Chapter 04

0Shares

“யாரோ சொன்னாங்களாம்.. யாரோ சொல்லலைன்னா.. யாரோட பேரோ தெரியாதாம்..”

மோகன் கீழுதட்டைக் கடித்தபடி சொன்னதில் மதிய உணவு டப்பாவை எடுத்துக் கொண்டிருந்த சுசரிதா.. ஓரக் கண்ணால் அவனை பார்த்தபடி..

“யார்.. என்ன சொன்னாங்களாம் அன்பு சார்..?” என்று விசாரித்தாள்..

“யாரைடா சொல்ற..?” அன்பழகனும் கேட்டான்..

“அது யாரோ..” என்றான் மோகன்..

“அதுதான் யாரோ.. இப்ப இவர் சொன்னது யாருக்காம் அன்பு சார்..?” சுசரிதா விடவில்லை..

“யாருக்கோ..” மோகன் பிடி கொடுக்கவில்லை..

“ஏன் அன்பு சார்.. உங்க பிரண்ட் இப்பத்தான் இப்படியா..? இல்ல எப்பவுமே இப்படியா..?”

சுசரிதாவின் கிண்டலில் அன்பழகன் ஆச்சரியமானான்.. அதுவரை மோகனிடம் யாரும் அப்படிப் பேசியதில்லை.. அதைவிட அவன் யாரையும் பேச விட்டதில்லை.. மற்றவர்கள் வாய் திறப்பதற்கு முன்பாகவே இவன் அவர்களைக் கிண்டல் பண்ணி ஒருவழி பண்ணி விடுவான்..

அந்த மோகன் இன்று.. அவனை வாரிக் கொண்டிருப் பவளை வாரி அணைப்பவனைப் போல ஓர்வித போதையுடன் பார்த்துக் கொண்டிருந்ததில் அன்பழகனுக்கு கவலை மேலிட்டது.. அவன் தன் நண்பனுக்கு என்ன ஆனதோ.. ஏது ஆனதோ.. ஏது ஆனதோ என்று அச்சம் கொண்டான்..

“என்னைக்குமே இப்படி இருந்ததில்லைம்மா.. இன்னைக்குத்தான் மந்திரிச்சு விட்டகோழி மாதிரி ஒரு மார்க்கமா பேசிவைக்கிறான்..” அன்பழகன் கவலையுடன் மோகனின் நெற்றியில் கை வைத்துபார்த்தான்..

சுசரிதாவின் முகத்தில் சிரிப்புத் தெரிந்ததில்..

“மானத்தை வாங்காதேடா..” என்று அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டான் மோகன்..

‘இவ சும்மாவே கிண்டலா சிரிச்சு வைப்பா.. இப்ப வேறு வினையே வேணாம்..’

அவன் பல்லைக் கடிக்க.. அவன் பயந்ததைப் போல தான் நடந்து வைத்தது.. சுசரிதா அவனை திரும்பித் திரும்பிப் பார்த்து சிரித்தபடியே தான் சாப்பிடப் போனாள்..

“எல்லாம் உன்னால் வந்தது..” அன்பழகனின் மேல் பாய்ந்தான் மோகன்..

“நான் என்னடா பண்ணினேன்.. அவதான் அப்படிக் கேட்டா..”

“அவ கேட்டா நீ உடனே உடுக்கடிப்பயா..? மந்திரிச்சு விட்டதைப் போல இருக்கேனாம்.. யாருடா மந்திரிச்சு விட்டது..? அவளா..?”

மோகன் பேசியபடியே ஜன்னல் பக்கம் யதேச்சையாக பார்வையை திருப்பியவன் புருவங்களை சுருக்கி பார்வையை கூர்மையாக்கினான்..

“எந்தப் பொண்ணைடா அப்படிப் பாக்கிற..?” திரும்பாமல் கேட்டு மறுபடியும் மோகனின் மானத்தை வாங்கினான் அன்பழகன்..

“ஸ்ஸ்ஸ்…”

பல்லைக் கடித்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்ட மோகன் புத்தர் போல சாந்தமாய் முகத்தை வைத்துக் கொண்டு..

“நான் பாத்தா அது பொண்ணாத்தான் இருக்கும்ன்னு எப்படிடா கெஸ் பண்ற..?” என்று வெகு பொறுமையாக கேட்டான்..

“ஆம்பளைக பக்கம் நீ எப்பத் திரும்பிப் பார்த்த..?” அன்பழகன் அலட்டிக் கொள்ளாமல் கேட்டு விட்டு..

“எவ.. அவ..?” என்று ஜன்னல் பக்கம் பார்த்தான்..

அங்கே சுசரிதா வேப்பம் இலைகளை கொத்தாக பறித்துக் கொண்டிருந்தாள்..

“இவ சாப்பிடத்தான போனா..?” சந்தேகம் கேட்டான் அன்பழகன்..

மோகன் முறைத்தான்.. அன்பழகன் அவசரமாக வாயை மூடிக் கொண்டான்..

“எதுக்காக வேப்பிலையை பறிக்கறா..?” மோகன் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள..

“ஒருவேளை உனக்கு மந்திரிக்கிறதுக்காக இருக்குமோ..?” என்று முகமெல்லாம் பிரகாசமாய் கேட்டு விட்டு.. மோகனிடமிருந்து ஃபைலால் அடி வாங்கினான் அன்பழகன்..

“இன்னைக்கு ஒரு முடிவோடதான் ஆபிஸ் வந்தியா..? புதுசா வந்திருக்க பொண்ணு முன்னால என் இமேஜை டேமேஜ் பண்றதிலேயே குறியாய் இருக்கியேடா படவா..”

“நான் என்னடா பண்ணினேன்..?”

“எதத்தான் பண்ணலை..?”

அவர்கள் கோபமாக சத்தம் போட்டபடி கேரியரும் கையுமாக எழுந்து கொள்ளப் போகும் போது கையில் வேப்பிலையுடன் சுசரிதா அங்கே வந்தாள்..

“ஆத்தா.. மகமாயி.. மந்திரிக்க வந்திட்டா..” என்று முணுமுணுத்தான் அன்பழகன்..

“அடி வாங்கியும் நீ அடங்கல பார்த்தியா..” உக்கிரமானான் மோகன்..

சுசரிதா வேப்பிழையை அவளுடைய ஹேண்ட் பேகில் வைத்தாள்.. விசித்திரமாக அவளைப் பார்த்த அன்பழகனிடம்..

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. அம்மா வீட்டு வாசலில வேப்பிலை செருகுவாங்க…” என்று விளக்கம் சொன்னாள்..

“நல்ல பழக்கம்..” என்று அவளிடம் சொன்ன அன்பழகன்..

“டேய் மோகன்.. இது உனக்கு மந்திரிக்கிறதுக்காக இல்லயாம்டா.. வீட்டுக்காம்..” என்று மோகனிடம் முணுமுணுத்தான்..

“நான் கேட்டேனா..?” மோகன் ஃபைலைத் தேடினான்..

அன்பழகன் அவசரமாக அடியிலிருந்து தப்பித்துக் கொள்ள நகர்ந்து நின்றான்.. அவன் கையிலிருந்த கேரியரின் மீது சுசரிதாவின் பார்வை படிந்தது..

“இவ்வளவு பெரிய கேரியரா..?” வியந்தாள்..

“இது என்னது இல்லம்மா.. இவனுது..” அன்பழகன் அவசரமாக கேரியரை மோகன் பக்கம் தள்ளி வைத்தான்..

“அதை எதுக்கு நீங்க வைத்திருந்தீங்க…?”

“அதை ஏம்மா கேக்கறிங்க.. இவனுக்கு கோபம் வந்தா கையில் கிடைக்கிறதை எடுத்து வீசுவான.. இப்பத்தான் ஃபைலாலே மொத்து வாங்கினேன்.. கேரியர்ன்னா என்னாலே தாங்க முடியுமா..? அதான் முன்யோசனையா இவன் கேரியர நான் எடுத்துக்கிட்டேன்..”

“அதுசரி.. இந்தக் கேரியரப் பார்த்தவுடனே கல்யானா சமையல் சாதம்ன்னு பாடற கடோத்கஜனோட கேரிய ரோன்னு நான் நினைச்சிட்டேன்..”

சுசரிதாவின் கண்கள் மின்னியதில் அவளின் கிண்டலை புரிந்து கொண்ட மோகன் அவளை பார்வையிட்டபடி..

“இது பொய் சொல்ற வாய்.. போஜனம் அதிகமா தேவைப்படும்.. அதோட.. இது என் சம்பளத்தில சமைச்சது.. அம்மையார் இன்னும் முதமாச சம்பளம் கூட முழுசா வாங்கியாகல.. அதனால வேலயப் பாத்துக்கிட்டுப் போகச் சொல்லுடா மச்சி.. இவங்க சாப்பிடப் போறதுதான் ஓசிச்சோறு..” என்றான் மோகன்..

“அதனாலதான் ஒரு சின்ன டப்பாவில கொண்டு வந்திருக்கேன்..” விடாமல் பதில் கொடுத்து விட்டுத்தான் அவள் போனாள்..

“எங்கேயிருந்துடா வந்தா இவ..?”

சுசரிதா போன திசையைப் பார்த்தபடி கேட்டான் மோகன்..

அவள் எங்கிருந்து வந்தாளோ.. வந்த முதல் நாளிலேயே.. யாரையும் திரும்பிப் பார்க்காத மோகனின் கவனத்தைக் கவர்ந்து திரும்பி பார்க்க வைத்து.. அவன் மனதில் சட்டமாக உட்கார்ந்து விட்டாள்..

அடுத்து வந்த நாள்களில் சுசரிதாவினால் மோகனின் உதவியில்லாமல் அவளுடைய வேலைகளைச் செய்ய முடியவில்லை.. என்னதான் இதுதான் வேலை என்று தெரிந்து கொண்டாலும் அதை நடைமுறையில் செய்யும் போது ஆயிரம் பிழைகள் வந்தன.. அவள் லதிகாவிடம் உதவி கேட்டபோது..

“உன்னோட பிரான்ச்சா..? நான் அம்பேல்..” என்று கைகளை உயர்த்தி விட்டாள்..

“ஏன் லதிகா..?”

“அது செம சேலன்ஜின்கான பிரான்ச்.. சுசரிதா.. விவரம் தெரியாம நீ போய் அதில மாட்டிக்கிட்ட.. நியு ஜாயினிங் இல்லையா..? உனக்கு சாய்ஸ் கொடுக்காம 

இந்த பிரான்ச்சில உன்னைத் தூக்கிப் போட்டுட்டாங்க..”

“என்ன லதிகா.. இப்படி பயமுறுத்தற..?”

“காரணமில்லாம சொல்லல சுசரிதா.. அந்த பிரான்ச்ச கண்ட்ரோலில் வைச்சுக்கிறது ரொம்பவும் கஷ்டம்.. யாருக்கும் அந்த பிரான்சோட வொர்க் பிடிபடலை.. நீ மாட்டேன்.. நான் மாட்டேன்னு சொல்லி அந்த பிரான்ச்சில யாருமே உட்கார மாட்டாங்க.. மீறி உட்கார வைச்சா லாங் லீவிலே ஓடிப் போயிருவாங்க..”

அப்படிப்பட்ட இருக்கையா அவளுடைய இருக்கை..? சுசரிதா கவலையுடன் தனது இருக்கையை திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.. மாட்டியது மாட்டியாகி விட்டது.. வேலை செய்துதானே ஆக வேண்டும்..? புதிதாய் வேலையில் சேர்ந்திருப்பவளுக்கு இருக்கையை தேர்ந் தெடுக்கும் உரிமையும் கிடையாது.. மாட்டிக் கொண்ட இருக்கையை விட்டு ஓடுவதற்கான லீவும் கிடையாது..

“இப்ப என்ன செய்யறது லதிகா..?”

“தெரியலை.. நீயே நியு ஜாயினிங்.. உன்னால என்ன செய்ய முடியும்..? பாவம் நீ..”

இதைக் கேட்கத்தான் வேலை மெனக்கெட்டு லதிகாவை தேடி வந்தாளா..? சுசரிதாவுக்கு தலை வேதனையாக இருந்தது..

அவளின் இருக்கையின் வேலையைப் பற்றி அறிந்த ஒரு ஜீவன்கூட அந்த அலுவலகத்தில் இல்லையா..?

“ஒருத்தன் இருக்கான்..” என்றாள் லதிகா..

அப்படிப்பட்ட சிக்கலான வேலையைப் பற்றித் தெரிந்தவன்கூட அந்த அலுவலகத்தில் இருக்கிறானா..?

“யாருப்பா அது..?” சுசரிதா பரபரத்தாள்..

“ரொம்பவும் எக்சைட் ஆகிக்காதே.. அவன்கிட்ட வேலை கத்துக்கிறதுக்கு பேசாம நீ வேலையை விட்டுட்டே போயிரலாம்..”

“என்னப்பா இப்படி பயமுறுத்தற..?”

“ஆமாம்ப்பா.. கிண்டலடிச்சே மனுசரை ஒரு வழி பண்ணிருவான்.. வாயைத் திறந்து பேசினா அதில உண்மை எது பொய் எதுன்னு நம்மாலே கண்டு பிடிக்கவே முடியாது.. அந்த அளவுக்கு நிஜம் போல பொய் பேசுவான்.. பேசறதையும் பேசிட்டு ஹௌ நைஸ்ன்னு நம்ம வாயாலே அவன் பொய்யை மெச்சவும் வைத்துவிடுவான்.. ஹப்பா..”

லதிகா கண்களை உருட்டித் தோளைக் குலுக்கிய விதத்தில் சுசரிதாவிற்கு கவலையாகிப் போனது.. ஆனாலும் அவளின் வர்ணனைகள் அவளறிந்த ஒருவனுடன் இசைந்து போவதைப் போல தோன்றியதில் மனம் படபடக்க அவள் கேட்டாள்..

“ஏன் லதிகா.. அந்த ஆள் பெயர் என்ன..?”

“மோகன்..”

‘அதானே பார்த்தேன்..’

சுசரிதா திரும்பிப் பார்த்த போது யாருடனோ பேசியபடி வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்த மோகனும் அவளைப் பார்த்தான்.

இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்டன..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link