Chapter 10

0Shares

“முடியாதுன்னு சொல்லிடணும்” என்று மேகநாதன் கூறிய போது நித்தியானந்தன் தன் அதிர்வை வெளிப்படையாகக் காட்டினான்…

“ஏன்ப்பா அச்சாணியமா பேசறிங்க.. முடியாதுன்னு ஏன் சொல்லணும்..?” என்றான் அவன்..

“இதை உன் அம்மாவிடம் சொல்லு…”

“அம்மாகிட்ட சொல்லித்தான் அவங்களுக்குத் தெரியணுமா..? அவங்களுக்கே எல்லாம் தெரியும்.. இந்தப் பெண்ணிடம் எந்தக் குறையுமில்லை.. இப்படியொரு பெண் தேடினாலும் கிடைக்க மாட்டா…”

கல்யாணிக்கு ‘சுரீர்’ என்றது… தன் ராஜாங்கம் சரிவதை திகைப்புடன் உணர்ந்தாள் அவள்…

“ஏன்டா கிடைக்க மாட்டா.. இதைவிட ஆயிரம் மடங்கு உசத்தியான பெண்ணா நான் உனக்குப் பார்க்கிறேன்…”

கல்யாணி தன் முடிவைக் கூறிவிட.. மேகநாதன்..

“த்சு” என்றார்..

நித்தியானந்தன் பேசப் பிடிக்காமல் முகம் திருப்பிக் கொள்ள.. நிவேதா மட்டும்…

“நீங்க கோடி மடங்கு உசத்தியான பெண்ணாப் பார்த்தாலும்.. நான் அவளை ‘அண்ணி’ன்னு என் வாயால் சொல்ல மாட்டேன்..” என்று சொல்லி தமையனின் வயிற்றில் பாலை வார்த்தாள்….

“நீ இதில் தலையிடாதே நிவேதா..” கல்யாணி கண்டிப்புடன் கூறினாள்…

“அப்படின்னா நான் இப்பவே லேடிஸ் ஹாஸ்டலுக்கு போயிடறேன்..” என்றாள் நிவேதா..

“ஏண்டி.. நீ வீட்டை விட்டுப் போகிற அளவுக்கு இப்ப என்ன நடந்துருச்சு..?”

“இன்னும் என்ன நடக்கணும்..? என் கூடப்பிறந்தவனின் கல்யாணத்தில் என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமையில்லைன்னா.. நான் எதுக்கு 

இந்த வீட்டில் இருக்கணும்…?”

“மொட்டைத் தலைக்கும்.. முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதேடி..”

“நான் எதுக்கும் முடிச்சுப் போடலை.. எல்லாத்தையும் யோசிச்சுத்தான் சொல்றேன்.. நீங்க உங்களை மட்டுமே பாருங்க… என்னைப் பத்தி நினைச்சுப் பார்த்துடாதீங்க…”

முகுந்தனின் நினைவில் நிவேதாவின் கண்கள் கலங்கி விட்டன.. அதைப் புரிந்து கொள்ள முடியாத கல்யாணி பதறிவிட்டாள்…

முகுந்தனின் தங்கை, நிவேதாவின் அண்ணியாக மாறினால் தான் நிவேதாவின் காதலுக்கு எதிர்காலமே இருக்கிறது என்பதை அவள் அறிவாளா.. என்ன..?

“என்னடி நிவி.. பச்சைப் புள்ளையாட்டம் அழுகிற..”

“பின்னே என்னம்மா.. வருகிற மருமகள் உங்களிடம் மட்டும் நல்லபடியா நடந்து கொண்டால் போதுமா..? என்னை அனுசரிக்க வேண்டாமா..?”

“உன்னை அனுசரிக்காம அவ இந்த வீட்டில் வாழ்ந்து விட முடியுமா..?”

“வருகிற மருமகளை வாழ விடாமல் செய்வதில் மட்டும் குறியா இருங்க.. நானும் இன்னொரு வீட்டுக்கு வாழப் போகணும்ங்கிறதை மறந்துடுங்க..”

மகளின் வார்த்தையில் அடங்கிப் போனாள் கல்யாணி..

“உனக்காகத்தான்டி அப்படிப் பேசினேன்..”

“அம்மா.. நான் கல்யாணமாகிப் போனா.. உங்களுக்கு சமமா.. அண்ணனும்.. அண்ணியும் என்கிட்ட பாசம் காட்டணுமா வேணாமா…?”

“பாசம் காட்டலைன்னா நான் சும்மா விட்டுருவேனா..?”

“அது உங்களுக்குப் பயந்துக்கிட்டு வருகிற பாசமா இருக்கக் கூடாது.. என்மேல் தானாக வருகிற பாசமா இருக்கணும்..”

“என்னடி நிவி.. புதுசா என்னென்னவோ பேசற..”

“ஆமாம்மா.. இப்ப பார்த்துட்டு வந்த பெண்ணைக் கண்டவுடனேயே எனக்கு அண்ணின்னு கூப்பிடத் தோணுச்சே.. அது ஏன்..?”

“ஏன்..?” கல்யாணி புரியாமல் திருதிருத்தாள்..

“அதுதான் ஏழேழு ஜென்ம பந்தம்ம்மா…”

முகுந்தனின் நினைவில் விழி செருகக் கூறிய மகளை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள் கல்யாணி…

“என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க..?”

“இந்த வசனத்தை உன் அண்ணன் சொன்னா கேட்டுக்கலாம்.. வரப் போகிற அண்ணியைப் பார்த்து ஒரு நாத்தனார் இப்படிச் சொல்வாளான்னு யோசிச்சேன்..”

“நீங்க யோசிச்சு.. யோசிச்சு.. தலையைக் குழப்பிக்க வேண்டாம்… நான் சொன்னா.. சொன்னது தான்.. அந்த மாதங்கிதான் எனக்கு அண்ணி…”

நிவேதாவின் பிடிவாதத்தால் கல்யாணி மலையிறங்கி வந்தாள்..

“என்னவோ போ.. பொண்ணோட அப்பாவைப் பார்த்தால் ‘பேக்கு’ மாதிரித் தெரியுது…”

தன்னை மதிக்காத – பெண்ணைப் பெற்றவரை, கல்யாணி ‘பேக்கு’ என்று திட்ட…

“அவர் எப்படியிருந்தால் நமக்கென்னம்மா..? அவரா இந்த வீட்டில் வாழப் போகிறார்..? அவர் பொண்ணு தானே வந்து வாழப் போகுது..?” என்று சமாதானப் படுத்தினாள் நிவேதா…

“பொண்ணோட அம்மா அழுத்தக்காரியாய் இருப்பா போல இருக்கு.. ஒரு வார்த்தை வாயைத் திறந்து பேசலியே..” கல்யாணி அடுத்த அஸ்திரத்தை பிரயோகிக்க..

‘ம்ஹூம்.. அந்த சாரங்கபாணி கொடுத்து வைச்சவன்.. ஆம்பிளைங்க பேச வேண்டிய இடத்தில் பொம்பளைக வாயை மூடிக்கிட்டு இருக்கணும்ங்கிற எண்ணமிருக்கிற பெண்டாட்டியைக் கட்டியிருக்கான்..’ என்று நினைத்த மேகநாதன் பெருமூச்சு விட்டார்…

“ஏம்மா.. நீங்க பேசும்போது எதிர்பேச்சு பேசக் கூடாதுன்னு மரியாதையாய் அவங்க இருந்திருப்பாங்க..” என்று அதற்கும் ஒரு பதிலை நிவேதா சொல்ல…

“அப்படியும் இருக்குமோ..?” என்று கல்யாணி சமாதானம் அடைந்தாள்..

அடுத்த ஒரு மணி நேரப் போராட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமையில் நிச்சயதார்த்தம் பண்ண வருகிறோம் என்ற செய்தியை மாதங்கியின் வீட்டுக்கு கொண்டு சொல்லும் உத்தரவை நிவேதா பெற்று விட்டாள்…

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link