Chapter 18

0Shares

ஸ்வெட்டரை மீறித் துளைத்த குளிரை விரும்பி அனுபவித்தாள் அர்ச்சனா.. காட்டன் புடவையும், ஸ்வெட்டரும், தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட ஸ்கார்ஃபுமாக ஸ்கூட்டியில் செல்லும்போது தன்னைக் கொடைக்கானல்வாசியாகவே உணர்ந்தவளுக்குக் குதூகலமாக இருந்தது.. சாத்தூரும் அங்கு காத்திருக்கும் ஆபத்துக்களும் மறந்தே போய் புதியதோர் உலகத்தில் புகுந்து விட்டதைப் போல உணர்ந்தாள்.. மனமெங்கும் சந்தோசம் நிரம்பியிருந்தது..

வாழ்க்கையின் எந்தத் திருப்பத்தில் பூங்கொத்து காத்திருக்கும் என்பதை அறிந்தவர் யார்..? காலம் நமக்கு மன ரணங்களை மட்டும் பரிசளிப்பதில்லை.. சில நேரம் கனிவு பொங்கும் தருணங்களையும் பரிசளிக்கக் கூடும் என்பதை கணக்கிட்டவர் யார்..? விதி வகுத்த பாதையில் முள்கள் மட்டுமல்ல.. பூக்களும் பரத்தப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தவர் யார்..?

சாத்தூரின் சுடு மணலில் நடந்த பாதங்களில் கொப்பளித்த புண்களை பனி விழும் ஒர் இரவு மாற்றியமைத்து குளிர் நிரம்பிய காற்றை இதமாக வீசி புண்களை ஆற்றி மலர் பாதங்களாக மாற்றி விடும் மாயத்தை யார் செய்தது..?

‘மூர்த்தி எனும் கந்தர்வன் செய்தான்..’

அர்ச்சனாவின் மனமும் முகமும் கனிந்தன.. ‘மூர்த்தி..’ என்ற பெயர் மனதில் ஒலித்தாலே போதும்.. அவளது மனமும் முகமும் மென்மையாகி விடுகின்றன.. என்ன செய்தானோ, ஏது செய்தானோ.. அர்ச்சனா விடுப்பு சொல்லி கொடைக்கானலுக்கு மாறுதல் கேட்ட ஒரு வாரத்திற்குள் அவள் கேட்ட மாறுதல் கிடைத்து விட்டது.. மூர்த்தியின் பங்களா முகவரிக்கு வந்த கொரியரைப் பிரித்துப் படித்த அர்ச்சனா அதை நம்ப முடியாமல் பிரமித்துப் போய் நின்று விட்டாள்..

சாத்தூருக்கு இனி அவள் திரும்ப வேண்டிய தில்லை.. அங்கே அவள் பார்த்து வந்த வங்கி வேலை கொடைக்கானலுக்கு மாற்றலாகி விட்டது.. சாவித்திரியின் அருகே மூர்த்தியின் பங்களாவில் அவள் பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளியாக தங்கிக் கொள்ள எந்தத் தடையுமில்லை என்ற நினைவே அவளுக்குத் தித்தித்தது.. கட்டுக்கள் அகன்று விட்டுச் சிறகடிக்கும் சிட்டுக் குருவியைப் போல அவள் மனது சிறகடித்தது.. விட்டு விடுதலையான உணர்வைத் தந்தவனுக்கு நன்றி சொல்ல வார்த்தை வராமல்..

“தேங்க்..யு..” என்று கண்களில் நீர்மல்கத் தடுமாறினாள்..

‘இதை நாங்க உனக்குச் சொல்லனும்மா..’ சாவித்திரி மனதில் நினைத்துக் கொண்டு நெகிழ்ந்தாள்..

அர்ச்சனா அந்த வீட்டிற்கு வந்து தங்கியிருக்கும் இந்த ஒரு வார காலத்தில் மூர்த்தி இரவு உலாவலுக்கு என்று பனியிலும் குளிரிலும் நனைந்தபடி கொடைக்கானலின் சாலைகளில் சுற்றிக் கொண்டிருக்கவில்லை.. நேரத்தோடு சாப்பிட்டு நேரத்தோடு தூங்கப் போனான்.. அந்தத் தூக்கத்தையும் நிம்மதியாகத் தூங்கினான்..

‘அவன் மட்டும்தான் தூங்கினானா..?’

அவன் நிம்மதியாக உறங்குவதில் நிம்மதி கொண்டு சாவித்திரியும் நிம்மதியாக உறங்கினாள்.. அவளது கை வளைவில் முயல் குட்டியைப் போல ஒன்றிக் கொண்டு பாதுகாவலில் இருக்கும் நிம்மதியுடன் அர்ச்சனாவும் நிம்மதியாக உறங்கினான்..

இந்த நிம்மதியைத் தந்தது தான்தான் என்று தெரியாமல் நன்றி சொல்லிக் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு பெண்ணைத் தட்டிக் கொடுத்து..

“போதும்.. போதும்.. எதுக்கெடுத்தாலும் அழுவியா..?” என்று செல்லமாக அதட்டி பேச்சை மாற்றினாள் சாவித்திரி..

இப்படி நிம்மதி, நிம்மதி உங்கள் சாய்ஸ் என்று நிம்மதியை அள்ளி வழங்கிய அர்ச்சனா தான் பெற்ற மனநிம்மதியுடன் மூர்த்தியின் பங்களாவில் சாவித்திரியின் பராமரிப்பில் ஐக்கியமானாள்..

அர்ச்சனாவுக்கு கொடைக்கானலைப் பிடித்திருந்தது.. 

“அப்படியா.. எங்க ஊரை உனக்குப் பிடிச்சிருக்கா..? எவ்வளவு பிடிச்சிருக்கு..?” என்ற மூர்த்தியின் கேள்விக்கு வானத்தைச் சுட்டிக் காட்டினாள் அவள்..

அவளுக்கு சாத்தூரைத் தவிர்த்து அனைத்து ஊர்களையும் பிடிக்கும் என்பதில் இரக்கம் கொண்டான் மூர்த்தி.. சிறகில் அடிபட்டிருந்த சிறு பறவையின் காயத்திற்கு மருந்திட்டு வானத்தில் பறக்க வைத்துப் பார்ப்பதில்தான் எத்துனை சந்தோசம் ஏற்படுகிறது..! 

அர்ச்சனா சிறகை விரித்துப் பறக்க ஆரம்பித்து விட்டாள்.. உல்லன் ஸ்வெட்டர்.. சால்வையென்று கொடைக்கானல் வாசியாக மாறி விட்டாள்.. அந்த மாற்றத்தில் வெகு இயல்பாக அவள் பொருந்திக் கொண்டது மூர்த்திக்கு மன நிறைவாக இருந்தது.. அவள் பட்ட சோகத்திற்கு அழுத முகமும், வடியும் கண்ணீருமாக வலம் வந்திருக்க வேண்டும்.. அவள் அப்படியில்லை.. சிரித்த முகமாக இருந்தாள்.. சாவித்திரியிடம் செல்லம் கொஞ்சினாள்.. மூர்த்தியுடன் உலாவச் சென்று வந்தாள்.. இரவு உணவு முடிந்ததும் மூவருமாக சேர்ந்து ஹால் சோபாக்களில் உட்கார்ந்து டிவி பார்த்தார்கள்.. சாவித்திரியும் அர்ச்சனாவும் சீரியல்களைப் பார்த்துக் கதையைப் பற்றித் தங்களுக்குள் கலந்தாய்வு செய்து பட்டிமன்றம் போல எதிரெதிர் அணிகளில் நின்று சண்டையிட்டுக் கொள்வார்கள்..

“உங்களையெல்லாம் திருத்தவே முடியாது..”

அவர்களின் சண்டைக்கு மத்தியஸ்தம் செய்ய முடியாமல் மூர்த்தி தலையில் அடித்துக் கொள்வான்..

“திருத்தற அளவுக்கு நாங்க என்ன செய்துட்டோமாம்..?”

இருவரும் தங்களுக்குள் நடந்த சண்டையை மறந்து ஒன்றுகூடி மூர்த்தியிடம் சண்டைக்குப் போவார்கள்..

“உங்களுக்கு சினிமாவும் சீரியலும்தான் வாழ்க்கை..”

“ஆண்களுக்கு மட்டும் என்ன..? எப்பப் பார்த்தாலும் நியுஸ், நியுஸ்ன்னு நியுஸைக் கட்டிக்கிட்டு அலைகிறது தானே வாழ்க்கை..? என்ன ஆண்ட்டி..? நான் சொல்கிறது சரிதானே..?”

“நீ சொல்கிறது எல்லாமே சரியாத்தானே இருக்கும் அர்ச்சும்மா..”

“இங்கே பாருடா.. அர்ச்சும்மாவாம்.. இந்த வாய்தான் சீரியலில வில்லிக்கு ஆதரவாப் பேசி இதே அர்ச்சும்மாவிடம் சண்டை போட்டது..”

“அது அப்போ..”

“எப்போ..?”

“எதிரெதிர் கட்சியில இருந்தப்ப..”

“இப்போ..?”

“ஒரே கூட்டணியில ஐக்கியமாகிட்டோம்ல்ல..”

“பிழைச்சுக்குவீங்கம்மா.. நீங்கள்ளாம் அரசியலில பெரிய தானைத் தலைவியா இருந்திருக்க வேண்டியவங்க.. உங்க நேரம்.. கொடைக்கானலில இருந்துக்கிட்டு அவஸ்தைப் படாறீங்க..”

“புரிஞ்சுக்கிட்டாச் சரி..”

“இப்போப்  புரிஞ்சுக்கிட்டேனில்ல.. அதுசரி.. நம்ம பேங்க் மேடம் என்னவோ நான் நியுஸை மேரேஜ் பண்ணிக்கிட்டதாச் சொன்னாங்களே.. எதை வைத்து அப்படிச் சொன்னாங்களாம்..?”

“ஹலோ சார்.. நான் உங்களை மட்டும் சொல்லலை.. எல்லா ஆண்களையும் தான் சொன்னேன்..”

“ஏனாம்..?”

“பின்னே என்ன சார்.. காலையில எழுந்து ஜாகிங் போகிறேன் பேர்வழின்னு பார்க் பக்கமாப் போய் கொஞ்சம் நொண்டியடிச்சுட்டு பெஞ்சில உட்கார்ந்து ஊர் நிலவரம் முதல் உலக அரசயில் வரைக்கும் அக்கப் போர் பேசறது..”

“அப்புறம்..?”

“வருகிற வழியில டீக்கடை பெஞ்சில உட்கார்ந்து ‘டீ’ சாப்பிட்டுக்கிட்டு இன்னும் கொஞ்சம் அரசியலை அலசி ஆராய்கிறது..

“செம ஆராய்ச்சிதான்.. அப்புறம்..?”

“வீட்டுக்கு வந்ததும் ‘உஸ்ஸ் அப்பாடா’ ன்னு என்னவோ இமயமலையோட எவரெஸ்ட் சிகரத்தையே தொட்டுட்டு வந்ததைப் போல பில்ட் அப் காட்டிக்கிட்டு ஒரு கையில காபியும் மறுகையில காலைப் பேப்பருமா உட்கார்ந்துடறது..”

“அடேங்கப்பா.. அப்புறம்..?”

“காபியைக் குடிச்சு முடிச்சதும் பேப்பரைத் தூக்கிக் கடாசிட்டு டிவியில நியுஸ் சேனலைப் போட்டுக்கிட்டு கொட்டக் கொட்ட முழிச்சுப் பார்க்கிறது..”

“ஆகமொத்தம் ஆண்களின் உலகமே நியூஸ்தான்ங்கிற..?”

“ஆமா.. பின்னே..? நியுஸ் சேனல்கள் எல்லாம் உங்களை நம்பித்தானே ரன் ஆகிக்கிட்டு இருக்கு..”

அர்ச்சனா விட்டுக் கொடுக்க மாட்டாள்.. மூர்த்தியுடன் சரிக்குச் சரியாக வழக்கடிப்பாள்.. அவனுக்கு அவளுடன் வார்த்தையாடுவது என்றால் அல்வாச் சாப்பிடுவதைப் போல.. இருவரும் தம்தம் தூக்கங்களையும் துயரங்களையும் மறந்து அரட்டையடித்துப் பேசிச் சிரிப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கும் சாவித்திரியின் மனம் நிறையும்..

அந்த இருவரின் துயரங்களையும் மன வலிகளையும் அறிந்தவள் அவள்.. மருந்தினால் ஆற முடியாத காயங்கள் அவர்களது காயங்கள்.. அவை ஆறினவோ இல்லையோ.. அவற்றின் வலியறியாத சிரிப்போடு அவர்கள் இருப்பதே பெரிதானது அல்லவா..?

காலையில் எழுந்ததும் சாவித்திரி கலந்து கொடுக்கும் காபி.. மூர்த்தியுடன் தோட்டத்தில் உலாவுதல்.. பின்னர் குளித்து காலை டிபனை உண்டு விட்டு மதிய உணவை டப்பாவில் அடைத்துக் கொண்டு வங்கிக்குப் பறந்து விடுவாள் அர்ச்சனா.. கொடைக்கானல் வங்கியில் அவளுக்கு சிநேகிதிகள் கிடைத்திருந்தார்கள்.. அவர்களுக்கு முக மலர்ச்சியுடன் காலை வணக்கம் சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்து விடுவாள்.. மாலையில் அவள் வீடு திரும்பும் போது மூர்த்தியும் வீடு திரும்பியிருப்பான்.. மாலை காபி, டிபன்.. சற்று இளைப்பாறுதல்.. இரவு உணவு.. அதன்பின் ஹாலில் கூடி அரட்டை.. நிம்மதியான இரவு உறக்கம்..

வாழ்க்கைதான் ஒரு நதியைப் போல எத்துனை அழகோடு அரவணைத்துக் செல்கிறது..!

கொடைக்கானலின் பசுமை அர்ச்சனாவை ஈர்த்தது.. வார இறுதியின் விடுமுறை தினங்களில் அவள் மூர்த்தியுடன் வெளியில் சுற்றிப் பார்க்கச் செல்வாள்… மணிக்கணக்கில் பேசியபடி அவர்கள் நடப்பார்கள்.. ஏரியில் படகு சவாரி செய்வார்கள்.. அன்றையப் பொழுதை இனிமையாக கழித்து விட்டு வீடு திரும்பும்போது அர்ச்சனாவுக்கு பசியே இருக்காது.. மனம் நிறையும் போது வயிறும் தானாய் நிறைவடைந்து விடுமோ..?

“ஹாய்..”

எதிரில் வந்த காரை ஓட்டி வந்த பெண்மணி கையை அசைத்தாள்.. மூர்த்தியின் பங்களாவுக்கு எதிர்பங்களாவில் குடியிருப்பவள் அவள்.. பதிலுக்கு கையசைத்த அர்ச்சனாவுக்கு சாத்தூரில் இதுபோன்ற சிநேகிதங்கள் கிட்டியிருக்குமா என்ற மலைப்பு ஏற்பட்டது..

லீலாவதியின் மீதிருந்த அருவெறுப்பினால் அவளை சிறு வயது முதல் அறிந்திருந்த அக்கம் பக்கத்தினர் கூடப் பேசிப்பழக பயந்து தள்ளி நின்றதை ஜீரணித்துக் கொண்டு வாழ்ந்து வந்தவள் அவள்.. அவளுக்கு இப்படியொரு வாழ்வு..

மூர்த்தியின் பங்களாவை அவளது ஸ்கூட்டி நெருங்கியவுடன் பதறிக் கொண்டு ஓடிவந்த செக்யூரிட்டி கேட்டைத் திறந்து விட்டான்..

‘நான் ஒன்றும் உன் எஜமானியல்ல..’

சொல்லத் துடித்தது மனது.. எப்போதும் போல அப்போதும் ஒரு சின்னச் சிரிப்பை செக்யூரிட்டியிடம் சிந்தி விட்டு ஸ்கூட்டியைச் செழுத்தினாள்.. போர்டிகோவில் மூர்த்தியின் கார் நின்றிருந்தது.. அவளது மனம் துள்ளியது..

‘இன்றைக்கு என்னை முந்திட்டானே..’

அவனைத் தேடும் விழிகளுடன் உள்ளே நுழைந்தாள்.. அவளை எதிர்பார்த்த விழிகளுடன் அவனும் எதிர் கொண்டான்.. அவளுக்காக காத்திருப்பதை மறைக்க முடியாமல்..

“இன்றைக்கு ஆப் ஆன் ஹவர் நீ லேட்..” என்றான்..

“கணக்கு டேலியாகலை..”

“ஏன்..? நீ எதில தப்பு விட்ட..?”

“நான் ஒன்னும் தப்பாய் கணக்குப் போடலை..”

“பின்னே..? கம்யூட்டர் தப்பாய் கணக்குப் போட்டிருச்சா..?”

“ஒருவகையில் அப்படித்தான்.. கம்யூட்டர் மக்கர் பண்ணிருச்சு..”

“மனுசராய் இருந்தா நாலு உதை விட்டு ஏன் மக்கர் பண்றேன்னு கேட்கலாம்.. கம்யூட்டரை என்ன பண்ணுகிறது..? நாம விடற உதையில அது தூள் தூளாகிருச்சுன்னா அதுக்கும் நாமதான் தண்டம் கட்டியாகனும்..”

அவன் பேசியதை ரசித்து அவள் ‘களுக்’ என்று வாய் பொத்திச் சிரித்தாள்..

“நல்லா இருக்கு..” என்ற கர்ஜனை ஒன்று ஒலித்தது.. 

‘இது மூர்த்தியின் குரல் இல்லையே..’

உடல் தூக்கிப்போட மூர்த்தியைப் பார்த்தாள்.. அவனது முகம் இறுகிப் போயிருந்தது..

“உன் ரூமுக்குப் போ..” அடிக்குரலில் ஆணையிட்டான்..

‘ஏன் இப்படிச் சொல்கிறான்..?’ காரணம் புரியாமல் திரும்பிப் பார்த்தாள் அர்ச்சனா..

அந்தக் காரணம் நரைத்த தலையும், உக்கிர முகமுமாக வாசல் கதவருகே நின்றிருந்தது..

அர்ச்சனாவின் உடல் நடுங்கியது..

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link