Chapter 07
“தேங்க்ஸ்..”
தாராவின் அறையை விட்டு வெளியே வந்ததும் தயங்கி நின்ற சுசரிதா சொன்னாள்.. அவள் கூடவே வந்த மோகன் சுற்றுமுற்றும் பார்த்தான்..
“யாரைத் தேடறிங்க..?”
“நீங்க யாருக்கோ தேங்க்ஸ் சொன்னீங்களே.. அந்த கொடுத்து வைத்த சுந்தரபுருசன் யாருன்னுதான் தேடினேன்..”
மோகனின் இடக்குப் பேச்சில் இவனுக்குப் போய் நன்றி சொன்னோமே என்று ஆகிவிட்டது அவளுக்கு.. அவன்தான் அவளது வேலையை முடித்துக் கொடுத்து தாராவின் கோபத்திலிருந்து அவளைக் காப்பாற்றினான் என்பதை அவள் மனச்சாட்சி அறிவுறுத்த..
‘ஹ..’ என்று அதற்கு வாய் பூட்டு போட்டு விட்டாள்.
‘இவனை உதவிக்கு வான்னு நான் வெத்தலை பாக்கு வச்சா கூப்பிட்டேன்..? இவனுக்கு வொர்க் தெரிஞ்சிருக்கிற திமிர்.. அதான்.. என்னைக் காப்பாத்த வந்ததப் போல
பில்ட் அப் கொடுக்கிறான்.. உண்மையிலேயே எனக்கு உதவி செய்யனும்னு நினைச்சிருந்தா வொர்க்கை சொல்லிக் கொடுத்திருக்கலாமில்ல..?’
சுசரிதாவின் உதடுகள் அலட்சியமாக சுழித்ததில்..
‘ஆத்தா மலையேறிட்டா..’ என்று கண்டு கொண்டான் மோகன்..
“சுந்தர புருசனா..?” கடுமையாக கேட்டாள் சுசரிதா.
“ஆமாங்க.. உங்க வாயாலே தேங்க்ஸ்ங்கிற வார்த்தையைக் கேட்கிற பாக்கியம் கிடைச்சவன் சுந்தர புருசனில்லயா..?” அவளுடைய கடுமையை கண்டு கொள்வேனா என்று அடம் பிடித்தவனாக சொன்னான் மோகன்..
“என்ன லாங்வேஜ் இது..? சுந்தர புருசன்னு..” முகம் சுளித்தாள் சுசரிதா..
“தமிழ்தாங்க.. சந்தேகம் இருந்தா தமிழ் அகராதிய புரட்டிப் பாருங்க புரியும்..” என்றான் மோகன்..
“ஹலோ.. புருசன்னா ஹஸ்பெண்டுன்னு அர்த்தம்..” கோபத்துடன் சொன்னாள் சுசரிதா..
“உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.. பொதுவா புருசன்னு சொன்னா தமிழ் அகராதியில ஆண்.. அதாவது ஆம்பளைன்னு அர்த்தம்.. சங்ககால இலக்கியத்தை டைம் கிடைச்சா புரட்டிப் பாருங்க.. தமிழில் கொட்டிக்கிடக்கிற வார்த்தைகளோட அர்த்தத்தப் பத்தித் தெரியும்.. அறிவும் விசாலமாகும்..”
“அப்ப.. என் அறிவு குறுகின அறிவுன்னு சொல்றீங்களா..?”
“இதென்னடா வம்பாப் போச்சு.. ஐயோ பாவம்ன்னு உதவி செய்ய வந்தா இழுத்து வைச்சு சண்டை போடறிங்க..”
“ஐயோ பாவம்ன்னு பாத்திங்களா..? இரக்கப் படுங்கன்னு நான் கேட்டேனா..?”
“கேட்டாத்தான் செய்யனும் போல.. ஆகட்டும்.. இனிமே இதையே மெயின்டெயின் பண்றேன்..”
“சுந்தர புருசனாமில்ல..”
“அடடா.. சுந்தர புருசன்னா அழகான ஆம்பளைன்னு அர்த்தம்ங்க..”
“தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக ஆபிசுக்குள்ள தேடறிங்க..?”
“புரியலையே..”
“இந்த ஆபிசிலே எந்த சுந்தரபுருசன் இருக்கான்..? உங்களையும் சேத்துத்தான் சொல்றேன்..”
சுசரிதா வேகமாக அவள் இடத்திற்கு போய் விட்டாள்.. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மோகனின் இதழ்களில் இளநகை அரும்பியது.. எதற்காக அவள் அந்த அளவுக்கு கோபப் படுகிறாள் என்பது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.. இருந்தும் அவளிடம் வம்பிழுத்துப் பார்க்க அவன் ஆசை கொண்டான்..
கழுத்தை சாய்த்து எப்போதும் சுசரிதாவைப் பார்க்கும் ஒரு மார்க்கப் பார்வையுடன் அவளைப் பார்த்தபடி அவனுடைய சீட்டுக்குப் போனவன் கோபத்தில் சிவந்திருந்த சுசரிதாவின் முகத்தைப் பார்த்தபடியே அன்பழகனிடம் கேட்டான்..
“ஏண்டா அன்பு.. நீ ரொம்ப ரோசக்காரனாமில்ல..?”
சுசரிதாவின் கை கம்யூட்டரின் மவுசில் அப்படியே நிலைத்து நின்றது.. அவளது செவிகள் கூர்மையாகின.. அது அவளுக்கான பேச்சு என்று அவளது உள்ளுணர்வு சொல்லியது..
திடிரென்று ரோசத்தைக்கட்டி இழுத்த நண்பனை விசித்திரமாக பார்த்தான் அன்பழகன்..
“இப்ப எதுக்குடா ரோசத்தை வம்புக்கு இழுக்கற..?” என்று அவனிடம் கேட்கவும் செய்தான்..
“கேட்டாப் பதில் சொல்வியா.. அத விட்டுட்டு காரணம் கேட்கிற..”
“நான் ரோசக்காரன்தான்.. அதுக்கென்ன இப்ப..?”
“ஓ.. அப்படின்னா நீ வாங்குற சம்பளத்தை அப்படியே என் கையில் கொடுத்துருவியா..? முனை முறியாம கொடுக்கனும்.. அதுதான் ரோசக்காரனுக்கு அழகு..”
“போடா.. நீயும் உன் வியாக்கினமும்.. ஒரு மண்ணும் புரியலை..”
சுசரிதாவிற்குப் புரிந்தது.. அவள் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.. லேசாக கலங்கிய விழிகளை இமைகளைச் சிமிட்டிக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.. அவளையே பார்த்த வண்ணம் வேலை செய்த மோகன் பக்கம் திரும்பாமல் வேலையில் கவனமாக இருந்தாள்..
“என்னமோ எல்லா வேலையையும் கைக்குள்ள வைச்சிருக்கிறதைப் போலதாண்டா பிலிம் காட்டற..” என்றான் மோகன்..
அந்த ஜாடைப் பேச்சில் நிமிர்ந்த சுசரிதா கூர்மையாக அவனைப் பார்த்தாள்.. அதில் அவனது புருவங்கள் சுழித்தன..
மறுநாள் சம்பளதினம்.. முதல் மாத சம்பளம் என்பதால் சுசரிதாவிடம் ட்ரீட் கேட்டாள் லதிகா..
“நாளைக்கு கொடுக்கிறேனே..” என்றாள் சுசரிதா..
“சம்பளத்தை அப்படியே வீட்டுக்குக் கொண்டு போய் பூஜையறையில் வைத்துக் கும்பிட்ட பின்னாலதான் செலவு பண்ணனும்னு சென்டிமென்டோ என்னவோ..” என்றாள் லதிh..
சுசரிதா பதில் சொல்லவில்லை.. மௌனப் புன்னகையுடன் அவளிடத்துக்கு போய் விட்டாள்.. அன்பழகனிடம் அரட்டையடித்துக் கொண்டிருந்த மோகனின் புருவங்கள் அவளைக் கண்டதும் ஏறி இறங்கின.. லேசாக முறைத்துவிட்டு அவள் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்..
மோகன் தோளைக் குலுக்கி விட்டு அவன் முன்னாலிருந்த பேப்பர்களை ஓழுங்கு படுத்த ஆரம்பித்தான்.. ஊடும் பாடும் நிமிர்ந்து பார்த்த போது சுசரிதாவின் முகம் கல்போல கடினமாக இருப்பது தெரிந்தது..
‘ஏன் இப்படி இருக்கா..?’ என்று தோன்றிய போதே..
‘புதுசாவா இப்படி இருக்கா..? எப்பவும் இறுக்கம் தான்.. இன்னைக்கு அது கொஞ்சம் அதிகம்..’ என்ற எண்ணமும் சேர்ந்து வந்ததில் தோளைக் குலுக்கியபடி பேசாமல் இருந்து விட்டான்..
மாத இறுதியென்பதால் அவனுடைய பிரான்ச்சில் அதிக வேலை இருந்தது.. அதை முடித்து வைக்க வேண்டிய நினைவில் சுசரிதாவை வம்பிழுக்க வேண்டுமென்பதையே மறந்து விட்டான் மோகன்..
அவள் மட்டும் அவ்வபோது அவனை நிமிர்ந்து பார்ப்பதும்.. அவனுடைய ஆழ்ந்த வேலையை கணக்கெடுப்பதைப் போல ஆழ்ந்து பார்த்துவிட்டு குனிந்து கொள்வதுமாக இருந்தாள்..
மதிய உணவு நேரத்திலும் மோகன் வேலையைப் பார்க்க சுசரிதா ஒரு பெருமூச்சுடன் எழுந்து போய் விட்டாள்..
அன்பழகன் அனத்து அனத்து என அனத்தி மோகனை சாப்பிடக் கிளப்பிக் கொண்டு போனான்..
மாலை மயங்கும் நேரத்தில் வீட்டுக்குப் போக எழுந்த சுசரிதா மோகனின் அருகே வந்தாள்.. நின்றாள்.. முன்னால் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்த மோகனின் புருவங்கள் முடிச்சிட்டன..
‘இவ எதுக்கு இங்க வந்து நிற்கிறா..?’
அவன் புருவங்கள் சுருங்கிய போது சுசரிதா அவளுடைய ஹேன்ட்பேகை திறந்து உள்ளேயிருந்த சம்பளக் கவரை எடுத்து அவன் முன்னால் வைத்தாள்..
“வாட்..?” அவன் புருவங்கள் முடிச்சிட்டன..
“நான் ரோசக்காரி மிஸ்டர் மோகன்.. நீங்க பார்த்த வேலைக்கு நான் சம்பளம் வாங்க விரும்பலை.. இது உங்க பணம்.. எடுத்துக்கங்க..” என்று சொல்லி விட்டு விரைந்து விட்டாள் சுசரிதா..
மோகனால் நம்பவே முடியவில்லை.. அவன் முன்னாலிருந்த சம்பளக்கவரைப் பார்க்கப் பார்க்க அவனுக்குள் கோபம் அதிகரித்தது.. வேலையை ஏறக்கட்டி விட்டு அந்த சம்பள கவரை கையில் எடுத்துக் கொண்டு எழுந்தான்..
“என்னடா.. சுசரிதா உன்கிட்ட ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தாப்புல இருந்துச்சே.. என்னவாம்..?” கேட்டபடி வந்தான் அன்பழகன்..
“ஆமாண்டா.. அவ சொன்னா.. நீ பார்த்த.. எனக்கு நல்லா வந்திரும் வாயில.. போடா டேய்..”
மோகன் சுசரிதாவின் மேலிருக்கும் கோபத்தை அன்பழகனிடம் காண்பித்து விட்டு கிளம்பிப் போய்விட.. தனிமரமாய் நின்ற அன்பழகன் திகைத்தான்..
“என்ன ஆச்சு இவனுக்கு..? காலையில நல்லாத் தானே இருந்தான்..? எங்கிட்டோ போக வேண்டிய காண்டைத் தூக்கி என்தலையில போட்டுட்டு போய்கிட்டே இருக்கானே..”
தனித்து புலம்பிக் கொண்டிருந்த அன்பழகனைக் கடந்த மார்ட்டின்..
“என்னப்பா ஆச்சு உனக்கு..?” என்று விசாரித்தான்..
“நான் அவனச் சொன்னா நீ என்னைச் சொல்றியா..? தேவைதாண்டா எனக்கு..” அன்பழகன் மேஜையைப் பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டான்..
“மோகன் எங்கே..?” மார்ட்டின் நகராமல் தேங்கி நின்றான்..
“போயிட்டான்..” ஒற்றைச் சொல்லில் வேலையை முடித்துக் கொண்ட அன்பழகன் நகரப் போனான்..
“உன்னை விட்டுட்டா..?” மார்ட்டின் வியந்தான்..
மோகன் அப்படித்தான்.. அன்பழகனை விட்டு விட்டு தனியாகப் போக மாட்டான்.. அன்பழகனே அந்தக் கவலையில்தான் இருந்தான்.. மார்ட்டின் அதைத் தூண்டி விடுவதைப் போல பேசி வைக்கவும் அவனுக்கு எரிச்சல் வந்து விட்டது..
“ஆமாம்.. அதுக்கென்ன..?” என்று எரிந்து விழுந்தான்
“என்னப்பா நீ.. அவன்மேல இருக்க காண்ட என்மேல காட்டற.. ஏன்னு கேள்வி கேட்டா அது ஒரு குத்தமாப்பா..? நல்ல கதைதான் போ..”
அதற்கு மேலும் தாமதித்தால் அன்பழகன் கடித்து விடுவான் போல தோன்றியதில் மார்ட்டின் ஓடிவிட்டான்.
“நான் அவனுக்குச் சொன்னது எனக்கே திரும்புதா..?”
அன்பழகன் மனதுக்குள் நினைப்பதாக நினைத்துக் கொண்டு வாய்விட்டு புலம்பிபடியே கிளம்ப.. எதிரே வந்த லதிகா அவனை விசித்திரமாக பார்த்து வைத்தாள்..
“என்ன அன்பு சார்.. தனியா நின்னு புலம்பிக்கிட்டு இருக்கீங்க..? எங்கே உங்க பிரண்டு..?”
“அவனா..? அவன் உங்களுக்கு கர்னாடிக் மியூசிக்கை சொல்லித்தர டீச்சரைக் கண்டுபிடிச்சு கூப்பிட்டுக்கிட்டு வரப் போயிருக்கான்ம்மா..”
மோகன் விட்டுவிட்டுப் போன எரிச்சலை அன்பழகன் லதிகா மேலும் காட்டி வைக்க.. அவள் அன்பழகனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்..
“என்ன சார்.. கிண்டலா..? நல்லாத்தான போய்கிட்டு இருந்துச்சு.. திடிர்ன்னு என்ன திசை திரும்புறிங்க..? உங்க பிரண்டோட காத்து உங்கமேலயும் அடிச்சிருச்சா..?”
என்னவோ காத்து கருப்பு அடித்து விட்டதைப் போல அவள் கேட்டு வைத்த தினுசில் நொந்து போன அன்பழகன் வீட்டைப் பார்த்து கிளம்பிய போது மோகன் சுசரிதாவின் வீட்டைப் பார்த்துப் போய் கொண்டிருந்தான்..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.