Chapter 21

0Shares

மதுசூதனன்..!

கொடைக்கானலின் நம்பர் ஒன் கோடிஸ்வரர்.. ஏலக்காய் எஸ்டேட்டுகளின் அதிபதி..! சாக்லெட் பேக்டரிக்கு சொந்தக்காரர்..! என்ன ஒன்று.. அத்தனை சொத்துக்களும் பரம்பரையாய் வந்த சொத்துக்கள்.. கோடிஸ்வரரின் மகனாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்த சாதனையையும் அவர் சாதித்ததில்லை..

பிறக்கும்போதே தங்க ஸ்பூனை வாயில் கவ்விக் கொண்டு பிறந்ததினாலோ என்னவோ அவருக்குத் ‘தான்’ என்ற ஆணவமும் தலைக்கனமும் மிக மிக அதிகம்.. யாரையும் மதிக்க மாட்டார்.. அவர் பெற்ற பிள்ளைகளை அடிமைகளைப் போல நடத்துவார்..

ஒற்றை மகனாய் பிறந்த மதுசூதனனுக்கு மூன்று மகன்கள்.. மூத்தமகன் ஜனார்த்தனத்திற்கு ஏற்காடு, எஸ்டேட் அதிபரின் மகளான யமுனாவை மணம் முடித்து வைத்தார்.. ஜனார்த்தனம்-யமுனா தம்பதியருக்கு நவீன், நீரஜா என்று இரண்டு பிள்ளைகள்.. இரண்டாவது மகனான கோவிந்தராஜன்தான் மூர்த்தியின் தந்தை.. அவருக்கு ஊட்டி எஸ்டேட் அதிபரின் மகளான வசுந்தராவுடன் திருமணம் நடந்தது.. மூர்த்தியும், மிருதுளாவும் என இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த வசுந்தரா கருணையின் மறுவடிவம்.. மதுசூதனனின் மூன்றாவது மகன் ராமநாதன்.. அவருக்கு கேரளத்தில் மணம் முடித்து வைத்திருந்தார் மதுசூதனன்.. வயநாட்டு எஸ்டேட் அதிபரின் மகளான கோமளாதான் மதுசூதனன் குடும்பத்தின் கடைக்குட்டி மருமகள்.. ராமநாதன்-கோமளா தம்பதியருக்கு ராஜேஸ், ராதிகா என்று இரு பிள்ளைகள்..

பரம்பரையாய் வந்த சொத்துக்களின் பெயர்களை ‘மது’ என்று மாற்றினார் மதுசூதனன்.. மது சாக்லெட் பேக்டரி, மது எஸ்டேட் என்று அனைத்துச் சொத்துக்களும் மது உண்டு போதையுடன் தள்ளாடின.. தனக்கென்று அரண்மனையையும் மாதாமாதம் வாடகைப் பணத்தைக் கொட்டும் ‘ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்’சுகளையும், ஸ்டார் ஹோட்டலையும் நிறுத்திக் கொண்ட மதுசூதனன் மற்ற சொத்துக்களைப் பேரன்களுக்குப் பிரித்து கொடுத்தார்..

அதையும் அவர் செய்திருக்க மாட்டார்.. அனைத்தையும் அவர்தான் சம்பாதித்து உருவாக்கி வைத்திருப்பதைப் போல ஆணவமாக இருந்திருப்பார்.. அப்படி இருக்க முடியாமல் அவரது கடைசி சம்பந்தியான மலையாள வயநாட்டு எஸ்டேட் அதிபரின் மிரட்டல் வதைத்து விட்டது..

“சொத்துக்காரன் எண்டுதான் எண்ட செல்ல மோளை ஆ கொடைக்கானல் எஸ்டேட் ஒனரோட கடைசி மோனுக்கு விவாகம் கழிச்சுக் கொடுத்தேன்… ஆ கிழவன் என்னடான்னா எண்ட மருமகனுக்கு மோன் ஜனிச்சு வளர்ந்து விவாகம் கழிக்கிற பருவத்தில வந்து நிற்கிற வரைக்கும் சொத்தைப் பிரிச்சுக் கொடுக்காம இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு இருக்கான்.. இனியும் ஞான் தாமதிச்சா ஞான் ஈ வயநாட்டு எஸ்டேட்டுக்கு ஓனரா இருக்கிறதில அர்த்தமில்ல.. எண்ட மருமகனுக்குக் கிட்டாத சொத்து எண்ட கொச்சு மோனுக்காவது கிட்டனும்.. இல்ல.. ஞான் ஆ மதுசூதனனை வெட்டனும்..”

வயநாட்டின் வயலென்ஸ் கொலைமிரட்டல் மாநிலம் தாண்டி கொடைக்கானல் மதுசூதனனின் செவிகளை எட்டியதில் அவர் குலை நடுங்க உடனடியாக பாகப் பிரிவினைக்கு ஏற்பாடு பண்ணி விட்டார்..

மூன்று சம்பந்திகளில் அதிக ரத்தம் கொதிப்பு உள்ள வயநாட்டு சம்பதியின் மகள் வழிப் பேரனான ராஜேஸீக்கு கொடைக்கனாலின் ரிசார்ட்டுகளைக் கொடுத்துக் கோபத்தைத் தணித்து விட்டார்.. அதில் ஜனார்த்தனின் மகன் நவினுக்கு ஏகப்பட்ட வருத்தம்.. அவனுடைய அப்பாதான் குடும்பத்தில் மூத்த மகன் என்பதினால் ரிசாட்டுகள் அவனுக்குத்தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தான்.. அந்த நினைப்பில் மண்விழுந்து விட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. உரிமைக்குரல் எழுப்பி போர் முரசு கொட்டலாம் என்றால் வயநாட்டு மலை அதிபரின் முரட்டுத் தோற்றம் அவனை அச்சுறுத்தியது… ஆனானப்பட்ட மதுசூதனனின் ஆணவத்தையே கேள்விக்குறியாக்கிய மனிதர் நவினையெல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பாரா..?

வயநாட்டு வயலென்ஸோடு எதற்கு வம்பு என்று வாயை மூடிக் கொண்ட நவீன் அடுத்து கண் வைத்தது சாக்லெட் பேக்டரியின் மீதுதான்.. உடனடியாக பணம் கிடைக்கும் தொழில் அது.. வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாவது.. அது மூர்த்தியின் பங்குக்குப் போய் விட்டதில் அவனுக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டது.. எஸ்டேட்டை அவன் பங்குக்குக் கொடுத்த மதுசூதனன்..

“எங்க பரம்பரையின் பெயரைச் சொல்லும் எஸ்டேட் மூத்த மகனின் பங்குக்குப் போகனும்.. அதுதான் முறை..” என்று பெரிய பிரசங்கம் ஒன்றைச் செய்து நவீனை சோதித்து வைத்தார்..

மதுசூதனனை எதிர்க்கும் வல்லமையும் துணிச்சலும் நவீனுக்கு இல்லை.. அவரைக் குல்லாப் போட்டு வைத்துக் கொண்டால்தான் அவரது காலத்திற்குப் பிறகு அவர் பொறுப்பில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸீகளையும், ஸ்டார் ஹோட்டலையும் கைப்பற்ற முடியுமென்ற நீண்ட காலத் திட்டத்துடன்.. அவன் வாயைத் திறக்காமல் கொடுத்ததை வாங்கிக் கொண்டான்..

அப்படியே விட்டு விட நவீன் ஒன்றும் முட்டாளில்லையே.. அவன் வேறு ஒரு வழியில் காய் நகர்த்த ஆரம்பித்தான்..

பேத்திகளில் நவீனின் தங்கையான நீரஜாவுக்கு வைர நகைகளும், வத்தலக்குண்டில் இருந்த பழத்தோட்டமும் சென்னையில் இருந்த பங்களாக்களில் ஒன்றும் கொடுக்கப்பட்டன.. மூர்த்தியின் தங்கை மிருதுளாவுக்கு வைர நகைகள், கொடை ரோட்டில் இருந்த பழத் தோட்டம், சென்னையில் இருந்த பங்களாக்களில் ஒன்று என்று பிரித்துக் கொடுக்கப்பட்டன.. கடைசி மகனின் மகளும் வயநாட்டு மலை அதிபரின் மகள் வழிப் பேத்தியுமான ராதிகாவுக்கு வைர நகைகள், கேரளாவில் இருந்த தேயிலைத் தோட்டம், சென்னையில் இருந்த பங்களாக்களில் ஒன்று என்று பார்த்துப் பார்த்துப் பரிசீலனை செய்து வயநாட்டு மலை அதிபரின் மனம் கோணி விடாதபடி படுகவனமாக வழங்கப்பட்டன..

மதுசூதனனின் மகன்களும், மகன்வழிப் பேரன், பேத்திகளும் பாகப் பிரிவினையை ஏற்றுக் கொண்டு கையெழுத்தப் போட்டுக் கொடுத்தபோது மூர்த்தியின் பங்குக்கு வந்த சாக்லெட் பேக்டரியில் ஓர் இக்கன்னாவை உண்டாக்கி வைத்தான் நவீன்..

பெரியவருக்கு எப்போதுமே மூர்த்தியைப் பிடிக்காது.. எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளிகளை அவர் அடிமை போல நடத்துகிறார் என்று அடிக்கடி அவருடன் மோதுவான் மூர்த்தி.. அவருடைய தவறுகளைச் சுட்டிக் காண்பிப்பான்.. சாக்லெட் பேக்டரியை அவர் பாழடிக்கிறார் என்பான்.. இவற்றையெல்லாம் ஒன்றுக்குப் பத்தாய் உருவேற்றிப் போட்டுக் கொடுத்து மூர்த்தியை மதுசூதனனின் முக்கிய எதிரியாக அவர் நினைக்கும்படி அவருக்கு மூளைச் சலவை செய்து வைத்திருந்தான் நவீன்..

“தாத்தா.. இப்பவே மூர்த்தி பெயருக்கு சாக்லெட் பேக்டரியை மாற்றிக் கொடுத்திட்டிங்கன்னா அவன் பேக்டரியை நாசம் செய்து விடுவான்.. கண்ட்ரோலை உங்க கையில் வைத்துக்கங்க.. அவன் எப்போ பேக்டரியை ஒழுங்கா நிர்வாகம் பண்ணுகிறான்னு உங்களுக்குத் தோணுதோ.. அப்ப ஃபேக்டரியை அவன் பெயருக்கு எழுதி வையுங்க.. அதுதான் புத்திசாலித்தனம்..”

பாகப் பிரிவினையிலும் பிரிவினை செய்யும் அதி பயங்கரக் கெட்டிக்காரன் நவீன்.. தனது பங்குக்கான சாக்லெட் பேக்டரியைப் பெற்றுக் கொண்டேன் என்று மூர்த்தி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்த பத்திரத்தில் அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டேன் என்று மாற்றி டைப் அடிக்க வைத்திருந்தான் நவீன்.. மதுசூதனின் சொல்படி அதைச் செய்ததாகக் காண்பித்துக் கொண்டான்..

மதுசூதனனுக்கு மற்றவர்களைக் ‘கண்ட்ரோல்’ பண்ணப் பிடிக்கும்.. அதுவும் மூர்த்தியைக் கண்ட்ரோல் பண்ணுவதென்றால் அவருக்கு அல்வாச் சாப்பிட்டதைப் போல அவ்வளவு பேரானந்தமாக இருக்கும்.. அதற்கு வழி செய்து விட்ட நவீன் அவருக்குச் செல்லப் பேரனாக ஆனான்..

பத்திரத்தைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடும் அளவிற்கு மூர்த்தி சோம்பேறியும் அல்ல.. முட்டாளும் அல்ல.. மதுசூதனனின் மீது அவனுக்குத் துளியளவும் நம்பிக்கை இருந்ததில்லை… அவன் பத்திரத்தைப் படிக்க முனைந்தபோது வேகமாக ஓடி வந்த நவீன்..

“மூர்த்தி, சித்தி மாடிப்படியிலே கால் சறுக்கி விழுந்துட்டதா போன் வந்திருக்குடா.. க்விக், சீக்கிரமா வா.. ஹாஸ்பிடலுக்குப் போகனும்..” என்று பதறினான்..

அம்மாவுக்கு ஒன்று என்றால் சர்வாங்கமும் பதறாதா..? மூர்த்தி அவசரமாக படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டுக்கு ஓடினால் அங்கே வசுந்தரா தோட்டத்தில் பூஜைக்காக பூப்பறித்துக் கொண்டிருந்தாள்..

“அடிபட்ட காலோடு பூப்பறித்துப் பூஜை செய்யலைன்னா சாமி கோபித்துக்குமா..?” மூர்த்தி தாயைச் சப்தம் போட்டான்.. அவளோ..

“அடி பட்டிருக்கா..? யாருக்குடா..?” என்று குழம்பிப் போனவளாக மகனைக் கேள்வி கேட்டாள்..

“நீங்க மாடிப்படியில் சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டதா நவீன் ஓடி வந்தானேம்மா..”

“இல்லையே மூர்த்தி.. அவன் ஏன் அப்படிச் சொல்லனும்..?”

‘ஏன் சொல்லனும்..?’

யோசித்த மூர்த்திக்குப் பளிச்சென்று உண்மை விளங்கி விட்டது.. பல்லைக் கடித்தான்.. மகன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த வசுந்தரா..

“என்னப்பா ஆச்சு..?” என்று கலக்கமாகக் கேட்டாள்.

“என்ன ஆச்சா..? உங்க மைத்துனர் மகனும், மாமனாரும் என் முதுகில குத்திட்டாங்கம்மா.. துரோகிங்க..”

“மூர்த்தி..”

“பாகப்பிரிவினைப் பத்திரத்தில ஏதோ கோல்மால் நடந்திருக்கும்மா.. என்னைப் படித்துப் பார்க்க விடாம கையெழுத்துப் போட வைச்சுட்டாங்க..”

“கடவுளே..!”

வசுந்தரா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள்… தீரனான மகனைப் பெற்றிருந்தாலும் அவனுக்கு உரிமையான சொத்துக் கிடைக்காமல் போய் விடுமோ என்று பெற்ற மனது பதறியது..

பாகப் பிரிவினை பத்திரம் மூர்த்தியின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தது… பெயருக்குத்தான் சாக்லெட் பேக்டரி கைக்கு வந்திருக்கிறது.. அதன் உரிமையாளர் மதுசூதனன்தான் என்பதில் மூர்த்தி வெகுண்டாள்..

“இப்ப என்ன நடந்து போச்சுன்னு இந்தக் குதி குதிக்கிற..? மத்த பேரன், பேத்திகளைப் போல நீ இருந்திருந்தா உனக்கான பங்கை நான் கொடுத்திருப்பேன்.. நீ அப்படியில்லையே..” திமிராகப் பேசினார் மதுசூதனன்.. 

“வேறு எப்படியிருக்கிறேன் தாத்தா.. புட்டியும், குட்டியுமா அலைகிறேனா..?” துளைக்கும் பார்வையோடு கேட்டான் மூர்த்தி..

“கேட்டிங்களா தாத்தா.. நீங்க யூத்தா இருந்தப்ப ஜல்சாப் பண்ணிக்கிட்டு அலைஞ்சீங்களாம்.. அதைச் சொல்லிக் காட்டறான்..” அதைச் சொல்லிக் காட்ட வேண்டுமென்ற நீண்ட நாள் அவாவுடன் காத்திருந்த நவீன் போட்டுக் கொடுத்துப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டான்..

“அப்ப.. நான் அப்படி அலைஞ்சேன்னு சொல்கிறயா..?” மதுசூதனன் மத்தளம் கொட்டினார்..

“இதானே வேணாம்ங்கிறது.. உங்களுக்கு இளமை ஊஞ்சலாடுது பாருங்க.. உங்களைப் போய் புட்டியும், குட்டியுமா அலைகிறீங்கன்னு சொல்லிக் காட்டறேன்.. பேரன், பேத்திகளுக்குக் கல்யாணம் பண்ணி வைத்துக் கொள்ளுப் பேரன் பேத்திகளைப் பார்க்கிற வயசில இருக்கிறவர் நீங்க… நினைப்பில வைத்துக்கங்க… நான் சொல்கிறது இப்ப பட்டியும், குட்டியுமா அலைகிறவங்களைப் பத்தி..” மூர்த்தியின் பார்வை நவீனைச் சுட்டெரிப்பதைப் போலப் பார்த்து அவன் யாரைச் சொல்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது..

“நீ எப்படி வேண்டுமானாலும் பேச்சை மாத்துவடா..”

“எப்படி..? நீங்க பத்திரத்தோட செண்டென்ஸையே மாத்தியிருக்கீங்களே.. அப்படியா..?”

“அது என் பாட்டன், பூட்டன் உருவாக்கின கம்பெனிடா.. அதோட பெருமை குலையாம நீ கட்டிக் காப்பாத்துவன்னு நம்பிக்கை வந்தாத்தான் உன்னிடம் ஒப்படைப்பேன்..”

“இல்லைன்னா..”

“ஒப்படைக்க மாட்டேன்..”

“அந்த பேக்டரியில என்ன பெருமை இருக்கு..? ஓட்டையும் உடைசலுமான நிர்வாகம்… சீனியர் சிட்டிசன்களான லேபர்ஸ்ன்னு அரதப் பழசா இருக்கு.. இதில அதோட பெருமையை நான் கட்டிக் காப்பாத்தனுமாம்.. இல்லை.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. அது என்ன நீங்க சுயமா சம்பாதிச்சு உருவாக்கின பேக்டரியா..?”

அந்தக் கேள்வியில் மதுசூதனனின் அதிகார மையம் ஆட்டம் கண்டது.. அஸ்திவாரம் குழுங்கியது.. அவருடைய பிள்ளைகள் கூடக் கேட்க அஞ்சும் கேள்வியை அஞ்சா நெஞ்சனான மூர்த்தி அச்சமில்லாமல் அவரைப் பார்த்துக் கேட்டான்..

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link