ஏற்படும்.. அப்போதும் அது ஏற்பட.. மனைவியைப் பார்க்காமல் சாரங்கபாணியைப் பார்த்து…

“வெரிகுட்..” என்றார்..

“அதுதான் சரி.. பெண்கள் வேலைக்குப் போகணுமா.. வேண்டாமாங்கிறது இரண்டாவது பிரச்னை… முதலில் ஏதாவது அத்தியாவசியம் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க வேலைக்குப் போகிற தகுதியை ஒரு பெண் வளர்த்துக்கணும். பெண்களுக்கு அது ரொம்ப அவசியம்..”

சாரங்கபாணிக்கு, கல்யாணியுடன் கலந்து உரையாட வேண்டிய அவசியமில்லாமல் போய் விட்டதில் சந்தோசம் ஏற்பட்டது…

ஆணுக்கு ஆண் பேசுவதை வசதியாக உணர்ந்தவர், “சரியாச் சொன்னீங்க..” என்று மேகநாதனின் பேச்சை ஆமோதித்தார்…

“எங்க மாதங்கிக்கும் அப்படித்தான்.. எல்லா கம்ப்யூட்டர் கோர்ஸையும் படிக்க வைத்திருக்கிறோம்.. நாளைக்கே வேலைக்கு போகணுமுன்னாக்கூட அவள்ரெடி..”

‘இந்த மனிதர் ஏன்.. இதை வாய்விட்டுத் தொலைக் கிறார்..’ என்ற அலுப்புடன் சங்கரனைப் பார்த்தாள் நிவேதா..

வேலைக்குப் போகாத பெண் என்பதுதான் கல்யாணிக்கு மருமகளாக வரப் போகிறவளுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி…

அதைப் புரிந்து கொள்ளாமல்.. பெண்ணைப் பெற்றவரே.. அணில் வாயால் கெட்டுப் போவதைப் போல வாய் விட்டு வைக்கிறாரே என்று அவளுக்கு இருந்தது..

சங்கரன் நிவேதாவின் பார்வையில் இருந்த செய்தியைப் புரிந்து கொண்டு விட்டார்..

“ஆனாப் பாருங்கம்மா.. எங்க மாதங்கிக்கு வீட்டை விட்டு வெளியில் போகிறதுன்னாவே சுத்தமா பிடிக்காது.. வேலைக்கு போகச் சொல்லாத மாமியார் வீடு அமையணு முன்னு விரதமிருந்து கோவில்.. கோவிலா சுத்தி வருகிறான்னா பாருங்களேன்..” என்று அவர் கல்யாணியைப் பார்த்து சொல்ல.. கல்யாணியின் முகம் பூவாக மலர்ந்து விட்டது..

‘வேலைக்குப் போவதில் ஆர்வமாக இருக்கும் மாதங்கி எப்போது அப்படிப்பட்ட விரதங்களை இருந்தாள்’ என்று சாரங்கபாணிக்கு பிடிபடவில்லை..

ஆயிரம் பொய்களைச் சொல்லியாவது நடத்தப்பட வேண்டிய திருமணத்தில் சங்கரன் கூறிய முதல்பொய் அது என்பதை உணராதவராக..

‘எப்போதடா மாதங்கி அப்படி விரதமிருந்தா..’ என்று கேட்டு வைக்க வாய் திறந்தார் சாரங்கபாணி…

கண் சமிக்ஞையெல்லாம் சிநேகிதனிடம் எடுபடாது. அவர் நேரடியான பேச்சையே புரிந்து கொள்வதில் சிரமப் படுவார் என்பதைப் புரிந்து வைத்திருந்த சங்கரன், தன் மனைவி கோதாவரியிடம் அந்த கண் சமிக்ஞையை செய்தார்…

அவள் அந்தக் கண் சமிக்ஞையை சாரங்கபாணியின் மனைவியான வாசவிக்கு அனுப்பிவைக்க…

“என்னங்க.. ஒரு நிமிஷம் உள்ளே வந்துட்டுப் போங்களேன்…” என்ற அவசர அழைப்பு வாசவியிடமிருந்து சாரங்கபாணிக்கு பறந்து வந்தது..

இருந்திருந்து அப்போதுதான் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலிருந்து விடுபட்டு மேகநாதனுடன் பேச ஆரம்பித்திருந்த சாரங்கபாணி அந்தப் பேச்சில் தடை ஏற்பட்டதில் எரிச்சலடைந்தார்..

ஆனாலும் அழைப்பது மனைவியாயிற்றே..! வேறு வழியின்றி-

“ஒரு நிமிடம்.. இதோ வந்து விடுகிறேன்..” என்று அந்த ஒரு நிமிட அவகாசத்தையே மேகநாதனிடம் சொல்லி விட்டு சரியாக ஒரே நிமிடத்தில் திரும்பியும் வந்து விட்டார்.. சமையலறையில் அவருக்கு சரியான மண்டகப்படி நடத்த பட்டிருப்பதை அவரது முகம் உணர்த்த சங்கரன் நிம்மதியுடன் நிவேதாவை பார்த்hர்..

அவரது நிம்மதியை வாங்கிக் கொண்ட நன்றிப் புன்முறுவல் அவள் முகத்தில் தவழ்ந்தது…

‘இந்தப் பொண்ணு மாப்பிள்ளைக்கு தங்கச்சி.. ஆனா.. பொண்ணு வீட்டுக்காரி போல இல்ல வேலை செய்யுது..’

நிவேதா உணர்த்தியது மிகப்பெரிய செய்தி என்பதை சங்கரனால் அனுமானிக்க முடிந்தது…

மாதங்கியின் திருமணத்தைப் பற்றிய ஆணிவேர் அந்தச் செய்தி..

சாரங்கபாணி மட்டும் மாதங்கியின் வேலை மீதான ஆர்வம் பற்றிய பேச்சை தொடர்ந்திருந்தால் அந்தத் திருமணப் பேச்சு அப்போதே முறிந்திருக்கும்..

மாப்பிள்ளையின் அம்மாவுக்கு மருமகள் வேலைக்குப் போனால் பிடிக்காது என்பதை தன் பார்வையிலேயே கூறிவிட்டாள் நிவேதா…

அதையும்.. அந்தப் பார்வையை புரிந்து கொள்ளும் வல்லமை படைத்த சங்கரனிடம் தெரியப்படுத்திவிட்டாள்.

மாதங்கியை தன் அண்ணனுக்கு மணமுடித்து வைப்பத்தில் தனக்கிருந்த ஆர்வத்தையும் அதன் மூலமாக வெளிப்படுத்தி விட்டாள் நிவேதா..

அந்தத் திருமணம் கட்டாயம் நடக்கும் என்று சங்கரனுக்கு புரிந்து விட்டது..

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link