Chapter 13
“தெருக்காரங்க ‘என் வீட்டுக்கு வா’ன்னு சொல்லிப் போட்டி போட்டுக்கிட்டுக் கூப்பிடத்தான் செய்தாங்க.. எனக்குத்தான் யார் வீட்டுக்கும் போக மனமில்லை..”
சோர்ந்த குரலில் துயரத்துடன் சொன்னாள் அர்ச்சனா.. கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் கசங்கிய மலரைப் போல இருந்தவளைப் பார்த்த சாவித்திரியின் மனம் வலித்தது..
‘இந்த இளம் வயதில் இவளுக்கு இத்தனை இன்னல்களா..?’
இவளும் மூர்த்தியைப் போலதான் என்று நினைத்துக் கொண்ட சாவித்திரி பெருமூச்சு விட்டாள்.. அர்ச்சனா தாய், தந்தையற்ற அநாதை.. மூர்த்தி தாய், தந்தையிருந்தும் அநாதை..
“ஏம்மா.. எல்லோரும் உனக்குத் தெரிந்தவங்கதானே.. அவங்களே சொன்னதைப் போல நீ பிறந்ததிலிருந்து உன்னைத் தெரிந்தவங்க அவங்க.. அவங்களில ஒருத்தங்க வீட்டில தற்காலிகமாத் தங்கிக்கிட்டு லேடிஸ் ஹாஸ்டலில இடம் பார்த்துப் போயிருக்கலாமே.. அதை விட்டுட்டு அறியாத ஊருக்கு நைட் டயத்தில கிளம்பி வரலாமா..? மூர்த்தி கண்ணில பட்டதினால தப்பிச்ச.. இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்..? இந்த உலகத்தில நல்லவங்களை விட அதிகமா கெட்டவங்க வாழ்கிறாங்க அர்ச்சனா..”
“இதை என்னிடம் சொல்கிறீங்களா ஆண்ட்டி..? லீலாவதியைச் சித்தின்னு கூப்பிட்டு அவங்ககூட ஒரே வீட்டில இருக்க வேண்டிய கொடுமையை அனுபவிச்சவ நான்.. என்ன ஒன்னு.. எங்க அம்மா நல்லவங்களா இருந்ததினால நல்லவங்க மத்தியில பிறந்து வளர்கிற கொடுப்பினை எனக்குக் கிடைச்சது ஆண்ட்டி.. எங்க தெருக்காரங்க பாசமானவங்கதான்.. என்னைப் பத்திரமாப் பார்த்துக்குவாங்கதான்.. ஆனா ஆண்ட்டி.. அதே தெருவிலதான எனக்காக என்னோட அப்பாம்மா விட்டுட்டுப் போன வீடும் இருக்கு..? அந்த வீட்டில லீலாவதி இருக்காளே.. அவ கண்ணெதிரிலே அதே தெருவில வேறு ஒரு வீட்டில அகதியைப் போல என்னால் தங்க முடியுமா..? அப்படி நானிருந்தா என் அம்மாவோட ஆத்மா சாந்தியடையுமா..?”
அர்ச்சனாவின் குமுறலில் மனம் நைந்தாள் சாவித்திரி.. உணர்ச்சிக் குவியலில் மூழ்கியவளாக உதடுகள் துடிக்க அழுத அர்ச்சனாவை இழுத்து மடியில் சாய்த்துக் கொண்டாள்.. அன்னையின் மடியாய் அவளது மடியை நினைத்து அடைக்கலம் புகுந்த அர்ச்சனாவின் முதுகு அழுகையில் குழுங்கியது.. சாவித்திரியின் மனம் கசிந்தது.. தாய்மைப் பெருக்குடன் அர்ச்சனாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்..
“அடைக்கலம் கொடுக்கிற அன்பானவங்க வீட்டில நான் தங்க முடியாது ஆண்ட்டி.. எனக்குன்னு யாருமே இல்லைங்கிற உண்மை அப்போத்தான் எனக்குத் தெளிவாச்சு.. அம்மா வழி சொந்தம்ன்னோ அப்பா வழிச் சொந்தம்ன்னோ நான் அடைக்கலம் தேடிப் போக முடியாது.. அம்மா வழிச் சொந்தம் அப்பாவுக்கு லீலாவதியோட இருந்த தொடர்பினாலே அம்மா மனசொடிஞ்சு செத்துப் போயிட்டாங்கங்கிற கோபத்தில விலகிப் போயிட்டாங்க.. இப்ப நான் போனா அப்பா செய்த தப்பையே சொல்லிச் சொல்லிக் காட்டுவாங்க.. என்னால அதைத் தாங்கிக்க முடியாது..”
“உன் அப்பா செய்தது பெரிய தப்பு அர்ச்சனா.. உன் அம்மா வழிச் சொந்தங்களோட ஆத்திரத்தில நியாயம் இருக்குதானே..? அதைத் தப்புன்னு சொல்ல முடியுமா..?”
“அவங்க கோபம் தப்புன்னு நான் சொல்லலை ஆண்ட்டி.. என்னால தாங்கிக்க முடியலைன்னுதான் சொன்னேன்.. அம்மாவுக்கு அப்பா அநியாயம் செய்ததை நான் என்றைக்குமே நியாயப்படுத்த மாட்டேன்.. என் அம்மாவுக்கு அப்பா உண்மையா நடந்துக்கலை.. பட் எனக்கு நல்ல அப்பாவாத்தான் இருந்தார்.. அவரோட பாசத்தில குறையில்லை..”
“ம்ம்ம்..”
“அப்பா வழிச் சொந்தமெல்லாம் அப்பா செய்த அதே தவறைக் காரணம் காட்டி விலகி போயிட்டாங்க.. அவராலே அவங்களுக்குத் தலை குனிவுன்னு விலக்கி வைச்சிட்டாங்க..”
“செய்வாங்கதானே.. உன் அப்பா செய்த தப்பால அங்களுக்கும் கெட்ட பெயர்ன்னா கோபம் வராதா..?”
“நீங்க வேற ஆண்ட்டி.. அவங்களிலயும் பலர் அப்பா செய்த தப்பை செய்துக்கிட்டுத்தான் இருக்காங்க.. என்ன ஒன்னு.. அவங்க மாட்டிக்கலை.. அப்பா மாட்டிக்கிட்டார்.. இந்த உலகத்தில சந்தர்ப்பம் கிடைக்காத வரைக்கும்தான் யோக்கியர்களாக இருக்கிறாங்க.. இங்கே இருக்கிற அத்தனைபேரும் உத்தமர்ன்னா நினைக்கறிங்க..?”
சாவித்திரியிடம் அதிர்வு தெரிந்தது.. அவளது விழிகள் பிரதிபலித்த மனதின் வலியில் அர்ச்சனா குழம்பினாள்.. அவள் எதுவும் தவறாகச் சொல்லி விட்டாளோ..?
“ஆண்ட்டி..?”
“ஒன்றுமில்லைம்மா.. ஏதோ நினைவு.. சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாமல் நேர்வழியில் நடக்கிற உத்தமர்கள் இங்கே குறைவுதான்ம்மா.. நம்ம மூர்த்தி தம்பியைப் போல..”
‘நம்ம மூர்த்தியா..?’
அவனுக்கும் அர்ச்சனாவுக்கும் என்ன சம்பந்தம்..? அநாதயாய் நின்று கொண்டிருந்தவளுக்கு ஒரிரவு தங்க இடம் கொடுத்து ஆதரிக்கும் அனாதை ரட்சகன்.. விடிந்ததும் அர்ச்சனா தன் வழியில் போய் விடுவாள்.. என்றேனும் ஓர்நாள் இந்த பனிவிழும் இரவில், மழை பெய்யும் பொழுதில் அவனைச் சந்தித்த நினைவு வரக்கூடும்.. அதைத் தவிர்த்து வேறு என்ன இருக்கிறது..?
“ஸோ.. என்னாலே சொந்தங்களைத் தேடிப் போக முடியலை.. இப்போதைக்கு எங்க ஊரை விட்டு வெளியேறனும்னு தோணுச்சு.. பெட்டியை எடுத்துக்கிட்டு எங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகப் போகிறதா எங்க தெருக்காரங்களிடம் பொய் சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன்.. எங்கே போகிறதுன்னுதான் தெரியலை.. உள்ளூரில் இருக்கும் பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போகலாம்.. லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கலாம்.. இரண்டு இடத்திலயும் லீலாவதி என்னைத் தேடி வந்து அசிங்கப் படுத்தச் சான்ஸ் இருக்கு.. வெளியூரில இருக்கிற பிரண்ட்ஸைப் பத்தி மனசில யோசிச்சுக்கிட்டு இருந்தப்பக் கொடைக்கானல் போகிற பஸ் வந்தது.. இங்கே ஒரு பிரண்ட் இருக்கிறாளேன்னு சட்டுன்னு பஸ்ஸில ஏறிட்டேன்.. கொடைக்கானலுக்குள்ள பஸ் நுழையறப்பவே பத்து மணி ஆகிருச்சு.. அதுக்கு மேலே அவ வீட்டைத் தேடிப்
போனா வீடு பூட்டிக்கிடக்கு.. திரும்பி வர்றப்ப மழை பிடிச்சுக்குச்சு..”
கை, கால்கள் வெடவெடக்க குளிருக்கு இதமாக கம்பளியைப் போர்த்திக் கொண்டிருந்தவளைப் பரிவுடன் பார்த்த சாவித்திரி..
“தூங்கும்மா.. காலையிலே எழுந்ததும் என்ன செய்கிறதுன்னு யோசிக்கலாம்..” என்றாள்..
“இதில் யோசிக்க என்ன இருக்கு ஆண்ட்டி..? என் பிரண்டின் வீட்டைத் தேடிப் போவேன்.. அவ இல்லைன்னா கொடைக்கானலை விட்டுக் கிளம்பிருவேன்..”
“கிளம்பி..? எங்கே போவ..?”
“தெரியலை.. பட்.. போய்த்தானே ஆகனும்..”
“அது என்னவோ நிஜம்தான்.. பேங்கில வேலை பார்க்கிறதாச் சொன்னியே.. வேலை என்னவாகிறது..? இந்தக் காலத்தில கவர்ண்மென்ட வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பாச்சே..”
“லாங் லீவ் போட்டுட்டு டிரான்ஸ்பருக்கு அப்ளை பண்ணலாம்ன்னு இருக்கேன் ஆண்ட்டி.. உடனடியா ஒரு சி.எல்லை மட்டும் மேனேஜரோட ஈமெயில் ஐ.டிக்கு மெயில் பண்ணியிருக்கேன்..”
“சரி.. இப்பத் தூங்கு..”
மனதில் இருப்பதைக் கொட்டி விட்டதாலோ என்னவோ சாவித்திரியம்மாளின் அருகாமை தந்த பாதுகாப்பில் அச்சமின்றி உறங்கி விட்டாள் அர்ச்சனா.. அவள் தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரியின் முகத்தில் விசனம் இருந்தது.. அவள் தூங்க வெகு நேரமானது..
காலையில் விழிப்பு வந்து தானாகவே எழுந்து விட்டாள் அர்ச்சனா.. வேலைக்குச் செல்வதற்காக குறித்த நேரத்தில் விழித்துப் பழக்கப் பட்டவள் அவள்.. ஞாயிறாக இருந்தாலும் விழிப்பு வந்து விடும்..
கண் விழித்துப் பார்த்தவளுக்குக் கதைகளில் வருவதைப் போல தான் எங்கேயிருக்கிறோம் என்ற திகைப்புத்தான் முதலில் வந்தது.. அவள் கனவிலும் பார்த்திராத ஆடம்பரமான அழகிய அறையில் நுரை மெத்தையில் படுத்திருப்பதை நம்ப முடியாமல் இமைகளைக் கொட்டிப் பதறி எழுந்தவளுக்கு முதல்நாள் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன..
‘ஒரேயொரு நாள்.. அந்த ஒரு நாளுக்குள்தான் எத்தனையெத்தனை நிகழ்வுகள்..’
என்று லீலாவதியைப் பற்றி அபிராமிக்குத் தெரிய வந்ததோ அன்றிலிருந்து அர்ச்சனாவின் அமைதி நிரம்பிய வாழ்வு மாறிப் போய் விட்டதே..
அர்ச்சனா பெருமூச்சுடன் ஜன்னலருகில் சென்றாள்.. திரை விலக்கிப் பார்த்தவளுக்கு சிறகடிக்கும் உணர்வு வந்தது..
‘ஆஹா.. என்னவொரு அற்புதம்..’
கொடைக்கானலின் இயற்கையழகு கொட்டிக் கிடந்தது.. ஜன்னல் வழியே தெரிந்த இயற்கையின் பேரழகில் அவள் அனைத்தையும் மறந்து விட்டாள்.. அறைக்கதவைத் திறந்து வெளியில் வந்தவள் மாடிப் படிகளில் விரைந்து இறங்கி ஓடித் தோட்டத்தில் நின்றாள்..
விதம் விதமான பூச்செடிகளும் பழ மரங்களுமாக தோட்டம் ஒரு பூங்காவைப் போல மிளிர்ந்தது.. அங்கிருந்து பார்த்தால் சரிந்து இறங்கிய சாலைகளும் வீடுகளும் வரை படம் போல கவர்ந்தன.. அனைத்து வீடுகளும் வரிசை கட்டி நிற்காமல் உயரத்திலிருந்து கீழே என்று மலையின் அழகைத் தன்னுள் அடக்கி மலைவாசஸ்தலத்தை உணர்த்தி நின்றன..
மூர்த்தியின் வீடும் தோட்டமும் அப்படித்தான் இருந்தன.. தோட்டம் படிக்கட்டுக்களுடன் இறங்கியிறங்கி அமைந்திருந்ததில் அர்ச்சனா மனக் கவலைகளை மறந்து அதில் துள்ளி இறங்கினாள்..
“குட் மார்னிங்..”
வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தவளை கம்பீரமான குரல் அழைத்தது.. திரும்பிப் பார்த்தாள்.. மூர்த்தி நின்றிருந்தான்.. ஆறடி உயரமும் செதுக்கிய உருவமுமாக கிரேக்க சிற்பத்தைப் போல கம்பீரமான அழகுடன் ஈர்த்தான்.. இரவில் தெரியாத அவனது அழகும் கம்பீரமும் விடியலில் வெளிப்பட்டதில் அர்ச்சனாவின் கன்னி மனது..
‘வாவ்..! என்னவொரு ஹேண்ட்சம்..!’ என்று வியந்தது..
“குட்மார்னிங் சார்..” என்றாள்..
“என் பெயர் மூர்த்தி..” அவன் இறங்கி அவளருகில் வந்தான்.. அவளது மனம் படபடத்தது..
“தெரியுமே..” அவன் முகம் பார்க்காமல் கொடைக்கானல் மலையின் சிகரங்களைப் பார்த்தபடி சொன்னாள்..
மலைமீது மேகங்கள் தவழ்ந்தன.. அவள் மனதிலும் விலகியிருந்த கவலை மேகங்கள் சூழ்ந்தன.. அவளது முகம் வாடியது.. அவன் அவள் முகத்தை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்..
“என்ன ஆச்சு..?” என்று புருவங்களை உயர்த்தினான்..
அவனது வசீகரமான புருவ உயர்த்துதலில் அவள் தடுமாறினாள்.. அதுபோன்ற செயலை அதற்கு முன் அவள் பழகிய வட்டாரத்தில் இருந்த ஆண்களிடம் அவள் பார்த்ததில்லை..
“என்ன ஆச்சுன்னா..?”
“பிரைட்டா சூரியனைப் போல இருந்த முகம் திடிர்ன்னு அம்மாவாசை இருட்டைப் போல மாறுதே.. வாட் ஹேப்பன்..? எனிதிங் ராங்..?”
“நத்திங் சார்..”
“இதை நான் நம்பனுமா..?”
அர்ச்சனா மௌனமாக நின்றாள்.. அவன் சிகப்புக் கலரில் ஸ்வெட்டர் அணிந்திருந்தான்.. அடர் சிகப்பு அவனது கவர்ச்சியை அதிகப்படுத்தி அவளை பாடாய் படுத்தியது.. முதல்நாள் இரவு அனுபவம் அவனை அவளுக்கு ஓர் கதாநாயகனைப் போல உருவகித்திருந்தது.. அவனும் கதாநாயகனை மீறிய கவர்ச்சிகரமான அழகுடன் இருந்தான்.. அவன் முகத்தில் படர்ந்திருந்த கடுமைகூட அவனது கவர்ச்சியை அதிகப்படுத்துவதைப் போல அவளுக்குத் தோன்றியது.. முள் முகம் அழகா..? இங்கே அழகாக காட்சி தருகிறதே.. எப்படி..?
“டீ குடிக்காம ரெண்டு பேரும் தோட்டத்துக்கு வந்தாச்சா..?” என்றபடி சாவித்திரி வந்தாள்..
அவளது கையில் பெரிய டிரே இருந்தது.. டிரேயில் தேநீர் கெட்டிலும், கப்புகளும் இருந்தன..
“இங்கே குடுங்க ஆண்ட்டி..” வேகமாக அவளருகில் விரைந்து டிரேயை வாங்கிக் கொண்டாள் அர்ச்சனா..
அதில் சாவித்திரியின் முகம் கனிந்ததைக் கண்டான் மூர்த்தி.. லேசான இளநகை அவனது இதழ்களில் அரும்பியது..
‘இவனுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா..?’
மனதில் உதித்த வியப்பை முகத்தில் காட்டாமல் அருகிலிருந்த மர பெஞ்சில் டிரேயை வைத்துக் கெட்டிலை எடுத்துக் கப்புகளில் சூடான டீயை ஊற்றினாள் அர்ச்சனா.. இயல்பான அவளது செயலில் கவரப் பட்டான் மூர்த்தி..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.