Chapter 18
மறுவீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல சாரங்கபாணியும்.. வாசவியும் வந்து விட்டார்கள்..
எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு.. நித்தியானந்தனும்.. மாதங்கியும் கிளம்பிய போது…
“நீயும் எங்க கூட வாயேன் நிவேதா…” என்று அழைத்தாள் மாதங்கி..
“அவள் எதற்கு..?” என்று கல்யாணி ஆட்சேபித்துக் கொண்டிருந்தபோதே..
“குட் ஐடியா..” என்று கிளம்பிவிட்டாள் நிவேதா…
“இதென்ன பழக்கம் நிவி..” கல்யாணி கோபப்பட்ட போது..
“இதுதான் பழக்கம் கல்யாணி..” என்று ஊடே தலையைக் கொடுத்தாள் – திடீர் நாட்டாமையான அந்த ‘அக்கா..’
“என்னக்கா சொல்ற..?”
“நீ அதிக நாள் சென்னையிலேயே இருந்துட்டதால.. உனக்கு நாட்டு வழக்கம் தெரியல கல்யாணி.. மறுவீட்டுக்கு மாப்பிள்ளை போகிறப்போ.. கூட மாப்பிள்ளையோட தங்கச்சி போகிறது வழக்கம்தான்..”
கல்யாணியால் மறுத்துப் பேச முடியாமல் போக… நிவதோ உற்சாகத்துடன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்களுடன் கிளம்பி விட்டாள்…
அவளுடைய முகுந்தனின் வீட்டில் அவள் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்திருந்தது..
ஜாக்பாட் கிடைத்திருந்தால் கூட இந்த அளவுக்கு நிவேதா சந்தோஷப்பட்டிருக்க மாட்டாள்..
அவ்வளவு சந்தோஷத்துடன் அவள் முகுந்தனின் வீட்டில் அடியெடுத்து வைத்தாள்..
தங்கை மறுவீட்டிற்கு வருகிறாள் என்பதால் வீடு தங்கியிருந்த முகுந்தன்.. நிவேதாவைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினான்.
விவரம் அறிந்ததும்.. தனிமையில் அவளிடம் சொன்னான்…
“நீயென்ன.. ஒட்டுப் புல்லா..?”
“ஆமாம்.. ஒட்டுப்புல்தான்.. உங்க தங்கையை ஒட்டுகிற புல்லில்லை.. உங்களோடு ஒட்டிக் கொள்கிற புல்…”
“நான் புலிடி.. புல்லைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்..”
“அதையும் பார்த்துரலாம்..”
“வீணாய் கனவு காணாமல் உன் வீடு போய் சேரு..”
“என் வீட்டுக்குத்தான் வந்திருக்கிறேன்…”
இதைக் கேட்டதும் முகுந்தன் அனலாய் அவளைப் பார்த்தான். சுட்டெரிக்கும் சூரியனாய் அவன் முறைத்த போதும்.. அவனது கோபம் அவளைச் சுடவில்லை..
நிலவின் குளிர்ச்சியை உணர்ந்தவளைப் போல.. மயக்கத்துடன் அவன் விழிகளுக்குள் பார்த்தாள்…
“திமிராடி..?”
“திமிர்தான்..”
“விலகி வந்துட்டேன்னு சொல்கிறேனில்ல.. அப்புறமும் ஏண்டி.. என்னையே துரத்துற..?”
“வேற யாரைத் துரத்த..? உங்க ஃபிரண்ட் ஜெகன் என்கிட்ட வழிகிறான்.. அவனைத் துரத்தவா..? இல்லை..”
நிவேதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. அவன் கையால் அறை வாங்கினாள்…
கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிலைகுலைந்து அவள் நின்றபோது.. அவன் ஒரு விரலை நீட்டி அவளை எச்சரித்தான்..
“கொன்னுடுவேன்.. ராஸ்கல்.. யார்கிட்ட உன் வேலையைக் காட்டற…”
அவள் அடிபட்ட கன்னத்தின் வலியைப் பொருட் படுத்தாமல் அழுத்தமான குரலில் அவனிடம் வினவினாள்.
“எரியுதில்ல..?”
“என்ன.. சொன்ன..?”
“ஏன்.. காதில் விழுகலையா..? ‘எரியுதில்ல’ன்னு கேட்டேன்…”
“புரியலை..”
“உங்களுக்கா புரியாது..? நீங்க பலே கில்லாடியாச்சே.. வெறும் பேச்சுக்கே இன்னொருவன் பெயரை நான் சொன்னால் உங்களால் தாங்கிக்க முடியலையே.. நாளைக்கே எனக்கொரு கல்யாணம்ன்னு வந்து, இன்னொருத்தன் என் கழுத்தில் தாலியைக் கட்டினால் நீங்க அதைத் தாங்கிக்குவிங்களா..?”
“நிவி..”
“சும்மா.. உங்க மனசை மறைச்சு வேஷம் போடாதீங்க… உங்களுக்கு தைரியம்.. வாழ்நாள் பூராவும் நீங்க என்ன ஒதுக்கி வைச்சாலும் இன்னொருத்தன் நிழலைக்கூட நான் திரும்பிப் பார்க்கமாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. அந்த தைரியம்…”
முகுந்தன் உதட்டைக் கடித்துக் கொண்டு நிவேதாவைப் பார்த்தபடி அசையாமல் நின்றான்.. அவளது குற்றச்சாட்டில் உண்மையுள்ளது என்பதை அவன் மனம் அறியும்.
“உங்க மேல நான் வைச்சிருக்கிறது வெறும் காதல் மட்டுமில்லைங்க.. என் உயிர். நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கையில்லை முகுந்தன்..”
அவன் மனம் இளகாமல் இரும்பாக நின்றான். சுழன்றடிக்கும் சூறாவளியாய் அவள் பேசிய வார்த்தைகள் அவன் மனதை ஆக்ரமித்தன…
“ஏய்ய்.. நானே உன்னை வைத்துக் காப்பாற்ற வக்கில்லாதவன்… என்னை நம்பி எப்படி கழுத்தை நீட்டறதுன்னு கேள்வி கேட்டவ நீ.. இந்தக் கதைகளையெல்லாம் எதுக்குடி.. என்கிட்ட வந்து நீ சொல்கிற..”
“உங்ககிட்டப் பேசாமல் வேற யார்கிட்டப் பேசுவேன் முகுந்தன்..?”
“இதையே எத்தனை தடவைதான் நீ மாற்றி மாற்றிக் கேட்டு.. அடி வாங்கிச் சாவ..?”
“அப்படிச் செத்தால் கூடத் தேவலாம்..”
நிவேதாவின் விழிகள் பொங்கிவிட்டன.. முகுந்தன் மனம் தாளாமல் அவளைத் தொடப் போனவன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு படிகளில் இறங்கிச் சென்று விட்டான்.
மொட்டை மாடியின் தனிமையில் நிவேதா அநாதை போல விசும்பிக் கொண்டிருந்ததை அடுத்த வீட்டு மாடியிலிருந்து சங்கரனும்.. கோதாவரியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் காற்று வாங்கத்தான் மொட்டை மாடிக்கு வந்தார்கள். காற்று வாக்கில் அவர்கள் காதில் விழுந்த நிவேதாவின் கதையை வாங்கிக் கொண்டு யோசனையாக நின்று விட்டார்கள்…
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.