Chapter 07
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து வெற்றி பெறுவதில் லீலாவதி கில்லாடியிலும் கில்லாடி.. வீரப்பனின் மனைவியென்ற உறவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த சில தினங்களிலேயே அறுபது பவுன் நகையை அபேஸ் செய்து காட்டி விட்டாள்..
மகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் வீரப்பனை வாட்ட ஆரம்பித்து விட்டது.. லீலாவதியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என அவர் நம்பத் தயாராக இல்லை.. டி.என்.ஏ டெஸ்ட் அது இது என்று போனால் லீலாவதி அசிங்கமான ஆதாரங்களைக் காட்டி அவரை சந்தி சிரிக்க வைத்து விடுவாள் என்பதினால்தான் வாயை மூடிக் கொண்டு அவள் கழுத்தில் தாலியைக் கட்டி வைத்தார்.. அவள் எதற்கும் துணிந்தவள்..
அர்ச்சனா பட்டப் படிப்பை முடித்து விட்டு எம்.காம் படிக்க ஆரம்பித்தாள்.. அவளுக்குப் பிடித்தமான வங்கித் தேர்வை எழுதி விட்டு மாலை நேரங்களில் கம்யூட்டர் வகுப்புகளுக்குப் போனாள்.. எப்படியாவது மகளை தன் சொந்தக்கால்களில் நிற்க வைத்துவிட வேண்டும் என்பதில் வீரப்பன் முனைப்பாக இருந்தார்..
அவருக்கும் அபிராமிக்கும் இடையே இருந்த உன்னதமான காதல் நிரம்பிய தாம்பத்யத்தின் அடையாளம் அர்ச்சனா..! அபிராமியின் வயிற்றில் பிறந்தவள்.. அவள் வாழ்வாங்கு வாழ வேண்டும்.. அதற்கு படிப்பும் வேலையும் அவசியம்..
இரவு பகலாக அவர் உழைத்து மகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்.. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக லீலாவதி அவற்றைத் தடுக்கவில்லை.. அர்ச்சனாவை வீட்டுக்குள் முடக்கிப் போடாமல் மேலே படிக்கவும், அரசாங்க வேலைகளுக்கான பரிட்சைகளை எழுதவும் அவள் அனுமதித்தற்குப் பின்னால் பலமான சுயநலம் மறைந்திருந்ததை வீரப்பன் உணராமல் போனார்.. அதை உணர்ந்திருந்தால் மகள் பெயரில் இருக்கும் வீட்டைக் காட்டி கையில் இருக்கும் பணத்தில் நகைகளை வாங்கிப் போட்டு நல்ல இடத்தில் அவளுக்குத் திருமணம் செய்து வைத்து மகளுக்கான பாதுகாப்பை அளித்திருப்பார்..
“இது என் மகள் பெயரில் இருக்கும் வீடு.. நீயும் நானும் என் சம்பாத்தியத்தில் வாடகை வீட்டில்தான் இருந்தாகனும்..” என்று லீலாவதியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வீட்டை விட்டு வெளியேற்றி தானும் வெளியேறியிருப்பார்..
ஐந்தாண்டு காலத் திட்டம், ஆறாண்டு காலத் திட்டம் என்பதையெல்லாம் தாண்டி லீலாவதி ஆயுள்காலத் திட்டம் போட்டு வைத்திருப்பாள் என்பதை அவர் அறியாமல் போனார்..
‘இந்தாளு கட்டிடம் கட்டற வேலை பாத்து என்னத்தை சம்பாதிக்கிறது..? வயசும் ஆகிப் போச்சு.. பொண்டாட்டி செத்துப் போனதில தெம்பில்லாம மூலையிலே சுருண்டு கிடக்கு.. இதை நம்பி எந்தப் பிரயோசனமும் இல்ல.. இந்த வீட்ட இந்தாளோட மக பேரில இருந்து என் பேருக்கு மாத்திக்கிட்டா மட்டும் போதுமா..? சோத்துக்கும் சுகமா வாழறதுக்கும் வழி வேணாமா..? இந்தாளு சம்பாத்தியத்தில முக்கி முனங்கி ஒரு வீட்டைக் கட்டி அறுபது பவுனு நகைகயை சேர்த்து வைச்சதே பெரிசு.. இதுக்கு மேல ஓடி ஓடி ஒன்பத்திரண்டு தோப்புக்கரணம் போட்டாலும் ஒத்தைப் பைசாவச் சேர்க்க முடியாது.. அதுக்கு படிப்பும் கவர்ண்மென்ட் வேலையும் வேணும்.. இந்தாளால செய்ய முடியாததை இந்தாளோட மக செய்யட்டுமே..’ இதுதான் லீலாவதியின் எண்ணம்..
அவளுக்கு என்றுமே மாதச் சம்பளத்தின் மீது ஒர் மோகம் உண்டு.. படிப்பறிவில்லாத சித்தாளான அவளால் அவளது வட்டத்திற்குள்தான் வலை வீச முடிந்தது.. மாதாந்திர சம்பளகாரர்கள் இவளை வீட்டு வேலைக்காரியாக மட்டுமே பார்த்தார்கள்.. அதைத் தாண்டி வர முகம் சுளித்தார்கள்..
சதி லீலாவதியும் விரலுக்கேற்ற வீக்கம் என்று அவள் அளவுக்கு சதி பண்ணி வீரப்பனைக் கணக்குப் பண்ணினாள்.. எதிர்பாராதவிதமாக அவருக்கு வீட்டுக்காரியாகவும் ஆகிவிட்டாள்.. அவள் கனவு கண்ட மாதச் சம்பளம் அர்ச்சனாவின் மூலமாக கிடைப்பதைப் போல இருந்தால் அதை எதற்காக வேண்டாம் என்று சொல்ல வேண்டும்..?
உழவுக்கு அனுப்ப எண்ணம் கொண்டு விட்டால் மாட்டுக்குத் தண்ணீர் காட்டி வைக்கோல் போட்டுப் பராமரிக்க வேண்டும் இல்லையா..? அதைத்தான் லீலாவதியும் செய்தாள்..
‘கண்ணு.. கண்ணு..’ என்று பாசம் காட்டுவதைப் போலப் பேசி அர்ச்சனாவைக் கைக்குள் போட்டுக் கொண்டாள்.. லீலாவதியைப் பற்றி எடுத்துச் சொல்லி அவளிடமிருந்து விலகி நிற்கும்படி வீரப்பன் அறிவுறுத்திப் பார்த்தார்.. தேனொழுகும் குரலில் பேசி அர்ச்சனாவைத் தன் பக்கமாக லீலாவதி இழுத்துக் கொண்டாள்..
“உன் அம்மா செத்துப் போனதுக்கு நானும் உன் அப்பாவும் சேர்ந்து வாழ்ந்ததுதான் காரணம்ங்கிற குற்ற உணர்ச்சியில உன் அப்பா என்னை வெறுத்து ஒதுக்கறாரு அர்ச்சனா.. நான் என்ன செய்வேன்..? உன் அம்மா ஒர் நோயாளின்னு என்னிடம் அழுது கெஞ்சி அந்த வாழ்க்கைக்கு சம்மதிக்க வைத்தார்.. என்கூட வேலை பார்த்த கொத்தனாருக்கு கொஞ்ச வயசுதான்.. என்னைக் கட்டிக்கனும்னு ஆசைப்பட்டார்.. அவரைக் கல்யாணம் பண்ணியிருந்தா நான் மதிப்பும் மரியாதையுமா வாழ்ந்திருப்பேன்.. இந்நேரத்துக்கு ரெண்டு புள்ளைக்கு தாயாகியிருப்பேன்.. அதையெல்லாம் உன் அப்பாமேல இருந்த இரக்கத்தினால வேண்டாம்ன்னு சொல்லிட்டு மறைவு வாழ்க்கை வாழ்ந்தேன்.. தப்பு செஞ்சது அவரு.. தண்டனை எனக்கா..?”
மூச்சை இழுத்துப் பிடித்து ஏற்ற இறக்கங்களுடன் உணர்ச்சிப் பிழம்பாக லீலாவதி பேசும் வசனத்தில் உருகிப் போய் விடுவாள் அர்ச்சனா.. லீலாவதியின் கைகளை இறுக்கிப் பிடித்து..
“நானிருக்கேன் சித்தி உங்களுக்கு..” என்று சொல்லி விடுவாள்..
இப்படி அபிராமி பெற்ற மகளை லீலாவதிக்காக வாழ்கிறேன் என்று சொல்ல வைக்கும் சாகசம் நிறைந்தவள் தான் லீலாவதி.. அவளுக்கு வினயம் நிறைந்த வினய் மகனாகப் பிறந்தான்.. எப்படிப்பட்ட கோணத்திலும் எந்தவொரு அசைவிலும் அவன் வீரப்பனைக் கொண்டிருக்கவில்லை, அவரது ஜாடை அவனுக்குத் துளியும் இல்லை என்று ஊரே சுட்டிக்காட்டியது.. மாறாக அவன் வீரப்பனுடன் வேலை பார்த்த வேறு ஒருவனின் பிரதி பிம்பமாக இருந்ததில் வீரப்பன் மனம் வெறுத்துப் போனார்… மகளைக் குறித்த கவலை அதிகரித்தது..
மறந்தும் அவர் வினய்யின் பக்கம் போக வில்லை.. அதைக் குறித்து லீலாவதி கிஞ்சித்தும் கவலைப் படவில்லை.. அவளுக்கு என்ன..? அவள் பெயரில் ஒரு வீட்டுமனை.. அடகு வைத்த அறுபது பவுன் நகைகள்.. கடன் வாங்கி நகைகளைத் திருப்பி பாதி நகைகளை விற்று கடன்களை அடைத்தாலும் மீதம் முப்பது பவுன் நகை மிஞ்சுமே.. எது எப்படிப் போனாலும் உiப்பாளியான வீரப்பன் வேலைக்குப் போகாமல் இருக்க மாட்டாரே.. தினமும் அவர் கொடுக்கும் பணத்தில் தனக்கென்று
ஒதுக்கி வைத்துக் கொண்டு போனால் போகிறது என்று தகப்பனுக்கும் மகளுக்கும் ரசம் சோறையும் துவையலையும் கண்ணில் காட்டுவாள் லீலாவதி..
“குடும்பம் பெரிசாகிருச்சு அர்ச்சனா.. உன் அப்பா கொடுக்கிற பணம் பத்த மாட்டேங்குது.. ரசம் சோறு துவையல்ன்னாலும் தினமும் கிடைக்கனுமே.. உன் அப்பா உடம்புக்கு முடியலைன்னு ஒரு வாரம் படுத்துக்கிட்டா இந்த வீடு என்னவாகிறது..? அவர் என்ன மாதச் சம்பளமா வாங்கறாரு..?”
இப்படிப் பேசிப்பேசி அர்ச்சனாவின் மனதில் எப்படியாவது ஒரு வேலையைத் தேடிக் கொண்டுவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை லீலாவதி விதைத்து வைத்தாள்..
வீரப்பன் லீலாவதியுடன் பேச மாட்டார்.. அவள் கையால் பச்சைத் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்க மாட்டார்.. அவள் பெற்ற மகனைத் திரும்பியும் பார்க்க மாட்டார்..
இதைக் குறித்த கவலைகள் எதுவுமின்றி சந்தோசமாக சீவிச் சிங்காரித்து வலம் வந்தாள் லீலவாதி.. தகப்பனும் மகளும் வீட்டை விட்டு வெளியே கிளம்பியவுடன் தனக்கான பிரத்யேக சமையலை விதம் விதமாக செய்து வயிறார சாப்பிட்டு விட்டு வெளியில் சென்று வேலை பார்த்து, படித்து களைத்து வீடு திரும்புவர்களுக்கு ரசம் சோறையும் துவையலையும் கண்ணில் காட்டுவாள்.. வீரப்பன் பல்லைக் கடிப்பார்.. ஒரு ஆளின் வருமானத்தில் இதைவிடப் பெரிதாக என்ன சமையல் செய்துவிட
முடியும் என்று லீலாவதியைத் தாங்கிப் பேசுவாள் அர்ச்சனா.. அதில் வீரப்பனின் கவலை அதிகரிக்கும்..
சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மட்டும் லீலாவதியிடம் கொடுத்து விட்டு மீதப் பணத்தை அவர் சேமித்துக் கொண்டுதான் இருந்தார்.. அபிராமியின் பொடி பொட்டு நகைகளை வீட்டிலிருந்து அகற்றி வேறு ஒரு இடத்தில் பத்திரப்படுத்தியிருந்தார்.. அர்ச்சனா லீலாவதியை நம்புவதை புரிந்து கொண்டவர் அவள் பெயரிலிருக்கும் வீட்டைப் பாதுகாக்க என்ன வழியென்று ஆழ்ந்து யோசித்து லீலாவதி செயல்படுத்திய திட்டத்தை பின்பற்றி ஓர் திட்டத்தைத் தயாரித்து அதை செயல் படுத்தி விட்டார்..
கல்லூரிக்குக் கிளம்பிய அர்ச்சனாவை பாதி வழியில் நிறுத்தி தன்னுடன் அவர் அழைத்துக் கொண்டு போன போது என்ன, ஏது என்று ஆயிரம் கேள்விகளைக் கேட்டுத் துளைத்து எடுத்து விட்டாள் அர்ச்சனா.. அனைத்துக்கும் அபிராமியின் பெயரைச் சொல்லி அவள் வாயை அடைத்து விட்டார் வீரப்பன்..
“எதுக்குப்பா காலேஜை கட் பண்ணச் சொல்றீங்க..?”
“உன்னால அப்பாவுக்கு ஒரு உதவி ஆகனும்மா..”
“அதை வீட்டிலேயே சொல்லியிருந்தா நாம சேர்ந்தே வந்திருக்கலாமே..”
“வீட்டில் அந்தப் பிடாரி இருக்கிறாளேம்மா..”
“சித்தியை அப்படியெல்லாம் திட்டாதீங்கப்பா.. அவங்க பாவம்..”
‘அவளா பாவம்..? இப்படியொரு ஏமாளியாய் இருக்கிறாயே அர்ச்சனா..’ வீரப்பனுக்கு நெஞ்சை வலிப்பதைப் போல இருந்தது..
“அவங்களுக்குத் தெரியாம நாம எதையும் செய்யக் கூடாதுப்பா… அது தப்பு… அவங்களை விலக்கி வைக்கிறதைப் போல ஆகிரும்..”
“எனக்கு மட்டும் அவளை விலக்கி வைக்கனும்ங்கிற எண்ணமா என்ன..? இது அபிராமியின் மரியாதை சம்பந்தப்பட்டதாச்சே..”
வீரப்பன் சாதுர்யமாக மனைவியின் பெயரைச் சொன்னதும் அர்ச்சனா லீலாவதியை மறந்து விட்டாள்.. தாயின் நினைவில் பதறிப் போனாள்..
“அம்மாவின் மரியாதைக்கு என்னப்பா..?”
“ஒன்னுமில்லை அர்ச்சனா.. அவ உனக்கு நகை வாங்கிச் சேர்த்து வைக்கனும்ங்கிற ஆசையில எனக்குத் தெரியாம பத்து வட்டிக்கு கடன் வாங்கிட்டா..”
“ஐயோ..”
“அந்த நகைகளை நான் தெரியாத்தனமா லீலாவதிக்குக் கொடுத்துட்டேன்.. அவ அதை அடகு வைச்சுக் கிடைச்ச பணத்தில அவ பேருக்கு வீட்டு மனை வாங்கிக்கிட்டா..”
அர்ச்சனா மௌனமானாள்.. தன்னை தன் மகள் வெறுத்தாலும் பரவாயில்லை.. அவளது வீட்டைக் காப்பாற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் அவளது மௌனம் கக்கிய வெறுப்பைத் தாங்கிக் கொண்டார் வீரப்பன்..
அவரை அவர் மகள் வெறுக்கட்டும்.. கூடவே அபிராமியின் நகைகளை அபகரித்த லீலாவதியின்மீது துளியளவாவது வெறுப்பு வராதா..? அது போதும் அவருக்கு.. அர்ச்சனா லீலாவதியை முற்றிலுமாக நம்பி விடக்கூடாது..
“சித்தியிடம் போன நகை திரும்பாதுப்பா.. அதை மறந்திருங்க.. எனக்கு நகை மேல ஆசையில்லை..”
“அது அபிராமி உனக்காக கடன் வாங்கி செய்து வைத்த நகைகள் அர்ச்சனா..”
“இதையெல்லாம் அந்த நகைகளைத் தூக்கிச் சித்தியிடம் தாரை வார்க்கிறபோதே நினைத்துப் பார்த்திருக்கனும்ப்பா.. நினைத்துப் பார்க்க வேண்டிய நேரங்களில நீங்க எதையும் நினைக்காம மனம் போல வாழ்ந்துட்டிங்க.. இப்ப அம்மா போன பின்னாலே அதையெல்லாம் நினைத்து என்ன ஆகப் போகுது..?”
“ஒன்னும் ஆகாதுதான்.. ஆனா அர்ச்சனா.. அபிராமி வாங்கின கடன் வட்டியோட வளந்து நிக்குதேம்மா.. அதை அடைக்கலைன்னா அபிராமிக்குத்தானே கெட்ட பெயர் வரும்..? அவ வாழ்ந்த காலத்திலதான் நான் எதுவும் செய்யாம போயிட்டேன்.. அவ போன பின்னாலேயாவது அவளை யாரும் ஒற்றை வார்த்தை சொல்லி விடாம காப்பாற்றி விடனும்னு துடிக்கிறேன்ம்மா..”
வீரப்பன் அழுதார்.. கூடவே அர்ச்சனாவும் சேர்ந்து அழுதாள்.. தகப்பனும், மகளும் மனதில் சுமந்து கொண்டிருந்த துயரத்தின் பாரத்தைக் கண்ணீரில் கரைத்தார்கள்.. அழுது அழுது ஓய்ந்து போன அர்ச்சனா கண்களைத் துடைத்தபடி..
“கடன் எவ்வளவு இருக்கும்ப்பா..” என்று கேட்டாள்..
“அபிராமி என்னவோ பதினாறு லட்சம்தான் வாங்கியிருக்கா.. அது வட்டியோட வளர்ந்து இப்ப எழுபது லட்சத்தில வந்து நிற்குதும்மா..”
வீரப்பன் கெட்டிக்காரர்.. அர்ச்சனாவின் பெயரில் இருக்கும் வீட்டை குறைந்த தொகைக்கு அடமானம் வைத்தால் லீலாவதி விழித்துக் கொள்வாள்.. குடியிருக்கும் வீடு அடமானத்தில் இருக்கக் கூடாது கண்ணு.. கடன் பட்டாவது நான் அதைத் திருப்பி விடுகிறேன்.. நீ வீட்டை என் பெயருக்கு எழுதி வைத்து விடு என்று சொல்லி அவள் பெயரிலிருக்கும் வீட்டடி மனையையும், நகைகளையும் விற்றுப் பணத்தைப் புரட்டி அர்ச்சனாவின் வீட்டை மீட்டு விடுவாள்.. அர்ச்சனாவும் சித்தி செய்த தியாகத்தில் நெகிழ்ந்து போய் வீட்டை லீலாவதியின் பெயருக்கு எழுதி வைத்து விடுவாள்..
எந்த வகையிலும் லீலாவதியால் அசைக்க முடியாத கடன் தொகையாக இருக்க வேண்டும் என்று எழுபது லட்சத்தை அவர் சொன்னார்.. சாத்தூரின் மையப் பகுதியில் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் அவரது வீடு என்பது லட்சத்திற்கும் மேல் விலை பெறும்.. வீட்டின் பெயரில் எழுபது லட்சத்திற்குக் கடன் கொடுக்க தேசிய உடமை வங்கியொன்றின் மேலாளர் சம்மதம் தெரிவித்திருந்தார்.. அவருக்கு வீரப்பனின் குடும்பக்கதை பற்றி நன்றாகவே தெரியும்.. வீரப்பனின் நண்பர் அவர்.. அவருக்கும் லீலாவதி வலை வீசியிருக்கிறாள்.. அவர் அகப்பட்டாமல் சினந்து அவளை விரட்டியடித்திருக்கிறார்.. அதை வீரப்பனிடம் சொல்லாமல்..
“டோன்ட் வொர்ரி வீரப்பன்.. உங்க மகளின் பாதுகாப்புக்காக நான் இந்த ஹெல்ப்பைப் பண்றேன்..” என்று மட்டும் சொல்லியிருந்தார்..
“இப்ப என்ன செய்யலாம்ப்பா..?” கவலையான அர்ச்சனா சட்டென முகம் பிரகாசிக்க..
“நம்ம வீடு இருக்கேப்பா.. அதை விற்று கடனை அடைச்சுடலாம்ப்பா..” என்றாள்..
இது.. இது.. இதைத்தானே வீரப்பனும் எதிர் பார்த்தார்.. அர்ச்சனாவே இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று அவர் எதிர் பார்த்தது நடந்து விட்டது..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.