Chapter 24

0Shares

மதுசூதனனின் அரண்மனையின் தோட்டம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது.. அரண்மனையின் போர்டிகோவையும் தாண்டிய கார்களின் வரிசை தெரு முழுவதும் இரு பக்கமும் அணி வகுத்திருந்தது.. தோட்டம் முழுவதும் வட்ட வடிவத்தில் அமைக்கப் பட்டிருந்த டேபிள், சேர்களின் அமைப்பு.. அதில் நிறைந்திருந்த விருந்தினர்கள்.. தோட்டத்தின் ஓரத்தில் போடப்பட்டிருந்த அழகிய மேடை..

‘என்னத்தை செலபரேட் பண்றானுங்க..’

மூர்த்தி எரிச்சலுடன் காரை விட்டு இறங்கிய போது இருண்ட முகத்துடன் ஓடி வந்த மிருதுளா..

“அண்ணா.. வீட்டுக்குள் வராதே.. அப்படியே திரும்பிப் போய் விடு..” என்று பதறினாள்..

“ஏன்..?” மூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை..

அதற்குள் தடதடவென அங்கே ஓடி வந்த ராஜேஸும் ராதிகாவும் மூர்த்தியின் காரை வழி மறிப்பதைப் போலக் கைகளை விரித்து மறித்துக் காரைத் திருப்பச் சொன்னார்கள்..

“ஏண்டா..?”

“சொன்னாக் கேள் அண்ணா.. நீ தாங்க மாட்ட..”

“எதைத் தாங்க மாட்டேன்..?”

தோட்டத்தைப் பார்த்தான் மூர்த்தி.. மேடையில் உடைத்த பாசிப் பருப்பின் வண்ணத்தில் பொடிப் பொடியாய் கற்கள் பதிக்கப்பட்ட பிரிண்டட் சேலையை அணிந்து கூந்தலை அலங்கரித்து தேவலோக அப்சரஸ் போல நின்றிருந்தாள் மாயா..

‘சும்மாவே இவ செம அழகா இருப்பா.. இதில அழகு படுத்தினா இப்படித்தான்.. தன் அழகாலே மத்தவங்களைப் படுத்தி வைப்பா..’ மாயாவை ரசித்த மூர்த்தி..

“இவ ஏண்டா நம்ம வீட்டுத் தோட்டத்தில மேடையில நிற்கிறா.. இன்றைக்கு கொடைக்கானல் வரப் போகிறதா என்னிடம் சொல்லவே இல்லையே.. நம்ம வீட்டில ஏதாச்சும் பங்சனா..? அதில் அட்டெண்ட் பண்ண வந்திருக்கிறாளா..? வீட்டில இருக்கிற எனக்கு ஒரு வார்த்தை சொல்லலை.. வெளியூரில இருக்கிற அவளுக்குத் தகவல் சொல்லி கிளம்பி வந்திருக்கிறான்னா அவ என்னைப் பத்தி என்னடா நினைப்பா..?”

மூர்த்தியின் கேள்வியில் மனமுடைந்து போன மிருதுளாவும் ராதிகாவும் வாய்விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள்.. ராஜேஸ் இரக்கம் கலந்த கோபத்துடன் மேடையை வெறித்து விட்டு..

“ஷிட்..” என்று வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்..

“ஷட்-அப் ராஜேஸ்..” மூர்த்தி சீறினான்..

“மாயா உன் அண்ணி.. அவளைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிறன்னு யோசித்துத்தான் சொல்கிறயா..? மைண்ட் யுவர் வெர்டுஸ்..”

“எல்லாம் மைண்ட் பண்ணியாச்சு அண்ணா.. எதையும் தாங்க முடியலை.. ச்சே.. இவங்கள்ளாம் மனிதப் பிறவியில் சேர்த்தியா..?”

“ராஜேஸ்..”

“அண்ணா.. உனக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன்..? இந்த மாயா எனக்கு மட்டும் அண்ணியில்லை அண்ணா.. இனி உனக்கும் இவங்க அண்ணிதான்..”

“என்னடா சொல்கிற..?”

மூர்த்தி பார்த்துக் கொண்டிருந்தபோதே கோட், சூட்டுடன் நவீன் மேடையேறி மாயாவின் தோளில் கை போட்டு நின்றான்.. மூர்த்தி ஸ்தம்பித்தான்.. மாயாவின் பெற்றோரும் அங்கிருந்ததை அப்போதுதான் கவனித்தான்.. அவர்களும் நவீனின் பெற்றோரும் மேடையில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு இருந்த தட்டை மாற்றிக் கொண்டார்கள்.. நவீனும், மாயாவும் மோதிரம் மாற்றிக் கொள்ள, மதுசூதனன் அடுத்த முகூர்த்ததில் நவீன்-மாயா வின் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிவித்தார்..

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட நிச்சயதார்த்தத்தில் அதிர்ந்து நின்ற மூர்த்தியை கோவிந்தராஜனும், வசுந்தராவும் இழுத்துச் சென்று விட்டார்கள்.. தன்னுணர்வுக்கு வந்த மூர்த்தி மாயாவிடம் கொதித்தான்..

“நானாடி உன்னைத் தேடி வந்தேன்..? நீதானே என்னைத் தேடி வந்த..? காதல் சொன்ன..?”

“அது தப்புன்னு என் பேரண்ட்ஸ் எனக்குப் புரிய வைத்துட்டாங்க.. காதல் வேறு.. கல்யாணம் வேறு..”

“ஓ..! வாட் எ பிலாசபி..! இது தெரியாம இரண்டும் ஒன்றுன்னு இத்தனை நாளா நினைத்துக்கிட்டு இருந்தேன் பாரு.. நான் முட்டாள்தாண்டி.. ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. காதலுக்குன்னு எந்தவிதக் கமிட்மெண்டும் இல்லையா..? நைட், அண்ட் டே போனில் கொஞ்சறது.. நேரில் கிளம்பி வந்து கட்டிப் பிடிச்சுக்கிறது.. கண்டபடி உரசறது.. முத்தம் கொடுக்கிறது.. முதுகில் உப்பு மூட்டை ஏறியதைப் போலத் தோளில் தொற்றிக்கிட்டு ஊரைச் சுத்தறது.. இது மட்டும்தான் கமிட்மெண்ட்டா..?”

“மூர்த்தி..”

“அறைஞ்சேன்னா பாரு.. என் பேரைச் சொல்கிறதுக்கும் ஒரு தகுதி வேணும்.. உனக்கு அது இல்லை..”

“அதையேதான் நானும் சொல்கிறேன்.. என்னை மேரேஜ் பண்ணிக்கிறதுக்கும் ஒரு தகுதி இருக்கனும்.. உங்களுக்கு அது இல்லை..”

நிதானமாக மாயா சொன்னதில் நிலை குலைந்து போனான் மூர்த்தி.. அவனிடம் பேசப் பயந்து படபடக்கும் இமைகளோடு அவனது காதலை யாசித்து நின்ற மென்மை ததும்பும் மாயாவின் தோற்றம் அவனது மனக் கண்களில் வந்து போனது..

‘அந்த மாயாவா இவள்..?’

“வெறும் ஆவேசம் இருந்தால் மட்டும் போதாது மிஸ்டர் மூர்த்தி.. அந்தஸ்தும் இருக்கனும்.. நீங்க கோடிஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவர்ன்னு கன்பர்ம் ஆனபிறகுதான் நான் உங்களைக் காதலிக்க ஆரம்பித்தேன்.. ஈக்குவல் ஸ்டேட்டஸில நீங்க இல்லாம இருந்திருந்தா நிச்சயமா உங்களைக் காதலிச்சிருக்க மாட்டேன்..”

“ஏய்ய்.. இதுக்குப் பெயர் காதலில்லைடி.. கணக்குப் பண்றது.. காதல்ன்னு சொல்லி காதலை அசிங்கப் படுத்தாதே..”

“ஹ..! பேச்சுக்கொன்றும் குறைச்சலில்லை.. பரம்பரைக் கோடிஸ்வரக் குடும்பம்.. பட்.. அதில பிறந்த நீங்க ரோட்டில நிற்கறிங்க.. ஏன்..? உங்க பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் அவங்களுக்கான ஷேர்களோடு கோடிஸ்வரன்களாக லைஃபை லீட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. எதனால்..? உங்க குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கும் ஈக்குவலா ஷேர் கிடைத்திருக்கு.. உங்களுக்கு எதுவுமே கிடைக்கலை.. இந்த செகண்டில் நீங்க இந்த வீட்டில் ஒண்டிக்கிட்டு இருக்கிற அகதி.. இந்த வீட்டின் பேரனாக உரிமையோடு இருக்கலை.. இந்த பொசிசனில் இருக்கிற உங்களுக்கு என் வீட்டில் எப்படி என்னை மேரேஜ் பண்ணிக் கொடுப்பாங்கன்னு நினைக்கறீங்க..?”

மாயாவின் கேள்வி வாழ்வின் நிதரிசனத்தைப் படம் பிடித்துக் காட்டியது.. இதுதான் நீ.. இவ்வளவுதான் நீ.. பணமில்லாவிட்டால் நீ செல்லாக் காசு என்று வாழ்வு அவனைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தது..

‘இவளையா நான் காதலித்தேன்..?’

வெறுப்புடன் அவளை வெறித்துப் பார்த்தான் மூர்த்தி.. கடந்த சில தினங்களாக நடந்து முடிந்த நிகழ்வுகளுக்கான காரண காரியங்கள் அந்த நொடியில் அவனுக்குப் புரிந்தன.. திட்டமிட்டே மதுசூதனன் அவனிடமிருந்த சாக்லெட் பேக்டரியைப் பறித்திருக்கிறார்.. நவீன் அதை விலை கொடுத்து வாங்கி விட்டதாக பத்திரம் தயார் பண்ணியிருக்கிறார்..

‘இவரெல்லாம் பெரிய மனிதனா..?’

உறவுகள் ஒன்றுகூடி முதுகில் குத்த முடியும் என்பதில் மனம் நொந்து போனான் மூர்த்தி.. மதுசூதனனை அவனுக்குப் பிடிக்காதுதான்.. அவரை அவன் வெறுத்ததில்லையே.. அவரது குறைகளை அவன் சுட்டிக் காட்டுவான்.. தட்டிக் கேட்பான்..

‘அதற்காக இத்தனை பெரிய தண்டனையா..? நவீன் மட்டும்தான் அவருக்குப் பேரனா..? நான் அவருடைய பேரன் இல்லையா..? காலில் விழுந்து ஜால்ரா போட்டால்தான் எனக்கான பரம்பரைச் சொத்து எனக்குக் கிடைக்குமா..?’

அந்த நொடியில் அனைத்தையும் உதறினான் மூர்த்தி.. பற்று, பாசம் அறுத்தெரிந்த போதி மரத்தடி புத்தனைப் போல வீட்டை விட்டு வெளியேறினான்.. அவனை அந்த முடிவுக்குள் அவனுடைய உறவுகள் தள்ளி விட்டு விட்டார்கள்.. மாயா பேசிய பேச்சுக்கள் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன..

“நவீன் எஸ்டேட்டுக்கும், சாக்லெட் பேக்டரிக்கும் சொந்தக்காரரா இருக்கிறார்.. நீங்க எதுவுமில்லாமல் நிற்கறிங்க.. நவீனோட பேரண்ட்ஸ் என்னைப் பெண் கேட்டப்ப என்னோட பேரண்ட்ஸ் இதையெல்லாம் எடுத்துச் சொன்னாங்க.. நானும் யோசித்துப் பார்த்தேன்.. கொடைக்கானல் மதுசூதனனின் குடும்பத்தில் நவீனுக்கு இடமிருக்கு.. உங்களுக்கு இல்லையே.. மதுசூதனனின் பேரன் என்கிற அடையாளமும்.. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமில்லையா..?”

“எனக்கு அது முக்கியமில்லை..”

“எனக்கு அது முக்கியம்.. இன்னும் சொல்லப் போனால் அது மட்டும்தான் முக்கியம்..”

“ச்சே..! ‘இப்படிப்பட்டவ நீ’ன்னு தெரிந்திருந்தா உன்னைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டேண்டி..”

“நானும் இதைத்தான் சொல்கிறேன்.. இப்படிப் பிழைக்கத் தெரியாத மனிதரா நீங்க இருப்பீங்கன்னு தெரிந்திருந்தா உங்களைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன்தான்..”

இப்படிச் சொன்ன மாயாதான் இப்போது அடிக்கடி போன் செய்கிறாள்.. மூர்த்தியிடம் பேச வேண்டும் என்று மன்றாடுகிறாள்.. தன் தவறைச் செரி செய்து கொள்ளத் தனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சுகிறாள்.. என்னதான் இருந்தாலும் அவள் மூர்த்தியின் காதலி அல்லவா என்று வாதாடுகிறாள்..

காதலியின் துரோகத்தாலும் உறவினர்களின் சதியாலும் முதுகில் குத்தப்பட்டு இந்த வீடும், உறவுகளும் எனக்கு வேண்டவே வேண்டாம் என்ற முடிவை எடுத்து அனைத்தையும் உதறிவிட்டுத் தனி மனிதனாக வீட்டை விட்டு வெளியேறிய மூர்த்தி இன்று நவீனை விடப் பணக்காரனாக, வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் இளம் தொழிலதிபனாக, மாறி விட்டானே… இவன் மதுசூதனின் பேரன் என்று அடையாளம் காட்டப் பட்ட காலம் மாறிப் போய் இவர் மூர்த்தியின் தாத்தா என்று மதுசூதனனை அடையாளம் காட்டும் காலத்தை வெகு விரைவில் அவன் கொண்டு வருவான் என்று எவர்தான் எதிர்பார்த்தது..?

வெறுத்துப் போனவனாக வீட்டை விட்டு வெளியேறிய மூர்த்தியை சாவித்திரி மட்டுமே பின்தொடர்ந்தாள்.. மகனைப் பின்பற்ற முடியாமல் கல்லில் வடித்த சிலையாக கண்களில் துளிர்த்த கண்ணீரை விழுங்கியபடி அசையாமல் நின்றிருந்த கோவிந்தராஜனின் பார்வைக்குக் கட்டுப்பட்டு துடிக்கும் உயிரோடு சுவரில் சாய்ந்து நின்று விட்டாள் வசுந்தரா.. மிருதுளாவோ அண்ணனைக் கட்டிக் கொண்டு..

“போகாதே அண்ணா..” என்று கதறினாள்..

“ஆமாம் அண்ணா.. போகாதே..” ராதிகா மூர்த்தியின் கால்களைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வீட்டாள்..

ராஜேஸ் மட்டும்தான்..

“போ, அண்ணா..” என்று உறுதியுடன் சொன்னான்.. 

“என்ன வார்த்தை சொல்லுகிறாய் ராஜேஸண்ணா..” மிருதுளா பதறினாள்..

“அண்ணன் போகட்டும் மிருது.. இது அண்ணன் இருக்க வேண்டிய வீடல்ல.. இனி அண்ணன் இங்கே இருக்கக் கூடாது.. எதிரிகளுடன்கூட இருந்து விடலாம்.. துரோகிகளுடன் இருக்க முடியாது.. இருக்கவும் கூடாது.. எதிரி முகத்துக்கு நேரேதான் வெறுப்பை உமிழ்வான்.. மார்பில் குத்துவான்.. துரோகி அப்படியல்ல.. அவன் முதுகுக்குப் பின்னால் புறம் பேசுவான்.. உறவாடிக் கழுத்தறுப்பான்.. முதுகில் குத்துவான்.. நடந்திருப்பது கேடு கெட்ட துரோகம்..! இதற்கும் மேல் இங்கேயிருந்து இவங்க முகத்தில் விழித்தால் பாவம்.. அண்ணன் போகட்டும்.. ஜெயித்துக் காட்டட்டும்..”

அந்த ஒன்று விட்ட தம்பியின் உறுதியான வார்த்தைகள் வென்றன.. வீட்டை விட்டு வெளியேறிய மூர்த்தி வென்று காட்டி விட்டான்.. ஒன்று விட்ட தம்பியின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டான்.. கொடைக்கானலின் முதன்மையான தொழிலதிபனாக மாறி விட்டான்..

அடுத்தவர்க்கு கனவிலும் தீங்கு நினைக்காத வசுந்தராவும், கோவிந்தராஜனும் தங்களின் சொந்தச் சேமிப்பையும், நகைகளையும் மகனுக்குக் கொடுத்தார்கள்.. அவர்களின் மனம் போல மூர்த்தி தொட்டதெல்லாம் துலங்கியது.. கைகள் கட்டப்பட்ட நிலையில் அவன் நினைத்ததை செயலாற்ற முடியாமல் முடங்கிக் கிடந்த போதே.. ‘மது சாக்லெட் பேக்டரி..’யில் எத்தனையோ சாதித்தான்.. இப்போது கைகள் கட்டப்பட முடியாமல் சுதந்திரமாக செயல் படலாம்.. எத்தனை சாதிக்கக் கூடாது..?

மூர்த்தி சாதிக்கப் பிறந்தவன்.. அவன் முதன் முதலில் ஆரம்பித்த ‘கொடை சாக்லெட் பேக்டரி..’ வெகு விரைவில் விற்பனையில் முன்னணிக்கு வந்து விட்டது… வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ‘கொடை சாக்லெட்ஸ்’ ஏற்றுமதியாக ஆரம்பித்ததில் நவீன் பொரும ஆரம்பித்தான்..

“என்னுடைய சாக்லெட்டுக்கு போட்டியா கொடை சாக்லெட்டை ஆரம்பித்து உங்களைப் பழி வாங்குகிறான் தாத்தா..” என்று மதுசூதனனிடம் போட்டுக் கொடுத்தான்..

சாக்லெட் பேக்டரி மட்டும் அவனுடையதாம்.. மூர்த்தி பழிவாங்குவது மட்டும் மதுசூதனனையாம்..

இப்படியெல்லாம் பேச நவீனால் மட்டுமே முடியும்.. அதைக் கூர்ந்து நோக்காத ‘மக்கு’ தாத்தா கோவிந்தராஜனைக் கூப்பிட்டுச் சப்தம் போட்டார்..

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் உன் மகன்..? போட்டி பேக்டரி ஆரம்பிக்கிறானா..? இழுத்து மூடச் சொல்லு..”

“என்னால் அப்படிச் சொல்ல முடியாதுப்பா..”

உணர்ச்சிகளைத் துடைத்த முகபாவத்துடன் அமைதியாகப் பதில் சொல்லி மதுசூதனனை அதிர வைத்தார் கோவிந்தராஜன்..

அதுவரை அவர் தகப்பனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசியதில்லை.. தான் பெற்ற மகனுக்காக பரிந்து நின்றதில்லை.. குரலை உயர்த்தாமல் முதன் முறையாக அவர் பேசிய பேச்சு மதுசூதனனைத் தாக்கியது.

“அவன் வீட்டை விட்டு வெளியே போயிட்டான்ப்பா.. போகாதே.. இந்த வீட்டில் பிறந்தவன் நீ, இது உன் வீடுன்னு நான் தடுத்து நிறுத்தலை.. ஏன்னா, நீங்க அதைச் செய்யலை.. உங்களுக்குக் கட்டுப்பட்டு நானும் அதைச் செய்யவில்லை.. குடும்பத்தை விட்டு வெளியேறி விட்டவனிடம் போய் இதைச் செய், அதைச் செய்யாதேன்னு நான் எப்படிப்பா சொல்ல முடியும்..? பெத்த தகப்பனா என் மகனுடைய உரிமைகளை என்னால் கொடுக்க முடியலை.. அவனுக்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்க முடியலை.. வாயிருந்தும் ஊமையாய் இருந்துட்டு இப்ப வாயைத் திறந்து அவனைக் கேள்வி கேட்டா பதிலுக்கு அவன் என்னை எத்தனையோ கேள்விகளைக் கேட்டு வைப்பானே.. அதுக்குப் பதில் சொல்ல என்னால் முடியுமாப்பா..?”

ஊமை பேசினால் இப்படித்தான் ஊசி முனைகளை நெஞ்சில் செழுத்திப் பேசி வைப்பார்களோ..!

மதுசூதனனுக்கு இதயம் வலித்தது.. மகன் கேட்கும் கேள்விக்கு தன்னால் பதில் சொல்ல முடியுமா என்று மதுசூதனனின் மனம் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.. மூர்த்தி சங்கிலித் தொடர்களாக கொடை உல்லன், கொடை யூகலிப்ட்ஸ் என்று ஆரம்பித்து கொடை எஸ்டேட்டில் வந்து நின்றான்.. தாயின் வைர நகைகளை மீட்டுக் கொடுத்தான்.. தகப்பனிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் அடைத்து விட்டான்..

கோவிந்தராஜனும், வசுந்தராவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டார்கள்.. ‘இவன் எங்கள் மகன்..’ என்ற பெருமிதம் அவர்களுக்குள் பொங்கியது.. மூர்த்தி வளர வளர நவீனின் ரத்த அழுத்தம் கூடிக் கொண்டே போனது.. இரவுகளில் அவன் தூக்கத்தைத் தொலைத்து தவித்தான்..

“நவீன்.. உனக்கு நியூஸ் தெரியுமா..?”

நவினின் நெருங்கிய நண்பன் சொன்ன போது அவன் ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிறான் என்ற அசட்டையுடன்..

“என்ன நியூஸ்டா..” என்றான்..

“மூர்த்தி புதிதா இடம் வாங்கிப் போட்டிருக்கிறான்..”

“போட்டாப் போடட்டும்..”

“ஒன்னு இல்லடா.. முக்கியமான பிளேஸாப் பார்த்து மூன்று இடங்கள் வாங்கிப் போட்டிருக்காண்டா..”

“முப்பது இடம் கூட வாங்கிப் போடட்டும்.. அதில உனக்கு என்ன பிரச்னை..?”

“பிரச்னை எனக்கு இல்லை நவீன்.. உனக்குத்தான் பிரச்னை..”

ஆழ்ந்த குரலில் நவீனையே உற்றுப் பார்த்தபடி நண்பன் பேசியதில் நவீன் திகைத்துப் போனான்..

“என்னடா..?” அவன் குரலில் பயம் வந்திருந்தது..

“அந்த இடங்களில மூர்த்தி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஸ்டார் ஹோட்டல், ரிசார்ட்ஸ்கள்ன்னு கட்டப் போகிறானாம்..”

“என்னது..?” நவீனின் வயிற்றில் கபகபவெனத் தீ பரவியது..

எவையெல்லாம் அவனது கனவுகளோ அவைகளை மூர்த்தி உருவாக்கப் போகிறான்.. உருவாக்கி அவற்றின் உடமையாளனாக கோலோச்சப் போகிறான்..

ஏற்கனெவே ராஜேஸ் மூணாறில் ரிசார்ட்டுகளைக் கட்டிக் கொண்டிருந்தான்.. அவனுக்கு அவனுடைய மலையாள நாட்டுத் தாத்தா பண உதவிகளை செய்து கொண்டிருந்தார்.. அடுத்ததாக ஊட்டியிலும், சிம்லாவிலும் ஸ்டார் ஹோட்டல்களைக் கட்டப் போவதாக பேச்சு அடிபட்டது..

“ம்ஹீம்.. அவனுக்கு அவனுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா அள்ளியள்ளிக் கொடுக்கிறார்.. எனக்கு அப்படியா..?” அவன் யமுனாவிடம் பாய்ந்தான்..

அவனுக்கே இத்தனை ‘அதுப்பு’ இருந்தால் அவனைப் பெற்ற தாயான யமுனாவுக்கு எத்தனை ‘அதுப்பு’ இருக்கும்..?

அவள் மகனை மிகச் சரியான இடத்தில் தாக்கினாள்.

“ராஜேஸுக்குத்தான் அவனுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா பண உதவி செய்கிறார்.. அவன் முன்னேறுகிறான்.. மூர்த்திக்கு எந்தத் தாத்தாடா உதவி செய்கிறார்..? அவனுடைய சொந்தத் தாத்தாவே அவனுக்குக் கொடுத்த சொத்தைப் பிடுங்கி உன்னிடம் கொடுத்துட்டு வெறும்பயலாய் வெளியில் துரத்தி விட்டார்.. அவன் ராஜேஸை விட அதிகமாக பிழைத்துக் காட்டியிருக்கிறானே.. எப்படிடா..? உனக்கும்தான் உன் பங்குக்கு எஸ்டேட் வந்தது.. மூர்த்தியோட பங்கான சாக்லெட் பேக்டரியும் வந்தது.. இது இரண்டையும் வைத்து நீ எவ்வளவோ சாதித்துக் காட்டியிருக்கலாமே.. செய்யலையே.. அதை நான் சொல்லிக் காண்பித்தேனா..? எனக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்னு வாயை மூடிக்கிட்டு இருக்கலை..? ராஜேஸ் அவனுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா கொடுக்கிற பணத்தை வைத்து மட்டுமே தொழிலை விரிவுபடுத்தலை.. அவன் பங்குக்கு வந்த ரிசார்ட்டுகளை மாடலைஸ் பண்ணினான்.. புதிதா மாற்றிக் காட்டினான்.. வந்த வருமானத்தைச் சிந்தாம மூணாறில் இடம் வாங்கிப் போட்டான்.. அதில் ரிஸார்ட் கட்டப் பணஉதவி மட்டும்தான் அவனுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா செய்கிறார்.. நீ வெண்ணையை உருக்கினா நெய் தானா வரும்.. மோர் கூட இல்லாம வெறும் சட்டியை வைத்துக்கிட்டு இருந்தா கரண்டியில என்ன வரும்..? சட்டியில இருந்தாத்தானேடா கரண்டியில வரும்..?”

நவின் திறந்த வாயை இறுக்கமாக மூடிக் கொண்டான்.. உடனடியாக வெளிநடப்பு செய்யாவிட்டால் யமுனா இன்னும் அதிகமாக் கழுவிக் கழுவி ஊற்றுவாள் என்பதினால் இது போன்ற சமயங்களில் ஆபத்பாந்தவனாக கை கொடுக்கும் செல்போனை காதில் வைத்துக் கொண்டு வராத போன் காலுக்கு..

“ஹலோ.. இதோ.. அங்கேதான் வந்துக்கிட்டு இருக்கேண்டா..” என்று பதில் சொல்லியபடி ஓடோடி விட்டான்..

‘அஃது..’ யமுனா கைகளைத் தட்டி வெற்றி முரசு கொட்டி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்..

தொழிலில் மூர்த்தி முன்னேற நவீன் பின்னேறினான்.. நவீனின் மனதுக்குள் அபாய மணியடித்தது.. மாயாவுடன் அவனுக்கு நிச்சயதார்த்தம் தான் நடந்து முடிந்திருந்தது.. திருமணம் நடைபெற வில்லை என்பதை அவனது அறிவு சுட்டிக் காட்டியது.. மாயாவின் அப்பாவை மனதார சபித்தான்.. அந்த மகராஜனால் அல்லவா அவனது திருமணம் ஆறு மாதங்களுக்குப் பின்னால் நடக்க வேண்டும் என்று தள்ளிப் போடப் பட்டது..! 

மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்ட மகிழ்வுடன் அவர் திருமணத்தேதியைக் குறித்திருக்க வேண்டாமோ..? அதை விட்டு விட்டு மதுசூதனனின் கையைப் பிடித்துக் கொண்டு..

“என்றைக்கு இருந்தாலும் எங்க மாயா உங்க வீட்டு மருமகள்தான்.. உங்க பேரனுக்குப் பெண் கொடுக்க நான் கொடுத்து வைத்திருக்கனும்.. நாளைக்கே மேரேஜை பண்ணி விடனும்னு எனக்கும் ஆசைதான்.. அதில ஒரு சிக்கல் இருக்கு..” என்று குண்டைத் தூக்கிப் போடலாமா..?

“சிக்கலா..? என்ன சிக்கல்..? என்னிடம் சொல்லுங்க.. எவ்வளவு பெரிய இடியாப்பச் சிக்கலாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்..” மார்தட்டினார் மதுசூதனன்..

‘கிழித்தீங்க..’ பற்றிக் கொண்டு வந்தது நவீனுக்கு..

‘பாட்டன், பூட்டன் சம்பாதித்து வைத்த சொத்தை ஆண்டு அனுபவித்ததை விட இந்தக் கிழம் புதிதாக என்னத்தைச் செய்தது..? இது கிழித்த கிழிக்கு 

இடியாப்பச் சிக்கலைத் தீர்த்து வைத்து விடுமாம்.. கேட்கிறவன் வெளியூர்காரனா இருந்தா இந்தக் கிழம் கொடைக்கானலிலே வெயில் காயுதுன்னு கதை விடும்..’

“பிஸினெஸ்ஸில சிக்கல் வந்தா உங்களிடம் சொல்லலாம்.. இது ஜாதகத்தில வந்திருக்கிற சிக்கல்..” என்றார் மாயாவின் அப்பா..

‘இது வேறயா..? இவ்வளவு நாளா பேசாம இருந்த ஜாதகம் என் கல்யாணத்தப்பத்தான் வேலையைக் காட்டனுமா..?’ நவீனுக்கு மொட்டைச் சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது..

“ஜாதகத்தில என்ன சிக்கல்..? மலையாளத்தில இருந்து சோழி உருட்டிப் போட்டுக் குறி சொல்கிற ஜோசியக்காரரை வரச் சொல்லி என்னன்னு கேப்போமா..?” மதுசூதனன் ஆலோசனை சொன்னார்..

‘யோவ் தாத்தா.. கூடவே உன்னோட கடைசி சம்பந்தியையும் கதகளி ஆடிக்கிட்டே வரச் சொல்லவா..? அவர் வந்தாத்தான் நீ அடங்குவ..’ நவீன் கொதித்தான்..

“அதெல்லாம் தேவையில்லைங்க.. எங்க குடும்ப ஜோஸியர் சோழியை உருட்டிப் போடாமல் ஜாதகக் கட்டங்களை வைத்தே அருமையாய் ஜோசியம் சொல்லிருவார்..” மாயாவின் அப்பா மறுத்து விட்டார்..

“அப்புறம் என்னங்க..? உங்களுக்குத்தான் கைவசம் அருமையான ஜோசியர் இருக்காரே.. சிக்கலைத் தீர்க்க வேண்டியதுதானே..” மதுசூதனன் கேட்டார்..

“சிக்கலைத் தீர்க்கக்தான் மேரேஜைத் தள்ளிப் போடனும்னு சொன்னேன்.. மாயாவின் ஜாதகப்படி அவளுக்கு இன்னும் மாலை பூக்கலை..” மாயாவின் அப்பா நவினை சோதித்தார்..

“மாலை பூக்கலையா..? அப்படின்னா மாலை பூக்கிறவரை கல்யாணத்தைத் தள்ளிப் போட வேண்டியதுதான்..” மதுசூதனன் ஆமோதித்து இன்னும் அதிகமாக நவீனை சோதித்து வைத்தார்..

‘பேசாமல் சன்யாசம் வாங்கிக்கிட்டுப் போய் விடலாமா..?’

இப்படியா கைக்கு எட்டிய மாயாவின் உறவு கல்யாணத்தை எட்டாமல் அவனை சோதித்து வைக்கும்..?

நவீன் பூப்பூப்பதைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக் கிறான்.. ஜாதகத்தில் மாலை பூப்பதைப் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறான்..

மாலை பூக்காமல் மாயாவின் ஜாதகம் அவனை சோதனைக்குள்ளாக்கி திருமணத்தை தள்ளிப் போட வைத்தது.. ஆறு மாதத்தில் மூர்த்தி தொழிலில் அசுர வளர்ச்சியை எட்டியதில் மாலை பூத்தும் மாயா மனம் மாறியவளாய் திருமணத்தை தள்ளிப் போட்டாள்.. அது, இது என்று அவள் ஒரு ஆறு மாதத்திற்கு திருமணத்தை ஒத்தி வைத்ததில் ஒரு வருட காலம் ஓடோடி விட்டது..

இப்போது மூர்த்தி கொடை குரூப்ஸ் ஆஃப் கம்பெனிஸின் முதலாளி.. உடுத்திய உடையுடன் வீட்டை விட்டு வெளியேறியவன் தற்காலிகமாக நண்பனின் 

கெஸ்ட் ஹவுஸில் தங்கினான்.. தாயினும் சாலப் பரிந்து அவனைக் கவனித்துக் கொண்டாள் சாவித்திரி.. மன அமைதியில்லாமல் இரவு முழுவதும் கொட்டும் பனியில் ஊரைச் சுற்றி விட்டு விடியும் போது வீடு திரும்பி அசதியுடன் தூங்கிப் போகிறவனை சுக்குக் காபியுடன் எழுப்பி விடுவாள் சாவித்திரி.. யூகலிப்ட்ஸ் இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீர் குளியலுக்காக காத்திருக்கும்.. குளித்து முடித்து வருபவனுக்கு சூடான இட்லியும் கோழிக் குருமாவும் பரிமாறுவாள், மிளகு, சீரகம் போட்ட கோழி சூப்பைக் குடிக்கக் கொடுப்பாள்..

சமையல் கூட சில நேரங்களில் மருத்துவகுணம் கொண்டதாக இருக்கும்.. சாவித்திரியின் சமயோசித சமையலும் பராமரிப்பும் கொடைக்கானலின் பனி மூர்த்தியைத் தாக்கி விடாமல் பாதுகாத்தன..

ஆறே மாதங்களில் மூர்த்தி புதிதாக பங்களாவை வாங்கி குடி போனான்.. சாவித்திரிக்கு உதவியாக வேலைக்கும், சமையலுக்கும் ஆள்கள் அமர்த்தப் பட்டார்கள்.. காவலுக்கு செக்யூரிட்டி, தோட்டத்தைச் சீர் செய்ய தோட்டக்காரன் என்று மாளிகைவாசம் மறுபடியும் ஆரம்பமானது.. மதுசூதனனின் வீட்டில் ‘ஆயா’ வாக இருந்த சாவித்திரி மூர்த்தியின் பங்களாவில் ‘எஜமானியம்மா’ வாக மாறினாள்..

வசுந்தரா மகனைக் கானை அவனது பங்களாவுக்கு வந்து போவதுண்டு.. கோவிந்தராஜன் வருவதில்லை.. பூங்காக்களில் செல்போனில் சொல்லி வைத்துக் கொண்டு தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்வார்கள்… மிருதுளா, ராஜேஸ், மற்றும் ராதிகா தளைகளில் பிணைக்கப்பட்டாலும் அதை அறுத்து எறிந்து விட்டு அண்ணனைச் சந்தித்துக் செல்வார்கள்.. பகல் பொழுதுகளில் மூர்த்தியை தனிமை அண்டாது.. இரவு நேரங்களில் மாயாவின் நினைவும் அவள் செய்த துரோகமும் அவனுடைய சொந்த தாத்தாவும், பெரியப்பா மகனும் முதுகில் குத்திய துயரமும் சேர்ந்து அவனை தூங்கவிடாமல் துரத்தியடித்தன.. துரத்தும் நினைவுகளில் இருந்து தப்பிக்க அவன் வெளியே சுற்ற ஆரம்பித்தான்..

இதனிடையே மாயா மறுபடியும் அவனுக்கு நூல் விட ஆரம்பித்தாள்.. மூர்த்தி அருவெறுப்புடன் அவளது செல்போன் அழைப்புக்களைத் துண்டித்தான்.. இப்படித்தான் ஆகும் என்று யூகித்து துப்பறிந்த நவீன் இதைக் கண்டு பிடித்து மாயாவிடம் சண்டைக்குப் போனான்.. அவளோ..

“இதைக் கேட்க நீ யார்..?” என்று கேட்டாள்..

“நான் யாரா..? உனக்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை..!”

“ஹ..! காதலித்தவனையே ஸ்டேட்டஸ் பத்தலைன்னு ஒரு செகண்டில தூக்கியெறிஞ்சவ நான்.. நீ எம்மாத்திரம்..? அன்றைக்கு மூர்த்தியோட ஸ்டேட்டஸைவிட உன் ஸ்டேட்டஸ் கூட இருந்தது.. மூர்த்தி ரோட்டில் இருந்தார்.. இப்ப சிச்சுவேசன் சேன்ஜ் ஆகிருச்சே.. மூர்த்தி உன்னை விட உயரத்துக்கு போய் விட்டார்.. நீ..? ஆரம்பிச்ச இடத்திலேயே புள்ளியா நிற்கிற.. ஆக்டிவ்னெஸ் இல்லாத உன்னை நான் எப்படி மேரேஜ் பண்ணிக்க முடியும்..?”

இதுதான் மாயா.. செய்தார்க்கு செய்த வினை என்பதைப் போல துரோகம் செய்து பழக்கப்பட்டு விட்ட நகூனை அவன் செய்த துரோகமே தாக்கி விட்டது.. அவன் பேச்சிழந்தான்..

“தாத்தா.. உங்களை விட அவன் பெரிய ஆள்ன்னு ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு அலையறான்..” என்று அவனால் முடிந்த ஒரே காரியமான பற்ற வைத்தலை செவ்வனே செய்தான்..

மதுசூதனனும் சாவி வைத்த பொம்மையைப் போல மூர்த்தியின் வீட்டுக்குச் சென்றுக் கத்தி அவமானப்பட்டுத் திரும்பி வந்தார்..

இரவுகளில் நிம்மதியிழந்தவனாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த மூர்த்தியின் நிம்மதியை பனிவிழும் இரவில் மீட்டுக் கொடுத்து அவன் மனதில் குடி புகுந்தாள் அர்ச்சனா.. அவன் இரவுகளில் உறங்க ஆரம்பித்தான்..

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link