Chapter 19
அப்படியொரு உக்கிர முகத்தை அதுவரை அவள் கண்டதில்லை.. அவளைச் சுற்றியிருந்த கெட்டவர்கள் சிரித்தே கழுத்தை அறுக்கும் ரகத்தைச் சேர்ந்தவர்கள்.. தேனினும் இனிய குரலில் நைச்சியமாகப் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொள்பவள் லீலாவதி.. பாண்டுரங்கனோ அர்ச்சனாவைப் பார்த்தவுடன் பல்லை இளிப்பவன்.. அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறிய கடைசிநாளில் கூட லீலாவதிதான் கத்திக் கொண்டிருந்தாள்… பாண்டுரங்கன் அர்ச்சனாவிடம் பல்லைக் காட்டத்தான் முயன்று கொண்டிருந்தான்..
‘யார் இவர்..?’ அவள் நினைத்து முடிப்பதற்குள்..
“யார் இவ..?” என்று கர்ஜித்தார் அந்தப் பெரியவர்..
அவளுக்குப் பதில் சொல்லாமல் அர்ச்சனாவை முறைத்த மூர்த்தி..
“உன்னை உன் ரூமுக்குப் போகச் சொன்னேன்.. காதில் விழுகலையா..?” என்று சீறினான்..
“இவ ரூமா..? இவளுக்குன்னு இந்த வீட்டில ரூம் வேற இருக்கா..? என்ன நடக்குது இந்த வீட்டில..?” அந்தப் பெரியவரின் உஷ்ணப்பார்வை அர்ச்சனாவை சுட்டது..
“எதுவும் நடக்கும்.. இது என் வீடு..” எரிச்சலுடன் சொன்ன மூர்த்தி..
“இன்னுமா நீ போலை..?” என்று அர்ச்சனாவை விரட்டினான்..
அர்ச்சனா ஒரே தாவலாக மாடிக்கு ஓடி விட்டாள்.. அறைக்குள் அடைபட மனமில்லை.. வந்திருப்பது யார் என்று அறியும் ஆவல் அவளை தடுத்தது.. உறவுகள் இருந்தும் அநாதை என்று மூர்த்தியைப் பற்றி சாவித்திரி சொன்னாளே.. வந்திருப்பது மூர்த்தியின் உறவுகளில் ஒருவரா..?
அர்ச்சனா மாடியிலிருந்த தூண் மறைவில் ஒன்றி மறைந்து நின்று ஹாலில் நடப்பதைக் கவனித்தாள்.. அவள் செய்வது தவறுதான்.. அடுத்தவர்களின் வாக்குவாதங்களை மறைந்திருந்து கவனிக்கக் கூடாதுதான்… அவளுக்கு வேற வழியில்லையே… மூர்த்தியின் கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்தது
என்று அவள் தெரிநது கொள்ள விரம்பினாள்.. ஏன் அவன் உறவுகளை விட்டு ஒதுங்கி நிற்கிறான்..? பனி விழும் இரவுகளில் கால் தேய அவன் கொடைக்கானல் மலையைச் சுற்றி வருவதற்கான காரணம்தான் என்ன..,
“உன் வீடா..? எவ்வளவு தைரியம்..! இந்த மதுசூதனன் பெயரைச் சொன்னா கொடைக்கானல் மலையே கிடுகிடுக்கும்.. உன் அப்பன் கூட என் முன்னால் நின்று பேசியதில்லை.. நீ தெனாவெட்டா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு என் முன்னால் நின்று பதில் சொல்ற.. இந்த மது சூதனனை யாருன்னு நினைச்ச..?”
“அநியாயத்துக்குத் துணை போகிற வயசான மனுசன்னு நினைக்கிறேன்.. போதுமா.. உங்க பெருமையை என்னிடம் பீற்றாதீங்க. கேட்டுக் கேட்டு என் காது ஜவ்வு கிழிஞ்சிருச்சு..”
“மூர்த்தி..”
“உஸ்ஸ்.. இது உங்க அரண்மனையில்லை.. என்னோட பங்களா.. நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில வாங்கியது.. இங்கே வந்து அதிகாரம் பண்ணுகிற வேலை வேண்டாம்..”
மதுசூதனனின் முகத்தில் தாண்டவமாடிய ரௌத்ரத்தில் பயந்து போய் தூணோடு தூணாக ஒன்றிக் கொண்டாள் அர்ச்சனா.. ரத்தமென சிவந்த விழிகளுடன் அவர் மூர்த்தியை பார்த்த பார்வை பாசம் கொண்ட பார்வையாக இல்லை.. அதிகாரத்தை மீறத் துடிக்கும் அடிமையைப் பார்க்கும் ஆக்ரோசப் பார்வையாக இருந்தது..
“எடுத்தெரிந்து பேசியதாலதான் உன்னை என் அரண்மனையில இருந்து வெளியே எறிந்தேன் மூர்த்தி.. மறந்து விட்டுப் பேசுகிறாயா..?”
“மறந்தது யார்..? நானா..? ஹா.. ஹா..! உங்க அரண்மனையும் வேண்டாம்… உங்க உறவும் வேண்டாம்ன்னு தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தது நான் தாத்தா.. அதை மறந்துட்டு மறைச்சுப் பேசறிங்க பார்த்தீங்களா.. இதுதான் நீங்க..”
‘இவர் மூர்த்தியின் தாத்தாவா..?’
மதுசூதனனின் உக்கிர முகத்தின் ஜாடை மூர்த்தியின் முகத்திலும் இருப்பதை அப்போதுதான் கவனித்தாள் அர்ச்சனா.. வந்திருப்பவர் மூர்த்தியின் தாத்தா என்பதில் அவளுக்குள் வாஞ்சை பெருகியது.. பெருகி என்ன செய்ய..? அவர் முன்னால் நிற்கக்கூட அவளுக்கு அனுமதியில்லையே.. அவள் மனதின் வாஞ்சையை எப்படி அவள் உணர்த்துவாள்..?
“என் வம்சத்துக்கே நீ களங்கம்..”
“எதனால் தாத்தா..? அடுத்தவன் காதலியை நான் அபகரிச்சுட்டேனா..? போட்டுக் கொடுத்து போட்டுக் கொடுத்து என் காரியங்களை சாதிச்சுக்கிட்டேனா..? இதையெல்லாம் செய்தவனை உங்க செல்லப் பேரன்னு செல்லம் கொஞ்சுவீங்க.. என்னை உங்க வம்சத்தின் களங்கம் என்பீங்க.. என்ன ஒரு நியாயம்..! பட்… இதைப் போல நியாங்களைத்தான் உங்களிடம் எதிர்பார்க்க முடியும் தாத்தா.. தி கிரேட் மதுசூதனன் இஸ் எ டிஸ்ஹானஸ்ட் மேன்..!”
“மூர்த்தி..”
“ஐ ஹேட் யு.. உங்க வம்சத்தில பிறந்து தொலைத்து விட்டதைத்தான் நான் களங்கமா நினைக்கிறேன்.. நீங்க உங்க வம்சத்துக்கே ஒர் களங்கம்.. உங்களுக்குப் பேரனா பிறந்து தொலைத்தது நான் வாங்கிய சாபம்..”
“இப்படிப் பேசிப் பேசியே அழிந்து போனடா நீ..”
“நீங்க அழித்தீங்க தாத்தா.. என் காதலை, என் நம்பிக்கையை, என் வாழ்க்கையை குறி வைத்து அழித்தீங்க.. இப்ப எந்த முகத்தோடு என் வீட்டுப் படியேறி வந்து நிற்கறிங்க..”
“இந்த மதுசூதனனின் காலடி படவும் ஒரு தகுதி இருக்கனும்.. உன் வீட்டுக்கு அந்தத் தகுதியில்லை..”
“ஹ.. இதைப் பாருடா.. அழையா விருந்தாளியாய் வந்து நின்றுக்கிட்டு இந்தப் பெரிய மனிதன் பேசுகிற பேச்சை..! மிஸ்டர் ஜனார்த்தனம்..! என் வீட்டுக்குன்னு
ஒரு தரம் இருக்கிறது.. கேடு கெட்ட பேரனுக்காக தரகு வேலை பார்த்த நீங்கள்ளாம் என் வீட்டில் கால் வைத்து என் வீட்டின் தரத்தைக் குறைப்பதை நான் அலோவ் பண்ண மாட்டேன்.. கெட் லாஸ்ட்..”
“டேய்ய் மூர்த்தி.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசற..?”
“மனச்சாட்சியே இல்லாத ஓர் கிழவனைப் பார்த்துப் பேச வேண்டிய வார்த்தையைத்தான் பேசறேன்..”
“கோவிந்தராஜன் பெற்ற பிள்ளையாடா நீ..? இப்பவும் உன் அப்பன் என் எதிரே நின்று பேச மாட்டான்.. ‘அப்பா’ என்கிற சொல்லுக்கு அடுத்த வார்த்தை பேச மாட்டான்..”
“இதைச் சொல்ல வெட்கமாக இல்லை..? இது ஒரு பெருமைன்னு திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே.. அப்பா பிள்ளை உறவை, ஆண்டான் – அடிமை உறவா மாத்தி வைச்சுட்டு அதைப் பத்தி பெருமையாய் வேற பேசிக்கறிங்க.. வெட்கக் கேடு..!”
“எதுடா வெட்கக் கேடு..? எவளோ ஒருத்தியைக் கொண்டு வந்து வீட்டுக்குள் வைத்திருக்கிறியே.. இதுதான் வெட்கக் கேடு.. பெரிசா நீதி, நேர்மை, நியாயம்ன்னு பிரசங்கம் பண்றியே.. இதுவாடா நேர்மை..?”
“அர்ச்சனா எவளோ ஒருத்தியில்லை..”
“அட..! அவ பெயர் அர்ச்சனாவா.. கர்மம்..”
அர்ச்சனா குன்றிப் போனாள்.. அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல இருந்தது.. அவளை ஒரு பெரிய மனிதர் ‘கர்மம்’ என்கிறார்.. ஏன்..? மூர்த்தியின் பேச்சைக் கேட்டு அவன் வீட்டில் தங்க ஒப்புக்கொண்டது எதில் கொண்டு வந்து விட்டிருக்கிறது..
“மதுசூதனன் என்கிற பெயரைவிட அர்ச்சனா என்கிற பெயர் மோசமில்லை.. அத்துடன் மதுசூதனனைப் போல அர்ச்சனா அநியாயம் செய்பவள் இல்லை.. ஸோ.. எதைச் சொன்னாலும் யோசித்துச் சொல்லனும்..”
“எவளோ ஒரு நாடோடியுடன் என்னை ஒப்பிட்டுப் பேசறியா..?”
“தப்புத்தான் தாத்தா.. அவ கள்ளம், கபடம் இல்லாதவ.. நீங்க சூது, வாதுதான் உங்க சொத்துன்னு வாழ்கிறவர்.. உங்க சொல் பேச்சுக்கு அடங்காத பேரனை பழிவாங்க நீங்க எந்த லெவலுக்கும் இறங்குவீங்க.. உங்களுடன் அவளை ஒப்பிட்டுப் பேசியது என் தவறுதான்.. சேறுடன் செந்தாமரையை ஒப்பிட்டுப் பேசக் கூடாதுதான்..”
“திஸ் இஸ் நாட் பெய்ர் மூர்த்தி..”
“ஷ்யூர் தாத்தா.. நீங்க என் வீட்டுக்கு வந்திருக்கிறது கொஞ்சம் கூட நன்றாக இல்லைதான்.. என்ன செய்கிறது..? உங்களுக்குப் பேரனாப் பிறந்திருந்தும் உங்களோட அநாகரிகம் எனக்கு வரவே மாட்டேன் என்கிறதே… எப்படி தாத்தா என் செக்யூரிட்டியிடம் உங்க கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளச் சொல்வேன்.. ஹௌ கேன் ஐ டூ இட்..?”
மதுசூதனனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.. இதுபோன்ற அவமானத்தை அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்தே இருக்க மாட்டார் என்று தோன்றியது அர்ச்சனாவுக்கு.. ஓர் அரசனைப் போன்ற திமிரும், நிமிர்வும் கொண்டவரை மிக எளிதாக அவமானப் படுத்திக் கொண்டிருந்தான் மூர்த்தி..
‘எதனால் இந்த வன்மம்..? இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுபவனா மூர்த்தி..’
அன்று கண்ட மூர்த்தியின் வேறொரு பரிணாமத்தில் மருட்சி கொண்டாள் அர்ச்சனா.. என்னதான் புரிந்து கொள்ளாமல் அதிகார தோரணையில் பேசினாலும் வந்திருப்பது அவனது தாத்தாவாயிற்றே.. கண்ணியமான தோற்றமும், நேர்த்தியான உடையுமாக ரேமாண்ட் விளம்பரத்தில் வரும் கோடிஸ்வரத் தாத்தாவைப் போல இருந்த மதுசூதனனிடம் மூர்த்தி நடந்து கொண்ட முறை கொஞ்சமும் சரியில்லை என்று அர்ச்சனாவின் மனது விமரிசித்தது..
“திஸ் இஸ் தி லிமிட் மூர்த்தி..”
“நீங்கள்ளாம் லிமிட்டைப் பற்றிப் பேசவே கூடாது..”
“உன் தவறை மறைக்க என்னிடம் மரியாதையில்லாமல் பேசற..”
“தவறா..? நானா..? அதுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம் தாத்தா.. அர்ச்சனா ஒன்றும் நாடோடியில்லை.. பேங்கில் வேலை பார்க்கிறா.. என் வீட்டில் ஒன்றும் ஓசியா ஒன்றிக்கிட்டு இல்லை.. அவ தங்கறதுக்கும், சாப்பாட்டுக்கும் பணம் கொடுத்து பேயிங்-கெஸ்ட்டா இருக்கிறா.. அவளைப் போல சுயமரியாதையுள்ள பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேசினீங்கன்னா நடக்கிறதே வேற..”
“பேயிங் கெஸ்ட்டா இங்கே இருக்கிறதுக்குப் பதில் ஏதாவது ஒரு லேடிஸ்-ஹாஸ்டலில் இருக்க வேண்டியது தானே..? இது என்ன வீடா.. இல்லை ஹாஸ்டலா..?”
“அதைப் பத்தியெல்லாம் நீங்க பேசக்கூடாது.. இங்கே நான் மட்டும் இருந்திருந்தா நிச்சயமா அவ இந்த வீட்டில தங்கிக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டா.. சாவித்திரியம்மாவும் இருக்கிறாங்க.. அவ அம்மாவோட ரூமிலதான் தங்கியிருக்கா.. அவளையென்ன மாயான்னு நினைச்சுட்டீங்களா..?”
மதுசூதனனின் முகம் வெளிறியது.. அவர் தேவையில்லாமல் தன் கோட்டை சரி செய்து கொண்டார்.. செருமினார்.. கையில் கட்டியிருந்த உயர்ரக வாட்ச்சில்
மணி பார்த்தார்..
மாயாவைப் பற்றிய பேச்சு அவரை தடுமாற வைப்பதைப் புரிந்து கொண்டாள் அர்ச்சனா.. யார் அந்த மாயா என்று அவளது மனம் குறுகுறுத்தது.. அவளுக்கும் மூர்த்திக்கும் என்ன சம்பந்தம்..?
“அம்மாவா..? உன் அம்மா அரண்மனையில் இருக்கிறா.. இங்கே இருப்பது ஆயா..”
அவர் அடுத்த கண்டனத்தை தெரிவித்தார்.. அர்ச்சனாவுக்கு என்னவோ போல இருந்தது.. சாவித்திரியின் தாய்ப்பாசம் எத்தகையது என்பதை அவள் அறிவாளே.. ஆயாவாக இருந்தால் என்ன..? தன்னலமில்லாத தாயன்பை பொழிபவளைப் பார்த்து ‘அம்மா’ என்றழைத்தால்தான் என்ன..? அதில் தவறேதும் இல்லையே..
“இவங்களும் என் அம்மாதான்..”
“மூர்த்தி.. மதுசூதனின் பேரன் என்பதை மறந்து விட்டுப் பேசுகிற..”
“பாயிண்டைப் பிடிச்சுட்டிங்களே.. நான் உங்க பேரன் என்பதை மறந்து ரொம்ப நாளாச்சு..”
“அதை நினைவில் வைத்திருந்தால் என் ‘மது சாக்லெட் பேக்டரி’க்குப் போட்டியா ‘கொடை சாக்லெட் பேக்டரி’யை ஆரம்பித்திருக்க மாட்டியே..”
“போட்டியா ஆரம்பிச்சேனா..? பொய், பொய்யா பேசக்கூடாது என் பங்குக்கு வந்த பரம்பரைச் சொத்தான மது சாக்லெட் பேக்டரியை நீங்க பறிச்சுக்கிட்டிங்க.. எனக்கென்னன்னு நான் புதிதாய் ஒரு பேக்டரியை ஆரம்பித்தேன்.. தட் இஸ் இட்..”
“கெட்டிக்காரத்தனமாய் பேசுவதாய் நினைப்பா..? அமெரிக்காவில படிச்சுட்டு வந்த படிப்பை யூஸ் பண்ணுகிறேன் பேர்வழின்னு சாக்லெட் பேக்டரியையே டோட்டலா மாத்தின.. சாக்லெட்டின் தயாரிப்பில் புதுசா புதுசா எதையோ செய்த.. என் சாக்லெட்டின் பெயர் கெட்டு விடக் கூடாதுன்னு பேக்டரியை திரும்ப வாங்கிக்கிட்டேன்.. நான் செய்தது தப்பு தாத்தா, இனிமே ஒழுங்கா உங்க சொல்பேச்சு கேட்டுக் கம்பெனியை நடத்தறேன்னு என் காலில் விழுந்து கெஞ்சியிருந்தா ‘பிழைத்துப் போ’ன்னு அந்த பேக்டரியை பிச்சை போட்டிருப்பேன்.. செய்தியாடா நீ..?”
எப்படி இப்படிப் பேச முடிகிறது என்று மனம் நைந்தாள் அர்ச்சனா.. எதிரில் நிற்பவன் சொந்தப் பேரன்.. அவனிடம் பாசத்தைக் காட்ட வேண்டாம்.. பிச்சை போடுகிறேன் என்று ஆணவத்தைக் காட்டாமல் இருக்கலாமே..
“ஷட்-அப்..” மூர்த்தி சீறியபோது வயதில் பெரியவர் என்ற மட்டு மரியாதை துளியும் இல்லாமல் மரியாதை குறைவாய் கோபப் படுகிறானே என்று அர்ச்சனாவுக்குத் தோன்றவேயில்லை..
“ஹலோ மிஸ்டர் மதுசூதனன்..! சாக்லெட் பேக்டரி வேண்டும்ன்னு நான் நினைத்திருந்தா சொடக்குப் போடற நேரத்துக்குள்ள அதைக் கைப்பற்றியிருப்பேன்.. அது என்ன நீங்க உழைத்து உருவாக்கிய சொத்தா..? பரம்பரைச் சொத்து..! உங்க தாத்தாவோட பெயரில் இருந்த கம்பெனிக்கு பொடித்தனமா உங்க பெயரை வைத்தீங்க.. பரம்பரையா வந்த பெயரை மாற்றினீங்க.. அப்படிச் செய்ததினால அது நீங்க உருவாக்கின கம்பெனியா ஆகி விடுமா..? கோர்ட்டுக்குப் போயிருந்தாத் தெரியும் சேதி.. உங்க பரம்பரையில பிறந்ததே வெட்கக்கேடுன்னு ஒதுங்கி நிற்கிறவனுக்கு பரம்பரைச் சொத்து எதுக்கு..? ‘கொடை குருப்ஸ் ஆஃப் கம்பெனி’யை உலகம் பூரா தெரிய வைத்திருக்கிறேன்.. என்னோட எக்ஸ்போர்ட் சரக்குகளோட குவாலிட்டி எப்படின்னு கேட்டுப் பாருங்க.. தெரியும்.. உங்களையெல்லாம் மனிதனாக்கூட நான் மதித்ததில்லை.. இதில் இவர் காலில விழுந்து நான் கேட்டிருக்கனுமாம்.. குட் ஜோக்..”
மூர்த்தி பொங்கிய பொங்கலில் மதுசூதனனின் முகம் கறுத்து விட்டது..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.