Chapter 14
அர்ச்சனாவிடம் சாத்வீகமான அமைதி தென்பட்டது.. மெலிதான தென்றலின் வருடலில் அழகான பூவொன்று அசைவதைப் போல அவளது நடமாட்டம் இருந்தது.. அவளைப் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத நிம்மதி நிலவுவதை உணர்ந்தான் மூர்த்தி.. முதல்நாள் நள்ளிரவில் அர்ச்சனாவுடன் வீட்டுக்கு வந்தவன் சாவித்திரியிடம் அவளை ஒப்படைத்து விட்டுத் தன் அறைக்குப் போய் படுக்கையில் விழுந்தவன்தான், விடிந்த பின்னால்தான் எழுந்தான்.. இரவுகளில் தூக்கம் வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.. அதுவும் கொடைக்கானலைப் போன்ற குளிர் நிரம்பிய மலைப் பிரதேசத்தில் ஹீட்டரைப் போட்டு விட்டுக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு படுத்தால் ஆழ்ந்த தூக்கம் தானாக வந்து அமிழ்த்தி விடும்.. பாவம்.. மூர்த்திக்குத்தான் அந்தக் கொடுப்பினை வாய்க்காமல் போய் விட்டது.. தூக்கத்திற்கும் அவனுக்குமான தூரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. உறக்கமில்லாத பனி விழும் இரவுகளில் அவன் கொடைக்கானல் மலையின் சாலைகளில் எதையோ தொலைத்து விட்டவனைப் போல ஒரு தேடுதலுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.. அவனிடமிருந்து தொலைந்து போனது பொருளாக இருந்தால் அவன் தேடிய தேடலுக்கு எப்போதோ அகப்பட்டிருக்கும்.. அவன்தான் அமைதியைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கிறானே.. எப்படி அவனுக்கு அமைதி கிட்டும்..?
நெடுநாள்களாக கிட்டாத தூக்கம் முதல்நாளின் பின்னிரவில் கிட்டியிருந்ததில் மூர்த்தியின் முகம் பொழிவுடன் இருந்தது.. எட்டாத கனியாக வெகு தொலைவில் விலகியிருந்த துயில் எவ்வாறு அவன்மீது இரக்கம் கொண்டு ஆக்ரமித்தது என்று அவனுக்கே விளங்கவில்லை..
‘இனம் விளங்கவில்லை – எவனோ
என்னகம் தொட்டு விட்டான்..’
என்ற பாரதியாரின் பாடல் வரிகளைத்தான் அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.. துயில் வந்து அவனைத் தழுவியதற்கு இனம் விளங்காமல் போகக் கூடும் என்பதை இப்போதுதான் உணர்வுபூர்வமாக உணர்கிறான்.. காரணம் எதுவாக இருக்கக் கூடும் என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் மனது அமைதியடைந்திருந்தது எதனால் என்றும் அவனுக்குப் புரியவில்லை..
“டீ…”
அர்ச்சனா டீக் கோப்பையை அவனிடம் நீட்டினாள்.. அழகானதொரு ஓவியம் அசைவதைப் போல இருந்தது அவனுக்கு.. கோப்பையைக் கையில் வாங்கிக் கொண்டவனுக்கு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடத் தோன்றியது..
அழகிய பெண்ணின் விரல் பட்டால் தேநீர் கோப்பையும் மதுரசம் நிரம்பிய கோப்பையாக மாறிவிடக் கூடுமோ..? கொடைக்கானலின் இளந்தொழிலதிபன்
‘உமர் கய்யாம்’ ஆக உருமாறி விடுவானோ..?
தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்ட மூர்த்தியின் செவிகளுக்கு மட்டும் கஜல் இசை கேட்டது..
‘என்னடா இது..’ அவனுக்குச் சிரிப்பு வந்தது..
பொன்னியின் செல்வன் கதையைப் படிப்பவர்களுக்கு மட்டும் குதிரையின் குளம்போசை செவிகளில் ஒலிக்குமாம்.. அந்தக் கதையாக அல்லவா இந்தக் கதை இருக்கிறது..
“ஆண்ட்டி.. உங்களுக்கு..”
“ஏம்மா.. நான் எடுத்துக்க மாட்டேனா..? நீ கையில் எடுத்துக் கொடுத்தாத்தான் டீ தொண்டைக்குள் இறங்குமா..?”
“எனக்கு இதில் ஒரு சந்தோசம்ன்னு வைத்துக்கங்களேன்..”
“கெட்டிக்காரிதான் நீ.. எப்படிச் சொன்னா நான் வாயை மூடிக்குவேன்னு கண்டு வைச்சிருக்க..”
சிரித்தபடி தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்ட சாவித்திரியின் முகத்தில் வாத்சல்யம் நிறைந்திருந்தது.. பிரியத்துடன் அர்ச்சனாவைப் பார்த்தபடி..
“இனியாவது டீயைக் குடிப்பியா…?” என்று கேட்டாள்..
“பின்னே..? இந்தக் கொடைக்கானல் குளிருக்கு இதமா சூடா ஏலக்காய் டீ கிடைச்சிருக்கிறப்பக் குடிக்காம இருப்பேனா..?” என்ற அர்ச்சனா தேநீர் கோப்பையுடன் சாவித்திரியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்..
அது அழகானதொரு காலைப்பொழுதாக இருந்தது.. தன் துயரத்தை மறந்து கொடைக்கானல் மலைச் சரிவின் இயற்கையில் மனதைப் பறி கொடுத்தவளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.. அதைக் கவனித்த சாவித்திரி..
“உனக்கு இந்த ஊரைப் பிடிச்சிருக்கு போல..” என்றாள்..
“யாருக்குத்தான் பிடிக்காது..?” தலையை அசைத்து அர்ச்சனா எதிர் கேள்வி கேட்டபோது அவளது ஜிமிக்கிகள் ஆடிய ஆடலில் மூர்த்தியின் மனமும் சேர்ந்து ஆடியது.. அர்ச்சனாவிடமிருந்த அலாதியானதொரு அழகு அவனை வசீகரித்து வசியம் செய்தது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேறு திசையில் பார்த்தான்.. டீயைக் குடித்து முடித்த அர்ச்சன..
“தேங்க்ஸ் ஆண்ட்டி.. தேங்க்ஸ் சார்.. நைட்.. நீங்க உதவி செய்திருக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்ன்னு எனக்கே தெரியலை.. தெய்வம் போல வந்து எனக்கு இருக்க இடம் கொடுத்தீங்க.. இனி நான் கிளம்பறேன்..” என்று கரம் குவித்தாள்..
“கிளம்பறயா..? எங்கே..?” கண்டனக் குரலுடன் அதட்டினாள் சாவித்திரி..
அர்ச்சனா வியப்புடன் அவளைப் பார்த்தாள்.. சாவித்திரியின் கோபம் அவளை ஆச்சரியப்படுத்தியது.. அர்ச்சனா முதல்நாள் இரவில் அந்த வீட்டிற்கு அடைக்கலமாகத்தான் வந்திருக்கிறாள்.. விருந்தாளியாக அல்ல.. ஒரிரவு தூங்க பாதுகாப்பான இடம் வேண்டும் என்பதற்காக மூர்த்தியுடன் அந்த வீட்டிற்கு வந்தவள் அவள்.. இப்போது விடிந்து விட்டது.. அவளது வழியைப் பார்த்துக் கொண்டு கிளம்ப வேண்டிய நேரமும் வந்து விட்டது.. இதைத்தானே அர்ச்சனா சொன்னாள்..? அதற்காக சாவித்திரி எதற்காக கோபித்துக் கொள்கிறாள்..?
மூர்த்தியும் அர்ச்சனாவை முறைத்துப் பார்த்தான்.. அர்ச்சனா சங்கடமடைந்தாள்… கொடைக்கானல் மலைச்சாரலில் இளைப்பாறும் நிலையிலா அவளிருக்கிறாள்..? அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை அவள் எடுத்தாக வேண்டும்.. அது புரியாமல் இவர்கள் இருவரும் அவள் என்னவோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டதைப் போல முறைத்துக் கொண்டிருக்கிறார்களே..
“என் பிரண்ட் வீட்டுக்குப் போகனும் ஆண்ட்டி..” மெல்லிய குரலில் விளக்க முயன்றாள் அர்ச்சனா..
“அவங்க வீடுதான் பூட்டிக் கிடந்ததாச் சொன்னீங்களே..” அவள் என்னவோ பொய் சொல்வதைப் போலக் குறுக்கு விசாரணை செய்தான் மூர்த்தி..
“இப்பத் திறந்திருக்கலாமில்லையா..?”
“ஒருவேளை திறக்காமல் பூட்டியே இருந்ததுன்னா..?”
“கொடைக்கானலை விட்டுக் கிளம்ப வேண்டியது தான்..”
“கிளம்பி..? எங்கே போவீங்க..? சாத்தூருக்கா..?”
“என் ஊர் சாத்தூர்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..?”
சாவித்திரியைப் பார்த்த அர்ச்சனா..
“ஆண்ட்டி சொன்னாங்களா..? அதுக்குள்ளயா..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்..
“சாவித்திரியம்மா என்னிடமிருந்து எதையும் மறைக்க மாட்டாங்க.. நான் பிறந்தபோது கையில் தூக்கியவங்க இவங்க.. பெரியவனாகி கோவித்துக் கொள்ளும்வரை இவங்களோட இடுப்பை விட்டு என்னை கீழே இறக்கி விட்டதில்லை.. ஸ்கூலுக்கு எனக்கு லன்ச் கொண்டு வந்து ஊட்டி விட்டு இடுப்பில் தூக்கி வைத்துக்குவாங்க.. அதில் கடுப்பாகி டீச்சர்ஸ் சத்தம் போட்டா அவங்ககூட சண்டைக்குப் போவாங்க.. வீட்டுக்கு ரிப்போர்ட் வந்ததில வேறு ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க.. புது ஸ்கூலில் லன்ச் அவங்களே கொடுத்து விடுவாங்க.. மார்னிங்கில் ஸ்கூலுக்கு வருகிற ஸ்டூடண்ட்ஸ் ஈவினிங்தான் ஸ்கூலை விட்டு வெளியேற முடியும்.. இவங்களோட அளவுக்கு மீறின அன்பாலே கிடைச்ச கிப்ட் அது.. அப்படிப்பட்டவங்க உங்களைப் பத்தின விவரத்தை என்னிடம் சொல்லாம இருப்பாங்களா..?”
“சொன்னதில தப்பில்லை சார்.. என்கூடத்தான் இருந்தாங்க.. எப்போ உங்களிடம் சொன்னாங்கன்னுதான் தெரியலை..”
“அதைத் தெரிந்துக்கிட்டு என்ன செய்யப் போகிறிங்க..?”
“எதுவும் செய்யப் போவதில்லை.. இப்போதைக்கு இங்கேயிருந்து கிளம்புகிறதை மட்டும் செய்யப் போகிறேன்..”
“தாராளமாக் கிளம்புங்க.. குளித்து டிபன் சாப்பிட்டு விட்டுக் கிளம்புங்க.. நானும் கூட வர்றேன்..”
“எதுக்கு..?”
“உங்க பிரண்ட் இருக்கிறாங்களா இல்லை எங்கேயாவது எஸ்கேப் ஆகிட்டாங்களான்னு பார்க்கிறதுக்குத்தான்..”
“நான் வருகிறது அவளுக்குத் தெரியாது சார்.. அதனால எஸ்கேப் ஆக சான்ஸ் இல்லை..”
“ஏன்..? செல் போனில் தகவல் சொல்லியிருக்கலாமே..”
“அவளோட டச் விட்டுப் போய் ரொம்ப காலமாகுது சார்.. போன் பண்ணினா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது.. வேற நம்பருக்கு மாறிட்டான்னு நினைக்கிறேன்..”
“இருக்கலாம்.. பிரண்ட்ஸ் கூட டச்சில் இருக்க வேண்டாமா..?”
“‘அவ’ன்னு இல்லை சார்.. வேற யார் கூடவும் நான் டச்சில் இல்லை.. பிரண்ட்ஸ் வந்து போகிறதைப் போல என் வீடு இல்லையே..”
இதைச் சொல்லும் போது அர்ச்சனாவின் முகத்தில் தெரிந்த குன்றலில் மூர்த்தி இரக்கம் கொண்டான்.. சாவித்திரியின் மனதிலோ..
‘வாழுகின்ற மக்களுக்கு..
வாழ்ந்தவர்கள் பாடமடி..
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி..’
என்ற திரைப்படப் பாடல் ஒலித்தது..
அர்ச்சனா என்ன பாவம் செய்தாள்..? இந்த இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஊர் விட்டு ஊர் வந்து நிற்கும் அவலம் ஏன் அவளுக்கு வந்தது..? அர்ச்சனாவின் தந்தை மட்டும் மனதை அடக்கிப் புலன்களைக் காத்திருந்தால் இப்படியொரு நிலை அவரது மகளுக்கு வந்திருக்காதே..
“லீவ் இட்.. இப்ப நடக்கிறதைப் பார்க்கலாம்.. நீங்க குளிச்சுட்டு பிரேக்பாஸ்ட் சாப்பிட வாங்க..” மூர்த்தி தீர்ப்பைச் சொல்லி விட்ட நீதிபதியைப் போல மரபெஞ்சை விட்டு எழுந்து போய் விட்டான்..
சாவித்திரி எதையோ யோசித்தபடி இருக்க, அர்ச்சனா..
“ஆண்ட்டி.. நான் குளிக்கப் போகவா..?” என்று தயக்கத்துடன் கேட்டாள்..
“ம்ம்ம்..” சாவித்திரி தலையசைக்க அர்ச்சனா வீட்டை நோக்கி நடந்தாள்..
ஏனோ அந்த வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும் என்று நினைக்கும் போதே பயமாக இருந்தது.. முதல் நாள் இரவில் கிடைத்தப் பாதுகாப்பையும் நிம்மதியான தூக்கத்தையும் நினைத்துப் பார்த்தவளின் மனம் கனத்தது.. பசித்தவளுக்கு பழைய சோறு கிடைத்தாலே அது அமுதத்திற்கு ஒப்பானது.. இங்கே அமிர்தமே அளிக்கப்பட்தே..
‘நன்றி தெய்வமே..’
தாய், தந்தையுடன் வாழ்ந்த நாள்களில் ஒன்றைத் திரும்பப் பெற்றதைப் போன்ற நிறைவு மனதுக்குள்..
‘இவர்கள் யார்.. நான் யார்..? எனக்கான அடைக்கலத்தை அளித்தது இவர்களது பெருந்தன்மை என எடுத்துக் கொள்ளலாம்.. அன்பையும், பாசத்தையும் வெகு இயல்பாக வாரி வழங்கினார்களே.. அதை என்னவென்று எடுத்துக் கொள்ள..?’
அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் குளித்து உடை மாற்றித் தன் பெட்டியை சரி செய்து கையில் எடுத்துக் கொண்டு அறையை பூட்டி விட்டுக் கீழே வந்தாள்.. டைனிங் ஹாலில் மூர்த்தியும் சாவித்திரியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அவளைக் கண்டதும் மூர்த்தியின் கண்களில் ஒளிர்வு வந்ததை சாவித்திரி கவனித்திருக்க வேண்டும்.. சன்னமான புன்னகையுடன்..
“பெட்டியும் கையுமா வந்து நிற்கிற.. எப்படா இந்த வீட்டை விட்டுக் கிளம்பி ஓடிப் போகலாம்ங்கிற துடிப்போட இருந்த போல.. அவ்வளவு கொடுமைக்காரங்களா நாங்க..?” என்று அர்ச்சனாவிடம் வம்பிழுத்தாள்..
“கொடுமைக்காரங்களா..? நீங்களா..? விளையாட்டுக்குக் கூட இப்படிச் சொல்லாதீங்க ஆண்ட்டி..” அர்ச்சனா பொலபொலவென கண்ணீர் உகுத்து விட்டாள்..
அபிராமியின் தாயன்பை சாவித்திரியிடம் உணர்ந்தவளால் அவளைப் பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்தைத் தாங்க முடியவில்லை.. திக்குத் தெரியாத காட்டில் சிறு வெளிச்சப் புள்ளிக் கிட்டாதா என்று அலைந்து திரிந்து கொண்டிருந்தவளின் முன் அருள்ஜோதி ஒளி விட்டு வழி காட்டி அழைத்துச் செல்ல வந்ததைப் போல முன்தினம் இரவில் உணர்ந்தாளே.. இப்போது அந்த அருள் ஜோதியின் ஒளி வெள்ளத்தை விட்டு விலகி, இருள் நிரம்பிய அடர் கானகத்திற்குள் தனித்து நுழைய வேண்டியிருக்கிறதே என்ற துயர வெள்ளம் கரையுடைந்து கண்ணீர் வெள்ளமாக வெளி வந்தது.. தாங்க முடியாமல் தேம்பினாள் அர்ச்சனா..
“ஐய்யே.. பச்சைப் புள்ளையா நீ..?” பாசத்துடன் அரவணைத்துக் கொண்டாள் சாவித்திரி..
இருந்த இடத்தை விட்டு அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தியின் பார்வையும்.. அவளை அரவணைத்தது.. அவளது துயரம் புரிந்த தோழமை அவனது விழிகளில் பளபளத்ததில்..
‘என்ன மாதிரியான சொந்தம் இது..’ என பிரமித்துப் போனாள் அர்ச்சனா..
அவளை உட்கார வைத்து சாவித்திரி பரிமாறிய போது அவளது வயிறு நிறைந்ததைவிட பலகோடி மடங்கு அதிகமாக அவளது மனது நிரம்பியது..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.