Chapter 12
“வார வெள்ளிக்கிழமை நிச்சயம் பண்ண வருகிறோமுன்னு அப்பாம்மா சொல்லி விட்டாங்க…”
காபியை உறிஞ்சியபடி நிவேதா சொல்லவும் வாசவியின் முகம் மலர்ந்து விட்டது…
சாரங்கபாணியின் முகத்திலும் சஞ்சலம் விலகி சிரிப்பு வந்தது..
“அப்படியாம்மா… ரொம்ப சந்தோசம்…”
“அண்ணி எங்கேயிருக்காங்க…”
“உள்ளேதான் இருக்கிறா.. இதோ கூப்பிடறேன்.. மாதங்கி.. மாதங்கி…”
“என்னங்கப்பா…”
ஹாலில் நடந்த பேச்சுவார்த்தையை உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த மாதங்கி.. ஒன்றும் அறியாதவளைப் போல வெளியே வந்தாள்..
“நிவேதா வந்திருக்கு பாரு..”
“வாங்க..”
“எனக்குப் போய் மரியாதையா..? சும்மா வா.. போன்னே கூப்பிடுங்கண்ணி..”
“எனக்கு மட்டும் எதுக்கு மரியாதை..? நீயும் என்னை வா.. போன்னே கூப்பிடலாமே..”
“கூப்பிடலாம்தான்.. ஆனா.. அண்ணியை எப்படி வா.. போன்னு கூப்பிடறது…?”
“வா அண்ணி.. போ அண்ணின்னு கூப்பிடலாமே..”
இருவரும் சேர்ந்து சிரித்தனர்.. மாதங்கிக்கு நிவேதாவை பிடித்திருந்தது.. அவளுக்கும் மாதங்கியை பிடிக்குமென்று மாதங்கிக்கு தெரியும்..
அது எதனால் என்று அறியாதவளாக அவன் பிரியத்துடன் நிவேதாவிடம் பேச ஆரம்பித்தாள்..
“என் டிராயிங்சை பார்க்கறியா..?”
“நீ வரைவாயா அண்ணி..?”
“நிறைய வரைவேன்.. வந்து பாரேன்..”
நிவேதாவின் கைபிடித்து தனது அறைக்கு அழைத்துப் போன மாதங்கி தான் வரைந்த படங்களைக் காட்டினாள்…
“பியூட்டிஃபுல்..” ரசித்துப் பார்த்தாள் நிவேதா…
“மாதங்கி..” வாசவி அழைக்கும் குரல் கேட்டது…
“இதோ வந்திட்டேன்.. நிவேதா.. நீ பெயிண்ட்டிங்கை பார்த்துக்கிட்டு இரு..” மாதங்கி போய் விட்டாள்..
கையிலிருந்த படத்தின் அழகில் லயித்திருந்த நிவேதாவின் காதுகளில் அவளுக்கு பழக்கமான காலடியோசை கேட்டது..
அழுத்தமான காலடியோசை.. அவனது காலடியோசை.. நிவேதாவின் கண்கள் பனித்தன…
‘ஓராயிரம் பார்வையிலே – உன்
பார்வையை நானறிவேன்..
உன் காலடியோசையிலே – நம்
காதலை நானறிவேன்…’
அவள் மனதில் பாடல் ஒலித்தது.. இயல்பாக அவன் அறைக்குள் வந்தான்.. வந்தவன் அவளைக் கண்டதும் தயங்கி நின்றான்.. அவளது விழிகளில் மாறாத காதல் தெரிந்தது…
‘இந்த மானிடர் காதலெல்லாம் – ஒரு
மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் – ஒரு
மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் – எந்த
நாளிலும் கூட வரும்…’
அவள் தாபத்துடன் விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள்… எங்கேயெங்கே என்று அவனைத் தேடிய காலமெல்லாம் அவள் நினைவில் வந்து நின்றது..
‘இந்த ஆற்றினில் ஓடுகிறேன் – உன்
ஆடையில் ஆடுகிறேன்…
இந்தக் காற்றினில் நான் கலந்தேன் – உன்
கைகளைத் தழுவுகிறேன்…
நான் போகிற பாதையெல்லாம்- உன்
பூ முகம் காணுகிறேன்…’
எங்கே போனாலும் அங்கே அவன் முகம் தென்படுகிறதா என்று தேடியலைந்த நிவேதா.. அவனிருக்குமிடத்தைக் கண்டு கொண்டவளாய் பரவசத்துடன் நின்றாள்..
“முகுந்த்…”
அவளது அழைப்பில் அவன் உடல் விறைத்துக் கொண்டது…
“ஐ ஆம் ஸாரிங்க… மாதங்கியைத் தேடி வந்தேன்..”
அவன் யாரோ போல் பேசிவிட்டு வெளியேற முனைய “நில்லுங்க..” என்று தடுத்தாள் நிவேதா…
“என்னங்க வேணும்..?”
‘நீதான் வேணும்..’ என்று சொல்ல மனம் துடித்தது.. ஆனால் பொய் வேசம் கட்டிக் கொண்டிருப்பவனிடம் உரிமை கொண்டாட அவளுக்கு மனம் வரவில்லை…
அவளை உரிமையுடன் அவனாக அழைக்க வேண்டும்.. அதைச் செய்யாவிட்டால் அவள் நிவேதா இல்லை…
உறுதி கொண்ட மனத்துடன்…
“வேணும்ன்னு தானே உள்ளே வந்தீங்க..” என்றாள் நிவேதா…
அவனது புருவங்கள் உயர்ந்தன.. மீண்டும் அறிமுகமற்ற பார்வையைப் பார்த்தபடி..
“அப்படியெல்லாம் இல்லைங்க..” என்றான் முகுந்தன்..
“இல்லேன்னு நீங்க சொன்னா நான் கேட்டுக்கணுமா..?”
“ஓகே.. கேட்காதீங்க…”
“என்னைப் பார்க்கத்தானே வந்தீங்க..?”
“இல்லை.. என் தங்கையைத் தேடிவந்தேன்..”
“இது உங்க வீடு.. இந்த வீட்டுக்குள்ளே இருக்கிற தங்கையைத் தேடி இந்த ரூமுக்குள்ள அவர் வந்தாராம்.. ஒரு சத்தம் கொடுத்தா உங்க தங்கையே உங்களைத் தேடி வந்திருக்க மாட்டாங்களா…”
“ம்ஹூம்.. இதைச் செய்யாம போனது என் தப்புத்தாங்க.. இனிமே நீங்க சொன்னதை ஃபாலோ பண்றேன்…”
“அப்படியா… ஃபாலோ பண்ணினதையெல்லாம் பாதியில விடுகிற ரகமாச்சே நீங்க…”
“என்னைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும்..?”
“நிறையத் தெரியும்.. சொல்லவா..?”
“வேண்டாம்..”
“ஏன்..?”
“கேட்க எனக்கு நேரமில்லை…”
“இஷ்டமில்லைன்னு சொல்லுங்க..”
“எதுவோ ஒண்ணு.. ஆளை விடறிங்களா…”
முகுந்தன் விறைப்பு மாறாமல் திரும்பிய போது மாதங்கி கையில் சூடான பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள்…
“என்ன அண்ணா..?”
“உன்னைத் தேடி வந்தேன்.. வந்து பார்த்தா இவங்க இங்கே உட்கார்ந்திருக்கிறாங்க..”
“இவளை உனக்குத் தெரியாதா..?”
‘ஏன் தெரியாது..?’ மனதிற்குள் பொருமினாள் நிவேதா… அவனுக்குத் தெரியும்.. அவளை நன்றாகத் தெரியும்.. அவனது ‘என்னடி…’ என்ற ஓர் அழைப்பில் அவள் உருகிவிடுவாள் என்பது தெரியும்.. ‘திமிராடி..’ என்ற முறைப்பை ரசிப்பாள் என்பது தெரியும்… அவனிடம் திட்டு வாங்குவதற்காகவே – வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுப்பாள் என்பதும் மிக நன்றாகவே தெரியும்..
தெரிந்திருந்தும் அவன் பெரிய கண்ணியவானைப் போல அவளுக்கு ‘ஹலோ’ சொன்னான்.. அவள் பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லாமல் பல்லைக் கடித்தாள்…
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.