Chapter 19
“என்னடி கோதாவரி இது..?”
“என்னன்னு என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்..?”
“இதுகளுக்குள்ள இவ்வளவு நடந்திருக்கா..?”
“அதுதான் காதைக் கொடுத்து இத்தனை நேரமும் கதை-கதையாய் கேட்டோமே..”
“என்னடி செய்யலாம்..?”
“எனக்கொண்ணும் தோணலை..”
அன்று மாலையில் குடும்பத்தோடு அவர்கள் கோவிலுக்கு போன போது நிவேதாவை முகுந்தனின் அருகே விட்டு – பேச்சுவாக்கில் ஒதுங்கிக் கொள்வதைப் போல சங்கரனும்… கோதாவரியும் ஒதுங்கிக் கொண்டார்கள். சும்மாவும் ஒதுங்காமல் அவர்களுடைய பேச்சில் சாரங்க பாணியையும்.. வாசவியையும் இழுத்துக் கொண்டார்கள்..
நித்தியானந்தன் – மாதங்கியின் உலகமே வேறாக இருந்தது. அவர்கள் தாழ்ந்த குரலில் கிசுகிசுத்து சிரித்துக் கொண்டிருக்க.. முகுந்தன் நிவேதாவின் அருகில் வர நேர்ந்தது..
இயல்பாக நடப்பதைப் போல நிவேதா அவனை உரசிக் கொண்டு நடக்க..
“ஏய்ய்.. தள்ளி நடடி..” என்று அடிக்குரலில் சீறினான் முகுந்தன்..
“எவ்வளவு தள்ளி நடக்க..? இவ்வளவு போதுமா..?” நிவேதா அவனருகே நெருங்கி நடந்தாள்..
“கொழுப்பு உனக்கு..”
“அதுதான் உங்களுக்கு தெரிந்த விசயமாச்சே…”
“தள்ளி நடன்னா.. கிட்ட வருகிற..?”
“இதுக்கு மேல உங்களைத் தள்ளிக்கிட்டு நடந்தா அத்தையும்.. மாமாவும் என்ன நினைப்பாங்க..?”
அறியாப் பெண்ணைப் போல அவள் இமை- கொட்டிக் கேட்டதும் அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது..
விலகிப் போனாலும்.. நிழலாய் தொடர்பவளின் மேல் அவன் மன ஆழத்தில் இருந்த காதல் இன்னும் அதிகமாகியது..
அவளைப் பாராததைப் போல.. ஓரவிழிப் பார்வை பார்த்தான்.
கோவிலுக்கு செல்வதற்காக பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இடுப்பு வரை இருந்த முடியைப் பின்னலிட்டு மல்லிகைப் பூவை வைத்திருந்தாள்..
மங்கலகரமாக.. மனதில் ‘பச்சக்’கென்று பதிவதைப் போல இருந்தவளை தாகத்துடன் பார்த்தான் அவன்.
அவள் பேசும்போது காதுகளில் இருந்த குடைஜிமிக்கி ஆடுவதை சுவாரஸ்யமாக கவனித்தவனுக்கு அவளை இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது..
விரட்டினாலும்.. விடாமல் பின்தொடரும் அவளின் நேசம்.. அவன் மனதிற்கு இதத்தை தந்தது…
“மதியம் ஏன் சரியாய் சாப்பிடலை..?” என்று வினவினான்…
“அடேங்கப்பா.. ரொம்பத்தான் அக்கறை..” அவள் கழுத்தை வெட்டினாள்..
“மெல்லடி.. கழுத்து சுளுக்கிக்கப் போகுது…”
“கன்னத்தை பழுக்க வைத்துவிட்டு.. கழுத்தைப் பற்றிக் கவலைப் படுகிறார்..”
“வாய்க் கொழுப்பெடுத்து பேசினால் இப்படித்தான்..”
கடந்த காலத்தை நினைவு படுத்தி.. அர்த்தம் பொதிய முகுந்தன் பேசியதும் நிவேதா மௌனமாகி விட்டாள்.
தீபாராதனை காட்டும் போது.. கண்மூடி கடவுளை வேண்டி நின்ற நிவேதாவின் கன்னத்தில் கண்ணீர் கோடிட்டிருந்தது..
முகுந்தனுக்கு மனம் வலித்தது…
இந்த மனவலிகள் ஏன் அவனை மட்டும் துரத்துகின்றன என்று அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது..
பிடித்ததைச் செய்ய ஒரு மனிதனுக்கு சுதந்திரம் இருக்கவேண்டும். லட்சியத்தை விட்டுவிட்டு பத்தோடு பதினொன்றாக இரு என்று ஊர் சொல்லலாம்…
உளமார காதலிப்பவள் சொல்லக்கூடாது…
வாழ்க்கையைப் பணயம் வைக்கப் போவது அவள் மட்டும் தானா..? அவனில்லையா..? இதை ஏன் நிவேதா நினைத்துப் பார்க்கவில்லை… என்று அவன் நெஞ்சம் கேள்வி கேட்டது.
கட்டிக் கொண்டவன் காலம் பூராவும் சோறு போட்டு.. துணிமணிகளை வாங்கிக் கொடுத்து.. ஒரு கூரையின் கீழ் பாதுகாப்பாக தங்க வைக்கிறவனாக இருக்க வேண்டும் தான்..
அதற்காக.. அதை மட்டுமே நோக்கமாக வைத்து ஒரு ஆண்மகனைத் தேடினால்.. அங்கே கணக்கீடுதானே வரும்? காதல் எங்கிருந்து வரும்..?
நம்பி வந்தவளுக்கு வயிறார சோறு போடாமல் முகுந்தன் இருக்க மாட்டான் என்ற நம்பிக்கை.. அவனை உயிராய் நினைக்கிறவளுக்கு இருக்க வேண்டாமா..?
திருமணம் என்ற துணையில்லாமல் இருந்தவன் லட்சியத்தின் பின்னால் பயணப் பட்டுக் கொண்டிருந்தான். அதுவே திருமணம் என்று ஆகிவிட்டால் அவள் லட்சியத்தைப் பற்றி மட்டும் நினைப்பானா..? தன்னை நம்பி வந்திருக்கும் பெண்டாட்டியை நினைக்காமல் போவானா..?
நிவேதா அவசரப்பட்டு வார்த்தைகளை சிதற விட்டுவிட்டாள்.
சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாமல் இன்று திகைத்து நிற்கிறாள்.
முகுந்தனுக்கு அவள் மேல் இரக்கமாக இருந்தது… பிரகாரத்தை வலம் வந்த போது…
“ஏண்டி அழுகிற..?” என்று கேட்டான்.
“உங்களுக்குத் தெரியாதா..?”
“நிவேதா.. என் மேல் குற்றமில்லை.. அது உனக்கே நல்லாத் தெரியும்..”
“என் மேலயும் குற்றமில்லை முகுந்த்.. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்கன்னா.. உங்களுக்கும் அது நல்லாத் தெரியும்..”
“இப்ப என்ன செய்யலாம்கிற.. வேணும்னா உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. என்னைச் சொல்லிக் குற்றமில்லை.. காலம் செய்த கோலமடி.. கடவுள் செய்த குற்றமடின்னு பாட்டுப் பாடலாமா..?”
“ம்த்சு…”
“போகாத ஊருக்கு வழி தேடாதே நிவேதா.. என்னால் நீ பேசிய வார்த்தைகளை மறக்க முடியாது..”
“என்னாலும் உங்களை மறக்க முடியாது..”
“அப்ப.. காலம் பூராவும் இப்படியே கண் கலங்கிக் கிட்டு நில்லு..”
“நீங்க மட்டும்… இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு.. அவளுடன் ஜாலியாய் குடும்பம் நடத்தப் போகிறிங்களா..?”
நிவேதாவின் கேள்விக்கு ‘ஆமா’மென்ற பதிலைச் சொல்ல முகுந்தனால் முடியவில்லை.
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.