Chapter 08
நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸில் ஓடிப் போய் ஏறிய சுசரிதா விழியோர நீர்த்துளிகளை துடைத்துக் கொண்டாள்.. ஜன நெருக்கடி அவளையும் நெருக்கியதில் நகர்ந்து உள்ளே வந்தவள்.. காலியாக இருந்த சீட்டில் சட்டென்று உட்கார்ந்து சீட்டில் தலை சாய்த்தாள்.. மனது பாரமாக இருந்தது.. முதல் மாதச் சம்பளம் வாங்கியிருக்கும் உற்சாகம் துளிக்கூட இல்லாமல் வாடிப் போன பூவைப் போல இருந்தாள்..
“அக்கா இன்னைக்கு உனக்கு சேலரிதானே..?”
காலையில் அவள் பேப்பரைப் பார்த்தபடி காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த போதே கேட்டு விட்டான் சுரேஷ்..
“ஆமாண்டா..”
“பர்ஸ்ட் மன்த சேலரியை வாங்கப் போற.. எனக்கு என்ன வாங்கித் தருவ..?”
அவன் குரலில் எதிர்பார்ப்பு தெரிந்தது.. பி.பி.ஏ படிப்பவன்.. கை நிறைய பாக்கெட் மணி அவனுக்குக் கிடைக்கிறதுதான் என்றாலும் அக்காவின் முதல் மாத சம்பளத்தில் அவனுக்காக என்ன செய்யப் போகிறாள் என்பதை அறியும் ஆவல் அவனிடம் இருந்தது..
சுசரிதா பதில் சொல்லவில்லை.. மௌனமாக பேப்பரை மடித்து வைத்து விட்டு தம்பியை பார்த்தாள்.. அவனுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று யோசித்தாள்.. அதற்குள் காபி தம்ளரும் கையுமாக அங்கே வந்த சிவகாமி மகனை அதட்டினாள்..
“ஏண்டா.. நீ கேட்டுத்தான் அவ வாங்கித் தரனுமா..? சர்ப்ரைஸா உனக்கு வாங்கித் தரனும்னு ஏதாவது பிளான் பண்ணி வைச்சிருப்பா.. நீ காபியைப் பிடி.. நான் ஸ்கூலுக்குக் கிளம்பனும்.. லேட்டாகிருச்சு..”
சுரேஷ் சுசரிதாவை மறந்து காபியை கையில் பிடித்தான்.. சுசரிதா எழுந்து குளிக்கப் போனாள்.. அலுவலகம் செல்லத் தயாராகி டைனிங் டேபிளுக்கு வந்த போது.. பூபாலன் எதிரே வந்தார்.. மகளைக் கண்டதும் வாத்சயல்யமாக புன்னகைத்தார்..
“இன்னைக்கு சேலரி டேதான..?”
ஏன் எல்லோரும் இதைப் பற்றியே பேசுகிறார்கள் என்றிருந்தது சுசரிதாவுக்கு.. இதைத்தவிர பேச வேறு பேச்சே இல்லையா..?
“ஆமாம்ப்பா..”
“சந்தோசமா இருக்கில்ல..?”
பூபாலனின் கேள்வியில் மகள் சந்தோசமகாத்தான் இருப்பாள் என்ற நிச்சயம் தெரிந்தது.. இல்லை என்று சொல்ல முடியாமல் அவள் தவித்தாள்..
“எனக்கும் என்னோட பர்ஸ்ட் சேலரி வாங்கற அன்னைக்கு இதைப் போலத்தான் இருந்தது..”
அவளுக்கு எதை போலவும் இல்லை என்பதை அறிந்தால் அவர் என்ன சொல்லக்கூடும் என்ற நினைவுடன் அவள் மௌனமானாள்..
“சந்தோசமா இருக்கும்மா.. நீ உன் காலில நின்னுட்ட.. சென்ட்ரல் கவர்ண்ட்மென்ட் ஜாப்.. நிம்மதியா இருக்கு.. உன்னைப் பத்தி இனி கவலையில்ல.. சுரேஷைப் பத்திதான் யோசிக்கனும்..”
பூபாலனின் நிம்மதியில் பங்கு பெற முடியாமல் சுசரிதா சாப்பிட உட்கார்ந்தாள்.. பூபாலன் செல் போனில் பாலிஸியைப் பற்றிப் பேசியபடியே சாப்பிட வந்தார்.. சிவகாமி போனை பறித்து வைத்தாள்..
“எல்.ஐ.சி யில வேலை செஞ்சா எப்பப் பார்த்தாலும் பாலிசியைப் பத்தித்தான் பேசியாகனுமா..?”
“நீ மட்டும் டீச்சர் வேலை பாக்கறேன்னு பரிட்சை பேப்ரை கட்டுக் கட்டா வீட்டுக்கு கொண்டு வந்து திருத்தற..?”
“அதுக்காக போட்டி போட்டாகிறதா..? தட்டைப் பாத்துச் சாப்பிடுங்க.. எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு..”
சிவகாமி சிடுசிடுத்தபடி சமையலறைக்குள் போனாள்.. சுரேஷ் சுசரிதாவின் காதைக் கடித்தான்..
“வரவர அம்மா ஸ்கூல் டீச்சரா.. இல்ல ஸ்கூலுக்குப் போற ஸ்டூடண்டான்னு புரியவே மாட்டேங்குது..”
“ஏண்டா..?”
“பொழுது விடிஞ்சாப் போதும்.. இவங்க ஸ்கூலுக்கு நேரமாச்சு.. ஸ்கூலுக்கு நேரமாச்சுன்னு புலம்பிக்கிட்டே இருக்காங்க..”
“டேய்..”
தம்பியை சிரித்தபடி அதட்டியவளின் மனதுக்குத் தெரியும் அது போலியான சிரிப்பு என்று..
“டிக்கெட்.. டிக்கெட்..”
கண்டக்டர் அருகில் வந்ததில் காலை நினைவுகளில் இருந்து வெளியே வந்த சுசரிதா.. ஒரு பெருமூச்சுடன் ஹேன்ட் பேக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள்..
“மந்தைவெளி ஒன்னு..”
கண்டக்டர் டிக்கெட்டைக் கிழத்து கொடுத்து விட்டு நகர்ந்தார்.. சுசரிதா கடந்து போகும் சாலை யோரக் கடைகளை சோர்வுடன் பார்த்தபடி ஜன்னல் கம்பிகளின் விளிம்பில் சாய்ந்து கொண்டாள்..
‘வீட்டில என்ன சொல்றது..?’
அது அவளுடைய சம்பளத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வீடல்ல.. கைநிறைய சம்பாதிக்கும் தாய்.. தகப்பனைக் கொண்ட வீடு.. சுசரிதாவின் சம்பளத்தை வாங்கி அவர்கள் செலவு செய்யப் போவதில்லை.. அவள் பெயரிலிருக்கும் வங்கிக் கணக்கில்தான் போட்டு வைக்கப் போகிறார்கள்.. அது இல்லையென்று சொல்வதால் அவர்களில் யாரும் அவளை கடிந்து கொள்ளப் போவதில்லை..
‘இருந்தாலும்..?..’ அவள் மனம் கலங்கியது..
நட்டு வைத்த ரோஜாச் செடியில் அரும்பு மலர்ந்து முதல் முறை பூப்பூக்கும் போது அதைப் பறித்து தலையில் சூடும் இன்பமே தனி..
முதல்முறை நுகரும் அந்தப் பூவின் வாசத்தை அடுத்தடுத்து மலரப் போகும் பூக்கள் தரப் போவதில்லை.. அந்த இன்பமே தனி…
அந்த இன்பத்தைத்தான் கை நழுவ விட்டு வந்திருக்கிறாள் சுசரிதா..
“மந்தைவெளி யாருங்க..” கண்டக்டர் குரல் கொடுத்தார்..
சுசரிதா பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.. அவள் வீட்டுக்குப் போகும் சாலையில் நடக்கத் தொடங்கினாள்.. தூரத்தில் அவள் வீடு தெரிந்தது.. கால்கள் பின்னியது.. அவள் கேட்டை அடைத்து தொட்டபோது..
“சுசி..” என்ற குரல் கேட்டது..
‘அப்பா..!’ திரும்பினாள்…
“என்னம்மா நடந்து வர்ற..? உன் ஸ்கூட்டி என்ன ஆச்சு..?” என்று கேட்டபடி காரிலிருந்து இறங்கி கேட்டைத் திறந்தார் பூபாலன்..
அவரைத் தொடர்ந்து இறங்கி வந்த சிவகாமியின் விழிகளிலும் அந்தக் கேள்வி இருந்தது..
“கிளம்பும் போது மக்கர் பண்ணுச்சுப்பா.. அதான்.. பஸ்ஸிலே போயிரலாம்ன்னு கிளம்பிட்டேன்..”
முதல் பொய்யைச் சொன்னாள் சுசரிதா.. முதல் மாதச் சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு வர முடியாமல் போனதற்கு சொல்ல வேண்டிய பொய்க்கான ஒத்திகையா இது என்று அவள் மனம் சாடியது..
அவள் வேண்டுமென்றுதான் ஸ்கூட்டியை வீட்டில் விட்டுப் போனாள்.. அன்றைய மனநிலையில் அவளால் வண்டி யோட்ட முடியுமென்று அவளுக்குத் தோன்ற வில்லை.. அதை அவளால் வீட்டில் சொல்ல முடியாதே..
“அப்படியா உள்ளே வா..”
சிவகாமி மகளை அணைத்தபடி வீட்டுக்குள் போனாள்.. பூபாலன் காருக்குத் திரும்பி காரைக் கிளப்பிக் கொண்டு வந்து போர்டிகோவில் நிறுத்தி பூட்டி.. கேட்டையும் பூட்டி விட்டு வீட்டுக்குள் வந்தார்..
“மத்த நாளிலகூட நீ பஸ்ஸில வந்திரலாம்.. இன்னைக்கு சம்பள நாள்ம்மா.. இன்னைக்குத்தான் நீ பஸ் ஜர்னியை அவாய்டு பண்ணியிருக்கனும்.. இன்னைக்கு சம்பள நாளாச்சே..”
இன்னைக்கு.. இன்னைக்கு.. இன்னைக்கு என்று மகளுக்கு அன்றைய நாளின் அருமையைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த சிவகாமி அவளையும் அறியாமல் மகளுக்கு வழிகாட்டி விட்டாள்..
“அதை மறந்ததினாலதான் இந்த அவதிம்மா..”
சுசரிதா சொல்ல வேண்டிய பொய்யை தீர்மானித்து விட்டாள்.. பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது.. அதில் அவளது சம்பளபணத்தை யாரோ பிக்பாக்கெட் அடித்து விட்டார்கள்..
மனதை திடப்படுத்திக் கொண்டு.. புருவங்கள் சுருங்க மகள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவளை பார்த்தபடி இருந்த பூபாலனிடமும் சிவகாமியிடமும் அவள் பொய் சொல்லத் தயாரான போது..
“எக்ஸ்யூஸ்மி..” என்றபடி.. அவள் வீட்டுக்குள் வந்தான் மோகன்..
சுசரிதாவின் முகம் மாறிப் போனது.. அந்த நேரத்தில் அங்கே அவன் வந்து நிற்பான் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.. எப்படி அவள் வீட்டைக் கண்டு பிடித்து அவன் வந்தான் என்று அவள் திகைத்துப் போனாள்..
“யார் நீங்க..?”
கைலி.. பனியனுக்கு மாறி.. முகம் கழுவிய ஈரத்தை துவாலையால் துடைத்தபடி அங்கே வந்த பூபாலன் வினவினார்…
“நான் உங்க மகளோட வொர்க் பண்றேன் சார்… ஐ ஆம் மோகன்..”
இயல்பாக அவன் கை நீட்டியதில் அவசரமாக முகம் துடைத்துக் கொண்டிருந்த துவாலையை சோபாவில் கடாசி விட்டு அவனுக்கு கை நீட்டினார் பூபாலன்..
என்னதான் கூட வேலை பார்ப்பவனாக இருந்தாலும் ஒரு மாதப் பழக்கத்தில் வீடுவரை வந்து நிற்பானா என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது.. சிவகாமியின் மனதிலும் அதே கேள்விதான் என்பதை இறுகிப்போன அவள் முகம் உணர்த்தியது.. மரியாதைக்காக தலையை அசைத்து விட்டு அவள் காபி போட உள்ளே போனாள்..
இனி அவனுக்கு அவளின் வீடு எப்படித் தெரியும்..? வீடு தேடி வரும் அளவிற்கு அவனுடன் எப்படி பழக்கம் வந்தது என்பன போன்ற இத்யாதி.. இத்யாதி.. கேள்வி களுக்கு அவன் போன பின்னால் விடை அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை அலுப்புடன் உணர்ந்தாள் சுசரிதா..
என்ன சொல்வது என்று மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்த போதே.. இதுபோன்ற பொய்களை சொல்ல வேண்டிய அவசியம் அதற்கு முன்னால் அவளுக்கு ஏற்பட்டதில்லை என்பதை அவளது அறிவு வலியுறுத்தியது..
‘என்னைக்கு இந்த ‘பொய்சொல்லி’யை மீட் பண்ணினேனோ அன்னையில இருந்து எனக்கு இந்தப் பாடுதான்.. இவன் புத்தி எனக்கும் தொத்திருச்சு போல..’ வெறுப்பாக அவனைப் பார்த்தாள்..
அவன் அவள் பார்வையை சந்திக்கவேயில்லை.. மூச்சுக்கு முந்நூறு முறை அவளை அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது முறைத்து வைப்பவன் இப்போது பெண்களை கண்ணெடுத்தும் பாராத ரிஷிய சிருங்கள் போல வெகு பவ்யமாக பூபாலனிடம் நாட்டு நடப்பை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்..
பூபாலனுக்கு அப்படியொரு பலவீனம் உண்டு.. அவரை ஈர்க்க வேண்டுமானால் அவரிடம் அரசியலையும்.. நாட்டுநடப்பையும் பேச ஆரம்பித்து விட வேண்டும்..
“இவர் எப்படிடா எம்.எஸ்ஸி பயோ-கெமிஸ்ட்ரி படிச்சார்..? இவர் இன்ட்ரெஸ்டுக்கு எம்.ஏ ஹிஸ்டரியில்ல படிச்சிருக்கனும்..” என்று தம்பியிடம் கலந்தாலோசிப்பாள் சுசரிதா..
“படிப்புக்கும்.. இன்ட்ரெஸ்டுக்கும் இப்பல்லாம் சம்பந்தமே இருக்கிறதில்லக்கா.. அதுபாட்டுக்கு அது.. இதுபாட்டுக்கு இது..” இலகுவாக விளக்கம் கொடுப்பான் சுரேஷ்…
எது எப்படியோ.. மோகனுக்கு யாரிடம் எப்படிப் பேசி வீழ்த்த வேண்டும் என்ற வித்தை மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது என்ற உணர்வில் பல்லைக் கடித்தாள் சுசரிதா..
அன்றுவரை பார்த்திராத பூபாலனின் பலவீனத்தை ஒர் நொடியில் எப்படி அவன் அறிந்தான்..?
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.