Chapter 08

0Shares

அர்ச்சனா மென்மையானவள்.. சூது, வாது தெரியாதவள்.. அபிராமியின் சாவுக்குக் காரணமான லீலாவதியையும் மன்னித்து அவள்மீது பாசம் காட்டும் அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவள்.. லீலாவதியின் மகனை தன் தகப்பனுக்குப் பிறந்தவன் என்று நம்பி அவன்மீது தம்பி, தம்பியென்று பிரியத்தை அள்ளிக் கொடுப்பவள்.. லீலாவதியின் சாகசத்தின் அளவு எத்தகையது என்பதை அறியாதவள்..

இப்படிப்பட்ட குணநலன்களை கொண்ட பெண்ணை சூனியக்காரியின் சுயரூபமாக இருக்கும் லீலாவதியிடமிருந்து மீட்காவிட்டாலும் காக்க வேண்டுமல்லவா..? அதை அர்ச்சனாவுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.. நாடகமாடித்தான் வழிக்குக் கொண்டுவர முடியும்..

அதைத்தான் வீரப்பன் செய்து கொண்டிருந்தார்..

“வீட்டை விற்றுவிட்டா லீலாவதி குய்யோ, முறையோன்னு அலறி ஊரைக் கூட்டுவாளேம்மா..”

“ஆமாமில்ல.. குடியிருக்க சொந்தமா வீடில்லைன்னா அவங்க கோபப்படத்தானே செய்வாங்க..?”

இதுதான் அர்ச்சனா.. கால்வாயோரமாக ஓலைத் தடுப்புகளால் மறைக்கப்பட்டிருந்த குடிசையொன்றில் வசித்து வந்தவள்தான் லீலாவதி.. வீரப்பனின் தயவினால் ஒரு ஓட்டு வீடு வாடகைக்குக் கிடைத்தது..

இவற்றையெல்லாம் அர்ச்சனா அறிந்திருந்தாலும் சொல்லிக் காட்டமாட்டாள்.. நினைத்தும் பார்க்க மாட்டாள்.. சொந்தமான வீடு ஒன்றில் குடியிருக்க வேண்டம் என்றுதானே வீரப்பனின் வயதையும் பொருட்படுத்தாமல் லீலவாதி அவருக்கு இளையதாரமாக வாழ்க்கைப்பட்டாள் என்று லீலாவதியின் தரப்பிலிருக்கும் நியாயத்தையும் (?) தியாகத்தையும் (???) தாங்கிப் பிடித்துப் பேசுவாள்..

“அந்தக் கருமாயத்துக்குத்தான் நான் வீட்டை அடமானம் வைக்கலாம்ங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்..” எரிச்சலுடன் சொன்னார் வீரப்பன்..

“வைக்கலாம்தான்.. ஆனா நம்ம வீட்டு மேல எழுபது லட்சம் கடன் கொடுப்பாங்களாப்பா..?” சந்தேகத்துடன் கேட்டாள் அர்ச்சனா.. 

“கொடுப்பாங்கம்மா.. எனக்குத் தெரிஞ்ச பேங்க் மேனேஜர் ஒருத்தர் நம்ம மேல பரிதாபப்பட்டு நம்ம வீட்டு மேல எழுபது லட்சம் லோன் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காரு..” என்றார் வீரப்பன்..

“அப்புறம் என்னப்பா.. வெளியே தெரியாம வீட்டு மேல லோன் வாங்கி அம்மா பட்ட கடனை அடைச்சிரலாம்..” அர்ச்சனா பரபரபத்தாள்..

“அதுக்கான ஏற்பாடுகளைச் செய்துட்டேன் அர்ச்சனா.. பேங்கிலயும் ரெஜிஸ்ட்ரர் ஆபிசிலயும் நீ வந்து கையெழுத்துப் போடனும்மா.. அது மட்டும்தான் பாக்கி..”

அப்பாவி அர்ச்சனா அப்பா சொன்னதற்குத் தலையாட்டி விட்டாள்.. வங்கிக்கும், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும் சென்று அவர் கையெழுத்துப் போடச் சொன்ன இடங்களில் கையெழுத்துப் போட்டு விட்டாள்..

வீரப்பன் கெட்டிக்காரர்.. சாத்தூரில் வளர்ந்து வரும் புறநகர் பகுதியில் ஒரு பங்களாவை எழுபது லட்சத்திற்கு விலை பேசி வைத்திருந்தார்.. மகள் பெயருக்கு அதை வாங்கி விட்டார்.. தான் போடும் கையெழுத்து வீட்டின் மீது கடன் வாங்குவதற்கு மட்டும்தான் என்று அர்ச்சனா நினைத்துக் கொண்டிருக்க.. அவர்கள் குடியிருந்த வீட்டின் மீது கடனை வாங்கி மகள் பெயரில் புதிதாக ஒரு சொத்தையும் வாங்கிக் கொடுத்து விட்டார் வீரப்பன்..

மிக வசதியானவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்த பகுதியில் நவீனமான பங்களாக்களின் மத்தியில் அர்ச்சனாவுக்கும் ஒரு பங்களா அமைந்து விட்டது.. வீரப்பனின் மறைவுக்குப் பின்னர் அந்தப் பக்கமாக அவள் வங்கிக்கு வேலைக்குச் சென்று வந்திருக்கிறாள்.. அவள் பெயரில் வாங்கும் போது முழுமையடையாமலிருந்த கட்டிடங்கள் முழுமை பெற்று வீட்டுக்கு உடையவர்கள் குடியேறி நகரின் வி.ஜ.பி ஏரியாவாக அப்பகுதி மாறி விட்டிருந்தது..

பங்களாக்கள் இருக்கும் பகுதி என்பதால் பிரதான சாலையோரம் ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட், தையலகம், உயர்தர ஹோட்டல், ஜவுளிக்கடை என்று பெரிதான கடைத்தெரு உருவானதில் அப்பகுதி பிரபலமான நகர்ப் பகுதியாகி பார்ப்பவர்களின் மனதில் ஓர்வித ஏக்கத்தையும் பொறாமையையும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தது..

அர்ச்சனாவின் பெயரில் வாங்கும் போது எழுபது லட்சமாக இருந்த பங்களா அதைவிட மூன்று மடங்கு அதிகமாக விலையேறும் என்று அதை மகள் பெயருக்கு வாங்கி வைத்த வீரப்பன் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.. அந்தப் பகுதியிலிருந்த பல பங்களாக்களைக் கட்டி விற்பனை செய்த பில்டர் வீரப்பனின் தொழில் திறமையைப் பாராட்டி அவர்மீதிருந்த அபிமானத்தால் குறைந்த விலைக்குக் கொடுத்த பங்களா அது..

அந்த பில்டரிடம் நெடுங்காலமாக வேலை பார்த்து வருபவர் வீரப்பன்.. தொழில் செய்பவர்களுக்கு தொழில் திறமையுள்ள பணியாளர்களின் மீது பிரியமும், மதிப்பும் இருக்கும்.. அப்படி பில்டரின் பிரியத்துக்குப் பாத்திரமாக இருந்த வீரப்பன் தனக்கென்று எந்தச் சலுகையையும் பில்டரிடம் கேட்டதில்லை.. எதிர் பார்த்ததில்லை.. அவர் கேட்ட முதல் சலுகை தன் மகளுக்கானது என்பதில்  மறுப்பே சொல்லாமல் வீரப்பன் கை காட்டிய பங்களாவை அவர் கேட்ட விலைக்கே கொடுத்து விட்டாள் பில்டர்..

பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் மிகப் பெரிய பங்களா ஒன்று தன் பெயரில் இருக்கிறது என்று அர்ச்சனாவுக்குத் தெரியாது… அதை வாடகைக்கு விட்டிருந்த வீரப்பன் அந்த வாடகைப் பணத்தை அர்ச்சனாவின் வீட்டு லோனுக்காக கட்டும்படியான ஏற்பாட்டைக் செய்திருந்தார்.. மீதத் தொகையை இவர் கட்டி விடுவார்..

வீரப்பனின் மறைவுக்குப் பின்னர் அவரது நண்பரான நடராஜன் அதே ஏற்பாடு தொடரும்படி பார்த்துக் கொண்டார்.. அதிகமான வாடகையில் குடியிருந்தவர்கள் வாடகைப் பணத்தை வங்கிக் கடனுக்குக்கட்டி விட்டு அதற்கான ரசீதை நடராஜனிடம் கொடுத்து விடுவார்கள்.. நோய்வாய் பட்டிருந்த வீரப்பன் தன் அந்திமத் தருணத்தில் தான் சேர்த்து வைத்திருந்த தொகையை மகள் பெயருக்கு மாதவட்டி வரும்படி வங்கியில் டெபாசிட் செய்து விட்டுப் போயிருந்தார்.. அந்த வட்டியை மகள் பெயரிலிருந்த 

வீட்டுக் கடனுக்கு வரவு வைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.. இதற்கான கையெழுத்துக்களை வீட்டுக்கடன் சம்பந்தமான கையெழுத்துக்கள் என்று சொல்லி அர்ச்சனாவிடம் கையெழுத்துக்களை வாங்கியிருந்தார்..

வீட்டு வாடகையும், வங்கி டெபாசிட்டில் இருந்த ஐம்பது லட்சத்திற்கான வட்டிப் பணமும் சேர்ந்து அர்ச்சனாவின் பெயரிலிருந்த வீட்டுக்கடனுக்கு வரவாகிக் கொண்டிருக்க, அதைப் பற்றி அறியாத பேதையாக அர்ச்சனா லீலாவதிக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

கிராமத்திலிருந்த ஓட்டு வீடு, ஏழு ஏக்கர் நிலம் போன்ற சொத்துக்களை விற்று கையிலிருந்த பணத்தையும் போட்டு ஒன்று சேர்த்த ஐம்பது லட்சம் அது.. அப்படியொரு சேமிப்பை மகள் பெயருக்கு வீரப்பன் உருவாக்கி வைத்து விட்டுப் போவார் என்று எவர்தான் நினைத்துப் பார்த்தார்கள்..?

“நடராஜா..! நான் பிழைக்க மாட்டேன்னு எனக்குத் தோணுதுடா.. அபிராமிக்கு நான் செஞ்ச துரோகம் என்னை மெல்ல மெல்ல கொன்று தின்றுக்கிட்டு இருக்கு.. 

நான் போயிட்டா என் மகளை ஆதரிக்க யாருமில்லை..” வீரப்பன் கண்ணீர் விட்டபோது.. மனம் தாளாமல் அவர் கை பிடித்து..

“நான் இருக்கேண்டா வீரப்பா.. உன் மகளுக்கு ஆதரவா தகப்பனைப் போல பாசம் காட்ட நானிருக்கேன்..” என்று சத்தியம் செய்து கொடுத்தார் நடராஜன்..

அவரிடம் அர்ச்சனாவின் பெயரிலிருந்த பங்களாவுக்கான பத்திரம், டெபாசிட் பத்திரம், வீட்டுக்கடன் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய ஃபைல், நாற்பது பவுன் நகை முதலியவற்றை ஒப்படைத்த வீரப்பன்.

“இதுகள்ளாம் உன்னிடம் இருக்குன்னு அர்ச்சனாவிடம் சொல்லிராத நடராஜா.. அவ உடனடியா அந்தச் சண்டாளி லீலாவதிகிட்ட எல்லாத்தையும் ஒப்பிச்சிருவா.. லீலாவதியப் பத்தி உனக்கே தெரியும்..”

“இந்த ஊருக்கே தெரியும்டா வீரப்பா..”

“அவ கைபிடிக்குள்ள நம்ம அர்சச்னா இருக்கா..”

“மீட்கத்தான் வழி தெரியலையேடா.. பாங்க் வேலை கிடைச்சிருக்கு.. நல்ல நல்ல இடத்தில இருந்தெல்லாம் சம்பந்தம் வருது.. அர்ச்சனா சரின்னு சொல்லாமத் தட்டிக் கழிச்சுக்கிட்டு இருக்காளேடா வீரப்பா..”

அர்ச்சனா அப்படியொரு முட்டாளாகத்தான் இருந்தாள்.. வீரப்பனின் சொல்படி அவர் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவள் அதைப்பற்றி லீலாவதியிடம் மூச்சுக்கூட விடவில்லை.. அபிராமி பட்ட கடனை அடைக்க வாங்கிய கடன் என்பதால் தாயின் மரியாதையைக் காக்க அவள் மௌனம் காத்தாள்.. அதனால் அது குறித்த கவலையேதும் இல்லாமல் வீரப்பன் நிம்மதியடைய முடிந்தது..

அதில் தகப்பனுக்கு நிம்மதியைத் தந்த அர்ச்சனா திருமண விசயத்தில் மட்டும் தகப்பன் சொல்வதைக் கேட்க மறுத்தாள்.. வங்கியில் வேலை கிடைத்ததில் சந்தோசப் பட்டுப் போனவள் சம்பளத்தை அப்படியே வீட்டுக் கடனுக்கு கட்டி விடலாம் என்று தகப்பனுக்கு ஆலோசனை சொன்னாள்..

‘அதுக்கு லீலாவதி விடனுமே..’ மகளின் அப்பாவித்தனத்தில் வீரப்பன் துயரம் கொண்டார்..

மகள் அடைப்பாள் என்றா மகள் பெயரில் அவர் வீட்டுக்கடனை வாங்கினார்..? அதை வைத்து வேறொரு மதிப்புமிக்க சொத்தை மகள் பெயரில் வாங்கி வைத்து அவளது எதிர்காலத்தை வளப்படுத்தவும், தற்போது குடியிருக்கும் வீட்டை லீலாவதியின் பெயருக்கு மாறி விடாமல் தடுப்பதற்காகவும்தானே வாங்கினார்..? கடனை வாங்கியவர் அதை அடைப்பதற்கான வழிமுறைகளை செய்யாமல் இருப்பாரா..? மகள் பெயரில் இருக்கும் சொத்து நிலைக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும் என்று யோசித்து செயல்படுபவர் அவள் கடனில்லாமல் வாழவும் வகை செய்வார்தானே..

அர்ச்சனா தகப்பனின் பாசத்தையும் உணரவில்லை.. அவளது சொத்தை அவர் பாதுகாத்து பெருக்கி வைத்திருப்பதையும் அறியவில்லை.. அர்ச்சனாவுக்காக அவர் சேர்த்து வைத்திருக்கும் நகைகளையும் டெபாசிட் பணத்தையும் ஒன்று சேர்த்தாலே போதும்.. வீட்டுக்கடன் அடைந்து விடும்.. அர்ச்சனாவுக்கு நகரின் மையப் பகுதியில் இருக்கும் வீடும், பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் ஓர் பங்களாவும் சொந்தமாக இருக்கும்.. அவரது உறவு வட்டாரத்தில் இந்தச் சொத்தக்களைப் பெரிதாக பேசுவார்கள்.. மூன்று கோடி மதிப்புள்ள வீடுகளுக்குச் சொந்தக்காரி என்று அர்ச்சனாவை பிரமிப்பாகப் பார்ப்பார்கள்.. பெரிய இடத்துச் சம்பந்தம் தேடிவரும்..

அந்தக் கொடுப்பினைதான் வீரப்பனுக்கு இல்லையே.. மகள் பெயரிலிருக்கும் சொத்துக்களைப் பற்றியும் பணம், நகைகளைப் பற்றியும் அவர் மூச்சுக்கூட விட முடியாதே.. அப்படி விட்டால் அடுத்த நொடியே அந்தச் செய்திகள் லீலாவதியின் காதுகளுக்கு இடம் மாறி விடுமே.. அதன் பின் அவை அர்ச்சனாவின் உடமைகளாக இருக்குமா..?

படித்து வங்கியில் வேலை பார்க்கும் அர்ச்சனா லீலாவதியின் கைபிடிக்குள் இருந்தாள்.. எம்.காம் பட்டப் படிப்பின் இரண்டாம் வருட ஆரம்பத்தில் வங்கியில் வேலை கிடைத்ததும் உடனடியாக தபால் மூலம் படிப்பைத் தொடர்ந்தவள் வேலைக்குச் சேர்ந்து விட்டதில் லீலாவதி அகமகிழ்ந்து போனாள்..

“என்னமோ போ கண்ணு.. வயசான மனுசனை நம்பி வயித்தில பிள்ளையை வாங்கிக்கிட்டேன்.. அந்த மனுசனும் சம்பாதிக்க முடியாம சீக்காளியா படுத்துட்டாரு.. நானும், என் மகனும் வயித்துப் பாட்டுக்கு என்ன செய்கிறதுன்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டு இருந்துச்சு.. உன் அப்பாவோட பொறுப்பை நீ ஏத்துக்கிட்ட.. இனி காலம் பூரா நானும், என் மகனும் வாழ்க்கைப் பாட்டைப் பத்திக் கவலைப்படாம நிம்மதியா இருக்கலாம்.. குடும்பத்தைப் பார்த்துக்கத்தான் நீ இருக்கியே..” என்று சொல்லி அர்ச்சனாவின் தலையில் குடும்ப பாரத்தைச் சுமத்தி விட்டாள்.. அத்துடன் விட்டாளா..?

“நீ மட்டும் வேலைக்குப் போகலைன்னா கண்ணு, நானும் என் மகனும் விசத்தைக் குடிச்சிட்டு மண்டையைப் போட்டிருப்போம்..” என்று அழுது அர்ச்சனாவின் சம்பளம் கிடைக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை சொல்லாமல் சொல்லி பயமுறுத்தி வைத்து விட்டாள்..

இது தகப்பன் சுமக்க வேண்டிய குடும்ப பாரம் என்ற நினைவு அர்ச்சனாவின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.. இருந்தும் அவள் வீட்டுக் கடனை அடைக்கிறேன் என்று சொன்னாள்தான்..

“அதுக்கென்னம்மா.. லீலாவதியிடம் உன் சம்பளப் பணத்தை எதிர்பார்க்க வேண்டாம்ன்னு நான் சொல்லிடறேன்..” என்று மகளின் சம்பளப் பணத்தையும் சேமிக்க முயன்றார் வீரப்பன்..

“வேண்டாம்ப்பா.. வேண்டாம்..” மிரட்சியுடன் மறுத்து விட்டாள் அர்ச்சனா..

“ஏம்மா..?”

“வீட்டுக் கடனை அப்படியே விட்டு விடலாம்ப்பா.. சம்பள பணத்தை பே-ஸ்லிப்போடு அப்படியே கொண்டு வந்து கொடுத்து விடனும்னு சித்தி சொல்லியிருக்காங்க..”

“அடி செருப்பாலே.. அப்படியா அந்தக் கிராதகி சொன்னா..? யார் சம்பளத்தில யார் உரிமை கொண்டாறது..? நீ உழைத்துச் சம்பாதிக்கும் சம்பளத்தை பே-ஸ்லிப்போடு அவகிட்டக் கொடுக்கனுமா..? இவ உன்னைப் படிக்க வைத்தாளா..? பார்த்துக் கிட்டாளா..?”

“இதையெல்லாம் நாம கேட்க முடியாதுப்பா..”

“ஏன்ம்மா..?”

“ஏன்னா இது நீங்க இழுத்து விட்ட வினை.. கையில் குழந்தையோடு உங்க மனைவிங்கிற உறவில நம்ம வீட்டில இருக்காங்க.. நாம பொறுப்பெடுத்துத்தான் ஆகனும்.. இது நீங்க சுமக்க வேண்டிய சுமைப்பா.. உங்களுக்கு ஒரு சொல்வராம இருக்கனும்னா நான் இந்தச் சுமையைச் சுமந்தாகனும்..”

“அர்ச்சனா..”

லீலாவதிக்கு அடிமையாகிக் கொண்டிருந்த மகளை அந்த அடிமைத் தளையிலிருந்து மீட்க முடியாத ஏக்கத்துடன் உயிர் துறந்தார் வீரப்பன்.. அவரது சாவிற்கு லீலாவதி ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட விடவில்லை.. கதறி அழுது புரண்ட அர்ச்சனாவை மடியில் போட்டு ஆறுதலும் சொல்லவில்லை.. அவளுக்கான விடுதலை அது என்பதைப் போலச் சலனமின்றி உள்ளறையில் ஒதுங்கிக் கொண்டாள்.

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link