Chapter 14
திருமண மண்டபத்திலும் இந்தக் கதை தொடர்ந்தது..
“நான் ஹலோன்னு கூப்பிட்டால் தப்பு.. அதையே நீங்க கூப்பிட்டால் சரியா..?”
“ஸாரி..”
“இப்படிச் சொல்லிட்டா சரியாய் போச்சா..?”
“வேற எப்படிச் சொல்லணும்னு சொல்லிக் குடுங்க.. நான் அதைப் போலச் சொல்றேன்..”
அவன் கட்டுப்படுத்த முடியாமல் அவளது உச்சந்தலை முதல் பாதம் வரை பார்வையிட்டபடி சொல்லி விட்டான்…
“நீங்க ஊருக்கெல்லாம் சொல்லிக் கொடுப்பீங்க.. உங்களுக்குப் போய் ஒரு ஆள் சொல்லிக் கொடுக்க முடியுமா..?”
விசமமான அவளது வார்த்தைகள் அவனைக் கடந்த காலத்திற்கு அழைத்துப் போக.. ஒருநொடி.. அனைத்தையும் மறந்து அவளை உறுத்துப் பார்த்தான் முகுந்தன்…
அந்த ஒரு பார்வைக்காக.. காத்திருந்தவள்.. மனம்துள்ள அந்தப் பார்வையை எதிர் கொண்டாள்..
“என்ன..?”
“என்னன்னா.. என்ன..?”
அந்தப் பக்கமாக மனைவியிடம் பேசிக்கொண்டே வந்த சங்கரன்.. அவர்களைக் கண்டதும் நின்று விட்டார்..
“என்னடி.. இது..?” மனைவியிடம் கேட்டார்..
“என்ன… என்னடி இது..?” கோதாவரி சடைத்துக் கொண்டாள்…
“என்னடி இப்படி சடைச்சுக்கிறவ…”
“இந்த சவுண்டை இங்கே விடாம அதுககிட்ட விடுங்க.. நிச்சயத்தப்போவும் இதே கதைதான்…”
“உனக்கு அதுதானே தெரியும்..? பொண்ணு பார்க்க வந்தப்பவே இந்தக் கதை ஆரம்பிச்சிருச்சுன்னு உனக்குத் தெரியுமா..?”
“நிஜமாவா..?”
“ஆமாம்டி.. ஆமாம்..”
“ஏன்.. என்கிட்ட சொல்லலை..?”
“சொல்லக்கூடாதுன்னு இல்லைடி கோதாவரி.. மறந்துட்டேன்.. அவ்வளவுதான்..”
“இது மட்டும் மறக்குமே…”
இருவரும் வழக்கடித்தபடி.. இளைய இருவரின் அருகே சென்றார்கள்..
“என்னப்பா முகுந்தா.. இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்க..?”
“ஒண்ணுமில்லை அங்கிள்.. சும்மாதான்…”
முகுந்தன் சங்கடத்துடன் சங்கரனுக்கு பதில் சொல்லியபடி நிவேதாவை முறைத்தான்.. அவனது பார்வை..
‘உன்னால்தானே..?’ என்று கேட்டது…
அவள் அதைப் பொருட்படுத்தாமல் சங்கரனைப் பார்த்து சிநேகிதமாய் சிரித்தபடி..
“பேசிக்கிட்டு இருந்தோம்ப்பா..” என்றாள்…
இந்தத் திருமணம் நடைபெறுவதே அவளது தயவால்தான் என்பதைப் புரிந்து வைத்திருந்த சங்கரன் அவளை வாத்சல்யத்துடன் பார்த்தார்…
“அதில்லைம்மா.. என்னவோ.. கே.பி. சுந்தராம்பாள் கேள்வி கேட்டதைப் போல.. ரெண்டு பேரும்.. என்ன.. என்ன.. என்னன்னு மாறி மாறி கேட்டுக்கிட்டு இருக்கீங்களே அந்த ‘என்ன’ தான் என்ன..?”
நிவேதா முகம் சிவக்க.. முகுந்தன் அவளது முகச்சிவப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு வானத்தைப் பார்த்தான்..
“என்னடி இது.. இவன்கிட்ட ‘என்ன’ன்னு கேட்டா இவன் வானத்தைப் பார்க்கிறான்..?”
“ஒருவேளை.. அந்த ‘என்ன’ என்னன்னு வானத்தில் எழுதி வைச்சிருக்கோ.. என்னவோ…”
“இந்த ‘என்ன’ வை விடு.. ஏம்ப்பா முகுந்தா..”
“சொல்லுங்க அங்கிள்…”
“சாயங்காலம் ரிசப்சனுக்கு ஏதோ மெல்லிசைக் கச்சேரி இருக்குன்னு சொன்னியே.. இருக்குமா..?”
சங்கரன் சந்தேகமாகக் கேட்டவிதத்தில் வாய் பொத்திச் சிரித்தாள் நிவேதா..
உடனடியாக கனல் பார்வையென்றை அவள் பக்கம் வீசினான் முகுந்தன்..
“எதுக்கும்மா சிரிக்கிற..?” கோதாவரிக்கு புரியவில்லை…
“இவருக்கு அது மறந்து விட்டது போலம்மா..” நிவேதா இன்னும் அதிகமாக பொங்கிச் சிரித்தாள்..
சங்கரனும்.. கோதாவரியும்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..
அவர்களுக்கு குழந்தையில்லை.. ஆத்மார்த்தமான சிநேகிதர்களான சாரங்கபாணி – வாசவி தம்பதியின் பிள்ளைகளைத்தான் தங்கள் பிள்ளைகளைப் போல அவர்கள் நேசித்தார்கள்..
ஆனால்… முகுந்தனும்.. மாதங்கியும் கூட அவர்களை ‘அம்மா’ ‘அப்பா’ என்று அழைத்ததில்லை…
‘அங்கிள்..’ ‘ஆன்ட்டி..’ என்றுதான் அழைப்பார்கள்..
இன்று அவர்கள் இருவரையும் வாய் நிறைய ‘அம்மா’ ‘அப்பா’ என்று அழைத்த நிவேதாவிடம் அவர்களுக்குப் பாசம் பொங்கியது…
கோதாவரியின் பார்வை வெகு பிரியத்துடன் நிவேதாவை வருடியது.. சங்கரனின் பார்வையோ அவளைத் தாலாட்டியது…
“இருக்கும்டா செல்லம்..” என்றாள் கோதாவரி..
“செல்லமா..?” விளக்கெண்ணெயைக் குடித்ததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு முகுந்தன் கேட்டான்..
“செல்லம்தான்.. இப்ப அதுக்கு என்னாங்கிற..?” கோதாவரி சேலை முந்தானையை இழுத்துச் செருகிக் கொள்ள…
“வர.. வர.. எல்லாப் பெண்களும் ‘சொர்ணாக்கா’வா மாறிக்கிட்டே வர்றாங்க..” என்றான் முகுந்தன்..
அந்த நேரம் பார்த்து அந்தப் பக்கமாக கல்யாணி செல் போனில் பேசியபடி வர.. அவளைக் காட்டிய நிவேதா.. சன்னக்குரலில்..
“என் அம்மாவைத்தானே சொல்றீங்க சார்..?” என்று முகுந்தனிடம் கேட்டாள்…
முகுந்தன் பார்வையிலேயே அலறுவதைக் கண்டவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது…
‘இருடி.. உன்னை ஒருநாள் கவனிச்சுக்கறேன்..’ முகுந்தன் ஏதோ வேலையிருப்பதைப் போன்ற பாவனையுடன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்..
கல்யாணி திருமண மண்டபத்துக்குள் போய்விட.. நிவேதா சிரிப்பு மாறாமல் சங்கரனையும்.. கோதாவரியையும் பார்த்தாள்…
“கெட்டிக்கார பெண்ணாய் இருக்கியே.. எதைச் சொன்னால் எங்க முகுந்தன் பயப்படுவான்னு கண்டு பிடிச்சு வைச்சிருக்க.. எங்க முகுந்தனையும் அலற வைக்க ஒரு ஆள் இருக்குதுன்னா அது ஆச்சரியம்தான்..” கோதாவரி சிலாகித்துக் கொண்டாள்..
“அவர் ஒன்றும் அலறலைம்மா.. அலறுவதைப் போல நடிக்கிறார்…”
“எதைவைச்சு அப்படிச் சொல்ற..?”
“அவர் ஊரையெல்லாம் அலற வைப்பார்.. இவரா அலறுவார்..?”
இதைச் சொன்னவளின் முகத்தில் கவிந்த துயர மேகத்தைக் கண்ட சங்கரனும்.. கோதாவரியும் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்…
நிவேதா சிறு புன்சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு சிறு தலையசைப்புடன் மண்டபத்திற்குள் போய்விட.. சங்கரன் மனைவியைப் பார்த்தார்…
“கோதாவரி..” என்றார் சங்கரன்..
“நீங்க என்ன நினைக்கறிங்களோ.. அதைத்தான் நானும் நினைக்கிறேன்..” என்றாள் அவருடைய பத்தினி..
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.