Chapter 25

0Shares

“நெஞ்சுக்கு நிம்மதி.. ஆண்டவன் சந்நிதி..

        நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே..

கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்

        கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே..”

குறிஞ்சியாண்டவர் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்த அர்ச்சனாவைப் பார்க்கப் பார்க்க மூர்த்தியின் மனதில் அமைதி நிரம்பியது..

அவள் பின்னலை முன்னால் இழுத்து மடியில் போட்டு விரல்களால் அதை நிமிண்டியபடியே வெகு இயல்பாக பாடியதைப் பார்க்கப் பாந்தமாக இருந்தது.. அவளது பார்வையும், பாடலும் அவனைத் தாலாட்டி சீராட்டின..

“பழக்கம் என்பது பழகுவது – அது

விலக்கும் போது விலகுவது..

பாசம், நேசம் காதல்தானே

வாழ்வதற்கென்றே வளருவது..?”

‘காதல்’ என்ற வார்த்தையில் முகம் மாறினான் மூர்த்தி.. அவனது முகபாவத்தைக் கவனித்த அர்ச்சனாவின் புருவங்கள் என்ன என்று கேட்பதைப் போல உயர்ந்து இறங்கின.. அவனது பதிலை எதிர்பார்க்காமல் பாடலில் அவனுக்கு அவள் வழி சொன்னாள்..

“நிழல் தொடருவது..”

மூர்த்தி சாவித்திரியை நினைத்துக் கொண்டான்.. அவன் எங்கே சென்றாலும் தொடரும் தாய்மையின் நிழல் அல்லவா அவள்..

“மதி மயங்குவது..”

மாயாவின் அழகிலும் பேச்சிலும் தடுமாறிய அறிவை நினைத்து அவன் பெருமூச்சு விட்டான்..

“வழி நேற்றும் இன்றும் மாறுவது..”

அர்ச்சனா கை நீட்டினாள்.. அவன் இறுக்கமாக பற்றிக் கொண்டான்.. மாயாவுடன் நடந்த வழியை மறந்து அர்ச்சனாவுடன் நடக்க ஆரம்பித்தான்.. மாறிய வழி அவன் மன ரணத்தை ஆற்றிடும் வழியாக இதமாக இருந்தது..

“பாதையில் எத்தனை காலடிகள் – இந்த

பயணத்தில் எத்தனையோ வழிகள்..”

அர்ச்சனா பாதையைக் காண்பித்தாள்.. அவன் நடந்த காலடித் தடத்தில் அவளது காலடித்தடத்தைப் பதித்துச் சிரித்தாள்..

“காதலில் ஓர்வழி.. கவலையில் ஓர்வழி..

    கவனித்துப் பார்க்கட்டும் உன் விழிகள்..”

அவன் முன்னால் சென்று நின்று இரண்டு கைகளையும் விரித்து குனிந்து..

“ஒன்றைத் தேர்ந்து எடு..”

என்று பாடினாள்.. மூர்த்தியின் விழிகள் மின்னின.. காற்றில் பறந்த அவளது முந்தானைச் சேலையில் முகம் பதிக்க அவன் மனம் விரும்பியது.. அதை அவனது பார்வை சொல்லியதில் அவள் மனம் துள்ளியது..

“அதை சேர்ந்து விடு..”

இரண்டே எட்டில் அவளை அணுகியவன் அவளைச் சேர்ந்து அவளைத் தன்னுள் சேர்த்து அணைத்துக் கொண்டதில் மூச்சுத் திணறிப் போனவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள்..

“இந்த உலகத்தின்

சுகங்களை வாழ்ந்து விடு..”

கிசுகிசுப்பாக வெளி வந்தது அவளது குரல்.. அவளது காதோரமாக இதழ்களைப் பதித்தவன்..

“வாழச் சொன்னால் வாழ்கிறேன்..

மனமா இல்லை வாழ்விலே..

ஆழக்கடலில் சோலையாக

அழைத்துக் சென்றால் வாழ்கிறேன்..”

என்று பாடியதில் கண்மூடித் கிறங்கினாள்.. அந்தக் கிறக்கத்தை வெகுநேரம் நீடிக்க விடாமல்..

“வெரிகுட்.. ஆன் ரோடில பாட்டுக்குப் பாட்டு.. தேர்ட் கிளாஸ் பெண்ணோடு ஊர் சுற்றினா, இப்படித்தான் ஸ்டேட்டயை மறந்து நிற்கத் தோணும்..” என்ற கோபக்குரல் ஊடே புகுந்து அவர்களை விலக வைத்து..

‘யார்..?’ அர்ச்சனா இமை கொட்டி விழித்தாள்..

அழகாக இருந்த அந்தப் பெண் மாயாவாக இருக்கக் கூடுமோ என்று மருண்டது அவளது உள்ளம்..

“இப்படி ஒன்றும் தெரியாத பேபியைப் போல இமை கொட்டி விழித்துத்தானே என் மூர்த்தியைக் கைக்குள் போட்டுக்கிட்ட..?” என்று சீறி தான் மாயாதான் என்பதை நிரூபித்தாள் அவள்..

“உன் மூர்த்தியா..?” இகழ்ச்சியாக மாயாவை ஏற இறங்க மூர்த்தி பார்த்த பார்வைக்கு அவள் அந்த இடத்தை விட்டு ஓடி ஒளிந்திருக்க வேண்டும்..

அவள் அதைச் செய்யவில்லை.. அதை விட்டு..

“யாரடி நீ..?” என்று அர்ச்சனாவை அதட்டினாள்..

“மை வுட்-பி..” அர்ச்சனாவுக்குப் பதில் மூர்த்தி பேசினான்..

“வாட்..?” மாயாவுக்கு பேச்சே வரவில்லை..

“‘வுட்-பி’ ன்னாத் தெரியாதா..? என் வருங்கால மனைவி.. நிகழ்காலக் காதலி..! போதுமா..?” இடக்காக கேட்டான் மூர்த்தி..

“மூர்த்தி..” மாயா அலறினாள்..

“ஷட்-அப்..” மூர்த்தி வாயில் விரலை வைத்துச் சீறினான்.. அவனது முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்திருந்தது.

“என் பெயரைச் சொன்ன.. கொன்றுடுவேன்.. ஜாக்கிரதை.. யாரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிற..?”

“நான் உங்க மாயா..”

“ச்சீ..! இப்படிப் பேச உனக்கு நாக்குக் கூசலை..? என்னிடம் சொத்து இல்லைன்னதும் என் பெரியப்பா மகனைக் கல்யாணம் பண்ணக்கச் சம்மதித்து 

அவனுடன் நிச்சயதார்த்த மேடையில் நின்றவள்தானேடி நீ..? இன்னைக்கு எனக்கு சொத்து வந்ததும் உறவு கொண்டாடிக்கிட்டு வருகிறயே.. வெட்கமாக இல்லை..?”

“நான் உங்க காதலி..”

“ஊஹீம்.. காதல் என்கிற வார்த்தையைச் சொல்லாதே.. உன்னை மாதிரியான ஆள்கள் அந்த வார்த்தையைச் சொன்னால் அதுக்கான புனிதமே போய்விடும்.. காசைப் பார்த்துத்தான் காதல் வரும்ன்னா அதுக்கான அர்த்தமே வேற..”

அர்ச்சனாவுக்கே சங்கடமாகி விட்டது.. மாயாவின் முகம் அவமானத்தில் கன்றி விட்டதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. என்னதான் இருந்தாலும் மூர்த்தி இந்த அளவுக்கு அவளை அவமானப் படுத்தியிருக்கக் கூடாது என்று தான் அவள் நினைத்தாள்..

மாயாவோ அர்ச்சனாவை எதிரியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள்.. மூர்த்தி பேசியதைவிட அந்தப் பேச்சை அர்ச்சனாவின் முன்னிலையில் அவன் பேசியதுதான் அவளை அதிகமாக பாதித்தது..

‘உன்னை என்ன செய்கிறேன் பார்..’

அவள் விழிகளில் வழிந்த வன்மத்தில் அர்ச்சனா பயந்து போனவளாக மூர்த்தியின் முதுகின் பின்னால் ஒன்றிக் கொண்டான்..

“இவளைப் பார்த்து நீயேன் பயப்படற..? உன்னைப் போல நேர்மையான பெண்ணைப் பார்த்து இவதான் பயந்து ஒளியனும்.. நீ வெளியில் வா..”

அர்ச்சனாவின் கையைப் பிடித்து இழுத்து முன்னால் கொண்டு வந்து அவளது விரல்களுடன் விரல் கோர்த்து நடக்க ஆரம்பித்தான் மூர்த்தி.. அர்ச்சனாவுக்காக கார் கதவைத் திறந்து விட்டு அவள் ஏறியதும் கதவைச் சாத்தி விட்டுக் காரைச் சுற்றிச் சென்று டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரைக் கிளப்பினான்…  அனைத்தையும் கண்களில் நெருப்புப்பொறி பறக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.. அவளது இதயம் வெறி கொண்டு தவித்தது..

பங்களாவுக்குத் திரும்பியதும் சாவித்திரியிடம் நடந்த நிகழ்வுகளைக் கூறிவிட்டாள் அர்ச்சனா.. சாவித்திரிக்குக் கவலையானது.. அவள் வசுந்தராவுக்குப் போன் போட்டாள்.. சற்று நேரத்தில் வசுந்தாவும் கோவிந்தராஜனும் அங்கே வந்து விட்டார்கள்..

“வாங்கய்யா..”

மகன் உழைத்து வாங்கியிருந்த பங்களாவில் முதன் முதலாக காலடி வைத்த கோவிந்தராஜனை கைகுவித்து வரவேற்ற சாவித்திரி முந்தானைச் சேலையால் சோபாவைத் துடைத்துவிட்டு அவரை உட்காரச் சொன்னாள்..

“நீ மாறவே மாட்டியா சாவித்திரி..” கோவிந்தராஜன் அவளை அன்புடன் கடிந்து கொண்டார்..

வசுந்தரா கணவரின் பக்கத்தில் உட்கார்ந்தபடி..

“அவன் எங்கே..?” என்று கேட்டாள்..

“பேக்டரிக்குப் போயிருக்கு..”

“அந்தப் பொண்ணு..?”

“பேங்குக்குப் போயிருச்சு..”

“ம்ம்.. நீ சொல்கிறதெல்லாம் நிஜமா..?”

“நிஜம்தான்ம்மா.. இந்தப் பொண்ணு வந்த பின்னாலே நம்ம மூர்த்தி தம்பியோட அமைதி திரும்பி வந்திருச்சும்மா.. நம்ம அத்தனை பேரோட கண்ணீராலே மாற்ற முடியாததை இந்தப் பெண்ணின் அன்பு மாற்றி விட்டது.. மூர்த்தி இப்ப ராத்திரி நேரத்தில தூங்காம ஊரைச் சுத்தறதில்லைம்மா.. நேரத்துக்குச் சாப்பிட்டுட்டுத் தூங்கப் போயிருது..”

“கடவுளே..! உனக்கு நன்றி..”

கை குவித்து கடவுளை வணங்கிய வசுந்தரா அழ ஆரம்பித்தாள்.. மனைவியின் தோள்களில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்த கோவிந்தராஜன் யோசனையுடன் சாவித்திரியைப் பார்த்து..

“அந்தப் பெண்ணோட ஊர் எது..?” என்று கேட்டார்.

“சாத்தூர்ங்கய்யா..”

“அப்பாம்மா..?”

“ரெண்டு பேரும் இறந்துட்டாங்களாம்.. சித்தின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தி இருக்கிறாளாம்.. அவளாலே தான் இந்தப்பொண்ணு வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் விட்டு ஊர் டிரான்ஸ்பர் வாங்கியிருக்கு..”

“தெளிவாச் சொல்லு சாவித்திரி..”

சாவித்திரி சொன்னாள்.. அவள் சொல்லச் சொல்ல கோவிந்தராஜனின் நெற்றிச் சுருங்கங்கள் அதிகமாயின.. அர்ச்சனாவைப் பற்றிய விவரங்கள் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை என்பதை அவரது முகச்சுளிப்பு அறிவித்தது..

“என்னென்னவோ சொல்கிறாயே சாவித்திரி.. ஏழைப் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை.. பேக்ரவுண்டு நன்றாக இருக்க வேண்டாமா..? இந்தப் பெண்ணின் பிறந்த வீடு இப்படியிருக்கே..”

சாவித்திரி எதுவும் பேசாமல் வசுந்தராவைப் பார்த்தாள்.. கோவிந்தரஜனிடம் சாவித்திரியால் மறுத்துப் பேச முடியுமா..? வசுந்தராதான் அதைச் செய்ய வேண்டும்.. வசுந்தராவும் அதைச் செய்தாள்..

“உங்க வீடு மட்டும் எப்படியிருக்காம்..?”

“வசு..”

“என்னைப் பேச வைக்காதீங்க.. சொல்லிட்டேன்.. தம்பியின் காதலியைத் தன் பெண்டாட்டியாக்கிக்கனும்னு பார்த்த பெரியப்பாமகன்.. அதுக்குத் துணை போன பெரிய மனுசன்.. இதுதானே உங்கவீடு..? இதைவிட அசிங்கம் வேற எதுவும் இல்லை..”

“அந்தப் பெண் ஏழைன்னு நான் சொல்லலைடி வசு..”

“பெத்தவர் செய்த தப்புக்கு மகளைத் தண்டிக்காதீங்க.. சொல்லிட்டேன்.. ஒரு பாவமும் அறியாத என் மகனுக்குச் சொத்தைக் கொடுக்காம பிடுங்கி அதைத் தன்னோட மூத்த மகனின் மகனுக்குக் கொடுத்தும் இல்லாம என் மகனோட காதலியை அந்த நவீனுக்கு நிச்சயம் பண்ணி என் மகனைத் தண்டிச்சார் உங்க அப்பா.. அதனால என் செல்லமகன் வீட்டை விட்டே வெளியேறினானே.. அந்தக் கொடுமைக்கு என்ன பதிலைச் சொல்லப் போறிங்க..?”

“ஒரு குணம் கெட்ட பெண் இந்தப் பெண்ணின் சித்தின்னு சொல்லிக்கிட்டு இருக்கா வசு… அவளிடம் போயா நாம் சம்பந்தம் பேசுவது..?”

“எனக்கு நல்லா வந்திரும் வாயிலே.. சொல்லிட்டேன்.. அவளிடம் போய் எதுக்குங்க சம்பந்தம் பேசனும்..? அர்ச்சனாவரட்டும்.. கேட்போம்.. அவளுக்கு அப்பாம்மா ஸ்தானத்தில இருந்து பேச அவ ஊரில ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாரு..?”

“அப்ப, நிச்சயமா அந்தப் பெண்ணை நம்ம மூர்த்திக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம்ன்னு சொல்கிறயா..?”

“சொல்லிட்டேன், சொல்லிட்டேன்னு எத்தனை தடவை சொன்னாலும் உங்க மண்டையிலே ஏறாதா..? என் மகனோட மன அமைதியை மீட்டுத் தந்திருக்கிறா அந்த ‘அர்ச்சனா..’ அவளை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இந்த அளவுக்கு நீங்க யோசிப்பீங்களா..?”

வசுந்தரா லெப்ட் அண்ட் ரைட் விட்டதில் கை கட்டி வாய் பொத்தாத குறையாக தலையை ஆட்டி சம்மதம் சொன்னார் கோவிந்தராஜன்.. அன்று மதிய உணவை அங்கேயே உண்டு விட்டு அவர்களுக்கென மூர்த்தி தயார் படுத்தி வைத்திருந்த அறையில் முதன் முதலாக ஓய்வெடுத்தார்கள்.. கண்ணயர்ந்து உறங்கி எழுந்த கோவிந்தராஜன்..

“இப்படித் தூங்கி ரொம்ப நாளாகிருச்சுல்ல..?” என்றார்..

‘ஆமாம்..’ எனும் விதத்தில் தலையை மேலும் கிழும் ஆட்டிய வசுந்தராவின் விழிகளில் கண்ணீர் ததும்பியது.

“வேண்டாம்டி.. இனியெல்லாமே நல்லதுதான் நடக்கும்..” மனைவியை அணைத்துக் கொண்டார் கோவிந்தராஜன்..

அர்ச்சனாவுடன் காதல் அரும்பிய பிறகு அவள் வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து மூர்த்தியும் வந்து சேர்ந்து விடுவான்.. அன்று என்னவோ சொல்லி வைத்ததைப் போல அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பங்களாவின் காம்பவுண்டுக்குள் முன் பின்னாக நுழைந்து ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.. அர்ச்சனாவுடன் பேசியபடி வீட்டுக்குள் வந்த மூர்த்தி பெற்றோரைப் பார்த்ததும்..

“அப்பா.. அம்மா..” என்று அவர்களுக்கு அருகில் விரைந்தான்..

‘இவங்கதான் மூர்த்தியின் பேரண்ட்ஸா..?’ அர்ச்சனா அப்படியே நின்று விட்டாள்.. கோவிந்தராஜனின் பார்வை அவளை அளவிட்டதை புரிந்து கொண்டவளின் உடல் நடுங்கியது.. அவர் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்வரா..?

“இப்படி வாம்மா.. பக்கத்தில உட்காரு..” வசுந்தரா அன்புடன் அவளைக் கை நீட்டி அழைத்தாள்..

“இருக்கட்டும்ங்க..” அர்ச்சனா உட்காரவில்லை.. அந்த பயமும் பணிவும் கோவிந்தராஜனை இளக்கியது..

“உட்காரும்மா.. உன்னிடம் பேசனும்..”

அவர் சொன்னதும் சோபாவின் நுனியில் அமர்ந்தாள் அர்ச்சனா.. என்ன பேசப் போகிறாரோ என்ற அச்சத்தில் தொண்டை வறண்டது..

“மூர்த்திக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு வசுந்தரா ஆசைப்படறா.. அவளுக்காகவும் என் மகனுக்காகவும் நான் இதை ஒப்புக்கறேன்.. பட், உன் அப்பாம்மா ஸ்தானத்தில இருந்து தாரை வார்த்துக் கொடுக்க உனக்குன்னு யாராவது இருக்காங்களா..?” 

கோவிந்தராஜனின் கேள்வியில் மூர்த்தி கோபமாகி மறுத்துப் பேசப் போனான்.. அவனை கையமர்த்தித் தடுத்த அர்ச்சனா..

“ஒருவர் இருக்கிறார்..” என்றாள்..

“யாரும்மா அவர்..?”

“நடராஜன்.. என் அப்பாவின் நண்பர்..”

நடராஜனுக்குத் தகவல் பறந்தது.. அவர் மனைவியுடன் கொடைக்கானலுக்கு வந்து அர்ச்சனாவின் திருமணத்தைப் பேசி முடித்தார்.. ஒரு சுபயோக சுபநாளில் மூர்த்தி-அர்ச்சனாவின் திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது லீலாவதி பத்ரகாளி போல அங்கு பிரசன்னமானாள்.

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link