Chapter 13
நிச்சயதார்த்தம் நடந்த அன்று… நிவேதாவிற்கு முகுந்தனிடம் கேட்க.. நிறைய விசயங்கள் இருந்தன…
“என்னங்க… தாம்பாளத்தட்டு ஒண்ணு குறையுதே.. வீட்டில் இருக்குமா..?”
“அம்மாகிட்ட கேளுங்க…”
“நீங்க அந்த அம்மாவுக்கு மகன்தானே.. உங்ககிட்டக் கேட்டால் ஆகாதா..?”
அவன் முறைப்புடன் சமையலறைக்குச் சென்று கோதாவரியிடம் கேட்டு பெரிய தாம்பாளத் தட்டை வாங்கி வந்து கொடுத்தான்…
“என்னங்க…”
“என் பெயர் முகுந்தன்…”
“அதை உங்க அப்பாம்மா சொல்லிக் கூப்பிடலாம்.. நான் கூப்பிடலாமா..?”
என்னவோ.. அதற்கு முன்னால் அவனைப் பெயர் சொல்லியே அழைக்காதவளைப் போல… அவள் காட்டிய பாவனையில் அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது…
‘மூச்சுக்கு முந்நூறு தடவை ‘முகுந்த்..’ ‘முகுந்த்..’ துன்னு கொஞ்சிவிட்டு.. இப்ப பீலா விடுகிறதைப் பார்..’
“இப்ப என்ன வேணும்..?”
வழக்கம்போல ‘நீதான் வேணும்..’ என்ற தினுசில் அவள் பார்த்து வைக்க உடல் சூடேறினான் முகுந்தன்…
“இப்படிப் பார்க்காதீங்க…”
“ஏன்..?”
“யாராவது பார்த்தால் தப்பாய் நினைச்சுக்குவாங்க..”
“யாரை..?”
“இரண்டு பேரையும்தான்..”
‘நினைத்தால் நினைக்கட்டுமே.. நீயும்.. நானும்.. அப்படித்தானே பழகினோம்..’ நிவேதா முறைத்தாள்…
“என் பார்வையே அப்படித்தாங்க.. உங்களுக்காக மாற்றிப் பார்க்க என்னால் முடியாது…”
பதவிசாக மற்றவர்களைப் பார்த்து விட்டு.. விழுங்குவதைப் போல.. அவனை மட்டும் பார்த்து வைக்கும் அவளின் வியாக்கியானத்தைக் கேட்டு அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
“எப்படியோ தொலைங்க..”
“ஹலோ.. நான் மாப்பிள்ளைக்கு தங்கை…”
“அதுக்கென்ன..?”
“நான் நினைத்தால் இந்தக் கல்யாணம் ஏற்பாட்டையே நிறுத்தி விடுவேன்…”
அப்படியே அவளை இரண்டு அறை விட்டால் என்ன.. என்று அவனுக்குள் கோபம் பொங்கியது…
“உங்க வாயில் நல்ல வார்த்தைகளே வராதா..?”
“ஏன் வராது.. வரும்..”
“அப்புறம் எதுக்காக.. மகராசி.. அதையெல்லாம் மறந்துட்டு இப்படிப்பட்ட வார்தைகளை பேசி வைக்கறீங்க..”
“அது என்னன்னே தெரியலைங்க.. உங்களைப் பார்த்தா எனக்கு இப்படித்தான் பேச வருது…”
“வரும்.. வரும்…”
அவன் முறைப்புடன் நகர்ந்து விட்டான்… அடுத்த இரண்டு நிமிடங்களில் அவனுக்கு அவளிடமிருந்து அடுத்த அழைப்பு வந்து விட்டது…
“என்னங்க..”
“இப்படி என்னைக் கூப்பிடாதீங்க…”
“ஹலோ…”
“நீங்க என்ன போனிலயா பேசிக்கிட்டு இருக்கறீங்க..”
“என்னங்கன்னு கூப்பிட்டாலும் ஏன்னு கேட்க மாட்டிங்க… ஹலோன்னு கூப்பிட்டாலும் கிண்டலடிப்பீங்க.. இருங்க.. இதை என் அம்மாகிட்டே சொல்றேன்..”
கல்யாணியின் கடுமையான முகம் நினைவுக்கு வர..
“ஐயையோ..” என்று அலறினான் முகுந்தன்..
“அஃது.. அந்த பயம் இருக்கட்டும்.. என்னை யாருன்னு நினைச்சீங்க.. கல்யாணியம்மாவின் செல்ல மகளாக்கும்.. என்கிட்ட வம்பு வைச்சுக்கிட்டிங்கன்னா என்ன ஆகும் தெரியுமா..?”
“எதுவுமே ஆக வேணாம்.. உங்களுக்கு கோடி கும்பிடு.. என் தங்கையின் கல்யாணத்தை எந்த வில்லங்கமுமில்லாம நீங்கதான் நடத்தித் தரணும்…”
“அது.. நீங்க நடந்து கொள்கிற முறையில்தான் இருக்கு…”
“எப்படிங்க நடக்கணும்..? காலால் நடக்காமல் தலையால் நடக்கணுமா..?”
சிரிக்காமல் முகுந்தன் கேட்க.. இமைக்காமல் அவனைப் பார்த்தாள் நிவேதா…
அவளுடன் சரிக்கு சரியாய் வாயாடி மல்லுக்கு நின்றவன்.. அவளது பார்வையைக் கண்டதும் வாயடைத்துப் போய் நின்றான்..
ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த கோதாவரி.. அவர்களைக் கண்டதும் “என்னம்மா..?” என்று விசாரித்தாள்..
“ஒன்றுமில்லைம்மா..” நிவேதா போய்விட்டாள்…
“என்னப்பா.. என்ன சேதி..?”
“எதுவுமே இல்லை ஆன்ட்டி..”
“இதை நான் நம்ப மாட்டேன்..”
“என்ன ஆன்ட்டி.. என்னைப் போய் இப்படி நினைச்சுட்டிங்களே…”
“அதானே இடிக்குது.. நீயோ கல்யாணமே வேணாமுன்னு தள்ளி நிக்கிறவன்.. ஆனா.. அந்தப் பொண்ணு எதுக்காக.. உன்னைச் சுத்திச் சுத்தியே வருது..?”
“இதை அந்தப் பொண்ணுகிட்டத்தான் நீங்க கேட்கணும். என்னைக் கேட்டால் எப்படி ஆன்ட்டி..”
“கெட்டிக்காரன்தான்..”
அந்தக் கெட்டிக்காரனைத் தேடி.. கோதாவரியின் தலை மறைந்ததும் வந்து நின்றாள் நிவேதா…
“ஹலோ…”
“ம்ம்ம்..”
“ஏன்னு கேட்க மாட்டிங்களா.. அவ்வளவு இளக்காரமா..?”
“த்சு.. என்னன்னு சொல்லுங்க…”
“சலிப்பாக் கேட்கறீங்க.. சலிப்பு என்னிடமா..? இல்லை.. என் அண்ணனிடமா…? இந்த நியாயத்தை என் அம்மாகிட்ட கேட்டு விடலாமா..?”
“அம்மா.. தாயே.. தேவி…”
“இத்தனை சொல்றவர்.. நிவேதான்னு என் பெயரைச் சொல்ல மட்டும் ஏன் மறுக்கிறாராம்..?”
“இந்த வீட்டில் என்கிட்டத்தான் நீங்க எதையும் கேட்கணுமா..? வேறு ஆள் உங்க கண்ணில் படலையா..?”
“ஹலோ.. வேறு ஆளைத் தேடவெல்லாம் என்னால் முடியாது.. நான் உங்களைத்தான் தேடுவேன்.. பெண்ணுக்கு அண்ணன்.. இதுகூடச் செய்ய மாட்டிங்களா..?”
“செய்கிறேன்ம்மா.. செய்கிறேன்..”
மாதங்கியின் திருமணத்திற்காக நிவேதாவை முகுந்தன் பொறுத்துக் கொண்டானா..? இல்லை.. அடிமனதில் உறைந்திருந்த காதலினால் அவளை பொறுத்துக் கொண்டானா.. என்று நிவேதாவினால் சரியாக கணிக்க முடியவில்லை..
ஆனாலும் அவள் முகுந்தனை சுற்றிச்சுற்றியே வந்தாள்..
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.